Published:Updated:

பார்த்துட்டோம்... 'அஸ்மா'வுக்கும் - 'அருவி'க்கும் சம்பந்தம் இல்லை ப்ரோ!

தார்மிக் லீ
பார்த்துட்டோம்... 'அஸ்மா'வுக்கும் - 'அருவி'க்கும் சம்பந்தம் இல்லை ப்ரோ!
பார்த்துட்டோம்... 'அஸ்மா'வுக்கும் - 'அருவி'க்கும் சம்பந்தம் இல்லை ப்ரோ!

2011-ம் ஆண்டில் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எகிப்தியப் படம்தான் `அஸ்மா'. `சமீபத்தில் வெளியான `அருவி' திரைப்படம், `அஸ்மா' படத்தின் காப்பி' என ட்விட்டரில் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தப் படம் காப்பியா...  ஒரிஜினலா என்பதைப் பற்றிப் பார்க்கும் முன்னர், `அஸ்மா' படத்தின் கதையையும் அது கடத்தும் உணர்வையும் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் அஸ்மா. பித்தப்பையிலும் இவருக்குப் பிரச்னை. எய்ட்ஸ் நோயைவிட பித்தப்பை பிரச்னையின் வீரியத்தால் அதிகம் வேதனைப்படுகிறார். அஸ்மாவின் நிலை, அவரின் மகளைத் தவிர சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். நோய் காரணமாக இவரின் வேலை பறிபோய்விடுகிறது. இருப்பினும், பித்தப்பை நோயால் ஏற்படும் வேதனையைத் தாங்க முடியாமல், சிகிச்சை பெற பல மருத்துவமனைகள் ஏறி இறங்குகிறார். ஆனால், இவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும் காரணத்தால், மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சையளிக்க மறுக்கின்றனர். மறுபக்கம் தனது மகளுடன் ஒருசில வாக்குவாதங்களுக்கு ஆளாகி, மனவேதனைக்குள்ளாகிறார். ஒவ்வொரு நாளும் நரகத்தில் இருப்பதைப்போல தனது வாழ்நாளைக் கடத்தும் அஸ்மாவுக்கு, டி.வி ஷோவில் கலந்துகொள்வதற்கான அழைப்பு வருகிறது. ஆரம்பத்தில் மறுத்தாலும், அதன் மூலம் ஏதேனும் உதவி கிடைக்கும் என முடிவெடுத்து, `பித்தப்பை நோய்க்கான காரணத்தைச் சொல்லவும் மாட்டேன். என் முகத்தை மக்களுக்குக் காட்டவும் மாட்டேன்' என்ற கோரிக்கையுடன் ஷோவில் கலந்துகொள்ளச் சம்மதிக்கிறார். டி.வி ஷோவில் இவர் பேசுவதுதான் க்ளைமாக்ஸ் காட்சி. அந்தக் காட்சி தரும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏனென்றால், அவர் பாதிக்கப்பட்ட கதை முழுக்க வலியின் வடுக்கள் மிகுந்திருக்கும்.

அந்தச் சொல்லப்படாத காரணம்

இவர் படும் வேதனைகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் இவரின் திருமண வாழ்க்கையையும் இணையான திரைக்கதையில் சொல்லியிருப்பார்கள். மோஸத் என்பவரைக் கண்டவுடன் அஸ்மாவுக்குக் காதல். மோஸத், அஸ்மாவின் அப்பாவிடமே நேரடியாகச் சொல்லி சம்மதம் வாங்குகிறார். சுமுகமாகச் செல்லும் இவர்களது திருமண வாழ்க்கை, எதிர்பாராதவிதமாக நடக்கும் ஒரு சண்டையால் திசை மாறுகிறது. அந்தச் சண்டை, மோஸத்தை சிறைக்கு அனுப்பிவைக்கிறது. சிறையில் இருக்கும்போது ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகிறார் மோஸத். வெளியே வரும்போது அஸ்மாவுக்கும் இதுபற்றித் தெரியவருகிறது. அஸ்மாவுக்கோ, முன்பு இருந்ததைவிட காதல் அதிமாகிறது. `நீங்க கவனமாக இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு இந்த நோய் பரவ வாய்ப்பில்லை' (ஆனால், அஸ்மாவுக்கு இந்த நோய் நிச்சயமாகப் பரவும்) என்ற மருத்துவரின் ஆலோசனைப்படி இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். அஸ்மாவின் பிரசவத்துக்கு முன்பே மோஸத் நோயால் இறந்துவிடுகிறார். `ஆண் பிறந்தால் எங்களிடம் விட்டுச் செல்; பெண் பிறந்தால் நீயே எடுத்துக்கொண்டு போய்விடு' என்று மோஸத்தின் உறவினர்கள் அஸ்மாவுக்குக் கட்டளையிடுகிறார்கள். பெண் குழந்தை பிறந்ததால், தன் தந்தையுடன் வேறு இடத்துக்குக் குடிபோகிறார். அதற்குப் பிறகு நடந்த கதைதான் நான் மேலே சொன்ன கதை (ஆனால், நோய்க்கான காரணத்தைக் கடைசி வரை அவராக யாருக்கும் சொல்ல மாட்டார்).

ரீல் கதைக்கும் ரியல் கதைக்கும் உள்ள வேறுபாடுகள்:

ஏற்கெனவே சொன்னதுபோல் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் `அஸ்மா'. இந்தப் படத்தின் கதையில் அஸ்மா கலந்துகொண்ட டி.வி ஷோ மூலம் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும் என்பதுபோல்  முடியும். ஆனால், உண்மைக் கதையில் சம்பந்தப்பட்ட நபர் கடைசி வரை தன் முகத்தை வெளியே காட்ட மாட்டார். சிகிச்சைக்குத் தேவையான பணம் அவருக்குக் கிடைக்காமல் தன் உயிரையும் இழந்துவிடுவார். ``காய்ச்சல், சர்க்கரை நோய், புற்றுநோய்போல் எய்ட்ஸும் ஒரு வியாதியே! எனவே, அவரை வேறுபட்ட மனிதராகப் பார்க்க வேண்டாம் என்பதே இந்தப் படம் சொல்லும் செய்தி'' என, படத்தின் இயக்குநர் அமர் சாலமா எண்ட் க்ரெடிட்ஸில் தெரிவித்திருப்பார்.

விக்கிப்பீடியாவில் வெறும் எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி., டி.வி ஷோ சில விஷயங்கள் ஒன்றுபோல் இருப்பதால், இது காப்பி என ட்விட்டரில் சிலர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒருவேளை அருவி இயக்குநர் அருண் புருஷோத்தமன் கடந்து வந்த பாதையில் `அஸ்மா' படம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். சரி, இயக்குநரிடமே கேட்டுவிடலாமே என அவரைத் தொடர்புகொண்டோம். 'இப்போ நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாங்க! அதனால இது பத்தி கருத்துச் சொல்ல விரும்பல சார்!' என சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு