Published:Updated:

’’ஹலோ.. எனக்கு சுயசரிதை எழுதினா, அந்த ரெண்டு பேரை மறந்துராதீங்க!" விஜய்சேதுபதி ரெக்வஸ்ட்

இரா.வாஞ்சிநாதன்
’’ஹலோ.. எனக்கு  சுயசரிதை எழுதினா, அந்த ரெண்டு பேரை மறந்துராதீங்க!"  விஜய்சேதுபதி ரெக்வஸ்ட்
’’ஹலோ.. எனக்கு சுயசரிதை எழுதினா, அந்த ரெண்டு பேரை மறந்துராதீங்க!" விஜய்சேதுபதி ரெக்வஸ்ட்

'விக்ரம் வேதா' படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆன நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், விஜய் சேதுபதி, இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி, நடிகர் கதிர், படத்தின் கதாநாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தின் வெற்றி குறித்து நடிகர் கதிர்,“விக்ரம் வேதா, இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது ரொம்பப் பெருமையா இருக்கு. இந்த ஒரு நாள் எப்போது வரும் வருமென்று காத்துகொண்டு இருந்தேன். ஏனென்றால் இந்தப் படம் உங்க எல்லாரோட ஆதரவையும் பெற்று நூறு நாட்களைக் கடந்து விட்டது. இது ஒரு பெரிய வாய்ப்பு எனக்கு. இதைக்கொடுத்த இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி, தயாரிப்பாளர் சஷிகாந்த் ஆகியோருக்கு நன்றி. இந்த படம் பெரிய வரவேற்பைப் பெற்றது, எனக்கு ரொம்ப ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது” பேசினார்.

படத்தைப் பற்றி இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி,“ஜூலை 21ஆம் தேதி இந்த படம் வெளியானது. இருபதாம் தேதி இரவு எல்லாரும் ரொம்ப டென்ஷனாக இருந்தோம். படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் விநியோகஸ்தர் ரவியும், தயாரிப்பாளர் சஷியும் படத்தை பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க. ‘அதிக பிரிண்ட் போட்டு பெரிய ரிலீசாக செய்வோம்’ என்று சொன்னார்கள். அந்த நேரம் ஜி.எஸ்.டி பிரச்னை, திரையரங்குகள் பணிநிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நேரம். அப்போது மக்கள் வருவார்களா, கூட்டம் குவியுமா என்று ரொம்ப பதற்றமாக இருந்தது. விஜய் சேதுபதியும் ரிலீஸுக்கு முன்னாடி நாள் எங்களோடு தான் இருந்தார். முதல் பிரீமியர் காட்சி துபாயில் முடிந்து அழைப்பு வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட ஆரம்பித்தோம். முதல் காட்சி முடிந்து படத்துக்கு நல்ல வரவேற்பு பரவ ஆரம்பித்தது. விமர்சனங்கள்தான் படத்துக்கு நல்ல பாசிட்டிவிட்டியைக் கொடுத்தது. நாங்கள் மட்டும் இந்த படத்தை உருவாக்கவில்லை, இதன் பின்னே பலரின் உழைப்பு இருக்கிறது. உதவி இயக்குநர்கள் நாங்கள் கைவிட்ட விஷயங்களைக் கூட விடாமுயற்சியோடு செய்து முடித்தனர்.அவர்கள் எல்லோருக்கும் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றனர்  

வரலட்சுமி சரத்குமார் பேசும்போது,“இப்போது உள்ள நிலைமையில் ஒரு படம் ஒரு வாரம் கடந்தாலே அது பெரிய விஷயம். ஆனால் விக்ரம் வேதா நூறு நாட்களைக் கடந்தது மிகப்பெரிய ஒரு விஷயம். இந்த படத்தோட ஒரு பகுதியாக இருப்பதற்கு ரொம்ப பெருமையா இருக்கு. சின்ன பாத்திரமாக இருந்தாலும் சந்திரா கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருந்தது. இன்னும் இது போல நல்ல நல்ல படங்களை நீங்கள் வருங்காலத்தில் கொடுக்க வேண்டும்” என்று இயக்குநர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்  பேசும்போது,“ஏதோ ஒரு வரலாறு படைத்தது போல இருக்கிறது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருந்ததை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நூறு நாட்கள் கொண்டாட்டம் எனக்கு ரொம்பவும் புதுசு.எல்லோருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் சி.எஸ்.சாம்,  “இந்த படத்துக்கு அப்புறம், என்னோட இசைப்பயணம் விக்ரம்வேதாவுக்கு முன் விக்ரம்வேதாவுக்கு பின் என்று மாறிவிட்டது. இந்த படம் எனக்கு வரும்போது நான் முழு நேர இசையமைப்பாளர் இல்லை. ஐ.டி.யில் வேலைபார்த்துட்டுத்தான் படங்களுக்கு இசையமைத்தேன். அப்போது புரியாத புதிர் படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். புஷ்கர் சாரும் காயத்ரி மேடமும் என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். ரொம்ப பெரிய படம் , என்னை ரொம்ப நம்பினாங்க. இந்த வாய்ப்பு கொடுக்காம இருந்திருந்தால் என் அடையாளமே தெரிஞ்சுருக்காது. என்னோட டீமுக்கு ரொம்ப நன்றி. பணத்துக்காக இல்லாமல் ரொம்ப ஆத்மார்த்தமாக உழைத்தார்கள். இங்க நான் இருக்கிறதுக்கு ஒரே காரணம் புஷ்கர் சாரும் காயத்ரி மேடமும் தான்” என்றார்.

