Published:Updated:

"சீமான் கூப்பிடட்டும்... ஆர்.கே.நகர் பிரசாரத்துக்குப் போறேன்!’’ - அமீர்

"சீமான் கூப்பிடட்டும்...  ஆர்.கே.நகர் பிரசாரத்துக்குப் போறேன்!’’ - அமீர்
"சீமான் கூப்பிடட்டும்... ஆர்.கே.நகர் பிரசாரத்துக்குப் போறேன்!’’ - அமீர்

'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் இயக்குநராய் அறிமுகம் ஆனவர். 'ராம்' படத்திலிருந்து தயாரிப்பாளராகவும், 'யோகி' படத்தின் மூலம் நடிகனாகவும், ஈழத்தமிழர்களுக்கு பிரச்னை என்றவுடன் களம் இறங்கி சிறை சென்ற மனிதனுமான பன்முகம் கொண்டவர் இயக்குநர் அமீர். அவருடன் பேசியதிலிருந்து...

"தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் நிச்சயமாக உங்களுக்கு ஓர் இடம் இருக்கு. நீங்க ஒரு படம் இயக்கி ரொம்ப நாள் ஆயிடுச்சு... ஏன் இவ்ளோ பெரிய இடைவெளி?" 

"இந்த சினிமாவுல நம்ம இருக்கமாட்டோமா? ஒரு வெற்றி கிடைக்குமா? நமக்கு இந்த சினிமா கைகொடுக்காதா? என்று ஏக்கத்தோடு சினிமாவுக்குள் வந்தவன்தான் நான். என்னுடைய சினிமா வாழ்க்கையில் எல்லாம் ஒரு அதிசயம் போலவே நிகழ்ந்தது. 'மௌனம் பேசியதே' படம் இயக்கினேன். இந்த படம் மட்டும்தான் வேற தயாரிப்பு நிறுவனத்துக்குப் பண்ணேன். என் இரண்டாவதுக்கு நானே தயாரிப்பாளர் ஆகிட்டேன். அந்தப் படம் சர்வதேச விருதைப் பெற்றுத் தந்தது. மூன்றாவது படம் 'பருத்திவீரன்'. அந்தப் படம் வணிக ரீதியாகவும் வெற்றி, சர்வதேச அளவிலும் பெரிய வெற்றி. அடுத்து நடிப்பில் களம் கண்டேன். 'யோகி' என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படமும் சர்வதேச விருதுக்காக துபாய்க்குச் சென்றது. இப்படி எல்லாமே எனக்கு எட்டு படி... பத்துப் படி தாண்டினது போல ஒரு பயணம். ஒரு முப்பது படங்களில் ஒருத்தருக்கு கிடைக்கக் கூடிய புகழ் மூன்று படங்களில் கிடைத்தது. 2009-ல் ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டதில் இருந்து என் பயணம் பொது வாழ்க்கைக்குத் திரும்பியது. அங்கிருந்து இயக்குநர் சங்கம், தொழிலாளர் சங்கம் என்று சங்கப் பிரச்னைகள் ஒரு பக்கம். இதனால் எனக்கு பொறுப்பு அதிகரித்தது, எனக்கும் திரைப்படம் இயக்குவதுதான் ஆசை. ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் என் பயணம் இப்படிப் போய்விட்டது. அதைத் தாண்டித்தான் 'ஆதிபகவன்' படம் பண்ணேன். அதன்பின் வருடத்துக்கு ஒரு படம் பண்ணணும்னு 'சந்தனத்தேவன்' படம் ஆரம்பிச்சேன். ஆனா, தொடர்ந்து பல அரசியல் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தது.  அனிதா தற்கொலை, பின்னர் அசோக்குமாரின் மரணம், ஆர்.கே நகர் தேர்தல்னு தொடர்ந்து மக்களுக்குப் பலப் பிரச்னைகள். இந்த செய்திகளை எல்லாம் கண்டும் காணாமல் போக எனக்கு உறுத்தலாக இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நான் இருக்கணும்னு ஆசைப்படறேன். அதுதான் படம் எடுக்க முடியவில்லை."             

" 'ஜிஹாத்' என்ற தலைப்பில் ஒரு படம் எடுப்பேன்னு சொன்னீங்க. அந்தப் படத்தில் உண்மையான புனிதப்போர் என்றால் என்னவென்று சொல்லுவேன் என்றும் சொன்னீங்க.  அந்த படம் நின்றுவிட்டதா?" 

