Published:Updated:

'அண்ண்ண்ண்ணேணேணே... அவனை வெட்டிக் கொல்லுண்ணே..!’ - `பாசமலர்’ தங்கச்சிகள் பாவம் டைரக்டர்ஸ்

முருகன் மந்திரம்
'அண்ண்ண்ண்ணேணேணே... அவனை வெட்டிக் கொல்லுண்ணே..!’ - `பாசமலர்’ தங்கச்சிகள் பாவம் டைரக்டர்ஸ்
'அண்ண்ண்ண்ணேணேணே... அவனை வெட்டிக் கொல்லுண்ணே..!’ - `பாசமலர்’ தங்கச்சிகள் பாவம் டைரக்டர்ஸ்

மொழியும் கலையும் தான், ஒரு நிலப்பரப்பின் வாழ்க்கையை, ஒரு சமூக மக்களின் வாழ்க்கையை வேறு வேறு நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கும், வேறு வேறு சமூக மக்களுக்கும் கொண்டு சேர்க்கும், பரிமாற்றம் செய்யும்.

திரைப்படம் கலையின் ஒரு வடிவம் என்ற வகையில், அது எந்த மொழியில் எடுக்கப்படுகிறதோ அந்த மொழியைப்பேசும் மக்களின் வாழ்வியல் சாட்சிகளாக, வரலாறுகளாக பார்க்கப்படும். திரைப்படங்கள் 100 சதவீதம் அதன் மொழி பேசும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் என்று கூறமுடியாது எனினும்... அப்படி பார்க்கப்படாது என்றும் நாம் கூறிவிட முடியாது.

1980களில் பாரதிராஜாவால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு வகையான "தங்கச்சி" சினிமா கலாசாரம், இன்று திசை மாறி, வடிவம் மாறி, உட்பொருள் மாறி தமிழர்களையும் தமிழ் பெண்களையும் தமிழ் சினிமாவையும் அசிங்கப்படுத்துவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

பாரதிராஜாவின் "கிழக்குச் சீமையிலே" படத்திற்கு முன் அண்ணன், தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படங்கள் வந்திருக்கின்றன. "பாசமலர்", "முள்ளும் மலரும்" போன்ற தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களுடன் இன்னும் பல சராசரிப் படங்களும் வந்திருக்கின்றன. இந்த வகை படங்கள் அண்ணன் தங்கை உறவுமுறைக்குள் இருக்கிற பாசப்பிணைப்பையும் சிக்கல்களையும் முதன்மையாகக் கொண்டதாக இருந்தன.

ஆனால், சில வருடங்களாக வந்துகொண்டிருக்கும் அண்ணன்-தங்கை திரைப்படங்கள் வன்முறை வெறியாட்டங்களாகவும், செயற்கையான சித்தரித்தல்களாகவும் இருக்கின்றன.

மைனா, மதயானைக்கூட்டம், கருப்பன் மற்றும் கொடிவீரன் படங்களை இந்த மாதிரி படங்களுக்கான உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு அண்ணன், தன் தங்கை மீது அப்படி ஒரு வெறித்தனமாக பாசம் கொண்டவராக இருப்பார். அந்த அண்ணனே வீரனாகவும் முரடனாகவும் ரௌடியாகவும் இருப்பார். அதே அண்ணன், ஊரே பார்த்து பயப்படுபவராகவோ, அல்லது ஊரே மரியாதை செய்பவராகவோ, அல்லது ஊரின் முக்கியமானவரோகவோ இருப்பார்.

தங்கச்சி மட்டும் என்னவாம், ஆங்கார நீலி, நீலாம்பரிகள் எல்லாம் இந்த தங்கச்சிகளுக்கு முன்னால் பிஸ்கோத்து எனும் அளவுக்கு ஆக்ரோஷக்காரிகளாக இருப்பார்கள். இந்த ஆக்ரோஷக்கார தங்கச்சிகளின் அண்ணன்கள் புரொபசனல் ரௌடிகளாக இருப்பார்கள். கை, கால் வெட்டுவது தொடங்கி கழுத்தை வெட்டுவதை எல்லாம் சாதாரணமாக செய்து விட்டு வீட்டில் வந்து கை கழுவுவார்கள். கூடவே தங்கச்சிகளின் கணவன்மார்களும் மார்பை நிமிர்த்தி வீராப்பாக அலையும் அரிய காட்சிகளும் இருக்கும்.

ஆனால், தங்கள் வீட்டில் அதே மாதிரி ஒரு கையோ, காலோ, கழுத்தோ வெட்டப்பட்டால், புன்னகை இளவரசிகளான இந்த தங்கச்சிகள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு அண்ணன்களின் முகத்தைப்பார்க்காமல் சீறுவார்கள். அவன் தலையை வெட்டிக்கொண்டு வந்து என் காலடியில் போடு என்று நடுவீட்டில் நின்றுகொண்டு கத்துவார்கள். அண்ணன்களும் தங்கச்சியின் கட்டளையை தலைமேல் சுமந்து, அருவாள்களோடும் கொலைவெறியோடும் புறப்படுவார்கள்.

இதில் முக்கியமான இரண்டு நகைமுரண் என்னவென்றால்... இந்த தங்கச்சிகள்... தெருவில் வருகிறவன் போகிறவனிடம் எல்லாம்... எங்க அண்ணன் யார் தெரியுமா? உன்னால அவன் முன்னால நிக்க முடியுமா? நீயெல்லாம் அவன் முன்னால் கொசு, கொழுக்கட்டை என்று கடுப்பேத்தி, உசுப்பேத்தி அண்ணன்களின் புகழ் பாடித்திரிவார்கள். இப்படி ஓவர் பில்டப் பண்றதிலேயே நல்லான்களும் வில்லன்கள் ஆகியே தீருவார்கள். வேற வழி?