விஜய் சேதுபதி பேச மேடைக்கு வரும்போது, கூட்டத்தில் இருந்த ’ஒருவர் ஏதாவது பரபரப்பாக பேசுங்க; என்றதும், ‘பரபரப்பாகவா ? தேர்தல் எப்படி போய்கிட்டு இருக்கு?’ என்றபடியே பேச ஆரம்பித்தார். ‘’ ‘தர்மதுரை’க்குப் பிறகு நூறாவது நாள் விழா இந்த படத்துக்கு தான் கொண்டாடுறேன். இந்த படம் ஆரம்பித்து, வெளியாகி, ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி ஓய்ந்து போன பிறகு நடக்கும் விழா இது. அதனால் புதிதாக பாராட்ட ஒன்றும் இல்லை. ஆனா இந்த படத்தினால் நான் நிறைய பேரோட அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். இன்னொரு லெவலுக்கு என்னை இந்த படம் கொண்டு சென்றது. முதலில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி அவர்களுக்கு ஏற்கெனவே ஆயிரம் நன்றி சொல்லிட்டேன், மீண்டும் இப்போது ஆயிரம் முத்தங்களோட நன்றி சொல்றேன். மாதவன் சார், கதிர், வரலட்சுமி ,ஷ்ரத்தா எல்லாருக்கும் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்னைக்காவது ஒரு நாள் எனக்கு சுயசரிதை எழுதுனா இந்த படம் முக்கிய இடத்தைப் பெறும்’’ என்றார்.

மாதவன் கூறியதாவது, ‘’இந்த படத்தோட இசை வெளியிட்டு விழா அப்போ சொன்னேன், ‘இந்த படத்தோட நூறாவது நாள் விழா அப்போதான் எல்லாரையும் பாராட்டி பேசுவேன்’ என்று. தயாரிப்பாளர் சஷி எனக்கு தம்பி மாதிரி, புது விதமான கதைகளங்களை என்றைக்கும் ஆதரிக்காமல் இருந்ததில்லை. அடுத்த தலைமுறைக்கான தயாரிப்பாளர் சஷி. இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. என்னோட யோசனைகளையும் எடுத்துக்கிட்டு பண்ணாங்க, அதனால் தான் படம் நல்ல வெற்றி அடைந்தது. நான் சொன்ன சில விஷயம் அவங்க எடுத்துகலை. அதனால் தான் படம் ரொம்ப பெரிய வெற்றி பெற்றது.(சிரிக்கிறார்). படத்தின் வெற்றிக்கு பின்னால் எல்லாரையும் பாராட்டினேன். ஆனால் படம் வெற்றி என்று தெரிந்தவுடன் வெளியூர் சென்றுவிட்டேன். ஏனென்றால் வெற்றி ஒருவரை குழப்பிவிடும். ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விடும். ஐந்து மாதத்துக்கு பிறகு இப்போது தான் சென்னைக்கு வந்துள்ளேன். எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான விஷயம் நான் சொல்லவந்தது என்னவென்றால், படம் வெளியாகி கிட்டத்தட்ட இருநூத்தி நாற்பது விமர்சனங்கள் பார்த்தேன். இந்த இடத்தில் முக்கியமானது, எந்த பத்திரிகையும், ஊடகமும், ரசிகர்கள்,எதிரிகள் யார் எழுதிய விமர்சனமானாலும், கடைசியில் போலீஸ் தான் வில்லன் என்கிற அந்த சஸ்பென்சை போட்டு உடைக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இந்த மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. வெற்றி அடைந்த ஒரு படத்தை மக்கள் தனதாக்கி கொள்கிறார்கள்.அதற்காக பத்திரிகை,ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு மனசார நன்றி சொல்றேன். என்னோட உழைத்த எல்லோருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.’’     

தயாரிப்பாளர் சஷிகாந்த் பேசும்போது,“படம் எழுதும்போது நாங்கள் கருத்தில் கொண்ட விஷயம், படம் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் முழுமையான வெற்றி பெற வேண்டும் என்பதே. அதே மாதிரியான வெற்றி கிடைத்திருக்கு. இதுவரை வொய்-நாட் ஸ்டுடியோஸ் எந்த படத்துக்கும் வெற்றி விழா கொண்டாடியதில்லை. இந்த படத்துக்கும் ரொம்ப நாள் யோசித்து, வெற்றி விழா கொண்டாட தகுதியானது என்றறிந்த பின் இப்போது தான் கொண்டாடுகிறோம். இந்த படத்தை வெளியிட உதவிய விநியோகஸ்தர் ரவிக்கு மிகபெரிய நன்றி. என்றைக்கும் வொய்- நாட் ஸ்டுடியோஸ் புதுவித முயற்சியை விட்டுக்கொடுக்காது. 2013-ல் இருந்து இந்த படத்திற்கு உழைத்த புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.