Published:Updated:

‘‘ ‘பார்ட்டி’ல என்ன நடக்குது... ‘தமிழ்ப்படம் 2.0’வில் ஏன் தியானம் சீன்..?’’ - ட்ரெய்லர் காட்டும் சிவா #VikatanExclusive

சனா
‘‘ ‘பார்ட்டி’ல என்ன நடக்குது... ‘தமிழ்ப்படம் 2.0’வில் ஏன் தியானம் சீன்..?’’ - ட்ரெய்லர் காட்டும் சிவா #VikatanExclusive
‘‘ ‘பார்ட்டி’ல என்ன நடக்குது... ‘தமிழ்ப்படம் 2.0’வில் ஏன் தியானம் சீன்..?’’ - ட்ரெய்லர் காட்டும் சிவா #VikatanExclusive

`பச்ச, மஞ்ச, கறுப்பு தமிழன் நான்’னு தமிழ்ப் படத்தில் என்ட்ரி கொடுத்த மிர்ச்சி சிவா, தற்போது தமிழ்ப்படம் 2.0 போஸ்டர் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ‘பான்ட் லண்டன்ல இருக்கார் சார். அடுத்த படத்தோட ஷூட்டிங்கூட ஆரம்பிச்சிட்டாங்க. படம் சீக்கிரம் ரிலீஸ் பண்ண ப்ளான் பண்றாங்க சார். அம்மா கிரியேஷன்ஸ்தான் புரொடியூஸ் பண்றாங்க’ என சமீபத்தில் வந்த பார்ட்டி டீசரிலும் அதகளம் செய்துள்ளார். அவரிடம் பேசலாம் என்று போன் செய்தோம். 

`சித்தமெல்லாம் எனக்கு சிவம் மயமே' என்று போனில் காலர் ட்யூன் ஒலிக்க, நாம் அழைத்தது சிவாவுக்குதானா என்று ஒருமுறை போன் நம்பரை செக் பண்ணிக் கொண்டோம். கலகலப்பு 2 படத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். ''இந்தப் படத்தில் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க. ஜெய், ஜீவா அதுமட்டுமல்லாமல் இரண்டு ஹீரோயின்ஸ் இருக்காங்க. காரைக்குடியில் ஆரம்பித்து ஹைதராபாத் வரைக்கும் ஷூட் போயிருக்கோம். காரைக்குடி, காசி, புனே, ஹைதராபாத் ஏரியாவில் ஷூட் பண்ணினாங்க.  

'கலகலப்பு' படத்தைவிட பார்ட் 2 ரொம்ப பெரிய படமா, கிராண்டாக இருக்கும். ஹியூமரும் குறையாமல் இருக்கும். சுந்தர்.சி ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில், ''இந்தப் படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு. அதை ஃபுல்ஃபில் பண்ணணும்''னு சொன்னார். எனக்கு சுந்தர்.சி மேல் நிறைய நம்பிக்கை இருக்கு. அவரோட பேட்டன் ஸ்க்ரிப்ட் முழுக்க இருக்கும்’’ என்றவரிடம் ,’பார்ட்டி படம் கோவா 2' வாக இருக்குமா என்றால், ''கண்டிப்பாக இல்லை. இந்தப் படத்தில் வெங்கட் பிரபு டீம் தாண்டி நிறைய சீனியர் ஆக்டர்ஸ் இருக்காங்க. 

நானும் சத்யராஜ் சாரும் ஒன்றாகச் சேர்ந்து இந்தப் படத்தில் நடித்திருக்கோம். அவருடன் எனக்கு நிறைய சீன்ஸ் இருக்கும். ஜெயராம் சாருடனும் நிறைய போர்ஷன் எனக்கு இருந்தது. அவங்களோட படங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடனே நடிப்பது பெரிய வாய்ப்பு. அதிலும், சத்யராஜ் சார் என்னைவிட யூத்தாக இருக்கிறார். செம ஜாலியாக லைஃப்பில் இருக்கிறார். அவரை சுற்றி இருக்கின்ற எல்லோரையும் ஒரு கம்போர்ட் ஜோனில் வைத்துக்கொள்வார். எங்கள் டீம்முடன் சேர்ந்து அது பண்ணலாமா இது பண்ணலாமா என்று கேட்பார். வெங்கட் பிரபுவின் பார்ட்டிக்கு சத்யராஜ் சார் ரைட் மேன். 

