Published:Updated:

’’ரஜினி சாரைப் பேசவிடாம நானே பேசிட்டு இருந்தேன்..!’’ - ஜாலி கேலி நந்திதா

உ. சுதர்சன் காந்தி.
’’ரஜினி சாரைப் பேசவிடாம நானே பேசிட்டு இருந்தேன்..!’’ - ஜாலி கேலி நந்திதா
’’ரஜினி சாரைப் பேசவிடாம நானே பேசிட்டு இருந்தேன்..!’’ - ஜாலி கேலி நந்திதா

'அட்டகத்தி' படத்தில்  பூர்ணிமாவாக அறிமுகமாகி 'எதிர்நீச்சல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்திதா. இவர் நடிப்பில் உருவான 'இடம் பொருள் ஏவல்', 'உள்குத்து', 'வணங்காமுடி', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்துக்கொண்டு பிஸியாக சுற்றிவரும் நந்திதாவை தொடர்புகொண்டு பேசினோம். 

'உள்குத்து'... தினேஷ்கூட இரண்டாவது படம். இந்தப் பயணம் எப்படி இருக்கு?  

' ‘’அட்டகத்தி' படம் பண்ணும்போது எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. அதனால், நான் அதிகமா பேசமாட்டேன். இப்போ தமிழ் நல்லா கத்துக்கிட்டேன். 'உள்குத்து' பட ஷூட்டிங்ல நல்லா ஜாலியா தமிழ்ல பேசிட்டு இருந்தோம். இந்தப் படத்தின் டைரக்டர் கார்த்திக் ராஜூ சார் உங்க ரெண்டு பேர் கேரக்டர்ல 'அட்டகத்தி' படத்தோட டச் இருக்கணும்னு சொன்னார். 'ஏன் அந்தப் படத்துல கடைசியா சேரலை?'னு அப்போ கேட்டவங்க இந்தப் படத்தை பாத்தா சந்தோசப்படுவாங்க. இப்போ நான் தமிழ்ப் பேசுறதை பாத்துட்டு, 'நீங்க சென்னையா?'னு கேட்குறாங்க. அந்தளவுக்கு தமிழ் பேச ஆரம்பிச்சுட்டேன்னா பாத்துக்கோங்களேன். தினேஷ் எங்க பாத்தாலும் நல்லா பேசுவார். இந்தப்  படத்தோட ஷூட்டிங்கே ஜாலியா இருந்துச்சு."

'எதிர்நீச்சல்' படத்துல சிவகார்த்திகேயன் கூட நடிச்சிருந்தீங்க. இப்போ அவர் மிகப்பெரிய இடத்துக்குப் போயிட்டார். அவர்கூட நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க...  

"சிவா மட்டுமில்ல, என் கூட வொர்க் பண்ண எல்லாரும் பெரிய இடத்துக்குப் போய்ட்டாங்க. அதுல சிவா ஸ்பெஷல். நான் ரொம்ப லக்கினுதான் சொல்லணும். அப்போ சிவா ஜாலியா ஏதாவது பேசி, சிரிச்சிட்டு இருப்பாங்க. எனக்கு அப்போ தமிழ் தெரியாதனால, அவங்க பேசுறது புரியலை. அதே இப்போ பேசுனா, நல்லாவே புரியும். அந்தப் படம் நல்ல அனுபவம் கொடுத்துச்சு. அந்த 'வள்ளி' கேரக்டரை நிறைய டைரக்டர்கள் பாராட்டினாங்க, அவார்ட்ஸ் கிடைச்சுது."

'குமுதா'ங்கிற பேரை சொன்னவுடனே எல்லாருக்கும் இன்னும் உங்க முகம் கண் முன்னாடி நிக்குதே... அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க..?

"எனக்கு காமெடி ரொம்பப் பிடிக்கும். அதனால, காமெடி ஜானர்ல ஒரு ஸ்கிரிப்ட்னா உடனே ஓகே சொல்லிடுவேன். 'குமுதா'ங்கிற பேரைக் கேட்டவுடனே, நான் பண்றேன்னு சொல்லிட்டேன். வேற அந்த ஹீரோயினையும் என்னால குமுதா கேரக்டர்ல நினைச்சுப்பார்க்க முடியலை. ஸோ, 'நான்தான் பண்ணுவேன்'னு சொல்லிட்டேன். அந்தப் பேர் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. இன்னும் வெளிய எங்கேயாவது போனா, சின்னக் குழந்தைகள் எல்லாம் 'குமுதா'னு கூப்பிடுவாங்க. அந்தப் படம் உண்மையாவே செமயா என்ஜாய் பண்ணேன். ரியலி குமுதா ஹாப்பி அண்ணாச்சி." 

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்த அனுபவம்...

