Published:Updated:

’’ ‘2.0’ செட்டை குழந்தையைப்போல ஆச்சர்யமாகப் பார்த்தார் ரஜினி..!’’ - ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்

உ. சுதர்சன் காந்தி.
’’ ‘2.0’ செட்டை குழந்தையைப்போல ஆச்சர்யமாகப் பார்த்தார் ரஜினி..!’’ - ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்
’’ ‘2.0’ செட்டை குழந்தையைப்போல ஆச்சர்யமாகப் பார்த்தார் ரஜினி..!’’ - ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்

பொதுவாக, சினிமா இயக்க கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குக் கதை நிகழும் இடமும் முக்கியம். கதையை எழுதி அதை ஒரு படைப்பாகக் கொண்டு வரும்போது, அந்தக் கதை எங்கு நகர்கிறது, கதையைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்று இயக்குநருக்குப் பக்கபலமாக இருப்பதில் கலை இயக்குநருக்குப் பெரும் பங்குண்டு. அந்த வகையில், 'அங்காடித் தெரு' போன்ற சின்ன பட்ஜெட் படங்களிலும் சரி, 'மெர்சல்' போன்ற பெரிய பட்ஜெட் படங்களிலும் சரி, தன் கைதேர்ந்த வேலைபாடுகளாலும் சிந்தனைகளாலும் செயற்கை என்று தெரியாதபடி செட் போட்டு மிரட்டிவரும் கலை இயக்குநர் முத்துராஜ் அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

ஆர்ட் டைரக்‌ஷன்ல ஆர்வம் எப்படி வந்துச்சு? சாபு சிரிலுக்கும் உங்களுக்குமான அறிமுகம் எப்படி ஏற்பட்டுச்சு? 

“என் சொந்த ஊர் கோயம்புத்தூர். ஸ்கூல்ல ட்ராயிங் மாஸ்டர் பத்மராஜன்தான் என்னை ஊக்குவிச்சு வெளிய நடக்குற ஓவியப்போட்டிகளுக்கெல்லாம் அனுப்பிவைப்பார். அதுல பரிசு கிடைக்குறதை பார்த்துட்டு எனக்கும் ஆர்வம் அதிகமாகி, இதுக்காக அதிக நேரம் செலவிட ஆரம்பிச்சேன். அவர் சொல்லித்தான் ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜ்னு ஒண்ணு இருக்குறதே எனக்குத் தெரியும். சென்னையில காலேஜ் சேர்ந்துட்டு, இந்தப் படிப்புக்கு என்னெல்லாம் வேலை இருக்குனு தேட ஆரம்பிச்சேன். அப்போதான் சினிமாவில இந்தமாதிரியான வேலைகள் இருக்குனு தெரிஞ்சுது. எனக்கு ஏற்கெனவே, சினிமா அதிகமா பார்க்குற பழக்கம் இருந்தனால, சினிமாவுக்குப் போகலாம்னு ஐடியா வந்துச்சு. சாபு சிரில் சார் விளம்பர ஏஜென்ஸி வெச்சிருந்தபோது, நான் அவர்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அவர் சினிமாவுக்கு முதன்முறையா வந்தபோது, நானும் அவர்கூட  அசிஸ்டென்ட்டா சினிமாக்குள்ள வந்துட்டேன்."

சாபு சிரிலுடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்துச்சு? 

"சினிமாவைப் பொறுத்தவரை, ஏதோ ஒரு விசயத்துக்கு ப்ளான் பண்ணி அதுக்காக மட்டும் காத்திட்டு இருந்தா அது சீக்கிரமா நடக்காது. நிறைய சாய்ஸ் வெச்சுக்கணும். நம்ம எதிர்பார்க்குற பொருள் கிடைக்கலைனா, அடுத்து அதுக்கு பதிலா இன்னொன்னு ரெடி பண்ண தெரிஞ்சுரிக்கணும். அந்த மாதிரி அந்த நேரங்கள்ல சமயோஜித புத்தியோட செயல்படுறதுங்கிறது சாபு சார்கிட்ட கத்துக்கிட்டேன். அவர் எந்தப் பொருளும் இல்லைங்கிறதுக்காகக் காத்திருக்கவே மாட்டார். அதேபோல, அத்யாவசிய பொருள்களை ரொம்ப பாதுகாப்பா வெச்சிருப்பார்."

