Published:Updated:

நித்யாவின் குறும்பு... நித்யாவின் பிரிவு... நித்யாவின் ஏக்கம்.. லவ் யூ நித்யா! #6YearsOfNEPV

தி.விக்னேஷ்
நித்யாவின் குறும்பு... நித்யாவின் பிரிவு... நித்யாவின் ஏக்கம்.. லவ் யூ நித்யா! #6YearsOfNEPV
நித்யாவின் குறும்பு... நித்யாவின் பிரிவு... நித்யாவின் ஏக்கம்.. லவ் யூ நித்யா! #6YearsOfNEPV

ஒரு கணக்குக்காக இந்திய சினிமாவில் இதுவரை ஒரு லட்சம் படங்கள் வந்திருக்கும் என்று வைத்துக்கொண்டால் அதில் 99,000 படங்கள் காதலை மையமாக வைத்து வந்த படங்கள். நீதானே என் பொன்வசந்தம் அந்த 99,000 படங்களில் ஒன்று. ஆனாலும் ஏன் ஸ்பெஷல்? வழக்கமாக காதலுக்கு ஒரு வில்லன் தடையாக இருப்பான். அல்லது காதலர்களின் குடும்பம் தடையாக இருக்கும். அல்லது ஒரு தலைக் காதலாக இருக்கும். தமிழ் சினிமாவில் வந்த எல்லாக் கதைகளும் இதில் ஏதோ ஒன்றுக்குள் அடங்கிவிடும். இந்த டெம்ப்ளேட்டில் இருந்து தனித்து நிற்கும் காதல் கதைகள் அரிதினும் அரிது. அப்படி ஒன்றுதான் 'நீதானே என் பொன்வசந்தம்’. 

நித்யா+வருண்+காதல்+ஊடல்+இளையராஜா = நீதானே என் பொன்வசந்தம். எட்டு வயதில் முளைத்த ஒரு காதல் திருமணத்துக்கு முந்தைய இரவு வரை எப்படி பயணிக்கிறது என்பதுதான் ஒன்லைன்.  ட்வீட்டுக்குள் அடக்கிவிடக்கூடிய இந்த ஒன்லைனை லைன் பை லைன் செதுக்கியதில் இருந்த நேர்த்தி, கதையை ஸோ ஸ்பெஷல் ஆக்கியது.  எத்தனை படங்களுக்குத்தான் காதலுக்கு பிரகாஷ்ராஜே வில்லனாக இருப்பார்? இந்தக் காதலுக்கு காதலர்களின் ஈகோதான் வில்லன். 

ஒரு சேஞ்சுக்கு படத்தைப் பின்னாலிருந்து பார்க்கலாம். நித்யாவின் கண்களில் எப்போதும் வரலாம் என்று கண்ணீர் காத்துநிற்கிறது. எதிரில் மணக்கோலத்தில் வருண். எட்டு வயதில் பார்க்கில் தன்னுடன் விளையாடிக்கொண்டிருந்த, ஸ்கூலில் ஒன்றாக ராகிமால்ட் குடித்துக் கதை பேசித் திரிந்த, அவளுக்காக அவள் படிக்கும் ஸ்கூலிலேயே சேர்ந்த, கல்லூரியில் அவளுக்காகப் பாடல் பாடிய, பல கிலோமீட்டர்கள் தாண்டி வந்து தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சிய வருண்.  ‘எல்லாமே பொய் என்று சொல்வாயா?’ என்று ஏங்கும் நித்யா. விடிந்தால் இந்த வருண் அவளுடையவன் இல்லை. இனி அவன் இல்லை என்பதைவிட இனி அவன் எனக்கு இல்லை என்பதில் இருக்கும் பெரும்வலியைச் சுமந்து திரியும் நித்யாவின் இரவுதான் இந்தப் படம். காதலர்களுக்கு அந்த இரவு எவ்வளவு பதட்டமானது என்பதைக் காட்டத்தான் படத்தின் மற்ற காட்சிகள்.

ஒவ்வொரு வசனத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை ஆண்டுக் காதலின் கனெக்ட் இருந்துகொண்டே இருக்கும்.  உதாரணத்துக்கு க்ளைமேக்ஸில் வருண் திருமணத்துக்கு முந்தைய இரவில் நித்யா ’உங்கிட்ட இருந்துதான் கிரிக்கெட் கத்துக்கிட்டேன்’ என்பாள்.  முதல் காட்சியில் ‘வானம் மெல்ல கீழிறங்கி’ பாடலில் எட்டு வயது வருண் நித்யாவுக்கு கிரிக்கெட் சொல்லிக்கொடுப்பான். ஸ்கூல் படிக்கும்போது வருணின் பேட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள் நித்யா. இந்த காட்சிகள் ஒரு சில நொடிகள் தான் வரும் என்றாலும் அந்த வசனத்துக்கான சாட்சியாக இருக்கும். அதேபோல ஸ்கூலில் முதல் முறையாக சண்டை வரும்போது நித்யா கோபமாக கிளம்பி பின் சில நொடிகள் நின்று.. ‘போகாதனு சொல்லு வருண்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு தன் காதலன் அழைப்பான் என்று காத்திருப்பாள். இண்டர்வல் சீனில் இதேபோல் ஒரு காட்சிவரும்.. மொட்டை மாடியில் சண்டை போட்டு கோபமாக கிளம்பும் நித்யா சில விநாடிகள் நிற்பாள். இம்முறை அந்த வசனம் இல்லையென்றாலும் காட்சிகளில் கடத்தியிருப்பார் கெளதம். 

அடுத்த சில பாராக்கள் முழுக்க முழுக்க தேவதை சமந்தாவுக்கானது. ரசிகரல்லாதோர் பொறுத்தருள்க..!

