Published:Updated:

"என்னைக் கலாய்ச்சு வர்ற மீம்களுக்கு தனி போல்டரே வெச்சிருக்கேன்..!" - ஆர்.ஜே.பாலாஜி

"என்னைக் கலாய்ச்சு வர்ற மீம்களுக்கு தனி போல்டரே வெச்சிருக்கேன்..!" - ஆர்.ஜே.பாலாஜி
"என்னைக் கலாய்ச்சு வர்ற மீம்களுக்கு தனி போல்டரே வெச்சிருக்கேன்..!" - ஆர்.ஜே.பாலாஜி

"ரெண்டு விஷயம்... ஒண்ணு இது ரோஸ்ட் கிடையாது. ஏன்னா, எனக்கே ரோஸ்ட் பண்றது பிடிக்காது. ஒருத்தரைக் கூப்பிட்டு முகத்து நேரா அசிங்கப்படுத்துறதில் எனக்கு விருப்பமில்ல. ரெண்டாவது, இது யாரையும் நோகடிக்கும் நோக்கத்தில் பண்ற ஷோ கிடையாது. இப்போ ஒரு கேட்டகரில ஒருத்தவங்களுக்கு இந்த விருதைக் கொடுக்குறோம்னா, இப்படிதான் நாங்க உங்களைப் பார்க்கறோம்னு சொல்றதுக்கான விருதுதான் இது" என தனது `ஐஸ் ஹவுஸ் டூ ஒய்ட் ஹவுஸ்' நிகழ்ச்சி பற்றி சொல்ல ஆரம்பித்தார் ஆர்.ஜே.பாலாஜி. அதற்கான வேலைகளில் பரபரப்பாக இருந்தவரை சந்தித்தேன்.

"ஜனவரி 20ல் இருந்து பிப்ரவரி 12 வரை நாலு வீக் எண்ட் எட்டு ஷோ, லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஆரம்பிச்சு அமெரிக்காவின் எட்டு நகரங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கோம். நம்ம ஊர் பிரச்னைகள் மட்டுமில்ல, இங்க இருக்கும் பிரச்னைகள் ஆரம்பிச்சு, தேசிய, சர்வதேசம் வரை நம்மள பாதிச்ச விஷயங்கள் பற்றி பேசப் போறோம். அதனாலதான் நிகழ்ச்சியுடைய தலைப்பு `ஐஸ் ஹவுஸ் டூ ஒய்ட் ஹவுஸ்'. இதை என்ன விதத்தில் கொடுக்கலாம்னு யோசிச்சப்போ, ஒரு அவார்டு ஷோ மாதிரி பண்ணலாம்னு தீர்மானிச்சோம். வழக்கமா நல்ல விஷயங்களைப் பாராட்டி அவார்டு கொடுப்பாங்க. ஆனா, நம்மள கோபப்படுத்திய, பாதித்த விஷயங்கள், அதுக்குக் காரணமானவங்களுக்கான சட்டையரிக்கல் அவார்டு ஷோதான் இது. இந்த நிகழ்ச்சியுடைய ப்ரீமியர்தான், டிசம்பர் 24ம் தேதி சென்னை, லேடி ஆண்டாள்ல நடக்க இருக்கு. சசிகலா, தீபா, ஹெச்.ராஜானு நாம இந்த வருஷம் முழுக்க பார்த்த பலரைப் பற்றிய ஒரு கருத்து இருக்கும். டீமானிடைஷேசன் , ஜி.எஸ்.டினு திட்டங்கள் பற்றி சில கருத்துகள் இருக்கும், டொனால்டு ட்ரம்ப் பற்றி ஒரு கருத்து இருக்கும். இந்த மாதிரி எல்லாரும், எல்லாமும் நாமினேஷன்ல இருக்கு. அதை மக்களின் ஓட்டு வழியா என்னென்ன விருதுகளுக்குக் கீழ் வருவாங்கனு ஷோ மூலமா காட்டுவோம்."

"இந்த யோசனை எப்போ வந்தது, இதன் மூலமா என்ன தாக்கத்தை ஏற்படுத்தணும்னு நினைக்கறீங்க?"

