Published:Updated:

“500 படங்களில் வேலை செய்திருந்தாலும் தமிழில் அங்கீகாரம் இல்லை..!” - ஸ்டன்ட் மாஸ்டர் ‘ஃபெப்ஸி’ விஜயன் #VikatanExclusive

“500 படங்களில் வேலை செய்திருந்தாலும் தமிழில் அங்கீகாரம் இல்லை..!” - ஸ்டன்ட் மாஸ்டர் ‘ஃபெப்ஸி’ விஜயன் #VikatanExclusive
“500 படங்களில் வேலை செய்திருந்தாலும் தமிழில் அங்கீகாரம் இல்லை..!” - ஸ்டன்ட் மாஸ்டர் ‘ஃபெப்ஸி’ விஜயன் #VikatanExclusive

சமீபத்தில் நடந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ஆடியோ லாஞ்சில் ஒருவர் மட்டும் செம்ம எனர்ஜிடிக்கா இருந்தார். பின்னர் மேடையில் பேசும்போது,‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்' தனது 500 வது படம் அரவிந்த் சாமி பயங்கர ரிஸ்குகள் எடுத்ததாகவும் கூறினார். ஆமாம்  ஸ்டன்ட் என்றாலே ரிஸ்குதான். சாக்லேட் பாய்,  ஸ்மார்ட் வில்லன் அரவிந்த் சாமியை ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைத்திருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் 'ஃபெப்ஸி' விஜயன். நமக்கு 'வில்லன்' படத்தின் வில்லனாகத்தான் அறிமுகம். அவரைச் சந்திக்க நேரம் கேட்டு அவரது வடபழனி இல்லத்திற்கு படையெடுத்தோம். ஹால் முழுக்க விருதுகள், 100 நாள்கள், 150 நாள்கள் ஷீல்டுக்குகள் நிறைத்திருந்தன. இதில் விசேஷம் என்னவென்றால் அவருடன் வேலை செய்திருக்கும் நடிகர்களான விஜய், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, சல்மான் கான், பவன் கல்யாண் என எல்லாருமே இப்போதைய சூப்பர் ஸ்டார்ஸ். 

“அது ஆக்ஷன் டிவி அவார்ட்ஸ் ஏதோ ஒரு இந்தி படத்திற்கு, இது 'ஃபிலிம் ஃபேர்' அவார்டு சல்மான் கான் படத்துக்கு வாங்கியது. இங்க கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு ஃபர்ஸ்ட் ப்ளோர்ல ஜாஸ்தியா இருக்கு. இந்த விருதுகள் தாங்க எங்க தொழிலில் ஒரே சந்தோஷம். இந்த சந்தோஷம் எனக்கு மட்டும் சொந்தமானது இல்லங்க. இந்தப் படத்தில் எனக்காக வேலை செய்த எல்லா ஃபைட்டர்களுக்கு சாரும். "நான் சொன்னா அந்த பில்டிங் மேல இருந்து கூட குதிப்பான்"னு நாம எல்லாரும் சும்மா ஒரு வழக்கத்துக்குச் சொல்றது உண்டு. ஆனா நான் சொன்னா என்னோட ஃபைட்டர்ஸ் நிஜமா குதிப்பாங்க... இப்படி நம்ம நடைமுறை வாழ்க்கையில மிகைப்படுத்தக் கூடிய விஷயங்கள் எங்களுக்கு நடைமுறையா இருக்கு. இதுதான் ஒரு ஸ்டன்ட்மேன் வாழ்க்கை" என மகிழ்ச்சி தெறிக்க சிரித்தார். 