கல்ச்சுரல் டான்ஸிலேயே சமந்தா என்ட்ரீ கொடுத்துவிடுவார் என்றாலும் ஸ்கூல் ட்ரெஸ்ஸில்தான் முழுமையான நித்யாவாக நமக்கு அறிமுகமாவாள். ‘அன்னைக்கு அண்ணன்கிட்ட சொன்னதுகூட பொய்தான்’ என்று வருண் சொல்லிவிட்டுப் போன அந்த நொடியில் நித்யா காட்டும் ரியாக்ஸன்களில் தடுக்கி விழும் மனம், பிறகு நிரந்தரமாக நித்யாவிலேயே தஞ்சமடைந்துவிடும். இந்தப் படத்திற்காக சமந்தாவிற்கு ஆறு விருதுகள் கிடைத்தது. அந்த ஆறும் இந்த ஒரு ரியாக்ஸனுக்கே கழிந்துவிடும்.

ஒருத்தரை மிஸ் பண்றதை பக்கம் பக்கமா வசனம் பேசி வார்த்தையால் சொல்ல முடியாது. கண்ணு சொல்லணும். ‘முதல்முறை பார்த்த ஞாபகம்’ பாடல் முழுவதும் நித்யாவின் கண்கள் பிரிவைச் சொல்லிக் கொண்டே இருக்கும். அன்பிற்கு ஏது அடைக்கும்தாழ்? ஒரு கட்டத்தில் அடைபட்டிருந்த கண்ணீர் உடைந்து ‘ஐ ரியலி மிஸ் யூ வருண்’ என்று சொல்லும் இடத்தில் நித்யாவின் குரலில் இருக்கும் கலக்கம்தான் பிரிவின் வலிக்கான டிக்ஸனரி விளக்கம்.

‘நான் ஆடிட்டோரியம்ல இருந்த பழைய நித்யா இல்ல நீ கூப்டதும் ஓடிவர்றதுக்கு’ என்று முறைப்பு காட்டுவதாகட்டும் க்ளைமேக்ஸில் ‘என் தப்புதான் எப்போலாம் சண்டைபோட்டோமோ அப்பலாம் நான் இதை செஞ்சிருக்கணும்’ என்று முத்தத்தைக் கொடுத்து இந்த ஈகோ யுத்தத்தை முடித்துவைப்பதாகட்டும் நித்யாவும் நித்யா நிமித்தமும்தான் இந்தப் படம்.

School நித்யாவாக குறும்பு.. College நித்யாவாக பிரிவு.. Matured நித்யாவாக ஏக்கம்.. என வெரைட்டி விருந்து படைத்த சமந்தாவிற்கு இந்தப் படம் வாழ்நாளைக்கான படம். 

‘நான் பாத்தது ஒரு சின்ன பொண்ணு.. இவ தேவதைடா’ என்று காதலில் லயித்திருக்கும் வருண். குடும்பத்தை கவனிக்கத்தொடங்கியதும் காதலியை மறந்துவிடுகிற, கொஞ்சம் சண்டையானதும் ‘எல்லாம் உன்னாலதான்’ என்று ஈகோவில் கத்துகிற வருணும் கெட்டவனெல்லாம் இல்லை. அவன் சராசரி ஆண். ஆண் இப்படித்தான் காதலென்றால் கசிந்துருகுவான். தேவையில்லை என்றால் ஈவு இரக்கமின்றித் தவிக்கவிடுவான். தவிக்கவிடுவதுகூட பரவாயில்லை அதுக்கு சொல்லும் சப்பைக் கட்டு காரணங்கள்தான் யப்பா.. வருணாக வாழ்ந்திருக்கும் ஜீவாவும் சிக்ஸர் அடித்த படம். 

இரண்டாவது பாராவில் ப்ளஸ் இளையராஜா என்று இருந்ததே.. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இளையராஜாவின் இசை. படம் தொடங்கியதும் ஒரு பாடல்.. பின்பு சில காட்சிகள்.. மீண்டும் ஒரு பாடல்.. சில காட்சிகள்.. மீண்டும் இன்னொரு பாடல்… என முதல் அரை மணி நேரத்துக்குள் மூன்று பாடல்கள் வந்துவிடும் இந்தப் படத்தில். எல்லா அழுத்தமான காட்சிகளின்போதும் பிண்னனியில் ஒரு பாடல் தொடர்ந்துகொண்டே வந்து காட்சிகளோடு நம்மைக் கட்டிப்போடும். 

கெளதம் மேனன் படம் என்று இதைப் பார்க்கும்போது விண்ணைத் தாண்டி வருவாயாவின் நீட்சி என்பார்கள். ‘அந்த குட்டி குட்டி பாக்ஸெல்லாம் டிக் பண்ணிட்டியா அடுத்த பாக்ஸ் நானா?’ என்று படம் நெடுகிலும் கெளதம் மேனன் டச் இருக்கும். ஆங்கில வசனங்களை அள்ளித் தெளிக்கும் கெளதம் மேனனின் படத்தின் தலைப்பிலும், பாடல் வரிகளும் தமிழ் தாண்டவமாடும் இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய் குறுந்தொகைப் பாடல்களையெல்லாம் படமாக்கினால் இப்படித்தான் இருக்கும்போல என்று நினைக்கத் தோன்றும். ஊடலையும் பிரிவையும் அத்தனை நுணுக்கமாக காட்சிகளில் வைத்திருப்பார்.

முதல் வரியில் சொன்னதைப் போல ஒரு லட்சம் காதல் படங்கள் வந்திருக்கின்றன.. இனியும் வரலாம் ஆனால் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இருந்த உயிரோட்டம் அந்தப் படங்களில் இருக்குமா என்பது சந்தேகமே.