"நான் அவர் படத்துல பண்ணப்போறேன்னு சொன்னவுடனே எனக்கு ஒரு ப்ரோமோஷன் கிடைக்குற மாதிரி இருந்துச்சு. நடிச்சு முடிச்ச பிறகு, சர்டிஃபிகேட் கிடைச்ச மாதிரி ஃபீல் பண்றேன். இதுவரை அந்த மாதிரியான கேரக்டர் நான் பண்ணதே இல்லை. வழக்கமா மரத்தை சுத்துறது, டூயட் பாடுறதுனு இல்லாம இந்தப் படத்துல எனக்கு ரொம்ப தைரியமான, வித்தியாசமான கேரக்டர். எஸ்.ஜே.சூர்யா சாருக்கு மனைவியாதான் நடிச்சிருக்கேன். எனக்கு ஆரம்பத்துல ரெண்டு டைரக்டர் இருக்காங்களே ஸ்பாட் எப்படி இருக்குமோனு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, செல்வராகவன் சார் என்ன சொல்றாரோ அதைத்தான் அவரும் நடிச்சார். அவர் ஒரு டைரக்டர், சீனியர் நடிகர்ங்கிற மாதிரி நடந்துக்கவே இல்லை. அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தார். செல்வராகவன் சார் படத்துல இருந்து நிறைய கத்துக்கிட்டேன். குறிப்பா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகும்போது, ப்ளாங்கா போகணும். அப்போதான் அவங்க சொல்றதையும் எதிர்பார்க்குறதையும் சரியா பண்ணமுடியும்னு இந்தப் படத்துல இருந்து கத்துக்கிட்டேன்."

'வணங்காமுடி' படத்துல போலீஸ் ஆபீசரா நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு? 

" அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். ஹோம்லியான கேரக்டர் உள்ள படங்களா நடிச்சு எனக்கே போரடிச்சிடுச்சு, ஆடியன்ஸுக்குப் போர் அடிக்காதா? அதனால் இதில் கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். நல்ல வொர்க் அவுட் ஆகிருக்கு. இந்தப் படத்துல நான் கமிட் ஆனதிலிருந்து அரவிந்த்சாமி கூட நடிக்கிறீங்களா?னு எக்சைட் ஆகி கேட்டுட்டே இருக்காங்க. அவர் செம அழகு, ஸோ பப்லி. அதே மாதிரி எல்லார்கிட்டேயும் ஜாலியா பேசக்கூடிய நபர். இதுல போலீஸ் கேரக்டர்னால, எப்பவும் சீரியஸா இருக்கிற மாதிரியான சீன்தான். சிம்ரன் மேம் கூட நடிச்சது மறக்கவே முடியது. ரொம்ப ஜாலியா எப்பவும் சிரிச்ச முகத்துடனே இருப்பாங்க. எனக்கு சீனியர் ஆபீசரா நடிச்சிருக்காங்க. அவங்ககிட்ட ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டுக்குவேன். அவங்களும், யோகா பண்ணணும், என்ன மாதிரியான வொர்க் அவுட் பண்ணணும்னு எல்லாம் சொல்லுவாங்க."
 

இரண்டு ஹீரோயின் சப்ஜெட் படங்கள் அதிகமா பண்ணிருக்கீங்க. அப்படி இருக்கும்போது, உங்க ஹீரோயின் கரியர் பாதிக்கும்னு நினைச்சிருக்கீங்களா? 

"இரண்டு ஹீரோயின் சப்ஜெட் படங்கள் பண்ணக்கூடாதுனு நான் நினைக்கவேமாட்டேன். கதையும் அந்தக் கதையில என் கேரக்டரும்தான் எனக்கு ரொம்ப முக்கியம். எத்தனை ஹீரோயின் இருக்காங்கனு முக்கியமில்லை. எனக்கு பர்ஃபார்ம் பண்ண ரெண்டு சீன் சரியா இருந்தாக்கூட நான் படம் பண்ணுவேன். கதை கேட்கும்போதே நான் ஒரு ஆர்டிஸ்டா இல்லாம ஆடியன்ஸாதான் கேட்பேன். போரடிச்சா பண்ணமாட்டேன். என் கேரக்டர் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தா எவ்வளவு சின்ன ரோலா இருந்தாலும் நான் பண்ணுவேன். கண்டிப்பா, அந்த கேரக்டர் பத்தி எல்லாரும் பேசுற மாதிரி இருக்கும்."

'கலகலப்பு 2' படத்துல ஏற்கெனவே மூணு ஹீரோயின் இருக்கும்போது, நீங்களும் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணிருக்கீங்க. எப்படி இருந்துச்சு அந்த அனுபவம்? 

