Published:Updated:

‘அதே கண்கள்’ முதல் ‘அருவி’ வரை... 2017ல் ஜொலித்த அறிமுக இயக்குநர்கள்..! #2017Rewind #BestOf2017

அலாவுதின் ஹுசைன்
‘அதே கண்கள்’ முதல் ‘அருவி’ வரை... 2017ல் ஜொலித்த அறிமுக இயக்குநர்கள்..! #2017Rewind #BestOf2017
‘அதே கண்கள்’ முதல் ‘அருவி’ வரை... 2017ல் ஜொலித்த அறிமுக இயக்குநர்கள்..! #2017Rewind #BestOf2017

கதைக்களம், தொழில்நுட்பம், வியாபார யுக்தி  எனப் பற்பல முன்னேற்றங்களைத் தமிழ் சினிமா கடந்த சில ஆண்டுகளாகச் சந்தித்து வருகிறது. சமீப காலங்களில் எவ்வளவு எதிர்பார்ப்பு மிக்க படமாய் இருந்தாலும் ரசிகர்களின் ரசிப்புத் தன்மைக்குத் தீனியிட்டால் மட்டுமே அது ஹிட் அந்தஸ்து பெறுகிறது. இந்த வருடம் இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கோலிவுட்டில் வெளியாகியுள்ளன. 

ஒரு படம் எடுக்கப்படுவதைவிட, அதை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டுசேர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இதில் பெரிய ஸ்டார் படங்களே திணறுகின்றன. சிறு பட்ஜெட் படங்களின் நிலைமை மிகவும் மோசம். சில படங்களை எடுத்து முடிப்பதற்குள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நொந்து நூடில்ஸ் ஆகி விடுவார்கள். பின் படம் ரிலீஸ் ஆவது தெய்வாதீனம். 

ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என ரிலீசாகும் பல சிறு பட்ஜெட் திரைப்படங்களில் நம்மைக் கவரும் படங்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவையே. இந்த வகைத் திரைப்படங்கள் நம் நண்பர்கள் சொல்ல, சமூக வலைதளங்களில் பேசப்பட திரையரங்குகளில் சென்று பார்த்திருப்போம். இப்படி 'வோர்ட் ஆ ஃப் மவுத்து' விளம்பரத்தில் 2017ல் நம் கவனத்தை ஈர்த்த சில நல்ல சிறு பட்ஜெட் திரைப்படங்களை இயக்கியவர்கள் அனைவரும் அறிமுக இயக்குநர்கள் என்பதுதான் இதன் சிறப்பு.

அதே கண்கள் 

பார்வையற்ற கதாநாயகன் அவனை விட்டுப் பிரியும் காதலி. கதாநாயகனை துரத்திக் காதலிக்கும் இன்னொரு பெண். பார்வை திரும்ப வந்த பிறகு மீண்டும் காதலியைத் தேடிச் செல்வது என முக்கோண காதல் கதை என்று நம்மை உக்காரவைத்த புதுமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், கதையோட்டத்தில் வசதி படைத்த  பார்வையற்ற இளைஞர்களை டார்கெட் செய்து ஏமாற்றும் கும்பலை அறிமுகப்படுத்தியது. கதாநாயகி யார் என்ற ட்விஸ்டு, ரிவீலிங் பலவைத்து த்ரில்லர் படமாய் அமைந்திருந்தார். கலையரசன், ஷிவதா நாயர், ஜனனி அய்யர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேசனுக்கு நல்ல என்ட்ரி கொடுத்த திரைப்படம் ‘அதே கண்கள்'. ஆன்டி-ஹீரோயின் கதையைச் சொல்ல முற்பட்டதும் வெகுவாகப் பாராட்டபட்டது. ஜிப்ரான் இசையில் 'அடியே நீ களவாணி' என்ற பாடல் இந்த வருடம் ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்ட பாடல்களில் ஒன்று.      

