Published:Updated:

‘இதான் டிசைன்னா... கொஞ்சம் பாத்து செய்ங்க பிரம்ம தேவனே!’ - ‘பிரம்மா.காம்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
‘இதான் டிசைன்னா... கொஞ்சம் பாத்து செய்ங்க பிரம்ம தேவனே!’ - ‘பிரம்மா.காம்’ விமர்சனம்
‘இதான் டிசைன்னா... கொஞ்சம் பாத்து செய்ங்க பிரம்ம தேவனே!’ - ‘பிரம்மா.காம்’ விமர்சனம்

இத்தனை ஆண்டுகளாக மகிழ்விக்கும் தமிழ்சினிமாவிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என உங்களுக்குத் தோன்றுகிறதா? யோசிக்காமல் '108'க்கு கால் செய்யுங்கள். தமிழ்சினிமா படைப்பாளிகளிடம் சிக்கி சுவாசக் கோளாறில் தவிக்கும் 'பேன்டஸி' ஜானரை காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும். யெஸ்... வெல்கம் டு பிரம்மா.காம்!

‘நாம பெரியாளாகணும்’ என்ற கனவுகளோடு, இல்லையில்லை கனவுகளில் மட்டுமே வாழும் இளைஞன் நகுல். சரி, பெரியாளுன்னா சயின்டிஸ்ட் மாதிரி ஏதாவதா? அட இல்ல பாஸ், பெண்கள் சூழ பார்ட்டி செய்துகொண்டே இருக்கவேண்டும், காஸ்ட்லி கார்கள் ஓட்ட வேண்டும் - இதுதான் நகுல் எதிர்பார்க்கும் 'பெரிய்யமனுஷத்தனம்'. 'எனக்கு ஏன் இந்த வசதி வாய்ப்பெல்லாம் தரமாட்ற?' என்று கோயிலில் பிரம்மாவோடு சண்டை போடுகிறார். (பாஸ், மொதல்ல அதுக்கு வேலை பார்க்கணும்! படத்துல ஒரு சீன் கூட நீங்க வேலை பார்க்கல!) கடுப்பாகும் பிரம்மாவும் அவருக்கு 'இந்தாப் பிடி' என ஒரு வரம் கொடுத்துவிடுகிறார்.

அதன்படி ப்ரோக்ராம் புரொடியூசராக இருக்கும் நகுலுக்கு அவரின் சி.இ.ஓ சித்தார்த் விபின் வாழ்க்கையும், சித்தார்த் விபினுக்கு நகுலின் வாழ்க்கையும் வாழும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மாற்றம் நகுல், அவரின் நண்பர் ஜெகன், ஜெகனின் கேர்ள்ஃப்ரெண்ட் ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கையில் ஒரு ட்விஸ்ட். புரொக்ராம் புரொடியூசராக நகுல் இருந்தவரை அவரைக் காதலித்துவந்த ஆஷ்னா ஜாவேரி இந்த வாழ்க்கை மாறாட்டத்திற்குப் பிறகு சித்தார்த்தைக் காதலிக்கத் தொடங்குகிறார். ஆசைப்பட்ட பணக்கார வாழ்க்கை கிடைத்தாலும் காதலித்த பெண் கிடைக்காத சோகத்தில் அழுது புலம்புகிறார் நகுல். போதாக்குறைக்கு சேர்மனான மொட்டை ராஜேந்திரனும் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நகுலை மிரட்டுகிறார். இந்த இடியாப்பச் சிக்கல் கதை எப்படி நூல் நூலாக பிரிந்து நம் தட்டில் (தலையில்) விழுகிறது என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் ஹீரோ நகுலுக்கும் காமெடியன் கம் வில்லன் மொட்டை ராஜேந்திரனுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் ஒரே ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. அது - எல்லா சீனுக்கும் ஒரேமாதிரியான ரியாக்‌ஷனையே காட்டுவது. விடலைப் பையன் மாதிரி எல்லாத்துக்கும் சிரிச்சுக்கிட்டே இருக்குற 'பாய்ஸ்' நகுல் வேணாம் ப்ரோ! 'வல்லினம்' மாதிரி வெயிட்டான ரோல் எதிர்பார்க்குறோம் உங்ககிட்ட. 