"சுந்தர்.சி சார் படம் ஜாலியா இருக்கும். செட்டே சிரிச்சுட்டே இருப்பாங்க. அவ்வளவு ஜாலியா இருக்கும்னு எல்லாரும் சொல்லுவாங்க. அதனால, அவர் படத்துல பண்ணணும்னு ஒரு ஆசை இருந்துச்சு. திடீர்னு 'கலகலப்பு 2'ல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணுறீங்களா?'னு கேட்டாங்க. நான் என்ன கதை, என்ன ரோல் எதையுமே கேட்கலை. உடனே, ஓகே சொல்லிட்டேன். அந்த டீம்ல வொர்க் பண்ணா எப்படி இருக்கும்னு பார்க்கணும்கிறதுக்காகவே வொர்க் பண்ணேன். செம என்டர்டெயின்மென்ட். மூணு ஹீரோயின் இருந்தா என்ன? ஸ்கிரீன்ல நான் எப்படி நடிச்சிருக்கேங்கிறதுதான் எனக்கு முக்கியம். எனக்கு என் மேல நம்பிக்கை நிறையவே இருக்கு. ஆடியன்ஸும் நல்லா என்ஜாய் பண்ணுவாங்கனு நம்புறேன். "

உங்களை அறிமுகப்படுத்தின பா.ரஞ்சித் இப்போ, சூப்பர் ஸ்டாரை வெச்சு ரெண்டு படம் பண்ணிட்டார். அவர்கூட டச்ல இருக்கீங்களா?

"ரஞ்சித் சார்கூட நல்ல டச்லதான் இருக்கேன். நான் மும்பை போனபோது, அங்க 'காலா' ஷூட் நடந்துட்டு இருந்துச்சு. நான் சர்ப்ரைஸா அங்க போய் ரஞ்சித் சாரைப் பார்த்துட்டு அப்படியே ரஜினி சாரையும் பார்த்துட்டு அவர்கூட போட்டோ எடுத்துட்டு வந்தேன். நானும் ரஜினி சாரும் கன்னடத்துலதான் பேசினோம். எல்லாரும் ரஜினி சாரை பார்த்தா என்ன பேசுறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்னு சொல்லுவாங்க. நான் அவரை நேர்ல பார்த்த சந்தோசத்துல அவரைப் பேசவே விடாம நிறைய பேசிட்டே இருந்தேன். அவர் என்னைப் பார்த்தவுடனே, 'அட்டகத்தி' நந்திதானு சொன்னார். எனக்கு அப்படியே வானத்துல பறக்குறமாதிரி இருந்துச்சு. அவரைப் பார்த்துட்டு வந்த பிறகுதான் 'அவரை பேசவிடாம நாம பேசிட்டே இருந்தோம்'னு யோசிச்சேன். ஒரு நாள் மறுபடியும் அவரை மீட் பண்ணணும்".

யார் டைரக்‌ஷன்ல நடிக்கணும்னு ஆசை? 

"சுந்தர்.சி சார் படத்துல வொர்க் பண்ணணும்னு ஆசை. அது 'கலகலப்பு 2' படத்துல நனவாகிடுச்சு. அடுத்து வெங்கட் பிரபு சார், வெற்றிமாறன் சார் படங்கள்ல வொர்க் பண்ணணும்னு ஆசை இருக்கு. சமுத்திரக்கனி சார்கிட்ட, 'உங்க படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசைய இருக்கு சார்'னு நான் நேர்லயே சொல்லிட்டேன். அவரும் சிரிச்சுட்டே 'கண்டிப்பா பண்ணலாம்'னு சொல்லிருக்கார். அப்புறம், என் முதல் படத்தோட டைரக்டர் ரஞ்சித் சார் படத்துல மறுபடியும் நடிக்கணும். சீனு ராமசாமி சாரோட 'இடம் பொருள் ஏவல்' நடிச்சாச்சு. அவர் டைரக்‌ஷன்ல மறுபடியும் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அவர் படத்துல நடிச்சா, நடிப்பு மட்டுமில்லாமல், நல்லா தமிழ் கத்துக்கலாம்." 

அடுத்து என்ன படங்கள் போயிட்டு இருக்கு? 2018 க்கு என்ன ப்ளான் வெச்சிருக்கீங்க? 

"இப்போ தெலுங்குல மூணு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். தமிழ்ல 'வணங்காமுடி' கடைசி ஷெட்யூல் போயிட்டு இருக்கு. இன்னொரு புது டைரக்டர் படத்துல பாக்ஸரா நடிக்கிறேன். அதுக்கான அறிவிப்பு முறையா வரும். அப்புறம், இன்னொரு ஹீரோ படத்துல நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். அது யார், எந்த டைரக்டர்ங்கிறது சஸ்பென்ஸ். 2018க்கு ஸ்பெஷல் ப்ளானெல்லாம் ஒன்னுமில்லை. கமிட்டான படங்களை நல்லபடி முடிக்கணும். அவ்வளவுதான்."

கல்யாணம் எப்போ? 

"வேற மொழியிலிருந்து தமிழ்நாடு வந்து நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்கேன். எனக்கான அடையாளத்தை தமிழ் சினிமாதான் கொடுத்துச்சு. இப்போ நான் பதினைந்து படங்கள் நடிச்சிருக்கேன். படங்கள்ல சில்வர் ஜூப்ளி போடணும் அதுதான் ஃபர்ஸ்ட். மத்ததெல்லாம் அப்புறம்தான்" என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.