Published:Updated:

“எனக்குப் பிடித்த மொழி!”

ஆல்பம்

“எனக்குப் பிடித்த மொழி!”

ஆல்பம்

Published:Updated:

''எல்லா போட்டோவிலும் கண்ணுக்குத் தெரியாத ரெண்டு பேர் பேசிக்கிறாங்க. ஒருவர், அதைப் பார்ப்பவர்; இன்னொருவர், அதை எடுப்பவர். அந்த ரெண்டு பேரையும் இணைக்கும் பாலம்தான் போட்டோ. எனக்கு இந்த மொழி பிடிச்சிருக்கு!' - கண்கள் இரண்டிலும் ஃப்ளாஷ் மின்ன, உற்சாகமாகப் பேசுகிறார் ஜி.வெங்கட்ராம். தமிழகத்தின் மோஸ்ட் வான்டட் போட்டோகிராபர். சூப்பர் ஸ்டார்  என்றாலும் சரி... சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படுபவர் என்றாலும் சரி... வெங்கட்ராமின் கேமரா சளைக்காமல் க்ளிக்கித் தள்ளுகிறது. ''புகைப்படக் கலை என்பது ஒரு சைக்காலஜி. அது மனிதர்களைப் படிப்பது. சரியாகப் படித்தால்தான் நல்ல போட்டோ கிடைக்கும்'' என்றவரின் 20 ஆண்டு கால ஆல்பத்தைப் புரட்டினோம்.

“எனக்குப் பிடித்த மொழி!”

கமல்ஹாசன்: 'விஸ்வரூபம்’ படத்துக்காக எடுத்த போட்டோ இது. கமல் சார், எப்பவும் எல்லா விஷயத்திலும் ஆர்வம் காட்டுவார். ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் சின்ன டிஸ்கஷன் இருக்கும். எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம், வேற என்னென்ன சேர்க்கலாம்னு பேசுவார். அவர் அளவுக்கு டீட்டெயிலிங் பண்றவங்ககூட வேலை செய்றது எப்பவும் சவாலான, அதே சமயம் சுவாரஸ்யமான விஷயம்.

“எனக்குப் பிடித்த மொழி!”

சூர்யா: 'அஞ்சான்’ படத்துக்காகப் பண்ணின போட்டோஷூட். ஸ்டுடியோவுல எடுத்ததால, லைட்டிங்ல புதுசா முயற்சி பண்ணினோம். அவர் முகத்துல ஒரு பாதி பளிச்னு வெளிச்சம் இருக்கும். இன்னொரு பாதி, லேசா இருட்டா இருக்கும். ஜம்ப் பண்ணலாம்னு முடிவு பண்ணி, அது இயல்பா இருக்கணும்னு, அவரா எகிறிக் குதிச்சார். இந்த மாதிரி ஷாட்ல ஜாக்கெட் சரியா பறக்கணும்; கால் நினைச்ச மாதிரி இருக்கணும்; துப்பாக்கியும் அவர் பார்வையும் நேரா இருக்கணும். இப்படி எல்லாமே அமையிற வரைக்கும் சலிக்காமப் பண்ணிக்கிட்டே இருந்தார். அவருக்குப் பிடிச்ச ஷாட் இது!

“எனக்குப் பிடித்த மொழி!”

விக்ரம்: விக்ரம் கூட பல வருஷப் பழக்கம். அவரோட போட்டோஷூட்னா எனக்குக் கை வலிக்கும். க்ளிக் பண்ணிக்கிட்டே இருக்கணும். இந்த போட்டோ, 'பீமா’ படத்துக்காக எடுத்தது. ஆக்‌ஷன் சீன் வந்தாலே விக்ரமுக்குக் கொண்டாட்டம்தான். எல்லாத்துக்கும் அத்தனை ஆப்ஷன்ஸ் கொடுப்பார். ஒரு ஜம்ப் பண்ணணும்னாக்கூட 20 தடவை செய்வார். அப்படி ஈடுபாட்டோட பண்றவங்களைத் திருப்திப்படுத்துறது த்ரில்.

