Published:Updated:

“தமிழர்களே... 'டான்ஸர்' பிரபுதேவா, 'செல்லம்' பிரகாஷ்ராஜ்லாம் மறந்துருங்க..!” - தங்கர்பச்சான்

“தமிழர்களே... 'டான்ஸர்' பிரபுதேவா, 'செல்லம்' பிரகாஷ்ராஜ்லாம் மறந்துருங்க..!” - தங்கர்பச்சான்
“தமிழர்களே... 'டான்ஸர்' பிரபுதேவா, 'செல்லம்' பிரகாஷ்ராஜ்லாம் மறந்துருங்க..!” - தங்கர்பச்சான்

தமிழ்சினிமா உலகில் முதன்முதலில் ஒளி ஓவியராக அறிமுகமாகி, அடுத்து இயக்குநராக அவதாரம் எடுத்தவர் தங்கர்பச்சான். சினிமா துறையில் இயல்பாகவே இருக்கும் காம்ப்ரமைஸ்களுக்குக் கட்டுப்படாமல், சுயமரியாதையோடு திரைப்படம் உருவாக்கும் திறன்கொண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில், பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா நடிப்பில் உருவான 'களவாடிய பொழுதுகள்' டிசம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ள வேளையில், இயக்குநர் தங்கர்பச்சானிடம் பேசினோம்.

“1990-ம் ஆண்டு ‘மழைச்சாரல்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன். இதுவரை ஐம்பதுக்கும் அதிகமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறேன். முதன்முதலில் ‘அழகி’ திரைப்படத்தில் இயக்குநர் ஆனேன். அதன்பின் 'சொல்ல மறந்த கதை', 'பள்ளிக்கூடம்' எனப் பயணித்த எனக்கு, இயக்குநராக 'களவாடிய பொழுதுகள்' 10-வது திரைப்படம். 'அழகி'யில் எப்படி நந்திதாதாஸ் உங்கள் மனதைவிட்டு அகலாமல் அடம்பிடித்தாளோ, அப்படித்தான் 'களவாடிய பொழுதுகள்' படத்தில் இடம்பெறும் அனைத்துக் கதாபாத்திரங்களும் உங்கள் கைகளைக் கெட்டியாகப் பிடித்தபடி அழைத்துச் செல்லும்.

பிரபுதேவா ஆரம்பத்தில்  'சூரியன்', ' வால்டேர் வெற்றிவேல்' போன்ற படங்களில்  ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின்  1994-ம் ஆண்டு வெளிவந்த 'காதலன்' படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 23 வருடங்களில் பிரபுதேவா எத்தனையோ படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தியாவின் பிரபலமான  சினிமா முகத்துக்குச் சொந்தக்காரர் பிரபுதேவா. இப்படத்தில் அவர்  இதுவரை அவருடைய திரைப்பட வரலாற்றில் ஏற்று நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதனால்தான், விளம்பரத்தில் 'பிரபுதேவாவின் உன்னத நடிப்பில்...' என்கிற வாசகத்தைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

தமிழ்சினிமாவில் இருக்கும் படைப்பாளிகள் முதல் குக்கிராமத்தில் வசிக்கும் பாமரன்வரை... வியந்து பார்த்து விக்கித்துப்போகும் அளவுக்கு, பொற்செழியன் என்கிற  கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார், பிரபுதேவா. முன்பு நடித்த படங்களில் பிரபுதேவா 'இப்படித்தான் நடப்பார், சிரிப்பார், நடனம் ஆடுவார் என்று அவரது உடல்மொழியை எதிர்பார்த்து தியேட்டருக்கு வருபவர்கள் ஏமாந்து போவீர்கள். புதுவித நடிப்பைப் பார்த்து பூரித்துவிடுவீர்கள். ‘அழகி’ படத்தில் நந்திதாதாஸ் நடித்த தனலட்சுமி பாத்திரம் உங்களை எப்படி கட்டிப்போட்டதோ, அதுமாதிரி பிரபுதேவா நடித்துள்ள ‘பொற்செழியன்’ கதாபாத்திரத்தை உங்களால் மறக்கவே முடியாது. 'களவாடிய பொழுதுகள்' எப்போது வெளிவரும்? மக்கள் விமர்சனம் எப்படி இருக்கும் என்று என்னைவிட அதிகமாக எதிர்பார்த்து  காத்துக்கிடப்பது பிரபுதேவாதான்.   