"இந்த ஐடியா ரெண்டு வருஷமா இருந்தது. ரேடியோ நிகழ்ச்சி, சினிமால நடிக்கறேங்கறதை விட மக்களுக்கு முன்னால பெர்ஃபாம் பண்ணும் போது  வர்ற உற்சாகம்தான் எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும். அதில் பெரிய விஷயம் ஏதாவது பண்ணணும்னு நினைச்சேன். மேடைல போய், வெறுமனே ஸ்டேண்ட் அப் காமெடி மாதிரி பண்றதில் எனக்கு உடன்பாடில்ல. அதை சரியான விதத்தில் பயன்படுத்தணும்னு தோணுச்சு. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த நிகழ்ச்சி. நம்ம  ஊரைப் பொறுத்தவரை, பாதிப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. போன டிசம்பர் ஆரம்பிச்சு, இந்த டிசம்பர் வரைக்கும் நமக்கு அத்தனை பாதிப்புகள் நடந்திருக்கு. இதில் எதை எடுக்கறது, எதை விடுறதுன்ற குழப்பம்தான் வந்தது. இன்னொரு விஷயம் இது ஒருதலைபட்சமா இருக்கக் கூடாதுன்னு தெளிவா இருக்கோம். இதன் மூலமா என்ன தாக்கம் வரணும்னா, நம்மள சுத்தி நடக்குறதைப் பற்றிய எல்லாருக்கும் கவனம் இருக்கணும். எனக்குத் தெரிஞ்சு என்னோட பலமா நான் பார்க்கறது காமெடி. அதை வெச்சு எல்லாரையும் சிரிக்க வைக்கறதோட, கொஞ்சம் யோசிக்கவும் வைக்கணும்."

"சமூக வலைதளத்தை சரியான விதத்தில் பயன்படுத்தியதற்கான விருது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கு, இன்னும் நிறைய செய்திட்டிருக்கீங்க. ஆனா, `இதெல்லாம் விளம்பரத்துக்காகப் பண்றார்'னு வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்றீங்க?"

"ஜஸ்ட் இக்னோர். இப்போ ஒரு போஸ்ட் போடுறோம். அதுக்குக் கீழ ஐந்நூறு கமென்ட் வருதுன்னா, 244 கமென்ட் இந்த மாதிரி இருந்ததுன்னா அதை நான் படிக்கமாட்டேன். பாராட்டு சந்தோஷத்தைக் கொடுக்குதுன்னா, திட்டி வர்ற கமென்ட்ஸை காயப்படுத்தத்தான் செய்யும். எனக்கு அந்த நெகட்டிவிட்டி வேணாம்னு தோணுச்சு. அதனால அதை நான் படிக்கறதில்ல. ஒரு விஷயம் பண்றோம்னா அதை மட்டும் பண்ணிட்டுப் போயிடணும். இதில் கவனம் செலுத்த ஆரம்பிச்சா, நாம நகரமுடியாது. இன்னொன்னு நான் எதுவுமே திட்டமிட்டு பண்றதில்ல. பேசிகிட்டே இருந்தா, எந்த மாற்றமும் நடக்காது, இறங்கி செயல்படணும். நான் அடிக்கடி சொல்லும் விஷயம், இன்னைக்கு இருக்கும் தலைமுறைக்குத் தேவை  இன்ஸ்பிரேஷன்தான், விழிப்புஉணர்வு இல்ல. யாராவது செயல்பட்டா, அதை ஒரு எடுத்துக்காட்டா பார்த்து மற்றவங்களும் பின்னால வருவாங்க. அப்படிப் பத்து பேர் வந்தாக் கூட, அது ஒரு மாற்றத்துக்கான ஆரம்பம்தான். நான் ஒண்ணும், இந்தியாவ மாத்தறது, உலகத்தை மாத்தறதுனு எல்லாம் போகல, என்னால முடிஞ்ச சின்ன பாசிட்டிவான விஷயத்தை செய்தால், அதற்கு நல்ல விளைவுகள் இருக்கும். இணையம் மூலமா இதை செய்யும் போது நிறைய பேருக்குச் சீக்கிரம் போய் சேரும்ங்கறதுதான் விஷயம்."

"குறைகளைச் சுட்டிக் காட்றது, உதவிகள் செய்யறதால, நீங்க அரசியலுக்கு வருவீங்களா?னு கேட்கறதை எப்படிப் பார்க்கறீங்க?"

"பத்துப் பேர்ல எட்டுப் பேராவது இந்தக் கேள்வியக் கேட்கறாங்க. நம்ப ஊர்ல எலெக்‌ஷன்ல நின்னாதான் அரசியல்னு நினைக்கறாங்க. அது அரசியலின் ஒரு பகுதிதான். இப்போ நான் தேர்தல்ல நிக்கறேன்னு வைங்க, என் ஒருத்தனால மட்டும் எந்த மாற்றமும் வந்திடாது. அதுவே ஒரு இருநூறு பேர் கவுன்சில் எலெக்‌ஷன்ல நின்னு, அதில் பத்துப்பதினைஞ்சு பேர் ஜெயிச்சாங்கன்னா அது மூலமா மாற்றம் வரும். பால் விலை ரெண்டு ரூபா ஏறுதுன்னா, அதுக்குப் பின்னாடி என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கறது அரசியல் அறிவுதான். அப்படின்னா, நான் ஏற்கெனவே அந்த மாதிரி அரசியல்வாதிதான். அப்போ, தேர்தல்ல நிப்பீங்களான்னு கேட்டா, எதுக்கு நிக்கணும்?னு நான் கேட்பேன். இதுக்கு முன்னால பல சினிமா நபர்கள் எம்.எல்.ஏவா இருக்காங்கதான், என்ன இங்க மாற்றம் வந்திடுச்சு?. ஒரே ஒருத்தர் முன்னால போறதில்ல, ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து முன்வந்தாதான் மாற்றம் நடக்கும்"

"சினிமாவைப் பொறுத்தவரை உங்களை அடுத்த கட்டத்து நகர்த்த என்ன மெருகேத்திக்கறீங்க?"

"இதுவரைக்கும் நான் சினிமால பெருசா ஒண்ணும் பண்ணல, நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்றமாதிரி பண்ணேனானு தெரியல. அதையும் மீறி என்னை அறிமுகப்படுத்தின சுந்தர்.சி சார்ல இருந்து, மணிரத்னம் சார், முருகதாஸ் சார், மோகன் ராஜா சார், ஏ.எல்.விஜய் சார், ராஜேஷ் சார், விக்னேஷ் சிவன் மாதிரி இயக்குநர்கள் படங்களில் நடிச்சிருக்கேன்றதை என்னோட ஆசிர்வாதமாதான் பார்க்கறேன். இவங்க கூட வேலை செய்த பின்னால, இனிமே நான் என்ன பண்ணப் போறன்றததான் சினிமால என்னோட கரியரா நினைக்கறேன். மெருகேத்திக்கறேனானு தெரியல. சமீபத்தில் `அருவி' படம் பார்த்தேன். அதுல `ட்ரூத் ஆர் டேர்' விளையாடற சீன் வரும். சிரிச்சுச் சிரிச்சு கண்ல தண்ணி வந்திடுச்சு. அந்த மாதிரி மக்கள் சமீபத்தில் கைதட்டிப் பார்த்த படம் எதுவும் நான் பார்த்ததில்ல. `காக்கா முட்டை'ல ரமேஷ் திலக், `ஆண்டவன் கட்டளை'ல யோகி பாபு பண்ணது, `மாநகரம்'ல ராமதாஸ் பண்ணதுனு படத்தோட ஒட்டி இருந்ததால ரொம்பவும் நல்லாயிருக்கு. ஆனா, வழக்கமா ஹீரோ ஃப்ரெண்டா நடிக்கறதெல்லாம், சந்தானம் சாரே பத்து வருஷம் பண்ணி முடிச்சிட்டார். அவரு அவ்வளவு பெஸ்ட்டா பண்ணிட்டதால, இப்போ அதையே திரும்ப பண்றதை யாரும் பெருசா ரசிக்கறதில்ல. அதனால, என்னை மெருகேத்திக்கறதை விட முக்கியம், இந்த மாதிரி கதாபாத்திரங்களில் பயணிக்கணும்னு நினைக்கறேன். `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் அந்த மாதிரி ஒரு ரோல். `கரு' படத்திலும் ரொம்ப நல்ல ரோல். டிரெய்லர்ல போலீஸ் கெட்டப்ல என்னைப் பார்க்கும் போது எனக்கே  சிரிப்பு வந்திடுச்சு. ஆனா, படமா பார்க்கும் போது அந்த ரோல் எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும்"