இவரையா நாம் வில்லனாகப் பார்த்தோம் என்ற சந்தேகம் எழும் அளவிற்கு செம கேஷுவலாகப் பேச ஆரம்பித்தார். "எனக்கு  ஸ்டன்ட் ரத்தத்தில் ஊரிப் போன விஷயம். எங்க அப்பா பெயர் சாமிநாதன் 'ஃபென்சிங்' வீரர்', எம்.ஜி.ஆர் சார்  படங்களில் ஸ்டன்ட்  மாஸ்டராக இருந்தவர். செம ஸ்டைலாக இருப்பார் அப்பா. எம்.ஜி.ஆர் சாருடன் நல்ல நட்பாக இருந்தார். என்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் ஃபாத்திமா கான்வென்டில் சேர்த்துவிட்டது எம்.ஜி.ஆர். சார்தான், அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் சாருக்கு அப்பாவை பிடிக்கும். எனக்கு ஒரு பதினேழு வயது இருக்கும்  திடீரென்று வீட்டில் பெருங்கஷ்டம். அப்பாவை அந்த நிலையில் என்னால் பார்க்க முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை.  ஆலன் என்ற நண்பரிடம் குங்ஃபூ கற்றுக்கொண்டு ஸ்டன்ட் யூனியனில் சேர்ந்தேன். அப்போதைக்கு அப்பாவை பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஒரு வைராக்கியத்தோடு மட்டும் வேலை செய்யத் தொடங்கினேன்.

ஆரம்ப கால கட்டத்தில் அதிகச் சம்பளம் கிடைக்கும் என பயங்கர ரிஸ்க்கான ஷாட்டையும் ஏற்றுக் கொண்டேன். அப்படிச் சில விஷயங்கள் காமெடியாக நடந்ததுண்டு. ஒரு கன்னட படம் ராஜ் குமார் சாருக்கு டூப் போட்டு இருந்தேன். குதிரை ஒன்றைக்காட்டி இதில் வேகமாகச் சென்று நிறுத்தி அப்படியே ரவுடிகளின் மீது ஜம்ப் செய்து ஹீரோயினை காப்பாற்ற வேண்டும் என்றனர். குதிரை வேகமாக சென்றுக் கொண்டே இருந்தது. அதை  நிறுத்தத் தெரியாமல் கடிவாளத்தை வேகமாக இழுத்துவிட்டேன். குதிரை அதிர்ந்து போய் நிற்க நான் அப்படியே பறந்து சென்று அந்த நான்கு பேர் மீது விழுந்தேன். ஷாட் நன்கு வர, மாஸ்டர் கூப்பிட்டுப் பாராட்டினார். இப்படிச் சில காமெடிகள் நடந்துள்ளன. ஓரிரண்டு வருடக் காலத்திலேயே அப்பாவை மீண்டும் சொந்த வீட்டில் அமர்த்தினேன்.

எர்ணாவூர் பாலத்திலிருந்து குதிக்கும் காட்சிகள் அப்போது நிறைய படங்களில் வரும். முறையாக அனுமதி இன்றிதான் ஷூட்டிங் நடக்கும். ட்ரெயின் டிக்கெட் எடுத்துத் தருவார்கள் பாலம் வரும்போது அப்படியே ஓடும் ரயிலிலிருந்து குதித்துவிட வேண்டும். ரயிலில் இருப்பவர்கள்  அலறுவார்கள் நாம் தண்ணிரில் விழுந்தவுடன். கேமரா உட்பட மற்றக் குழுவினர் அனைவரும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள், இப்படி சில விஷயங்களும் நடக்கும். இன்றைக்கு இந்தத் தொழிலில் நாங்கள் சி.ஜி மற்றும் பல சேஃப்ட்டியான விஷயங்கள் கொண்டுவந்திருக்கிறோம். அன்றைக்கு அப்படி இல்லை பல உயிர்களை இழந்து இழந்து தான் இவை அனைத்தையும் கண்டுபிடித்திருக்கிறோம்.

ஃபேமிலி ஸ்டன்ட் மாஸ்டர்

ஆரம்பக் காலங்களில் எனது சண்டை அமைப்புகளில் குங்ஃபூ சண்டைக் காட்சியையும் அங்காங்கே இணைத்துவிடுவேன். அப்போதைய புரூஸ்லீ படங்கள் போல் இருக்கிறது என்று பலர் பேச ஆரம்பித்தனர். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ராஜ் குமார் சார் , கிருஷ்ணா சார் என அனைவருடனும் நான் வேலை செய்த பல படங்கள் வெற்றி. அதனால் அவர்கள் குடும்பத்திலிருந்து வரும் புது ஹீரோக்களுக்கு நான்தான் ஸ்டன்ட் மாஸ்டர். அல்லு அர்ஜுன், ராம் சரண், பவன் கல்யாண், மகேஷ் பாபு, ராணா  என அனைவருமே எனக்கு நல்ல நண்பர்கள். பல ஃபேமிலிக்கு ஃபேமிலி டாக்டர் இருப்பது போல் நான் இவங்களுக்கெல்லாம்  ஃபேமிலி ஸ்டன்ட் மாஸ்டர். விசேஷம் என்னவென்றால் அனைவரும் இன்று பெரிய சூப்பர் ஸ்டார்கள்.