"என்னுடைய உரிமையில் தலையிட்டு என்னோட உரிமையைப் பறிக்கும்போது அதற்காக சண்டையிடுவதுதான் புனிதப்போர். ஆனால், உலகம் முழுவதும் 'ஜிஹாத்' என்றால் தீவிரவாதம் என்று வேறொரு விதமா சொல்றாங்க. தயாரிப்பாளர் சங்கத்தில் நான்கு வருடத்துக்கு முன்னாடி 'ஜிஹாத்' என்ற பெயரைப் பதிவு செய்தேன். ஒரு படத்துக்குப் பெயரைப் பதிவு செய்தால் வருடந்தோறும் அந்தப் பெயரை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இரண்டாவது முறை புதுப்பிக்கப்போகும்போது, அந்தப் பெயரை புதுப்பிக்க முடியவில்லை. ஏன் என்ற காரணமும் தெரியவில்லை? நான் அதுக்கு விளக்கமும் இதுவரை கேட்கவில்லை.  இதனால் 'ஜிஹாத்' படத்தை கைவிடுவேன் என்று அர்த்தம் இல்லை. நிச்சயமாக அந்தப் படத்தை எடுப்பேன்."  

"அமீரால் மீண்டும் 'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்' போன்ற கிளாசான ஒரு படம் எடுக்க முடியுமா? அல்லது  ஒரு படைப்பாளியாக அதிலிருந்து ரொம்ப விலகி வந்துட்டீங்களா?"  

" 'சந்தனத்தேவன்' படம் ஆரம்பிக்கும்போது எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. என்னால் ஒரு படைப்பை உருவாக்க முடியுமா? முடியாதா? அல்லது அரசியல், பொது வாழ்க்கை என்றே போய்விடுமோ?னு ரொம்ப யோசனையாக இருந்தது. ஆனால், 'சந்தனத்தேவன்' படப்பிடிப்புத் தளத்துக்குப் போனதும் எனக்குள்  தெளிவு வந்துடுச்சு. அந்தப் படைப்பாளி அமீர் இன்னும் சாகலை, இன்னும் உயிரோடதான் இருக்கான்னு உறுதியா தெரிஞ்சது."

"2009-ல் ஈழப்பிரச்னை தொடங்கி தொடர்ந்து குரல் கொடுத்து வர்றீங்க. ஆனால், தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் ஒரு போதும் சொன்னதில்லை. அது ஏன்?"  

"எனக்கு இந்தத் தேர்தல் அரசியலில் உடன்பாடில்லை. தமிழகத்தில் மொத்தம் நான்கு கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்னு வைச்சுக்கோம். இதில் ஒன்னே கால் கோடி வாக்காளர்கள் ஒரே கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். மீதி இரண்டே முக்கால் கோடி வேற வேற கட்சிகளுக்கு பிரித்துப் பிரித்து வாக்களிகிறார்கள். ஆனாலும், ஒன்னே கால் கோடி வாக்குகள் பெற்ற கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும். பெரும்பான்மை வாக்காளர்கள் இந்தக் கட்சி வரக்கூடாதுனு வாக்களித்தவர்கள். என்னைப் பொறுத்தவரை உளவியல் ரீதியாக இது சரி என்று படவில்லை. இங்கு நான் வந்து தேர்தலில் நின்று பெருசா என்ன பண்ணிடப்போறேன்? இரண்டாவது எந்த அரசை தேர்ந்தெடுக்கிறோம்னு ஒரு சிக்கல் இருக்கு. மதுவை அரசாங்கம் நடத்துது, கல்வி, மருத்துவத்தை வியாபாரம் ஆக்குது. அந்த அரசை தேர்ந்தெடுக்கிறோம். ஆக, அந்த அரசாங்கம் நமக்காக என்ன செய்கிறது? ஒன்றுமில்லையே...     

" ரஜினியோ, கமலோ, விஜயோ அரசியலுக்கு வந்தா நீங்க அவர்களை ஆதரிக்கமாட்டீங்களா?"

"அப்படி ஒன்றும் இல்லை. எனக்கும்  அண்ணன் சீமானுக்கும் கிட்டத்தட்ட 18 வருட நட்பு. கடந்த ஒன்பது வருடமா அரசியல் பயணத்துல அவர்கூட இருந்திருக்கேன். அதனால் என்னை 'நாம் தமிழர்' என எல்லாரும் அடையாளப்படுத்துவார்கள். ஆனால், நான் எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. தமிழ் மக்களுக்காக தமிழ் மண்ணுக்காக அவர் எப்போதெல்லாம் உரிமைகளை முன் வைக்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு ஆதரவாளராக அவருடன் இருப்பேன். அவ்ளோதான். அப்போது ரஜினியோ, கமலோ அவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க நான் யார்? அது அவர்களின் ஜனநாயக உரிமை."

"விஷால் இப்போ அரசியல் வந்ததற்கு ஏதாவது பின்னணி இருக்கும்னு நீங்க நினைக்குறீங்களா?"    