கனவு வாரியம் 

தமிழக கிராமங்களில் நிகந்த மின்தட்டுபாட்டைப் போக்க தன் சொந்த முயற்சியில் எளிய விலை காற்றாலை கண்டுபிடிக்கும் இளைஞனைச் சுற்றி நடக்கும் கதை. படத்தை தயாரித்து, இயக்கி, நடித்த புதுமுகம் அருண் சிதம்பரத்தின் துணிவு சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரிதும் பாராட்டுபெற்றது. ஐ.டி துறையிலிருந்து வெளியேறி இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிபெறத் துடிக்கும் யோகி ஜப்பீ என முழுக்க முழுக்க பாசிட்டிவி்ட்டியை விதைத்த கனவு வாரியம் ரசிகர்களின் இடையே சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

மாநகரம்

நல்ல கதை ஒரு நல்ல சினிமாவின் அடையாளம் என்பார்கள். ‘ஹைப்பர்லிங்க் சினிமா’ எனும் கதை சொல்லும் யுக்தியைக் கையில் வைத்துக்கொண்டு, சென்னையின் ஒரு நாள் வாழ்க்கையில் மூன்று வெவ்வெறு மனிதர்களை ஒரு புள்ளியில் இணைத்த விதம். காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் என பக்கா கமர்ஷியலிசத்தை கலந்து ஒரு டைட் ஸ்க்ரீன்ப்ளே அமைத்திருந்த விதம் புதுமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது. 

ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, சார்லி ஆகியோரது நடிப்பில் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோரது பக்கம் ரசிகர்கள், சினிமா வட்டாரமென அனைவரது பார்வையையும் திருப்பிய படம் மாநகரம்.

பாம்பு சட்டை 

புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படம் பாம்பு சட்டை. இளம் வயதில் விதவையான தனது அண்ணன் மனைவியின் திருமணத்திற்கு தேவைப்படும் பணத்திற்காக கள்ள நோட்டு கும்பலிடம் சிக்கிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞனாக பாபி சிம்ஹா நடித்திருந்தார்.    

சென்னையின் சொல்லப்படாத இடங்களில் கதைக்களத்தை அமைத்திருந்தது முதல் கீர்த்தி சுரேஷ், குரு சோமசுந்தரம், சரவணா சுப்பையா, சார்லி என்று அவர்களது கதாபாத்திரத்தை முழுமையாக செய்திருந்த நடிகர்களை வேலை வாங்கியிருந்தார் இயக்குநர் ஆடம் தாசன் .ஒரு பருக்கை அரிசி நம் தட்டிற்கு எப்படி வருகிறது என்பது போன்ற வசனங்கள் இயக்குநர் ஆடம் தாசனை முத்திரை பதிக்கச் செய்தன.

8 தோட்டாக்கள் 

MS பாஸ்கர், புதுமுகம் சத்யா, அபர்ணா முரளி, நாசர் ஆகியோர் நடிப்பில் கதையை மட்டும் நம்பி தயாரிக்கப்பட்டு வெற்றிபெற்ற படங்களில் ஒன்று 8 தோட்டாக்கள். படித்து காவல் துறையில் சேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவனான கதாநாயகன், தனது குடும்பத்தினரால் ஏற்படும் அவமானங்களைத் தாங்க முடியாமல் பேங்கில் கொள்ளையடிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என முரண் நிறைந்த கதாபாத்திரங்களை வைத்து புதுமுக இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய க்ரைம் த்ரில்லர் '8 தோட்டாக்கள்'.

கதாநாயகன் வெற்றி, கதாநாயகி அபர்ணா முரளி எனக் கதை நகர்ந்தாலும் MS பாஸ்கரும் அவரது நடிப்பால் நம்மை திரைப்படத்துடன் ஒன்றவைத்த ஒரு சில விஷயங்களில் ஒன்று. அறிமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் தனது கதைக்கேற்ற நடிகர்கள் இருந்தால் போதுமென்று துணிந்ததும் அதை மனதில் வைத்துக்கொண்டு எழுதிய திரைக்கதையும் இப்படத்தின் முதல் வெற்றி.     

லென்ஸ் 

இந்த வருடம் வந்த சிறு பட்ஜெட் மினி பட்ஜெட் திரைப்படம் லென்ஸ். ஃபெஸ்டிவல் திரைப்படமா ?? மெயின்ஸ்ட்ரீம் திரைப்படமா?? என்ற வித்தியாசம் பெரிதும் தெரியாமல் இருந்ததற்கு இப்படத்தின் கதையே காரணம். மற்றவர்களின் அந்தரங்கப் பதிவுகளின் மூலம் இன்பம் பெரும் 'வாயரிஸம்' பற்றிக் கூறியிருந்தது.