கண் கலங்கிப் போனேன்

இந்தியில் பல படங்கள் வேலை செய்திருந்தாலும் சல்மானுடன் வொர்க் செய்தது, பலவித அனுபவங்களைத் தந்தது. வான்டெட், டபாங், பாடி கார்ட் என மூன்று படங்கள் அவருடன் வேலை செய்துள்ளேன். 'வான்டட்' படத்தில் இத்தகைய ஸ்டன்ட் காட்சிகள் செய்ய வேண்டும் எனக் கூறினேன். "இவையெல்லாம் எனக்குச்  செய்ய முடியாது" எனக் கூறினார். ஹீரோ என்பவன் இதையெல்லாம் செய்ய வேண்டும் எனக் கூறி நடிக்கவைத்தேன். அதிலிருந்து தொடங்கிய நட்பு. தன்னுடன் இருப்பவர்களை அன்பாகப் பார்த்துக்கொள்வார். ஷூட்டிங்கில் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவதுதான் அவருக்குப் பிடிக்கும். குழந்தை போல் இந்த ஷாட்டில் அப்படி செய்யட்டுமா, இப்படி செய்யட்டுமா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். ஒரு நாள் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்தே கைது செய்தனர். அதை பார்த்த எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. அதற்கு அடுத்து இரண்டு படங்கள் வேலை செய்துவிட்டோம்.

'போக்கிரி' ஒரு படம். ஆனால், மூன்று ஹீரோ  

தெலுங்கில் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த 'போக்கிரி', தமிழில் பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்த 'போக்கிரி', இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த 'வான்டட்' என மூன்று படங்களுக்கும் நான்தான் ஸ்டன்ட் டைரக்டர். அதில் ஹைலைட்டாக இருந்த ட்ரெயின் ஃபைட். தெலுங்கில் ஒரே நாளில் எடுக்கப்பட்டது. ஒரே கதை மூன்று வெவ்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்கள் நடித்ததற்கு இப்படத்தில் வந்த சண்டைக்காட்சிகளும் ஒரு காரணம். 

சவாலாக இருந்த சண்டைக் காட்சி 

குறுகிய காலத்தில் நான் சண்டை இயக்குநர் ஆனதிற்கு எனது அப்பாவும் ஒரு காரணம். ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் நுணுக்கத்தையும், தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொள்ள சொல்வார். அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் - சிங்கத்துக்கும் இடையேயான சண்டைக் காட்சி முழுக்க முழுக்க கேமராவில் 'மாஸ்கிங்' என்ற தொழில்நுட்பத்தில் செய்தது. இன்றும் அச்சண்டைக்காட்சி பெரிதும் பேசப்படும் ஒன்று. அதுபோல் எனக்குச் சவாலாக அமைந்தது சிரஞ்சீவியின் ' மிருகராஜ்' படத்தில் சிங்கம் வரும் சண்டைக்காட்சி. அதில் சிங்கத்துடன் பழகிப் பழகி அதனை புரிந்துகொண்ட பின்னரே ஒவ்வொரு காட்சியையும் படமாக்கினோம். அதிலும்  'மாஸ்கிங்' மற்றும் சிஜி காட்சிகள் செய்திருந்தோம். அப்படி 'சச்சின்' படத்தில் ஒரு புது யுக்தியைக் கொண்டுவந்தோம்.             

அசந்து போன விஜய்  

'சச்சின்' படத்தில் இரண்டே சண்டைக் காட்சிகள்தாம்  வரும். முதன் முதலில் 500 ஃபிரேம்ஸ் ரேம்ப் ஷாட் டெக்னிக் சச்சின் படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தண்ணீர்  தெறிப்பது, ஆட்கள் மெதுவாகப் பறந்து பின் வேகமாக விழுவது என்று காட்சிகள் எடுத்தோம். கேமராமேன் ஜீவா, இயக்குநர் ஜான், ஹீரோ விஜய் என அனைவருக்கும் அந்தக் காட்சி வருமா என்று பயந்தனர். காட்சியாகத் தொகுத்துப் பார்த்தவுடன் விஜய் பயங்கர ஆச்சர்யப்பட்டார். அதன் பிறகு நாங்கள் 'போக்கிரி' படத்தில் மீண்டும் இணைத்தோம். 