“எனக்குப் பிடித்த மொழி!”

தீபீகா பல்லிகல்: ஸ்குவாஷ் சாம்பியன். பல விளம்பரங்கள்ல இவங்ககூட வேலை செஞ்சிருக்கேன். பொதுவா, விளையாட்டு வீராங்கனைகளை ஸ்டைலிஷாக் காட்ட மெனக்கெடணும். ஆனா, தீபீகா ரொம்பவே ஸ்டைலிஷ். இந்தப் படத்துல ஹேர்ஸ்டைல் மாத்தி, அவங்க உடல்வாகுக்கு ஏற்ற காஸ்ட்யூம் செலெக்ட் பண்ணி எடுத்தோம். அதனால, ஒரு புது கலர்ல வந்தது. அவங்களுக்கும் ரொம்பப் புடிச்ச ஸ்டில் இது.

“எனக்குப் பிடித்த மொழி!”

ரஜினிகாந்த்: 'சிவாஜி’ படத்துக்காக ஏவிஎம்-ல் பண்ணின போட்டோஷூட் இது. ரஜினி சாரோட லுக்கை மொத்தமா மாத்தின படம். அதனால, நிறைய யோசிச்சுப் பண்ண வேண்டியிருந்தது. ஒவ்வொரு தடவையும் ஏதாவது சேஞ்ச் சொல்ல அவர்கிட்ட போனா, உடனே சேர்ல இருந்து எழுந்திடுவார். 'நீங்க உட்காருங்க சார்’னு சொன்னாலும் கேட்க மாட்டார். எவ்வளவோ அனுபவம் இருந்தாலும், புதுசா கத்துக்கணும்கிற ஆர்வம்தான் அவரோட சக்சஸ் சீக்ரெட்னு நினைக்கிறேன். அந்த போட்டோஷூட் முடியிற வரை, 'ஓகேவா... நல்லா வந்திருக்கா?'னு கேட்டுக்கிட்டே இருந்தார். நான் அவர்கிட்ட கத்துக்கிட்ட முக்கியமான விஷயம் அது.

“எனக்குப் பிடித்த மொழி!”

ஸ்ருதிஹாசன்:  ஒரு நாள் கமல் சார் ஆபீஸ்ல இருந்து போன். ஸ்ருதிக்கு ஒரு போட்டோஷூட் பண்ணணும்னு சொன்னாங்க. ஸ்ருதியை மக்களுக்கு ஒரு ராக் ஸ்டாரா நல்லா தெரியும். ஆனா, 'கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ மாதிரி அவங்களை அப்ப யாரும் பார்க்கலை. அப்படி ஒரு சேஞ்ச்ஓவர் தேவைப்பட்டது. இந்த ஸ்டில்ஸ் பார்த்துட்டுத்தான் 'ஏழாம் அறிவு’ படத்தில் கமிட் பண்ணினாங்க. பாவாடை-தாவணி, சேலைனு ரொம்பவே ஹோம்லியா இருந்தாங்க ஸ்ருதி. அவங்க நடிகையா மாறினதுக்கு இந்த போட்டோஷூட் ரொம்பவே உதவியா இருந்தது.

“எனக்குப் பிடித்த மொழி!”