'விர்ச்சுவல்' சாட் ரூம்களில் அந்தரங்கம் பகிரும் ரோமியோவாக நடித்திருந்த புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நம்மிடையே இருக்கும் வக்கிரத்தைப் பிரதிபலித்திருந்தார். எங்கேயோ, யாருக்கோ இவ்வகை 'வாயர்' வீடியோக்களால் அவமானமோ, பிரச்னைகளோ ஏற்படுகிறது என்ற பகிரங்க உண்மை நம்மை உலுக்கியது. ஆனந்சாமி, அஸ்வதி லால் ஆகியோரது நடிப்பும் நம்மைக் கவர்ந்தது. இன்றைய நெட்ஒர்க்ட் ஸ்மார்ட் ஃபோன் உலகில் நமது பிரைவசியின் நிலைமை நிர்கதிதான் என்று கூறியது 'லென்ஸ்' திரைப்படம்.   

ரங்கூன் 

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், சனா மக்புல்,லல்லு, டேனியல் பாப், சித்திக் நடித்திருந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'ரங்கூன்'. மிகவும் சொற்பமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு ப்ளாட், அதனின் விபரீதங்களைக் கொண்டு சேர்க்க ஒரு ஸ்ட்ராங் பேக் கிரௌண்ட் ரிசர்ச் எனக் கதையோடு எவ்வளவு எலமென்டுகளைக் கையாள முடியுமோ அவ்வளவு கையாண்டிருந்தார் இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி.

மறக்கப்பட்ட பகுதியினரான பர்மா தமிழர்கள் அவர்களின் வாழ்வு முறையையும் எடுத்துக் கூறியது கூடுதல் பலம். சிறு புள்ளியில் ஆரம்பித்து விஸ்தாரமாய் விரியும் மார்க்கெட் தங்கக் கடத்தல் திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, GK பிரசன்னா ஒளிப்பதிவு என தனது டெக்னீஷியன்களின் முழு ஈடுபாட்டையும் ஒன்றிணைத்து ராஜ்குமார் பெரியசாமி நம்மை கவர்ந்திருந்தார்.

ஒரு கிடாயின் கருணை மனு

தொடர்ந்து நல்ல கதைகளையுடைய புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தும் விதார்த் நடித்து வெகுவாகப் பாராட்டப்பட்ட மற்றுமொரு படம்தான் 'ஒரு கிடாயின் கருணை மனு'. கோவிலுக்கு வளர்க்கப்படும் ஆடு பலியாக்கப்படுமா இல்லையா என்பதை குறியீடாக வைத்து ஒரு தரமான 'பிளாக் காமெடி - மர்டர் மிஸ்டரி' திரைப்படமாக 'ஒரு கிடாயின் கருணை மனு'வை கொடுத்திருந்தார் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா. விதார்த், ரவீணா, ஜார்ஜ், ஆறு பாலா மற்றும் கிராமத்து வாசம் மாறாத மக்கள், அவர்களுக்குள் நடக்கும் கிராம வழக்கு, நக்கல், நையாண்டி வசனங்களும் கூடுதலாக ரசிக்க வைத்தன.  ஒளிப்பதிவு, இசை எடிட்டிங் த்ரில்லர் படத்தின் ஓட்டத்தில் நமது கிராமம் சார்ந்த டீடைலிங்கை கையாண்ட விதமும், ஓவர்ஏஜ் மேரேஜ், வீட்டிலேயே வளர்க்கப்படும் குலதெய்வத்திற்கான பலிகிடா எனப் புது கதைக்களத்தைக் கொண்டு சென்ற விதத்தில் யதார்த்தமாய் அமைந்திருந்தது ஒரு கிடாயின் கருணை மனு.

மரகத நாணயம் 

அட்வென்ச்சர் த்ரில்லர் ஜானரில் புதுமுக இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மரகத நாணயம். பல்லவ மன்னன் இரும்பொறையின் வாளில் பதியப்பட்டிருக்கும் மரகதக்கல்லை தேடி அலையும் கும்பல்களில் ஒருவர் ஆதி. இந்தக் கல்லைத்  தொட்டால் துர் மரணம், ஓட்டுநரே இல்லாமல் வரும் லாரி, செத்தவர்கள் நாயகனுக்கு உதவி செய்வது, ஆண் குரலில் பேசும் நாயகி, ரேடியோ வைத்து மிரட்டும் வில்லன்  என தனக்குக் கிடைத்த 'அட்வென்ச்சர்' என்னும் லைசென்ஸை நன்கு உபயோகித்திருந்தார் சரவணன். 

ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ராம்தாஸ், டேனியல் போப், ஆனந்தராஜ் நடித்திருந்த இப்படம் அனைத்து சென்டர் மக்களையும் ரசிக்க வைத்தது.