" `காற்று வெளியிடை' பட சமயத்தில் உங்களைப் பற்றி நிறைய மீமெல்லாம் வந்ததே அதெல்லாம் கவனிச்சீங்களா?"

"ஆமா, கவனிச்சேன். நான் மணிரத்னம் சார் படத்தில் நடிக்கப் போறேன்னு நானும் அவரும் இருக்கும் போட்டோவ ட்விட்டர்ல போட்டதும், அடுத்த ஒரு வருஷத்துக்கு இன்டர்நெட்ல இருக்கவங்களுக்கு, மீம் க்ரியேட்டர்ஸுக்குக் கூடவே எனக்கும் செம டைம்பாஸ். படம் வந்ததுக்குப் பிறகு, பழிவாங்கிட்டாருன்னு மீம் போட ஆரம்பிச்சாங்க. `காற்று வெளியிடை' ஆடியோ ரிலீஸ்ல சூர்யா சார், `நான் `ஆய்த எழுத்து' படம் நடிச்சப்போ கார்த்தி போய் கூட்டத்த ஒழுங்குபடுத்திட்டிருப்பான். அப்படி இருந்தவன் இன்னைக்கு அவர் படத்திலேயே நடிக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு'னு சொன்னார். நான் ஒழுங்குபடுத்துற இடத்தில் கூட இல்ல, அந்தக் கூட்டத்தில் ஒருத்தனா இருந்தவன். அப்படி இருந்த எனக்கு மணிரத்னம் சார் படத்தில் நடிச்சிருக்கேன்றது பெரிய சந்தோஷம்தானே. பதினைஞ்சு நாள் அவர் கூட வேலை செய்திருக்கேன், நான் அண்ணாந்து பார்த்த ஒருத்தர் கூட பழகியிருக்கேன்றது லைஃப் டைம் அச்சீவ்மென்ட் மாதிரி. மத்தபடி இந்த மீம்ஸ்லாம் பார்த்து பயங்கரமா சிரிச்சேன். என்னோட போன்ல என்னைக் கலாய்ச்சு வர்ற மீம்க்குனு தனி போல்டர் வெச்சிருக்கேன். ஃப்ரீயா இருக்கும் போது அதை ஓப்பன் பண்ணி பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிடுவேன்.’’

"சினிமா விமர்சனம் பண்ணீங்க, இப்போ சினிமாவுக்குள்ள போயிட்டீங்க. சினிமா மீது வைக்கப்படும் விமர்சனங்களை, ஒரு விமர்சகரா எப்படிப் பார்க்கறீங்க?"

