Published:Updated:

இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம்
இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம்

இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம்

சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்‌ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! 

போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும்  முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (லாவண்யா திரிபாதி) "உங்கள் மனநிலை இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை, ரெஸ்ட் எடுக்குறது நல்லது" என்று அறிவுரை சொல்கிறார். அவர் பேச்சையும் மீறி தன் பணியைத் தொடங்குகிறார் குமரன். மீண்டும் அதே சாயலில் ஒரு கொலை நடக்கிறது. புலன்விசாரணைக்குச் செல்லும் குமரனுக்கு சிறு வயதில் தனக்கு நிகழ்ந்த விபத்து ஞாபகம் வர, மன அழுத்தத்துக்கு ஆளாகிறார். கட்டுப்பாட்டை இழந்த குமரனுக்கு லாவண்யா ட்ரீட்மென்ட் அளிக்கிறார். இதற்கிடையில் மீண்டும் ஒரு கொலை நடக்க, அங்கே போய்ப் பார்த்தால், ஏற்கெனவே நிகழ்ந்த கொலையின் சாயல். அடுத்தடுத்து இப்படியான சம்பவங்கள் நடக்க, யார் கொலையாளி என்பதை சந்தீப் கண்டுபிடித்தாரா, கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை அறிவியல் உண்மைகளுடன் கற்பனை கலந்து, விறுவிறுப்பாகக் கதை சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநரும் தயாரிப்பாளருமான சி.வி.குமார்

படத்தில் பாராட்டக்கூடிய முதல் விஷயம் இயக்குநர் சி.வி.குமாரின் டீட்டெய்லிங் ஒர்க். `நினைவுகளின் தொகுப்புதான் நாம்', நம் நியூரான் செல்களில் இருக்கும் நினைவுகளை மொத்தமாக சேகரித்து வேறொரு உடலுக்கு அதைக் கடத்த முடியுமென்றும், அதன்மூலம் ஒருவர் நினைத்தால் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வெவ்வேறு உடல்களில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ முடியும் என்றும் பல அறிவியல் தகவல்களைத் தொகுத்து த்ரில்லர் கதையாக்கியுள்ளார்.

கொஞ்சம் ஏமாந்தால் குழப்பிவிடும் இடியாப்பச் சிக்கல் கதையையும்கூட நம்பும்படி அறிவியல் ஆராய்ச்சிகள், போலீஸின் புலன் விசாரணை என பக்காவாக ஸ்கிரிப்ட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் திரைக்கதை எழுதியிருக்கும் நலன் குமரசாமி. மூளை ஆராய்ச்சி தொடர்பான காட்சிகள் அல்டிமேட் ரகம். இன்ஸ்பெக்டராக வரும் சந்தீப் கிஷன் பக்கா போலீஸாகவே தன்னை உருமாற்றியிருக்கிறார். சண்டைக் காட்சிகள், இன்வெஸ்டிகேஷன் சீன் எல்லாவற்றிலும் போலீஸாகவே மாறி நடித்திருக்கிறார். வழக்கமான ஹீரோயினாக இல்லாமல், லாவண்யாவுக்கு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம். இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் சந்தீப்பை மீட்டெடுக்க, அவருக்கு கொடுக்கும் சிகிச்சை ரகங்கள் ரசிக்க வைக்கின்றன. ஹீரோ சந்திப்பின் ஒட்டு மீசையும் ஹீரோயின் லாவண்யாவின் ஒட்டாத வாயசைவும் பாதி இடங்களில் உறுத்தல். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பகவதி பெருமாளுக்கு (பக்ஸ்) இந்தப் படத்தில் பேர் சொல்லும்படியான ரோல், நன்றாக நடித்திருக்கிறார் . ’மெல்ல மெல்ல’ பாடலில் மென்மை காட்டும் ஜிப்ரான், பின்னணி இசையில் அதிரடிக்கிறார். 

படத்தின் சர்ப்ரைஸ் மெட்டீரியல் ஜாக்கி ஷெராப்! ஆனால், அவரை முழுமையாகப் பயன்படுத்தாமல், சிறப்புத் தோற்றம் லெவலிலேயே டீல் செய்திருப்பதால் அந்த கதாபாத்திரம் டல்லடிக்கிறது. இவரைத் தவிர ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, பாக்ஸர் தீனா போன்றோர் கொடுத்த ரோலை சரியாகச் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் + கலை இயக்குநர் கோபி ஆனந்த் கூட்டணி, ஆய்வுக் கூட காட்சிகளை நேர்த்தியாகக் காட்டியிருக்கிறது. படத்துக்குரிய பரபர உணர்வை முடிந்தவரைக் கொடுக்கிறது லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு. 2037-லும் இளையராஜா பாடல்களுக்கு அழிவில்லை என்ற படத்தின் துவக்கமும் க்ளைமாக்ஸிலும் காட்டப்படும் குறியீடும் செம. 

படத்தில் காமெடிக்கும் ரொமான்ஸ்க்கும் ஸ்கோப் இருந்தும் அதைத் தவிர்த்துவிட்டு, த்ரிலுக்கே முதலிடம் கொடுத்திருக்கிறார்கள். பாராட்டத்தக்கது என்றாலும் மொத்தப் படமும் மூளை மற்றும் மூளை சார்ந்த இடத்துக்குள்ளேயே சுற்றுவதால் ஒரு கட்டத்தில் நம் மூளையும் டயர்டாகி விடுகிறது. ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ப்ரேக் இல்லாமல் த்ரில்லர் பாணியில் பரபரப்பை புகுத்த முயற்சித்ததால் 2 மணி நேரப் படம், 3 மணி நேரம் பார்த்த எஃபெக்டைக் கொடுக்கிறது. தோற்றத்திலும், பாடி லாங்குவேஜிலும் போலீஸாக மிரட்டிய சந்தீப், சீரியஸான சில சீன்களில் எக்ஸ்ப்ரெஷன்களை தவறவிடுகிறார். அவரை இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம். அதேபோல மிரட்டல் வில்லன் டேனியல் பாலாஜி கதாபாத்திரத்துக்கும் இன்னும் வெயிட் கூட்டி இருக்கலாம். மூளை சம்மந்தப்பட்ட ஆராய்ச்சி, விசாரணை எனப் படத்தில் வசனங்களில் இறங்கி அடிக்கும் வாய்ப்பு மிஸ்ஸிங். வசன ஏரியாவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் நிறைய இடங்களில் லிப்ஸிங்க் ஆகாமல் வசனங்கள் துருத்தியபடி இருக்கின்றன. இடைவேளை வரைக்கும் சஸ்பென்ஸை தக்கவைப்பதற்காக இயக்குநர் எடுத்த முயற்சி ஓகேதான் என்றாலும் இடைவேளைக்குப் பின் அவர் கதை சொல்ல எடுத்துக்கொண்ட நேரம் சற்று நீளமே. 

விஞ்ஞானி பிரமோத், பலரைத் தூக்கிச்சென்று தன் 'ஆராய்ச்சி'க்குப் பயன்படுத்துவதில் நம்பகத்தன்மை போதவில்லை. அவர் 'சாகாவரம்' பெற நினைப்பது தன் மேதைமையைக் காட்டுவதற்கா, பணத்துக்கா, அதிகாரத்துக்கா என்ற நோக்கம் தெளிவாக இல்லாததும் முக்கியமான பலவீனம். ஆனால் 'சாகவே கூடாது' என்ற மனிதர்களின் ஆசையையும் மூளையின் அபாரமான ஆற்றல் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகளையும் இணைத்து ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் தந்த விதத்தில் இந்த 'மாயவன் புராஜெக்ட்' கவர்கிறது. எண்ட் கார்டில் இந்த புராஜெக்ட் குறித்த பகீர் ரியல்டைம் அப்டேட்களை காட்டுகிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் இவர்கள் சொல்வதுபோன்ற விபரீதங்கள் நிகழ்ந்தால் 'மாயவன்' மறக்க முடியாத சினிமாவாகிவிடும். 

அடுத்த கட்டுரைக்கு