தமிழ்சினிமாவில் எந்தப் படத்துக்கும் மொத்தமாகத் தொடர்ந்து 50 நாள்கள் நடிப்பதற்கு பிரகாஷ்ராஜ் தேதிகள் கொடுத்ததே இல்லை, முதன்முறையாக 'களவாடிய மொழுதுகள்' படத்துக்குக் கொடுத்தார். சினிமா உலகத்துக்குக் கிடைத்த அற்புதமான திரைக்கலைஞன் பிரகாஷ்ராஜ். செளந்தரராஜன் என்கிற பாத்திரத்தை மனுஷன் வெளுத்துக்கட்டியிருக்கிறார். செளந்தராஜன் கதாபாத்திரத்தின் மகளாக ஜெயந்தி வேடத்தில் பிரமாதமாக நடித்து எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கிறார் பூமிகா. நாம் எல்லோருமே வாழ்க்கையில் உன்னதமான ஒன்றை இழந்துவிட்டு பரிதவித்து நிர்க்கதியாக நிற்கிறோம் என்கிற உணர்வை உங்களுக்கு 'களவாடிய பொழுதுகள்' கண்டிப்பாய் தரும்.  இப்போது வெளிவரும் படங்களில் பாடல்களின் வரிகளே தெளிவாக நம் காதுகளில் புகுவதே இல்லை என்பது பெருங்குறை. 'களவாடிய பொழுதுகள்' திரைப்படத்தில் பரத்வாஜ் இசையில் வைரமுத்து எழுதியிருக்கும் அத்தனை பாடல்களும் காதுக்குள் நுழைந்து, மனசை மயிலிறகால் வருடிவிடும்.

திரையரங்கத்தில் உட்கார்ந்து படம்பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் நிச்சயம்

உறைந்து போவான். மொத்தத்தில் அசுரபலம் கொண்ட 'களவாடிய பொழுகள்' படத்துக்குப் பாடல்கள்  யானை பலத்தை கொடுத்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒரு திரைப்படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு செல்லும் ரசிகனை அந்தப் படத்தின் கதை, காட்சிகள் அவனை  தூங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் 'களவாடிய பொழுகள்'. முதலில் குடும்பத்தோடு பார்ப்பீர்கள், அடுத்து நண்பர்களோடு காண்பீர்கள், இறுதியாக தனியாக அமர்ந்து ரசிப்பீர்கள்.

இதுவரை என்னுடைய இயக்கத்தில் வெளிவந்த  அத்தனை படங்களும் முழுக்க முழுக்க கிராமத்துப் படங்களே, முதன்முதலாக நான் இயக்கி இருக்கும் பெருநகரத்து திரைப்படம் 'களவாடிய பொழுதுகள்'. பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா மூவரும் தெலுங்கில் பிரபலமான நட்சத்திரங்கள் என்பதால் தெலுங்கு மொழியிலும் 'களவாடிய பொழுதுகள்' வெளியாகிறது. ஆந்திராவில் டிசம்பர் 29-ம்தேதி ஏராளமான படங்கள் ரிலீஸாகின்றன. குறிப்பாக பூமிகா நடித்தபடம் வெளியாவதால், 2018 ஜனவரி 5-ம்தேதி களவாடிய பொழுதுகள் அங்கே வெளியாகிறது.

தமிழில் டிசம்பர் 29-ம்தேதி 'களவாடிய பொழுதுகள்' ரிலீஸாகிறது. அதற்கு முன்னர்  திரைப்படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பலபேர் கேட்டது, 'ஏன் இந்தப் படத்தை இத்தனைநாள் ரிலீஸ் செய்யாம தள்ளிப்போட்டீங்க'  என்கிற ஒரே ஒரு கேள்வியைத்தான். இதே கேள்வியை 'களவாடிகள் பொழுதுகள்' திரைப்படத்தை தியேட்டர்களில் பார்த்துவிட்டு வெளிவரும் ஒவ்வொரு தமிழ்ரசிகனும் என்னைப் பார்த்து கேட்பார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறேன்’’ என்று முடித்தார்.

பின் செல்ல