Published:Updated:

‘ஸ்கூல் பசங்களை வெச்சு இப்படிப் படம் எடுக்கலாமா இயக்குநரே..!’ - ‘பள்ளிப்பருவத்திலே’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
‘ஸ்கூல் பசங்களை வெச்சு இப்படிப் படம் எடுக்கலாமா இயக்குநரே..!’ - ‘பள்ளிப்பருவத்திலே’ விமர்சனம்
‘ஸ்கூல் பசங்களை வெச்சு இப்படிப் படம் எடுக்கலாமா இயக்குநரே..!’ - ‘பள்ளிப்பருவத்திலே’ விமர்சனம்

இளம் பிராயத்தில் நிகழும் காதலும் அதனால் இருவர் வாழ்வில் நிகழும் மாற்றங்களும்தான் 'பள்ளிப்பருவத்திலே' படம். டைட்டில் கார்டிலேயே ‘காதலிப்பது உயிரைக் கொல்லும்’ என போட்டே தொடங்கியிருக்கலாம். அந்த அளவுக்குப் படத்தில் பள்ளிக் கால காதலை ‘வேறு கோணத்தில்' அலசிக் காயப்போட்டிருக்கிறார்கள். 153 நிமிடங்கள் ஓடும் நீளம் வேறு நம் பொறுமையை சோதிக்கிறது.

வாசுதேவ் பாஸ்கரின் இயக்கத்தில் அறிமுக நாயகன் (இசையமைப்பாளர் சிற்பியின் மகன்) நந்தன் ராம்- வெண்பா ஜோடியோடு கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, பொன்வண்ணன், 'பருத்திவீரன்' சுஜாதா, கஞ்சா கருப்பு, தம்பி ராமைய்யா, ஆர்.கே.சுரேஷ் எனப் பெருங்கூட்டமே நடித்திருக்கும் படம் இது. ‘பலே’ காஸ்ட்டிங்கை வைத்துக்கொண்டு ‘பல்பு’ கொடுத்துள்ளார் இயக்குநர். ஒருவேளை கால் நூற்றாண்டுக்கு முன் இப்படம் வந்திருந்தால் பேசப்பட்டிருக்குமோ என்னவோ?

கதை..? தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கும் அழகான கிராமத்தில் பள்ளியின் இறுதிஆண்டில் படிக்கிறார்கள் நந்தன்ராமும் வெண்பாவும். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகன்தான் நந்தன் ராம். ஊரே மதிப்புவைத்திருக்கும், மாணவர்கள் மீது அன்புவைத்திருக்கும், பார்க்கும் வேலையில் உண்மையாக இருக்கும் நல்ல மனிதர் கே.எஸ்.ரவிக்குமார். ஊரில் பெரிய மனிதராக இருக்கும் பொன்வண்ணனின் மகள் வெண்பாவைக் காதலிக்கிறார் நந்தன் ராம். இந்த விஷயம் கேள்விப்பட்டு கோபமாகிறார்கள் வெண்பாவின் அப்பா பொன்வண்ணனும் சித்தப்பாவான ஆர்.கே.சுரேஷும். நந்தன் ராமும் காதலில் தீவிரம் காட்ட... விவகாரம் ஊர்ப் பஞ்சாயத்து வரைக்கும் வந்துவிடுகிறது. பஞ்சாயத்தில் தான் காதலிக்கவில்லை என வெண்பா சொன்னதும் கடுப்பான வெண்பா உறவினர்கள் நந்தன் ராமை அடிக்கிறார்கள். காதலி, தன் காதலை நிராகரித்த அவமானத்தால் புழுங்கும் நந்தன் ராம், தன்னால், தன் மகனை கண்டிப்புடன் வளர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வெதும்பும் அப்பா கே.எஸ்.ரவிக்குமார், குடும்ப கௌரவத்துக்கு வேட்டு வைத்த நந்தன் ராமை கொல்ல திட்டம் போடும் ஆர்.கே.சுரேஷ் என சுவாரஸ்ய முடிச்சிட்டு இந்தப் பள்ளிப் பருவத்து காதல் என்னவாகிறது என்பதை நீண்ட கொட்டாவி வர வைக்கும் திருப்பங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.  