ஆஷ்னா ஜாவேரி வழக்கமாக ஹீரோயின் ஃபுல் மேக்கப்பில் வந்து என்ன செய்வாரோ அதை செய்துவிட்டு செல்கிறார். மொட்டை ராஜேந்திரனின் கரகர குரலும் பாடி லாங்குவேஜும் ஒருகாலத்தில் சிரிப்புமூட்டியது உண்மைதான். ஆனால் இப்போது சலிப்புதான் தட்டுகிறது. அதுவும் படத்தின் தொடக்கத்தில் 'புகைபிடித்தல் உடல்நலத்துக்குத் தீங்கானது' வாசகத்தை ஏதோ ஒரு படத்தில் மொட்டை ராஜேந்திரன் குரலில் கேட்டபோது ரசித்தோம். அதற்காக அதையே 'காமெடி' என்று நினைத்து, ஒவ்வொரு படத்திலும் மொட்டை ராஜேந்திரனைப் பேசவைத்திருப்பது.... தீங்கானது, மிகமிகத் தீங்கானது!

இதுபோக, கெளசல்யா, பாக்யராஜ், நண்டு ஜெகன், நீது சந்திரா என நிறையப் பேர் இருக்கிறார்கள் ஃப்ரேமில். கதை இருக்கணுமே?

இது ஃபேன்டஸி கதையா, பக்திப்படமா, காமெடி மூவியா என்பது இயக்குநர் புருஷ் விஜயகுமாருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அந்தளவிற்கு இலக்கில்லாமல் இங்கேயும் அங்கேயும் சுற்றித் திரிகிறது திரைக்கதை. இதில் காமெடி என்ற பெயரில் அநியாயத்திற்கு உருவகேலிகள் வேறு. இன்னும் எத்தனை படங்களில் பருமனான பெண்ணும், முடியில்லாத ஆணும் மகிழ்ச்சியாக வாழவே தகுதியில்லாதவர்கள் எனக் காட்டுவதாக உத்தேசம் படைப்பாளிகளே?

வேண்டும் பக்தனுக்கு ஃபேஸ்புக் வழியே வரம் தரும் கடவுள் என்ற ஒன்லைன் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கடவுள் ஃபேஸ்புக் வந்தவுடனேயே கதையில் லாஜிக் லாக் அவுட் செய்துவிட்டு லாங் லீவில் போய்விடுவதால் கடைசிவரை ஒரு காட்சியில் கூட ஒன்றவே முடியவில்லை. படத்தில் நடித்த விபின் சித்தார்த்தான் இசையமைப்பாளரும். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி சுமார் ரகம்தான். தயாரிப்பாளர் தன்னுடைய நடிப்பு ஆசையையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் கலைதாகத்தையும் தணிக்க படத்தைப் பயன்படுத்தியிருப்பார் போல. நிறைய கேரக்டர்கள் அமெச்சூர் நடிப்பையே அள்ளித் தெளிக்கின்றன.

ஒருவேளை நிஜமாகவே பிரம்மன் வரமளித்தால் எல்லாக் கோட்டையும் அழித்துவிட்டு திரும்ப ஆரம்பிக்க இயக்குநர் வேண்டிக்கொள்ளலாம். படத்தில் ஒரு வசனம் வரும். 'நீ பண்றதெல்லாமே பிரம்மன் டிசைட் பண்ணி டிசைன் பண்ணதுதான்' என. 'பிரம்மா.காம்' பார்ப்பதுதான் எங்கள் டிசைனென்றால்... ப்ளீஸ் பிரம்மா! கொஞ்சம் பார்த்து செய்ங்க!