சிவாஜி: ஒரு பத்திரிகைக்காக சிவாஜி சாரைப் படம் எடுக்கச் சொன்னாங்க. நான் போய், லைட் எல்லாம் செட் பண்ணிட்டு, அவர் வந்ததும் அவரா ஏதாவது பண்ணுவார்னு வெயிட் பண்ணினேன். அப்ப அவர், 'நீங்கதாங்க சொல்லணும். கேமரா பின்னாடி நீங்கதான நிக்கிறீங்க! ஃப்ரேம் என்ன; நான் எங்க நிக்கணும்; எங்க பாக்கணும்னு சொல்லுங்க...’ன்னார். அதுதான் எனக்குப் பெரிய 'ஐ-ஓப்பனர்’. அப்புறம் நான் சொல்லச் சொல்ல, 'டக் டக்’னு எல்லாமே செஞ்சார். அப்பப்ப என்னைக் கிண்டல் பண்ணி, சகஜமாக்கிப் பிரமாதப்படுத்திட்டார். அந்த நம்பிக்கையில்தான் நான் அடுத்தடுத்து பல வி.ஐ.பி.களை படம் எடுக்க ஆரம்பிச்சேன்.

“எனக்குப் பிடித்த மொழி!”

இளையராஜா: ராஜா சார் கனடாவில் ஓர் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதுக்காக எடுத்த படம் இது. கிட்டத்தட்ட 27 வருஷம் கழிச்சு அவர் கோட் போட்டார். கொஞ்சம் பயத்தோடதான் ஷூட் பண்ணினேன். கையில் இசைக் கருவி ஏதாவது இருந்தா நல்லா இருக்கும்னு எலெக்ட்ரிக் கிடார் தந்தேன். ஆனா அவர், 'நான் வாசிக்கிற கருவிகளைத்தான் வெச்சுப்பேன். எலெக்ட்ரிக் கிடார் நான் யூஸ் பண்றது இல்லை’ன்னு சொன்னார். 'ஒரு நிமிஷம் பிடிங்க சார்'னதும் சிரிக்க ஆரம்பிச்சிட்டார்.

“எனக்குப் பிடித்த மொழி!”

மோடி: இது பிரதமர் தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னாடி நடந்தது. பேட்டி அரை மணி நேரம், போட்டோவுக்கு 10 நிமிஷம்தான்னு சொன்னாங்க; அதுவும் வீட்டுக்கு உள்ளே! எதுவும் எனக்குத் திருப்தி இல்லை. வெளிய போய் சுத்திப் பார்த்தேன். திரும்ப வந்து அவர்கிட்ட, 'கலர்ஸ் போரிங்கா இருக்கு சார். வேற டிரெஸ் மாத்தலாமா?’னு கேட்டேன். அவர் வார்ட்ரோபையே திறந்து காட்டினார். அதுல இருந்து நல்ல கலரா எடுத்து, வெளியே கூட்டிட்டுப் போய் படங்கள் எடுத்தேன். பேசப் பேச, ஒன்றரை மணி நேரம் போட்டோக்கு ஒதுக்கினார். நாலு டிரெஸ் மாத்தினார். நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரோட இமேஜ் மேலயும், போட்டோகிராப் மேலயும் அவருக்கு ரொம்ப அக்கறை உண்டு.

“எனக்குப் பிடித்த மொழி!”

சாய்னா:  விளையாட்டு வீரர்கள் எல்லோருக்கும் தசைகள் இறுக்கமாகி இருக்கும். அதனால, சின்னச் சின்ன விஷயங்கள்லகூட அதிகக் கவனம் செலுத்தணும். ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம்னு எல்லாமே புதுசா இருக்கும். சாய்னா, ஆரம்ப காலத்துல போஸ் கொடுக்கத் திணறுவாங்க. இப்ப நல்லா இம்ப்ரூவ் பண்ணிட்டாங்க. ரொம்ப கோஆப்ரேஷன். நிறைய கமர்ஷியல்ஸ் பண்ணிப் பழகிட்டாங்க.

“எனக்குப் பிடித்த மொழி!”