ஆர்ட் டைரக்ஷனை பொறுத்தவரை, தமிழ்ப் படங்களுக்கும் மலையாளப் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

“மலையாளப் படங்கள்ல ஷூட்டிங் போகறதுக்கு முன்னாடியே சூப்பரான திட்டமிடல் இருக்கும். அங்கே ஒரு ஷெட்யூல்ல படமே முடிஞ்சிடும். இங்கதான், நிறைய ஷெட்யூல் போகும். ஒவ்வொரு ஷெட்யூலும் ஒவ்வொரு படம் மாதிரி இருக்கும். அங்க பட்ஜெட் கம்மியான படங்கள். அதனால், சீக்கிரம் முடிக்கணும்னு டைம் மேனேஜ்மென்ட்ல ரொம்ப கவனமா இருப்பாங்க. நான் அதை அங்க இருந்துதான் கத்துக்கிட்டேன். ஒரு நாளுக்கு பட்ஜெட் பத்து லட்ச ரூபாய்னா, ஒரு மணி நேரம் லேட் ஆனா, ஒரு லட்ச ரூபாய் வேஸ்ட் தான். இங்கே அந்தப் பொருள் இந்த ஷாட்டுக்குத் தேவைதானானு பெரிய குழப்பம் இருக்கு. திடீர்னு ஷூட்ல அந்தப் பொருள் இருந்தாத்தான் நல்லா இருக்கும்னு சொலிட்டா, அதுக்குப் பிறகுதான் அந்தப் பொருளை வாங்கவே போவாங்க. அப்போ, அந்த ஒரு லட்ச ரூபாயோட சேர்த்து அந்தப் பொருளுக்கான விலையும் நமக்குச் சேர்த்து செலவு ஆகும். ஆனா, மலையாளப் படங்கள்ல எது வேணும் வேண்டாம்னு தெளிவா முடிவு பண்ணிட்டுதான் மறுநாள் ஷூட்டிங்கே போவாங்க. மல்லுவுட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கோலிவுட்ல நிறைய பேருக்குக் குழப்பமான மனநிலை இருக்கு."

பட்ஜெட்டுக்குத் தகுந்தமாதிரி உங்களை எப்படித் தயார்ப்படுத்திக்குறீங்க? நிஜ இடங்கள்ல ஷூட் பண்றதுக்கும் செட் போட்டு ஷூட் பண்றதுக்குமான வித்தியாசம் என்ன? 

“ ‘அங்காடித் தெரு'படத்துக்காக ரங்கநாதன் தெரு செட்டை 25 அடிக்குத்தான் போட்டோம். அதுக்கு அப்புறம் சிஜி வொர்க்தான். இதுவே, பெரிய பட்ஜெட் படம், பெரிய ஆர்டிஸ்ட் பண்றாங்கனு சொன்னா, முழு தெருவுமே போடலாம். உதாரணத்துக்கு, சின்ன படத்துக்கு, ஜெமினி பாலத்துல ஒரு ஷாட் எடுக்கறோம்னு சொன்னா, அந்த ஆர்டிஸ்டை நிக்க வெச்சு ஷாட் எடுத்துட்டு மினியேச்சர்ல சமாளிச்சிடலாம். ஆனா, ரஜினி மாதிரியான ஆர்டிஸ்ட் பண்ணும்போது, ஜெமினில பண்ண முடியாது. அப்போ, ஜெமினி பாலம் மாதிரி ஒரு செட் போட வேண்டியிருக்கும். அப்போ பட்ஜெட் அதிகமாகும். 'மெர்சல்' படத்துல விஜய் சாரை வெச்சு வெளிய ஷூட் பண்ணமுடியாது. அதனால்,  மதுரை, திருவல்லிக்கேணியை முழுக்க முழுக்க செட் போட்டோம்.

'வேலைக்காரன்' படத்துல குப்பத்துல ஷூட் பண்றோம். அங்க நயன்தாரா வந்து நின்னாங்கன்னா, ஷூட் பண்ண முடியாது. ஆனா, 'காக்காமுட்டை' பசங்களை வெச்சு நம்ம குப்பத்துல சுத்தி இருக்கவங்களையும் பயன்படுத்தி அழகா பண்ணலாம். காரணம், சின்ன பட்ஜெட், சின்ன ஆர்டிஸ்ட். இதை எல்லாத்தையும் நம்ம யோசிச்சுதான் ப்ளானே பண்ணணும். நிஜ இடங்களிலேயே ஷூட் பண்ணலாம். ஒரு மார்கெட்ல ஷூட் பண்றோம்னா, ஆர்டிஸ்டை சுத்தி எல்லாரும் கேமராவைப் பார்த்துட்டு இருப்பாங்க. ஒரு செயற்கையாவே இருக்கும். ஆனா, ஒரு மார்கெட் மாதிரி செட் போட்டா, எல்லாருமே பர்ஃபார்ம் பண்ணுவாங்க. ரொம்ப யதார்த்தமா இருக்கும். நிஜ இடத்துக்குப் போனாலும், செட் போட்டாலும் சொல்ல வேண்டியதை சரியா சொல்லிடணும். செட் போட்டா இன்னும் ரெண்டு மடங்கு கவனத்தோட இருக்கணும். "