பண்டிகை

தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படாத நடிகர்களுள் ஒருவர் கிருஷ்ணா. வருடத்திற்கு ஒரு நல்ல படத்திலாவது நடித்துவிடுகிறார். இந்த வருடம் அறிமுக இயக்குநர் ஃபெரோஸ் இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி, சரவணன், பாண்டி, நிதின் சத்யா ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'பண்டிகை'.

‘ஃபைட் கிளப்' எனப்படும் பலப்பரீட்சை பந்தைய விளையாட்டும் அதில் இருக்கும் சூதாட்டமும். அந்தச் சூதாட்ட போதையில் மாட்டிக்கொள்ளும் சரவணன், காதலுக்காக அந்தக் கும்பலின் பிடியில் சிக்கிக்கொள்ளும் கிருஷ்ணா எனப் பின்னப்பட்ட முடிச்சுகளைத் திரைக்கதை மூலம் அவிழ்த்த நேர்த்தியும் 'பண்டிகை'யை பர்ஃபெக்ட் கேங்ஸ்டர் த்ரில்லர் ஆக்கியது. புதிய களத்தைக் கூறியதும்,   நேர்த்தியாக உருவாக்கிய விதமும் நமக்கு திருப்பதியை அளித்தது. மற்றவர்களைப் போல் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து விடவேண்டும் என்ற கதாநாயகனின் ஏக்கம் போட்டி, ஏமாற்றம், வெறி, ரொமான்ஸ் என எமோஷனல் மிக்ஸராக இருந்தது 'பண்டிகை'.

குரங்கு பொம்மை

தமிழ்த் திரையுலகில் குறும்பட இயக்குநர்களின் வருகை சற்றே குறைந்திருந்த வேளையில். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமி ஆகியோருடன் குறும்பட ஏரியாவில் கலக்கிக்கொண்டிருந்த நித்திலன் இயக்கிய த்ரில்லர் திரைப்படம் 'குரங்கு பொம்மை'. அன்றாட வாழ்வின் அத்தியாவசியமாகக் கருதப்படும் பணம் எப்படி மனித மனங்களை மாற்றுகிறது என்பதை வித்தியாசமான கதாபாத்திரங்களைக் கொண்டு கூறிய படம் 'குரங்கு பொம்மை'.     

பணப்படுக்கையில் படுத்தால் மட்டுமே தூக்கம் வரும் என்ற மூட நம்பிக்கையில் திரியும் 'பிக் பாக்கெட்'திருடன், சிறுதெனினும் நேர்மையாக உழைக்கும் விதார்த், கொலைகார முதலாளிக்கு விசுவாசத்தை தவிர ஏதும் அறியா விதார்த்தின் அப்பாவாக பாரதிராஜா, சாலையோரம் கிடைத்த செல்போனை உரியவரிடம் கொடுக்கும் துப்புரவுத் தொழிலாளியின் மனைவி என லோயர் அண்ட் மிட்டில் கிளாஸ் சென்டிமென்டுகள், சிலைகடத்தல் கும்பலின் மூவ்மென்ட் என யதார்த்த நிகழ்வுகளின் வழி கதை சொன்னது என அப்லாஸ்களை இயக்குநருக்கு அள்ளித் தந்தது 'குரங்கு பொம்மை'.

மேயாத மான் 

டைட்டில் முதலே ஒரு தலை காதலின் ஆழத்தை கூறியிருந்தார் அறிமுக இயக்குநர் ரத்னகுமார். 'இதயம்' முரளி என எல்லோராலும் அழைக்கப்படும் ஒரு தலை காதல் கதாநாயகன், தன் நண்பனின் தங்கையை காதலியாகப் பார்க்க முடியாமல் தவிக்கும் இன்னொரு நண்பன் என இரண்டு இளைஞர்களைப் பற்றிய கதை. 

நமக்கு மிகவும் பரீட்சயமான, தமிழ் சினிமா சற்று மறந்திருந்த ரொமான்டிக் காமெடி ஜானரை மீண்டும் நமக்குக் கொடுத்திருந்தார் இயக்குநர். பிரதீப் - சந்தோஷ் நாராயணின் இசை படத்தை மியூசிக்கலாகப் பயணப்படுத்தியது. 'விட்டி ஒன் லைனர்ஸ்' என்னும் குபீர் சிரிப்பு வசனங்கள், தங்கச்சி சென்டிமென்ட், ஃப்ரெண்ட்ஷிப் என ஒரு ஜாலி டைம்பாஸ், ஃபீல் குட் திரைப்படமாக இருந்தது 'மேயாத மான்'. வைபவ், பிரியா பவானிஷங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா என யதார்த்த கதாபாத்திரத்தை அழகு குறையாமல் கொடுத்திருந்தனர் 'மேயாத மான்' குழுவினர்.  