அமிதாப் பச்சன்: இது 'கல்யாண் ஜுவல்லர்ஸ்’ விளம்பரத்துக்காக எடுத்தது. கான்செப்ட்னு பெருசா எதுவும் இல்லை. இன்ட்ரெஸ்டிங்கான கலர்ஸ் வெச்சுப் பண்ணலாம்னு நினைச்சேன். அமிதாப்ஜி எப்பவும் சோதனை முயற்சிகளுக்குத் தயாரான ஆள். ஸ்டுடியோவுல இருந்த சிவப்புக் கலர் குடையைக் கொடுத்து, முயற்சி பண்ணலாம்னு சொன்னதும், ஆர்வமா போஸ் கொடுத்தார். அப்படி 'க்ளிக்’ பண்ணின ஸ்டில் நல்லாருக்குனு, கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரங்கள்ல நிறைய யூஸ் பண்ணாங்க.

“எனக்குப் பிடித்த மொழி!”

நயன்தாரா - நாகார்ஜுனா: 'சௌத் ஸ்கோப்’ பத்திரிகைக்காகப் பண்ணின ஆல்பத்துல ஒரு படம் இது. ஹைதராபாத்ல ஒரு ஹோட்டல்லயே ஷூட் பண்ணோம். நாகார்ஜுனா சார் குடும்பத்தோட எனக்கு நல்ல பழக்கம். நாக் சார், நாகசைதன்யா இப்ப அகில் வரைக்கும் எல்லோருக்கும் போட்டோஷூட் பண்ணியிருக்கேன். எனக்கு எப்ப, என்ன உதவி வேணும்னாலும் நான் யோசிக்காமக் கேட்கிற ஒரு ஆள், நாகார்ஜுனா சார்.

“எனக்குப் பிடித்த மொழி!”

எரிகா ஃபெர்னாண்டஸ்: எரிகா, அப்ப தமிழ்ல படம் பண்ணலை. அதுக்கு அப்புறம்தான் '555’ பண்ணாங்க. அந்தச் சமயத்துல அவங்களுக்காகப் பண்ணின பெர்சனல் ஷூட் இது. அவங்க கண்ணு ரொம்ப நல்லா இருக்கும். அதை ஹைலைட் பண்ற மாதிரி ஐடியா பண்ணி ஷூட் பண்ணினோம்.

“எனக்குப் பிடித்த மொழி!”

ஜுவாலா கட்டா: ஒரு பத்திரிகை கவர் போட்டோவுகாகப் பண்ணின ஷூட் இது. ஜுவாலாவுக்குப் புதுசு புதுசா காஸ்ட்யூம்ஸ் ட்ரை பண்றது, ஃபேஷன் விஷயங்கள் பத்தித் தெரிஞ்சுக்கிறதுன்னு ஆர்வம் அதிகம். தன்னை ஸ்டைலிஷா காட்டிக்கணும்கிறதுல எப்பவும் கேர்ஃபுல்லா இருப்பாங்க. இந்தப் படத்துலேயும் செம ஸ்டைலா இருப்பாங்க. ஏற்கெனவே உயரம்; அதுல ஹை ஹீல்ஸ் இன்னும் சூப்பரா இருக்கும்!

“எனக்குப் பிடித்த மொழி!”

கார்த்தி: இது, அவரோட பெர்சனல் ஆல்பத்துக்காக எடுத்தது. கார்த்தி அமெரிக்காவில் படிச்சவர். ஆனா, ஆரம்ப காலப் படங்கள்ல எல்லாமே கிராமத்து ஆளா, லோக்கலாதான் நடிச்சார். அதை பிரேக் பண்ற மாதிரி ஸ்டைலிஷா எடுக்கலாம்னு ப்ளான் பண்ணினோம். 'ஆய்த எழுத்து’ போட்டோஷூட் சமயத்துல, அவர் மணி சாரோட அசிஸ்டென்ட். அப்பப் பார்த்ததுக்கும் 'பருத்தி வீரன்’ல பார்த்ததுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனா, எல்லா கேரக்டருக்கும் ஏத்தது அவரோட பாடி லாங்வேஜ்.

“எனக்குப் பிடித்த மொழி!”