இயக்குநர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவங்க மூணு பேருக்கான உறவு எப்படி இருக்கணும்?

"ஒரு ஆர்ட் டைரக்டர் எப்பவும் கேமராமேன் பார்வையிலையும் டைரக்டர் பார்வையிலும் இருந்து பார்க்கணும். கதை கேட்டவுடனே, கேமராமேன் கூட டிஸ்கஸ் பண்ணணும். ஏன்னா, அவங்க ஒரு மைன்ட் செட் வெச்சிருப்பாங்க. ஒரு வீடு அதோட இடப்பக்கம் ஒரு ஜன்னல் வேணும்னு சொன்னா, அந்த ஜன்னல் வழியா நமக்கு லைட் கிடைக்குமானு அவங்க பார்வையில இருந்து பார்க்கணும். அதே போல, ராஜா காலத்து சீன் வர்ற மாதிரி இருந்தா, பட்ஜெட் இல்லைங்கிற பட்சத்துல, அதை 2D அனிமேஷன்ல விஷூவல் கொடுத்துட்டு, வாய்ஸ் ஓவர்ல சொல்லிடலாம்னு ஒரு டைரக்டர் பார்வையில இருந்தும் பார்க்கணும். தயாரிப்பாளரும் இயக்குநரும் சேர்ந்து முடிவு பண்ணி சொல்லிட்டா, ரொம்ப ஈஸியாகவும் தெளிவாகவும் பண்ணலாம்."

பொதுவா, எந்த மாதிரியான செட் போட சிரமமா இருக்கும்? 

“சினிமாவைப் பொறுத்தவரை, ரியலிஸ்டிக் செட்டை விட ஃபேன்டஸி செட்தான் ரீச் ஆகும். ஒரு போலீஸ் ஸ்டேசன் செட் மாதிரி ரியலிஸ்டிக்கான விசயத்துக்கு அது செட்டுன்னே தெரியக் கூடாதுனு நிறைய மெனக்கெடுவோம். அதுக்குப் பேரே கிடைக்காது. காரணம், அது செட்டுன்னே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஆனா, ஃபேன்டஸி செட்டுக்குதான் பாராட்டுகள் வரும். என்னைப் பொறுத்தவரை, செட்டுன்னே தெரியாமல் இருக்கிறதுதான் சக்சஸ்."

ரீமேக் படங்கள் பண்ணும்போது, பழைய செட் மாதிரியே இந்த செட்டையும் போடணும்னு நினைப்பிங்களா?

“ரீமேக் பண்ணும்போது, எல்லாமே அதே மாதிரி பண்ணணும்னு அவசியம் இல்லை. இப்போ  '3 இடியட்ஸ்' படத்தை தமிழ்ல 'நண்பன்'னு பண்ணோம். ஹிந்தில கல் கட்டடம் இருக்கும். தமிழ்ல பண்ணும்போது, வித்தியாசமான செங்கல் கட்டடம்தான் வேணும்னு டேராடூன் போனோம். ஏன்னா, '3 இடியட்ஸ்' படத்தை நிறைய பேர் பார்த்துட்டாங்க. அதோட ஃபர்ஸ்ட் லுக்கே அந்த மூணு பேரும் குழந்தைகள் சேர்ல உட்கார்ந்திருப்பாங்க. அதிலிருந்து வித்தியாசமா என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான், அந்த பலூன் கண், பெரிய உதடு, உடம்பு எல்லாம் வெச்சு ரிலீஸ் பண்ணோம். என்னதான் ரீமேக் படமா இருந்தாலும் அதுல இருந்து நம்ம என்ன வித்தியாசமா பண்றோம்ங்றது தானே முக்கியம். "

‘வேலைக்காரன்’ படத்துல வேலை பார்த்த அனுபவம் பத்தி சொல்லுங்க...

