Published:Updated:

``எனக்கு அரவிந்த் சாமியைப் பிடிக்கும்..!’’ - அமலாபால்

``எனக்கு அரவிந்த் சாமியைப் பிடிக்கும்..!’’ - அமலாபால்
``எனக்கு அரவிந்த் சாமியைப் பிடிக்கும்..!’’ - அமலாபால்

தமிழ் சினிமாவில் பிரச்னைகள் எழும்போது அதைப் பற்றி சினிமா விழாக்களில் பேசுவதை தொன்றுதொட்டு வழக்கமாக வைத்திருந்தனர் சினிமாத் துறையினர். இடையில் வந்த லைவ்நியூஸ் கலாசாரம் அதை சற்றே மாற்றிவிட்டது. சென்னையில் நேற்று நடந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பழைய கலாசாரத்தை மீண்டும் கொண்டு வந்ததுபோல் அமைந்திருந்தது. கந்துவட்டி, ஹீரோக்களின் சம்பளம், அரவிந்த் சாமி, அமலா பால் அழகு என அனைத்து விஷயத்தையும் கலந்துகட்டி மேடையேற்றினார்கள். 

அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குநர் சித்திக் இயக்கியுள்ள படம், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அம்ரிஷ் கணேஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. 'ஃப்ரெண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', ‘சாது மிரண்டா’, 'காவலன்' படங்களுக்குப் பிறகு இயக்குநர் சித்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். 'தெறி' படத்தில் நடித்த 'பேபி' நைனிகா, சேதுபதி படத்தில் நடித்த 'மாஸ்டர்' ராகவன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவ்விழாவில் திரைத்துறையைச் சார்ந்த பலரும், முன்னணி தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

அனைவரையும் வரவேற்று பேசிய படத்தின் தயாரிப்பாளர் முருகன், " இப்படம் எனது நண்பர்களின் உதவியால் மட்டுமே எடுக்கப்பட்டது. எனது முந்தைய படம் மிக பெரிய தோல்வியடைந்தது. அப்போதுதான் என்னை கை  கொடுத்து தூக்கிவிட்டனர் என்றார். கதாநாயகன் அரவிந்த் சாமியை நான் ஏ.எம். ரத்னம் சார் வழியாக தொடர்புகொண்டேன். சித்திக் அவர்கள் இயக்குகிற இப்படத்திற்கு நீங்கள் கதாநாயகனாக நடிக்க வேண்டும் எனக் கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டு எந்த ஒரு முன்பணமும் வாங்காமல் நடிக்க வந்தார். இது தனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதனால் ஒரு பெரிய தொகை கடன் வாங்குவதும் அதற்காக வட்டி கட்டுவதும் தவிர்க்கப்பட்டது" எனக் கூறினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், "அரவிந்த் சாமி முன்பணம் வாங்காமல் நடித்தது, அவர் தயாரிப்பாளருக்குச் செய்த பேருதவி . நடிகர்கள் முன்பணம் பெறாமல் நடிப்பது தயாரிப்பாளர்களைக் கடன் தொல்லையிலிருந்து மீட்கும். இங்கு ஃபைனான்ஸ் செய்பவர்கள் யாரும் கெட்டவர்கள் இல்லை. வாங்கும் பணத்தை சரியாகத் திருப்பித் தந்து விட்டால் அனைத்தும் சுமுகமாக நடைபெறும்" என்றார்.

"இங்கு கந்து வட்டி என்ற பேச்சுக்கு இடமே இல்லை. ஒரு லெட்டர்பேடை வைத்து கோடி கோடியாய் பணம் கொடுப்பது திரைத்துறையில் தான். தயாரிப்பாளர் முருகன் அவர்களது தன்மையும், விடாமுயற்சியும்தான் அவரை இப்படத்தை தயாரிக்கும் நிலையில் கொண்டு வந்துள்ளது" எனக் கூறினார் தயாரிப்பாளர் சிவா. 

இயக்குநர் பேரரசு, "இப்படத்தின் தயாரிப்பாளர் 'அடிதடி' முருகன் என்று அழைக்கப்படுபவர். பெயரைக் கேட்டதும் சற்று பீதியடைந்தேன். பிறகுதான் தெரியும் 'அடிதடி' அவர் தயாரித்த படம் என்று. முருகன்,  நான் , டைரக்டர் முருகதாஸ் , தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,  அனைவரும் ஒரே பிளாட்டில்தான் வசித்து வருகிறோம். ஒரு படத்தை எப்படித் திட்டமிட்டு எடுப்பது என்று முருகன் நன்கு அறிந்து செயல்படக் கூடியவர். மைக்கேல் ராயப்பன் முருகனிடம் கொஞ்சம் ஆலோசித்துச் செய்திருந்தால் இன்று பல பிரச்னைகளிலிருந்து தப்பித்திருக்கலாம்" என்று கூறினார்.

