Published:Updated:

ரஜினி-கமலை இணைத்து படம்:கெளதம் விருப்பம்

பிப்.15,2011 

ரஜினி-கமலை இணைத்து படம்:கெளதம் விருப்பம்

ரஜினியையும் கமலையும் இணைத்து ஒரு படத்தை இயக்க விரும்புவதாக, கெளதம் வாசுதேவ மேனன் கூறியுள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை அடுத்து கெளதம் மேனன் இயக்கி இருக்கும் படம் 'நடுநிசி நாய்கள்'.

இந்த படத்தில், வீரா கதை நாயகனாக அறிமுகமாகிறார். இவர், கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். கதை நாயகியாக சமீரா ரெட்டி நடித்து இருக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நிருபர்களிடம் கூறியது:

"கடந்த வருடம் நான் ஒரு டாக்டரை சந்தித்து பேசும்போது, அவரிடம் சிகிச்சை பெறுகிற ஒரு விசித்திரமான மனநோயாளி பற்றி கூறினார். அப்போதுதான் 'நடுநிசி நாய்கள்' படத்தின் கரு உருவானது.

அந்த மனநோயாளியாக யாரை நடிக்க வைப்பது? என்று யோசித்தபோது, என் உதவியாளர் வீரா கண்ணில் பட்டார். அவரிடம் எப்போதுமே ஒரு தேடல் இருக்கும். அந்த தேடல்தான் அவரை கதை நாயகனாக தேர்வு செய்ய வைத்தது.

படத்தை முடித்து முதல் பிரதி தயாரானதும், படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அதற்காக வெவ்வேறு துறைகளை சேர்ந்த 35 பேர்களை தேர்வு செய்து படம் பார்க்க வைத்தோம். படம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, வீராவை பார்க்க பயந்தார்கள். அது, எனக்கு கிடைத்த வெற்றி.

அடுத்து, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை இந்தியில் டைரக்டு செய்கிறேன். மறைந்த இந்தி நடிகை சுமிதா பாட்டீலின் மகன் பிரதிக் கதாநாயகனாக நடிக்கிறார். திரிஷா நடித்த வேடத்தில், எமி ஜாக்சன் நடிக்கிறார். டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் என்ற 'ஹாலிவுட்' நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்குகிறேன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் டைரக்டு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது," என்றார் கெளதம் வாசுதேவ் மேனன்.