Published:Updated:

''காமசூத்திரா எழுதப்பட்ட தேசத்தில், இன்னும் இதற்குக்கூடவா தடை?" அரவிந்த்சாமி #CIFF

''காமசூத்திரா எழுதப்பட்ட தேசத்தில், இன்னும் இதற்குக்கூடவா தடை?" அரவிந்த்சாமி #CIFF
''காமசூத்திரா எழுதப்பட்ட தேசத்தில், இன்னும் இதற்குக்கூடவா தடை?" அரவிந்த்சாமி #CIFF

''காமசூத்திரா எழுதப்பட்ட தேசத்தில், இன்னும் இதற்குக்கூடவா தடை?" அரவிந்த்சாமி #CIFF

15 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் முன் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, ``இந்தியாவில் பலவித வகையில் படைப்புச் சுதந்திரம் முடக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டார். 

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் தலைமையில் நடந்துவரும் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்பட சம்மேளன உறுப்பினர்கள், நடிகர் சங்கம், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான உலக சினிமா விரும்பிகள் கலந்துகொண்டனர்.

50 நாடுகளைச் சேர்ந்த 140 படங்கள்

தொடர்ந்து 8 நாள்கள் நடைபெற உள்ள இந்தத் திரைப்பட விழாவில் உலகப் படங்கள், ஜெர்மன், கொரியன், இந்தியன் பனோரமா பிரிவில் கன்னடம், ஒரியா, பெங்காலி, இந்திப் படங்கள், தமிழ்ப் படப் பிரிவு, எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மாணவர்களின் குறும்படங்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் 50 நாடுகளைச் சேர்ந்த 140 படங்கள் திரையிடப்பட உள்ளன.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான போட்டியில் 12 படங்கள்

இதில் சிறந்த தமிழ்ப் படங்களுக்கான போட்டி பிரிவில் ‘அறம்’, ‘கடுகு’, ‘குரங்கு பொம்மை’, ‘மனுசங்கடா’, ‘ஒரு குப்பை கதை’, ‘8 தோட்டாக்கள்’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘விக்ரம் வேதா’, ‘மாநகரம்’, ‘மகளிர் மட்டும்’,‘தரமணி’ மற்றும் ‘துப்பறிவாளன்’ ஆகிய 12 படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 

விழாவுக்கு வருகை தந்தவர்களை தமிழ் சினிமாவின் பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்த சில பாடல்களைப் பாடி வரவேற்றார் பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம். விழாவில் பங்கேற்றுப் பேசிய பன்னாட்டு அதிகாரிகள், விழாவில் பங்கேற்கும் தங்கள் நாட்டுப் படங்களை விவரித்து திரைப்பட விழாக் குழுவினருக்கும், குழுமி இருந்த சினிமா ஆர்வலர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.   

தமிழக அரசு உதவி 

தொடர்ந்து பேசிய விழாக் குழு உறுப்பினர் சுஹாசினி, ``வருடா வருடம் அரசின் சிறு உதவியைக் கொண்டும், பல்வேறு நிறுவனத்தாரின் உதவிகளுடனும் இந்த சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. கர்நாடக திரைப்பட விழாவுக்கு கர்நாடக மாநில அரசு கடந்த வருடம் மூன்றரைக் கோடி ரூபாய் நிதி வழங்கியதாகவும், இவ்வருடம் அது பத்துக் கோடியாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் தமிழக அரசும் இத்திரைப்பட விழாவிற்கென நல்ல தொகையினை ஒதுக்கினால் பெரிய  நிகழ்வாக இது மாறும்" எனத் தெரிவித்தார்.    

பல வகையில் படைப்பு சுதந்திரம் முடக்கப்படுகிறது.

விழாவை தொடங்கிவைத்துப் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, ``இந்தியாவில் 2000 வருடங்களுக்கு முன் வாத்ஸயனா காமசூத்திரத்தை எழுதிவைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக்கொண்ட அந்தப் படைப்பு பாலுணர்வு சம்பந்தப்பட்ட ஒரு இலக்கியமாகவே போற்றப்படுகிறது. அதே நாட்டில் இரண்டாயிரம் வருடம் கழித்து ஒரு முத்தக்காட்சியைப் படம் பிடிப்பதற்குத் தணிக்கை பிரச்னை வருமா என்று எண்ணக் கூடிய அளவில் உள்ளது. 

சிறுவயதில் நான் பல நல்ல தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். சில கமர்ஷியல் படங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அப்பட்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான விஷயங்கள் இவ்வளவு வெளிப்படையாகப் படமாக்கப்பட்ட அதே காலத்தில் எந்தக் காதல் காட்சியும் பெரிதாகக் காட்டப்படவில்லை என்பதே ஞாபகத்துக்கு வருகிறது.

மக்களிடம் சகிப்புத் தன்மை  குறைந்து வருகிறது. படைப்பாற்றலின் வெளிப்பாடுகளான கார்ட்டூன், சினிமா, இலக்கியம் என எல்லாவற்றிலும் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. ஏதோ ஒரு சமூக அமைப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது. மறுதணிக்கை, தடை, படைப்பாளிகள் கைது என ஆரம்பித்துக் கொலைமிரட்டல் வரை சென்றுகொண்டிருக்கிறது. எதிர்ப்பாளர்களின் குரல் ஓங்கிக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். உலகத் தலைவர்கள் பலரை கவர்ந்த காந்தியத்தின் வழி நின்று சுதந்திரம் பெற்றவர்கள் நாம். உங்களைக் கேட்பதற்கு கேள்விகள் சிலவே உள்ளன. உங்களது நம்பிக்கை வலுவற்றதா? எங்களது கலை உங்கள் நம்பிக்கையை அழித்துவிடும் இல்லை அசைத்து விடும் என்ற பயமா?" எனக் கருத்துச் சுதந்திரத்தின் எதிர்ப்பாளர்களைச் சாடினார். 

பின்னர் விழாவை நிறைவுசெய்து பேசிய விழா இயக்குநர் தங்கராஜ், "எங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஓர் பெரிய திரையரங்கு என்ற கனவை முன்னாள் முதல்வர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். பலவேறு நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன .கண்டு களித்து இவ்விழாவை வெற்றியடைய செய்யவும்" எனக் கூறினார். 

அடுத்த கட்டுரைக்கு