பேபி நைனிகாவை படத்தில் நடிக்கவைத்ததைப்  பற்றி நடிகை மீனா பேசுகையில், " நான் சித்திக் சார் இயக்கத்தில் மலையாளப் படங்கள் நடித்திருக்கிறேன். 'ஃப்ரெண்ட்ஸ்' படம் தமிழில் நடிக்க என்னை அணுகினார் என்னால் நடிக்க முடியாமல் போனது பெரிய வருத்தம். எனினும் என் மகள் அவரது இயக்கத்தில் நடிக்கிறார் என்பது சந்தோஷமாக உள்ளது. அன்பான தயாரிப்பாளர் முருகனுக்கு வெற்றியைத் தரவேண்டும்" எனக் கூறினார்.

’’ 'எங்கள் அண்ணா' படம் மூலம் என்னை அறிமுகமாக்கியது சித்திக் சார்தான். 14 வருடத்திற்கு முன் எனக்கு 3 பக்க தமிழ் வசனங்கள் கொடுத்து, பொறுமையாக எனக்குக் கற்றுக்கொடுத்து வேலை வாங்கினார். இன்றும் அதே பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்" என நமீதா கூறினார்.                

படத்தின் இயக்குநர் சித்திக் பேசுகையில், " இப்படத்தின் தயாரிப்பாளர் பேசிக்கொண்டே இருப்பார். நாம் ஒன்று சொல்ல நினைத்தால் அதை மறக்கடிக்கும் அளவுக்கு அவர் பேசிக்கொண்டே இருப்பார்.  மலையாளத்தில் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக்தான் இப்படம். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப்  பிடித்திருக்கிறது. அவர் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் வந்தன. பின் அதைப் பற்றி யாரும் பேசவில்லை. பின்னர் தயாரிப்பாளர் முருகன் என்னை அணுகி இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று கேட்டார் நானும் ஒப்புக் கொண்டேன். 

அதை தொடர்ந்து என்னை  சிலர் தொடர்புகொண்டு முருகன் 'ஃப்ளாப்' கொடுத்தவர் அவரிடம் பணம் கிடையாது’ என்று எச்சரித்தனர்,. நானும் அதைக் கேட்டு எப்படியாவது இவரிடமிருந்து எஸ்கேப் ஆகிடவேண்டும் என்று எண்ணித்தான் அவரைச் சந்தித்தேன். என்னை அவர் பேசவே விடவில்லை. அவரே பேசி முடித்து கிளம்பிவிட்டார். அப்போதுதான் புரிந்தது அவர் எவ்வளவு  சினிமாவை நேசிக்கிறார் என்று. இவருக்காகவே  இப்படம் எடுக்க வேண்டும் என எண்ணி எடுத்தோம். அதோடு இல்லாமல் நான் நினைத்த நடிகர்களை நடிக்க வைத்து படத்தின் கதைக்கு வலு சேர்த்தார் தயாரிப்பாளர் முருகன். அம்ரிஷ் கணேஷ் படத்திற்கேற்ற இசையைக் கொடுத்திருக்கிறார்" என்று கூறினார்.    

நாயகி அமலாபால் பேசுகையில், " இப்படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதும் பத்திரிகைகளில் கேட்கப்படும் கேள்வியான "உங்களுக்கு எந்த ஹீரோ பிடிக்கும்?" என்ற கேள்விக்குத் தற்போது பதில் கிடைத்துள்ளது. இனி தைரியமாகச் சொல்வேன் எனக்கு அரவிந்த் சாமிதான் பிடிக்கும் என்று. சினிமாவை தவிர்த்து பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். சித்திக் சார் படத்தை பார்த்து  வளர்ந்தவள் நான். அவரது இயக்கத்தில் நடிக்கிறேன் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது பெற்றோரும் சந்தோஷப்  படுவார்கள்" என மகிழ்ச்சி தெரிவித்தார்.
                 
படத்தின் நாயகன் அரவிந்த் சாமி, " சித்திக் சார்  படத்தில்  நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்வான விஷயம். என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி சார். நான் முன்பணம் வாங்காமல் நடிப்பது எனது பாலிசி. இந்த வருடம் நான் நடிக்கும் நான்கு படங்களிலுமே இப்படித்தான் நடித்திருக்கிறேன். இந்தப் படம் ஸ்டன்ட் மாஸ்டர் விஜயனுக்கு 500வது படம். அதற்காக மட்டுமே முன் எப்போதும் செய்யாத பல ரிஸ்க் எடுத்தேன். தயாரிப்பாளர் முருகன்  சினிமாவை நேசிப்பவர். 

வழக்கமாக இயக்குநரோ , ஹீரோவோதான் படத்தை மெருகேற்ற பல விஷயங்கள் கூட்டிகொண்டே   போவார்கள் .இப்படத்தில் நாங்கள் பட்ஜெட்டை பற்றி கவலைபட்டால், அவர் படத்தை நன்றாக எடுக்கவேண்டும் என்பதை நினைத்து புதுப்புது விஷயங்களைச் செய்தார். இசையமைப்பாளர் அம்ரிஷ் மிகவும் திறமை வாய்ந்தவர் இதை பயன்படுத்தி வளர வேண்டும். இந்தப் படம் எங்களுக்கு முக்கியம் என்பதைவிட முருகனுக்கு எவ்வளவு முக்கியம் என அறிந்து வேலை செய்துள்ளோம்" எனக் கூறினார்.