அஜித் பயந்தே போனார்

’வில்லன்' படத்தில் நான் முழு நீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தேன். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஒரு ஷாட்டில் மேஜை கண்ணாடியைத் தலையால் மோதி உடைத்திருப்பேன். அப்பொழுது நெற்றியில் கண்ணாடித் துண்டு கீறி  ரத்தம் வடிந்தது. நான் உடனே தையல் போட்டுக்கொண்டு மறுபடியும் ஷாட்டில் நின்றேன். அஜித் சார் பயந்தே போனார். "மாஸ்டர் ரெஸ்ட் எடுங்க" என்றார். நமக்கு இது சாதாரணம் சார்  என்றேன்"  (எனச் சிரித்தப்படி) கூறினார்.

இந்தி, தெலுங்கு, கன்னடா போன்று தமிழில் அங்கீகாரம் கிடைக்கவில்லை 

“30 வருடங்களுக்கு மேல் 500 படங்கள் சண்டை அமைப்பு செய்துள்ளேன். எனது 500வது படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' தமிழ்ப் படம். இந்தப் படங்களில் 400க்கும் மேற்பட்ட படங்கள் வெற்றிவிழாக் கண்டவை. ஆனால்  இதுவரை நான் வேலை செய்த தமிழ்ப் படங்கள் 20க்கும் குறைவானவை. ஆரம்பக் காலகட்டத்தில் நான் வாய்ப்புக் கேட்கும்போது இங்க இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் வாய்ப்பளிக்கவில்லை. எனக்கு மற்ற மொழிகளில் நல்ல வாய்ப்பும், வருமானமும் கிடைத்தது. அதனால்தான் அங்கேயே செட்டிலாகும் அளவிற்கு படங்கள் செய்ய ஆரம்பித்தேன். 

இங்கே பெரிதாக என்னை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. தெலுங்கு 'போக்கிரி' படத்தின் சண்டை இயக்கத்திற்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள் உட்பட 12 விருதுகள் கிடைத்தன, இந்தியில் "வான்டட்” படத்தின் சண்டை அமைப்புக்காக 16 விருதுகள் கிடைத்தன. இந்த விருதுகள், பாராட்டுகள்தான் நமக்குப் பெரிய ஊதியம். ஆனால் இங்கே 'போக்கிரி' படத்திற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. இங்கே வேண்டியவர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மற்ற மொழிகளில் அப்படி ஒரு விஷயம் கிடையாது. 

இந்தி, தெலுங்கில் எல்லாம் ஒரு படத்தின் வெற்றிக்கு உழைத்தவர்களைக் கதாநாயகன் முதல், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் வரை கௌரவிப்பார்கள், அந்த நிலைமையே இங்கு இல்லை.  நான் தமிழ் சினிமாவில் வேலை செய்யாததற்கு இதுவும் ஒரு பெரிய  காரணம்.     

ரிஸ்க்கான ஸ்டன்ட்கள் தவிர்க்கலாம்

தற்போதைய சினிமா அன்றுபோல் இல்லை. இன்று பல மடங்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் படங்களை எடுக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டோம். இன்னும் சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் ஃபைட்டர்களைக் கொண்டுதான் எடுக்கப்படுகிறது. முடிந்த அளவிற்கு அதை எப்படித் தொழில்நுட்பத்தின் வழியாக எடுத்துமுடிக்க முடியும் என்று இன்றைய படைப்பாளிகள் சிந்திக்க வேண்டும். ஸ்டன்ட் இயக்குநர்களும் இதை வலியுறுத்தினால் நன்றாக இருக்கும்” என்று தனது 500 பட ஞாபகங்களிலிருந்து சில சம்பவங்களைப் பகிர்ந்தார் ஸ்டன்ட் இயக்குநர்  ஃபெப்சி விஜயன்.

பின் செல்ல