“ரங்கநாதன் தெருவில பார்த்தா, குப்பைகள் இருக்கும். ஆனா, அது கட்பீஸ் துணி, உள்ளாடை இருக்க பாக்ஸ், கிழிஞ்ச துணினு எல்லாமே துணி சம்பந்தப்பட்ட குப்பைகளா இருக்கும். அதனால, ‘அங்காடித் தெரு’ படத்துக்காக, ரங்கநாதன் தெருவுக்குப் போய், நிறைய குப்பைகளை அள்ளிட்டு வந்து செட்ல போட்டு பயன்படுத்தினோம். நாங்க தினமும் போறதை பார்த்துட்டு, எங்களை யாரு என்னானு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதே மாதிரி இந்தப் படத்துக்குக் குப்பத்து செட் போடணும்னு முடிவு பண்ணியாச்சு. அதனால, நிறைய குப்பங்களுக்கு போய் வந்த அனுபவங்களை வெச்சு போட்டோம். என்ன மாதிரியான குப்பை இருக்கணும், கூவம் பக்கத்துல இருக்கிற  குப்பத்துல எல்லாம் வீடுகள் எப்படி இருக்கும், வீடு மேல டயர் எல்லாம் போட்டிருப்பாங்க. நடுவுல கால்வாய் ஓடும். ஒரு பாலம் மாதிரி தென்னை மரத்தை போட்டுருப்பாங்க. இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணோம். துருப்பிடிச்ச தகரம் வேணும்னா, அதே மாதிரி நம்ம செயற்கையா பண்றதுக்கு, அதே இருந்தா நல்லாயிருக்கும்னு புது தகரத்தை அந்த வீட்டுக்கு வாங்கிக்கொடுத்துட்டு பழைய தகரத்தை வாங்கிட்டுவந்திடுவோம். அது மாதிரி, கருகிப்போன இட்லி குண்டா, குக்கர், உடைஞ்ச கதவுடைய ஜன்னல்னு நிறைய பழையப் பொருள்களை வாங்கிட்டு, அதுக்குப் பதிலா அவங்களுக்குப் புதுப் பொருள்களைக் கொடுத்துட்டு வந்துடுவோம். இந்தப் படத்துனால நிறைய வீடுகளுக்குப் புதுப்பொருள்கள் போயிருக்கு. அதுல மோகன் ராஜா சார், சிவா எல்லாருமே செம கேரக்டர். ரஜினி சார், விஜய் சார்ட்ட இருக்க சின்ஸியர் நான் சிவாகிட்ட பார்க்குறேன்.”

‘2.0’ படத்துக்கு செட் போட்ட அனுபவம் பத்தி சொல்லுங்க... ரஜினி செட் பார்த்துட்டு என்ன சொல்வார்? 

“ஷங்கர் சார் கூட இது மூணாவது படம். அவர்கிட்ட நான் கொண்டு போகும்போது, இதுக்கு மேல ஒன்னும் பண்ணமுடியாதுங்கிற மாதிரி தான் செட் கொண்டு போவேன். ஏதாவது புதுமையா காமிக்கணும்னு கவனமா இருப்பார். ரஜினி சார் உள்ளே வந்தவுடனே, செட்டை ஒரு நிமிஷம் உன்னிப்பா கவனிப்பார். சில செட்டை பார்த்துட்டு குழந்தையைப் போல் ஆச்சர்யப்படுவார். 'ஷங்கர் சாரை திருப்திப்படுத்தவே முடியாது. நீங்க எப்படித் திருப்திப்படுத்திடுறீங்க? சூப்பர் சார்'னு பாராட்டினார். இந்தப் படத்துக்காக ஒன்றரை கி.மீ முழுக்க செட் போட்டோம். நான் கோவையில பேனர் வரைஞ்சுட்டு இருக்கும்போது, 'தளபதி' படத்துக்காக ரஜினி சாரை வரைஞ்சு இருக்கேன். ஆனா, இப்போ அவர் கூடவே வேலை பார்க்குறோம்னு நினைச்சா ரொம்பவே சந்தோசமா இருக்கு. தோள் மேல கைப்போட்டு ஜாலியா பேசுவார். நம்ம வொர்க் பார்த்துட்டு அவர் ஆச்சர்யமா குழந்தை மாதிரி கேட்கும்போது நமக்கு இருக்க மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அந்தப் படத்துல நிறைய செட் போட்டிருக்கோம். எப்படி இருக்குனு அடுத்த வருஷம் பார்த்துட்டு சொல்லுங்க...”