ஹீரோ நந்தன் ராம் பார்க்கவே பாவம் போல இருக்கிறார். ஓரளவு நடித்திருந்தாலும் காட்சிகள் மனதில் ஒன்றாததால் அவர் நடிப்பும் மனதில் நிற்கவில்லை. நாயகி வெண்பாவுக்கு நன்கு நடிக்க வருகிறது. அனைத்து ஃப்ரேம்களிலும் அழகாக உள்ளார். ஆனால், அவரின்  உழைப்பு ஊரே சேர்ந்து தோண்டவேண்டிய கிணற்றை ஒருவர் மட்டும் தோண்டுவதைப் போல் பயனில்லாமல் போகிறது. நல்ல, நல்ல ஸ்கிரிப்ட்டாக தேர்ந்தெடுத்து நடித்தால் வெண்பாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இவர்கள் தவிர படத்தில் நடித்தவர்கள் நன்றாக நடித்திருந்தாலும் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் புதுமை இல்லாததால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவே இல்லை. பிற்பாதியில் சென்டிமென்ட் ஏரியாவில் கோட்டை கட்டிய இயக்குநர் அதையே ஓவர் டோஸாக கொடுத்ததால் படம் முடியும்போது 'அப்பாடா!' என்று தோன்றுகிறது. காமெடி என்ற பெயரில் தம்பி ராமைய்யா பண்ணுவதெல்லாம் கொலை முயற்சியன்றி வேறில்லை.

படத்தின் ஒரே ப்ளஸ் கே.எஸ்.ரவிக்குமார் சம்பந்தப்பட்ட சில காட்சிகள். ஒரு நல்லாசிரியரைக் கண்முன்கொண்டு வந்து நிறுத்துகிறார். அப்படியே ‘சாட்டை’யை எடுத்து ஏதோ கதை சொல்லப் போகிறார்களோ என எதிர்பார்த்தால், நம் எதிர்பார்ப்பில் இரண்டு லிட்டர் பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிடுகிறார்கள். பள்ளி மாணவர்களை வைத்துப் படம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்களைக்கூட கவனத்தில் கொள்ளாமல், மாணவர்களை வைத்துக்கொண்டு மது குடிப்பதும், கள்ளக் காதலைப் பற்றி பேசுவதும் என அபத்தமான காட்சிகளைவைத்து கடுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் படத்தில் வரும் ஒரு பாட்டி படும் பாடுதான் நம் நிலையும்! பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தவறாமல் இடம்பிடித்துவிடுகிறார் அந்தப் பாட்டி. சைக்கிளை அவர்மேல் போட்டு விளையாடுவது, ஒரே மிதியில் தலைகீழாக விழவைப்பது, சகதியை அவரது முகத்தில் எறிவது, தண்ணீருக்குள் தத்தளிக்க விடுவது என அந்தப் பாட்டியை வன்கொடுமை பண்ணியிருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஆர்.கே.சுரேஷும் தன் பங்குக்கு, ‘இவனெல்லாம் ஒரு ஆளு, அவனெல்லாம் ஒரு ஆளு, நீயெல்லாம் ஒரு ஆளு...’ எனப் படம் முழுக்கவே பைல்ஸ் வந்தவரைப்போல கோபமாகவே வருகிறார்.

‘கனி கல்யாணம் நடக்காது’ எனப் பேசும் ஹீரோ கலை, கல்யாணம் நடக்கிற அன்று கண்மாய்க்குள் சும்மாதான் உட்கார்ந்து இருக்கிறார். ‘பையனை தப்பா புரிஞ்சுக்கிட்டோம்’ என ஃபீல் பண்ணும் ஹீரோவின் அப்பா, அடுத்து ஏதோ பண்ணப்போகிறார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. எல்லாப் பக்கத்திலும் அடிபட்டு, மிதிபட்டு, துன்பப்பட்டு,துயரப்பட்டு நிற்கும் ஹீரோ இனிமேல் லூஸுத்தனமாக எதுவும் செய்யமாட்டார் என நாம் நினைக்கும்போது அங்கும் ஏமாற்றம்தான். இப்படி எந்த சீனும் சுவாரஸ்யம் இல்லாமலேயே நகர்வது ‘கேட்டை எப்போ சார் திறப்பீங்க?’ என நம்மைக் கேட்க வைக்கிறது.