"இப்போ சினிமா வந்திட்டதால எனக்கு சினிமாக்குள்ள இருக்கும் கஷ்டங்கள் தெரியுது. யாருமே மொக்கையா ஒரு படம் எடுக்கறேன்னு எடுக்க மாட்டாங்க. அது மொக்கப் படமாவே இருந்தாலும், உள்ள நூறு சதவீத உழைப்பு இருக்கு. ஏதோ ஒரு விஷயத்தில் சில சரியா இருக்காது. அதைச் சொல்லக்கூடாதுன்றது சரி இல்ல. சினிமாங்கறது நிறைய உழைப்பும், பணமும் கொடுக்க வேண்டிய இடம். நிறைய சிரமங்கள் இருக்கு, கஷ்டங்கள் இருக்கு. ஆனா, அதே மாதிரிதான் மற்ற வேலைகளும். எல்லாத் துறையிலும் கஷ்டங்கள் இருக்குதான். அது வெவ்வேற வடிவங்கள்ல இருக்கும். சினிமால கஷ்டம் இருக்குன்றதுக்காக அதை விமர்சனம் பண்ணக்கூடாதுன்னா என்னால ஏத்துக்க முடியாது. நீங்க சொன்னது சரி, சொன்ன விதம் சரி இல்லைனு கூட சொல்ல முடியாது. ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், அதை அவங்க ஆயிரம் விதங்கள்ல சொல்வாங்க. இப்போ நாம பாலா சார்கிட்ட போய், நீங்க ஏன் சுந்தர்.சி சார் மாதிரி ஒரு காமெடி படம் பண்ணக் கூடாதுனு கேட்க முடியாதில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒரு யுனீக் ஸ்டைல் இருக்கும்."

"எத்தனை வேலைகள் போனாலும், ஆர்.ஜே வேலையைத் தொடர்வேன்னு சொல்றீங்க. அதன் மேல அவ்வளவு ஆர்வத்துக்கு என்ன காரணம்?"

"அது என்னோட அடையாளம். ஸ்கூல்ல படிக்கும் போது என்னோட க்ளாஸ்லயே அஞ்சு பாலாஜி இருப்பாங்க, காலேஜ்லயும் அதேதான், ஏரியாலயும் அதேதான்.. ஃப்ளாட்ல பெரிய பாலாஜி, குட்டி பாலாஜி, இன்னொரு பாலாஜினு மூணு பேர். இப்படி அடையாளமே இல்லாத ஒரு ஆளு. ஸ்கூல்ல நடுவுல உட்காருவேன். பெருசா ரௌடியிஸமும் வராது, படிப்பும் வராது. இப்பிடி இருந்த எனக்கு, நான் யார்னு என்கிட்ட அறிமுகப்படுத்தினது இந்த வேலைதான். ஆர்.ஜே பாலாஜினு சொன்னா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். நான் மைக்ல பேசறத நாற்பது லட்சம் காதுகள் கேட்கும். அதனால எனக்குப் பெரிய சக்தியும், பொறுப்பும் இருக்குனு தோணும். சிங்கத்துடைய இடம் அதனுடைய குகைனு சொல்வாங்கள்ல. அந்த மாதிரிதான் அந்த இடத்தை முதல் நாள்ல இருந்து நினைக்கறேன். எப்பவும் என்னோட லட்சியம் ஆர்.ஜே ஆகறதுதான்னு சொன்னது இல்ல. இந்த வேலைக்கு வந்தேன், ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால அதை தொடரணும்னு தோணுச்சு. அதன் மூலமா எனக்குச் சில நல்லது நடந்தது. அந்த நல்லதில் சில விஷயங்களை சீரியஸா எடுத்துகிட்டு இப்போ பண்ண ஆரம்பிச்சிருக்கேன். டிவி வாய்ப்பு வந்தது, அதைக் கத்துக்கணும்னு தோணுச்சு போனேன். பெரிய ஆர்வம் ஏற்படலைனு வெளிய வந்துட்டேன். சினிமா வாய்ப்பு வந்து நடிக்க ஆரம்பிச்சேன். அதில் எனக்குக் கத்துக்கறதுக்கு நிறைய இருக்குன்றது பிடிச்சிருக்கு. என்னோட நடிப்புக்கு வரும் ஒவ்வொரு விமர்சனங்களையும், முதல்ல நானே சொல்லிக்கிறேன். அடுத்த முறை இதை பண்ணக்கூடாதுன்னு மாத்திக்கிற ப்ராசஸ் பிடிச்சிருக்கு. ஒன்னொன்னும் இப்படிதான் போயிட்டிருக்கு. ட்ரையல் அண்ட் எரர் மாதிரி என்னெல்லாம் பண்ண முடியுமோ பண்றேன். அதில் எது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதோ அதை மட்டும் தொடர்ந்து பண்றேன்."