இன்னொரு மிகப்பெரிய நகைமுரண் என்னவென்றால், தங்கச்சிகள் மீது கொண்ட பாசத்தால் தங்கச்சிகள் இடும் கட்டளைகளை சிரம் மேல் ஏற்றி ஊரில் உள்ளவர்கள் தலை வெட்ட அலையும் அண்ணன்கள், தங்கச்சிக்கு காதல் வந்துவிட்டால்... பாசமாவது பாவக்காயாவது என்று நிலைமாறி... தங்கச்சி தலையையே வெட்டி வீசுவார்கள். (உதாரணம்: பாண்டவர் பூமி).

ப்ப்ப்பபாஆஆஆ. விவரிக்கும்போதே அத்தனை அசதி வந்துவிடுகிறது.

ஏடிஎம் அட்டைகளோடும் ஸ்மூல்களோடும் அண்ணன்களும் தங்கைகளும் வாழ்கிற 21ம் நூற்றாண்டில் இது மாதிரியான வலிந்த செயற்கைத்தனமான சித்தரிப்புகள் கோபத்தை ஏற்படுத்துவதோடு அருவருப்பையும் ஏற்படுத்துகிறது.

எங்கோ ஒரு ஊரில் ஏதோ ஒரு சமுதாயத்தில் ஒரு தங்கச்சியோ, சில தங்கச்சிகளோ அப்படி இருந்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் அந்த தங்கைகளும் அண்ணன்களும் மிக சராசரி கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். ஊருக்காகவோ, மற்றவர்களுக்காகவோ வாழ்ந்த தியாகிகள் மாதிரிகூட சித்தரிக்கப்படுவதில்லை. இந்த மாதிரியான திரைப்படங்களை தமிழகம் பற்றி தெரியாத வெளிநாட்டுக்காரர்கள் பார்த்தார்கள் என்றால், ஒட்டு மொத்தமாக தமிழ் பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றோ, தமிழ் பேசும் இன மக்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று புரிந்துகொள்ளவே செய்வார்கள். அப்படி புரிந்துகொண்டால் தமிழர்களைப்பற்றிய, தமிழ்ப் பெண்களைப்பற்றிய அவர்களின் மதிப்பீடு என்னவாக இருக்கும் யோசியுங்களேன்.

மிக சராசரியான இந்த தங்கைகளின் இரத்த வெறியை கொண்டாடி கொடி பிடிக்கிற வீரர்களை, இயக்குநர்களை, ரசிகர்களை என்ன சொல்வதே என்று தெரியவில்லை.

ஏனெனில்...

மாதவிடாயின் வலியும் பிரசவத்தின் வலியுமுணர்ந்த பெண்ணொருத்தி, இன்னொரு உயிரை எடுக்கவோ, வதைக்கவோ விரும்பவே மாட்டாள். தன்னால் இன்னொரு பெண், அவளது குடும்பம், குழந்தைகளை பாதிக்கப்படுவதை விரும்பவே மாட்டாள். வன்முறையை தூண்டிவிட்டு அதில் சிலரை பலி கொடுத்து, தன் அண்ணன் தம்பிகளை ஜெயிலுக்கு அனுப்புவதை கொண்டாட மாட்டாள். அண்ணன், தம்பிகள்... அவர்களின் அம்மாக்கள், மனைவிகள், குழந்தைகள் பற்றியும் குடும்ப உறவின் பாசப்பிணைப்புகள் பற்றியும் அறியாத விலங்கினமா இந்த வகை தங்கச்சிகள்...? அல்லது அமேசான் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை மனித இனமா?

சரி... அண்ணன்கள் வீரன்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனும் கைவைக்க முடியாத சண்டியர்கள் என்றே வைத்துக்கொள்வோம். கொலை பாதக வெறியாட்டங்களை செய்துவிட்டு போலீஸ் துணையோடும் அரசியல் செல்வாக்கோடும் படை பலத்தோடும் மிக சாதாரணமாக வெளியில் நடமாடுவதைத்தான் விரும்புகிறார்களா இந்த தொங்கச்சிகள்...

சட்டம், நீதி, சமத்துவம், சமூக நீதி எல்லாம் என்னவென்றே தெரியாத அப்பாவிகளா இந்த ஆருயிர் தங்கச்சிகள்...

திரைப்படம் என்பது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. ஒரு கலை வடிவம். பெரும்பான்மை மக்களை சென்று சேரும் ஒரு ஊடகம். அதை வைத்துக்கொண்டு இப்படியான மிகை புனைவுகளை தொடர்ந்து செய்வதும் கொண்டாடுவதும் என்பது இந்த சமூகத்திற்கு செய்கிற துரோகம் அன்றி வேறொன்றும் இல்லை.

இந்த மாதிரி படங்களில் இருக்கிற தனி மனித உரிமை மீறல், வன்முறை வெறியாட்டங்கள், சட்டம், நீதியை காலடியில் போட்டு மிதித்தல், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் வன்முறையாளர்களாக / முரடர்களாக / வீரர்களாக (அவர்கள் பாஷையில்) சித்தரித்தல் எல்லாம் இந்த நாட்டின் இறையாண்மைக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.

சக மனிதன் மீதான வன்முறையை அத்துமீறலை ரௌடியிசத்தை கொண்டாடுவது என்பது ஒருவகை மனநோய். தண்டிக்கப்படவேண்டிய அல்லது சீர்திருத்தப்படவேண்டிய ஒரு மனநோய்.