வெங்கட் பிரபு டீம் எப்போதுமே செம ஜாலியாக, யூத்தாக இருப்போம். ஆனால், இவர் எங்கள் எல்லோரையும் விஞ்சிவிட்டார் சத்யராஜ். இந்தப் படமே வித்தியாசமான ஒரு ஸ்டோரி. அது படம் பார்க்கும்போதுதான் உங்களுக்குப் புரியும். கதையைச் சொல்லணும்னு ஆசையாய் இருக்கு. பட், கதை சொல்லிட்டா அடிப்பாங்க. 

படம் பேர் மட்டும்தாங்க 'பார்ட்டி'. நாங்க எல்லோரும் எப்போதும் பார்ட்டி பண்ணுற பசங்க கிடையாது. வழக்கமாக நாங்கள் மீட் பண்ணினாலே உலகத்தில் நடக்கக்கூடிய ஜென்ரல் விஷயங்களைப் பற்றித்தான் பேசுவோம். அதிலும், `அறிவுச் சார்ந்த கேள்விகள் ஏதாவது நீங்கள் கேட்கணும்னு நினைத்தால் பிரேம்ஜியிடம் கேட்கலாம். ஜென்ரல் நாலேஜ் பிரேம்ஜிக்கு அதிகம். நாங்க பொதுவாக இதைப் பற்றிதான் பேசுவோம். பார்ட்டிக்கும் எங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ரொம்ப சின்சியரான வொர்க்கர் நாங்க’னு நான் சொன்னால்கூட நீங்க நம்பிடாதீங்க. எங்கள் சினிமா கேரியரை வெங்கட்பிரபு டீம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான் ஆரம்பித்தோம். அதனால், எங்கள் டீமுக்குள் எப்போதும் நல்ல புரிதல் இருக்கும். 

நான் என்ன சொல்லப் போறேன்னு வெங்கட்பிரபுக்குத் தெரியும். அவர் என்ன சொல்லப் போறார்னு எனக்குத் தெரியும். அந்தளவுக்குப் புரிதல் இருக்கும். வெங்கட் பிரபு சாரிடம் ஒருமுறை, ''சென்னை 28 படத்தில் யாரோ பாடலை சென்னையில் நடுரோட்டில் ஷூட் பண்ணுனீங்க, ’உன் பார்வை மேலே பட்டால்’ பாட்டுக்கு மட்டும் ஃபாரின் ஷூட் போயிருக்கீங்க. என்னங்க சார் உங்க சட்டம்''னு கேட்டேன். உண்மையா சொல்லும்னா ஃபாரின் ஷூட் எடுக்கிறது ரொம்ப கஷ்டம். நம்ம ஊரில் நிறைய டைம் இருக்கும். பட், ஃபாரின் ஷூட்டில் டைமே இருக்காது. எழுந்தவுடனே ஷூட்தான் போகணும். பட், வெங்கட்பிரபு டீமைப் பொறுத்தவரைக்கும் வொர்க் போறதே தெரியாது. என்ஜாய் பண்ணிதான் வேலையே நடக்கும். 

இந்தப் படத்துக்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண்தான் பண்ணியிருக்கார். அவர் செட்டில் என்னை பார்த்தவுடன், ''சிவா, உனக்கு என்ன ஸ்டெப் வருதோ அதுவே பண்ணு''னு சொல்லிட்டார்’’ என்றவர் 'தமிழ்ப் படம் 2.0'  ஃபர்ஸ்ட் லுக் பற்றியும் சொல்கிறார். 