"ரெண்டு மூணு செய்திகள் வருது, நான் சொல்லவில்லை. ஆனால்,  டி.டி.வி யோட பினாமியாக விஷால் செயல்படுறார்னு ஐயா மதுசூதனன் சொல்லியிருக்கார். அதற்கு தோதாக டி.டி.வி யும் ஒரு அறிக்கை கொடுக்கிறார் ‘நானும் எனது தொண்டர் படையும் விஷாலின் ரசிகர் படையும் சேர்ந்து பணப்பட்டுவாடாவைத் தடுப்போம்னு’. அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் விஷாலுக்கு வாழ்த்துச் சொல்கிறார். இதற்கு முன் நடந்த தேர்தலில் எந்த வேட்பாளருக்காவது அவர் வாழ்த்துச் சொல்லி இருக்காரா? அரவிந்த் கெஜ்ரிவால் கடைசியாக தமிழகம் வந்தபோது அவரைப்பார்த்தது யாரு? இதெல்லாம் நம்ம விளக்கிக்கணும். வேட்புமனு தாக்கல் செஞ்சுட்டு வந்த விஷால் 'இந்த தொகுதி மக்களுக்கு சரியானத இவங்க செய்திருந்தால் நான் ஏன் இங்க வரப்போறேன்?'  என்று சொல்றார். இதுக்கு முன்னாடி அங்க மக்கள் பிரதிநிதியாக இருந்தது ஜெயலலிதா அம்மையார் அவர்கள். அப்போ அவர்கள் தான சரியில்லைனு அர்த்தம் அப்போ அவரிடமே ஆசி பெற்றுவந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க?" 

"விஷால் தேர்தலில் போட்டியிடப்போறார்னு சொன்ன உடனே நீங்கள் 'நாம் தமிழர்' கட்சியின் சார்பாக போட்டியிடப் போறதா செய்திகள் வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை ?"

"விஷால் போட்டியிடப்போறார் என்ற செய்தி வந்த உடனே என்னிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. 'மக்கள் நீங்க வரணும்னு எதிர்பார்ப்பாங்களே'னு நான் சிரிச்சுகிட்டே சொன்னேன். நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் யாரிடமும் ஆலோசனை கேக்க வேண்டியதில்லை. ஆனால், ஒரு கட்சியோட ஆதரவு நிலைப்பாட்ட எடுத்து நான் நிப்பேன். அது நாம் தமிழரோட ஆதரவு நிலைப்பாட்ட எடுத்த வேட்பாளராக இருப்பேன்னு தான் சொன்னேன்."

"நீங்கள் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற பேச்சு எழுந்ததும். சீமான், உங்களிடம் என்ன சொன்னார்?"

"அண்ணன் சீமான் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்..  நானும் அவர்மேல் விமர்சனங்கள் வைத்தாலும். அவருடைய குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுகுறித்து நான் பேசும்போது... ஒன்னே ஒன்னுதான் சொன்னார். 'ஆர்.கே.நகர்ல ஏற்கெனவே வேட்பாளர் அறிவித்தாகிவிட்டது. நாம் ஒரு தத்துவத்தை முன்வைத்துச் சொல்கிறோம். அப்போ ஒரு நடிகருக்காக வேட்பாளரை மாற்றுவது சரியில்லை'னு சொன்னார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை நான் வரவேற்கிறேன்." 

"சரி... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பாக கலைக்கோட்டுதயம் போட்டியிடுறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் பண்ணப் போவீங்களா?"

"அண்ணன் சீமான் அழைத்தால் போவேன். அதுவும் கலைக்கோட்டுதயம் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல என் நோக்கம். இப்போ உங்ககிட்ட நான் பேசுன சிந்தனைகள் ஆர்.கே. நகர் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக போவேன்."

"இப்போ பேசும்போதுதான் சொன்னீங்க... வாக்கு அரசியலில் உங்களுக்கு உடன்பாடில்லைனு இப்போ பிரசாரம் பண்ணப்போவீங்கனு சொல்றீங்களே இது முரணா தெரியலையா?"

"தமிழ் சினிமாவுல எண்பது சதவிகித படங்கள் வட்டி வாங்கித்தான் எடுக்கப்படுகிறது என்பது அசோக்குமார் மரணத்துக்கு பின்னர் பலபேர் வெளிய சொன்னார்கள். நீங்கள் தயாரிப்பாளாராகவும் இருந்துருக்கீங்க. நீங்கள் தயாரித்த படங்கள் எல்லாம் வட்டிக்கு பணம் வாங்காமல் தயாரித்த படங்கள் தானா?" 

" 'பருத்திவீரன்' படத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய நடிகர் கார்த்தியுடன் நீங்கள் பேசுவதில்லையாமே... அது ஏன்?"

முழுமையான வீடியோ பேட்டியைக் காண...

"உங்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர் யார்?"

"உங்களுடைய வாழ்க்கை தத்துவம் என்ன?"

"நீங்க சொன்னீங்க தேர்தல் அரசியலில் முரண்பட்டாலும்.. ஒருவேளை எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சர் ஆகிடீங்கன்னா என்ன பண்ணுவீங்க?"

அடுத்த கட்டுரைக்கு