அறம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தோழர் நயன்தாராவாக மாற்றிய திரைப்படம் 'அறம்'. அனைவருக்கும் பரீட்சயமான கோபி நயினார் இயக்குநராக அறிமுகமான திரைப்படம். ஆழ்துளை போர்வெல் கிணறுகள் - ஆள்கொலை போர்வெல்களாக மாறும் அவலத்தையும், அவசர காலங்களில் அரசு சார் துறைகள், அதிகாரிகள் முனைப்பையும் பற்றி எடுத்துக்கூறிய திரைப்படம். சில அத்தியாவசிய சூழ்நிலைகளில் நிர்கதியாக்கப்படும் விளிம்பு நிலை மக்களின் கூச்சலைக் கூறியதால் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தது.

அரசு அலுவலகங்களில் எங்கேயாவது நல்ல அதிகாரியைப் பார்த்திட மாட்டோமா என்றிருந்த நமக்கு நயன்தாராவின் கதாபாத்திரம் பெரும் திருப்தியை அளித்தது. அதிவேகமாக விண்வெளியில் பாயும் ராக்கெட்டை விடும் இந்தியா -  போர்வெல் பள்ளத்தில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்ற துடிக்கும் இந்தியா எனக் குறியீடுகளின் வழி கதை சொன்னது பெரிதும் பேசப்பட்டது. சுனு லட்சுமி, ராமச்சந்திரன், 'காக்கா முட்டை' விக்னேஷ் , ரமேஷ் ஆகியோரது நடிப்பும் ஜிப்ரான் பின்னணி இசை, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு என அனைத்து டெக்னிக்கல் துறைகளிலும் ஒரு தரமான படமாய் அமைந்து அனைவரது பாராட்டையும் பெற்றது .         

அருவி

யாரும் எளிதில் கண்டிருக்க முடியாத சிறு புள்ளியில் ஆரம்பித்து தன் ஓட்டத்தில் பெரிய நிகழ்வுகளை நடத்தி மீண்டும் நாம் எதிர்பார்க்காத  சிறு புள்ளியில் மறைகிறாள் 'அருவி'. அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்த படங்களில் இந்த வருடம் 'அருவி'யும் ஒன்று, ஏன் அந்த லிஸ்ட்டில் முதல் இடமாகக் கூட இருக்கலாம். இயக்குநர் முதல் கதாபாத்திரங்கள் வரை அருவியில் பல விஷயங்கள் புதுசு. நாம் கொண்டாடுவதற்கு அனேக விஷயங்களையும் கொடுத்ததற்கும், கதைக்கான நேர்த்தி வாய்ந்த டெக்னிக்கல் டீமை ஒன்றிணைத்தற்கும் புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு 'ஹாட்ஸ் அஃப்'. அருவி முதல் செக்யூரிட்டி தாத்தா வரை அனைத்துக் கதாபாத்திரங்களும் நம் மனதை நனைத்து சென்றன.   

கன்டன்ட் இஸ் தி கிங்

"கன்டன்ட் இஸ் தி கிங்' என்ற வழக்குக்கேற்ப மேற்சொன்ன ஒவ்வொரு படத்தின் களம் மற்றும் கதாபாத்திரம் ஏதோ ஒருவகையில் நம்மை ரசிக்கவைத்திருக்கும், ஏதோ ஒரு புள்ளியில் நம்மை ஒன்றவைத்து இருக்கும், எதையோ ஒரு விஷயத்தை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும். புதுமுக இயக்குநர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் முதல் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளுதல் என்ற எண்ணத்தை தாண்டி அவர்களது படைப்புத் திறனும் சிந்தனையும் கோலிவுட்டை ஒரு படி முன்னெடுத்துச் செல்லும் வேலையையும் செய்திருக்கிறது. இத்தகைய சிறு பட்ஜெட் கதைகள் ரியலிசம் மூலம் நம்மிலிருக்கும் ஒரு சிலரை பிரதிபலிப்பதாலேயே வெற்றி பெறுகின்றன. வரும் வருடத்திலும் இவ்வகை திரைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவரும் என நம்பிக்கை கொள்வோம்.