''என் பிறந்த நாள் அன்னைக்கு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆச்சு. என் பிறந்த நாளுக்கு நான் இங்கே இருந்தது ஐந்து வருஷம் ஆச்சு. அதனால், இந்த வருஷ பிறந்தநாளை என் நண்பர்கள், ஃபேமிலியுடன் நேரத்தைச் செலவு பண்ணினேன். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த அளவு ரீச் ஆகும்னு எதிர்பார்க்கவில்லை. என் வேலையை மட்டும்தான் எப்பவும் செய்வேன். சிலர் சூப்பராக இருக்குனு சொல்வாங்க. இன்னும் சிலர் நல்லாவே இல்லைனு சொல்வாங்க. அதனால், நம்ம வேலையை மட்டும் பார்த்துவிட்டு சைலன்ட்டாக இருப்பது நல்லது. ஃபர்ஸ்ட் லுக்கில் வந்த மாதிரி ஒரு சீன் படத்தில் இருக்கு. நான் தியானத்தில் இருக்கிற மாதிரி. அதைத்தான் ஃபர்ஸ்ட் லுக்காக வைத்தோம்'' என்றவரிடம் படத்தில் உங்கள் பெயர் 'மிக்சர் மாமா சிவா''னு கேள்விப்பட்டோமே என்றதும்...

''அப்படி எல்லாம் இல்லை. இதைச் சொல்ல வேண்டுமென்றால் டைரக்டர்தான் சொல்லணும். அவர்தான் கரெக்டானவர். தமிழ்ப்படம் எடுக்கும்போதே பார்ட் 2 எடுக்கிற ஒரு ஐடியா இருந்தது. பட், அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எல்லோரும் கேட்டார்கள், '' ஏன், இவ்வளவு டைம் எடுத்துக்கிறீங்க''னு. எல்லாத்துக்கும் கரெக்டான டைம் வரணும். யாரையும் கலாய்க்கணும்னு அந்தப் படம் பண்ணவில்லை. நான் அந்த ஹீரோக்கள் ரோலில் நடித்தால் எப்படி இருக்கும். அப்படிங்குறதுக்காகத்தான் பண்ணினேன். கதையின் ஜானர் அப்படி. முதல் முறையா தமிழ் சினிமாவில் இப்படி ஒன்றை நாம் பாக்குறோம். ஆனா, உலக சினிமாவில் இப்படியொரு ஜானர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இருந்தே இருக்கு. படத்தைப் பார்த்தால் எல்லோரும் சிரிக்கணும் என்ஜாய் பண்ணணும். அதற்காகத்தான் இந்த ஜானரை கையில் எடுத்தோம். 

நாங்கள் எதிர்பார்த்தைவிட மக்கள் அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 'தமிழ்ப் படம் 2.0' முதல் பாகத்தைவிட அதிகமாகவே ரசிப்பாங்க. ஷூட் ஆரம்பித்து இரண்டு நாள்தான் ஆச்சு. அதனால், படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’ என்றவரிடம், `உங்க காலர் ட்யூனைக் கேட்டா, சிவா ஒரு பக்திமானா இருப்பாரோனு நினைக்க வைக்கிறது என்றதும், ''பக்திமான்னு சொல்ல முடியாது. வாழ்க்கையில் ஓரளவுக்கு உண்மை தெரிந்தால் எப்போதும் ஹாப்பியாக இருப்போம். உண்மை அப்படிங்குறது என்னன்னா உண்மை இல்லைங்குறதுதான் உண்மை'' என்று பன்ச் டயலாக் சொன்னவர், ’ஷூட்டுக்கு லேட் ஆகிருச்சுங்க... பை பை'' என்று சொல்லி விடைபெற்றார் 'மிக்சர் மாமா சிவா’. இல்ல... இல்ல மிர்ச்சி சிவா.