லட்சுமி ராய்: இது சிசிலி காலண்டருக்காக, கோவா 'லலித் ரிசார்ட்ஸ்’ல எடுத்த படம். இந்தப் படம் எடுத்தப்போ மணி 12. நல்ல உச்சி வெயில். ஃப்ரேம்ல எல்லாமே பச்சை, மஞ்சள் நிறம். அதுல வெள்ளை கலர் டிரெஸ் போட்டு எடுத்தா நல்லா வரும்னு நினைச்சேன். 'முடியில் மட்டும் வெயில் பட்டு, முகத்துல அதிக வெளிச்சம் படாம இருந்தா பெட்டர்'னு சொன்னேன். அந்த மாதிரி நின்னாங்க. ஒரு புகைப்படக் கலைஞனா எனக்கு இந்த ஃப்ரேம்ல இருக்கிற கலர் கம்போசிஷன் ரொம்பவே பிடிக்கும்.

“எனக்குப் பிடித்த மொழி!”

கங்கணா ரனாவத்: இதுவும் CCL காலண்டர் ஷூட். கோவா பக்கத்துல, கோலா பீச்னு கடல்ல நதி கலக்கிற இடம். ரொம்ப அழகா இருக்கும். அங்க பாறைங்க எல்லாம் செம ஷார்ப்பா இருக்கும். கங்கணா மேக்கப் மேன் கால் கிழிஞ்சுடுச்சு. அந்த காஸ்ட்யூமும் நீளம்; காத்துல பறக்கணும். எல்லாம் சேர்ந்து 'க்ளிக்’ பண்ணி முடிச்சதும் வந்து பார்த்தாங்க. பார்த்ததும் அவங்க முகம் மலர்ந்தது.  

“எனக்குப் பிடித்த மொழி!”

ஷ்ரேயா: இது 'கலாட்டா.காம்' இணையதள பத்திரிகைக்காக எடுத்த போட்டோ. ஷ்ரேயாவுக்குத் தைரியம் ஜாஸ்தி. அவங்க உடல்வாகுக்கு என்ன வேணும்னாலும் முயற்சி பண்ணலாம். அதனால, நாம என்ன காஸ்ட்யூம் கொடுத்தாலும் போட்டுட்டு வந்துடுவாங்க. அதுக்கேற்ற மாதிரி போஸ் பண்ணிக் கலக்கிடுவாங்க.

“எனக்குப் பிடித்த மொழி!”

ருக்மணி: என் காலண்டருக்காக எடுத்த படம் இது. வித்தியாசமா தீம் ஏதாவது யோசிக்கலாம்னு முடிவு பண்ணி, 'காடு’னு செலெக்ட் பண்ணினோம். நாலு மாசமா ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸுக்காக உழைச்சோம். பட்டாம்பூச்சி, பறவைகளோட இறக்கை மாதிரியே, அதே கலர்ல எல்லாம் ரெடி பண்ணினோம். நாம போடுற சட்டைக்கு பேன்ட் கலர் செட் ஆகலைன்னா மாத்திடுறோம். ஆனா, இயற்கையோட எந்த கலரையும் நாம மாத்தாம அப்படியே ஏத்துக்கிறோம். அதை ரசிக்கவும் செய்றோம். அது ஏன்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. எல்லாமே இயற்கை நிறங்கள்ல படம் எடுக்கலாம்னு யோசிச்சு, அதையே செஞ்சோம்.

“எனக்குப் பிடித்த மொழி!”

ஜி.வி.பிரகாஷ்: ஜிவிபி ஸ்கூல்ல படிக்கும்போதே இசையமைப்பாளர் ஆனவர். அப்பவே அவரோட அப்பா, ஒரு போட்டோஷூட் பண்ணலாம்னு சொன்னார். அப்ப அவருக்கு நடிகர் ஆகணும்கிற எண்ணம் இல்லை. சிட்டி சென்டர்ல ஷாப்பிங் செஞ்சு, அவரோட ஸ்டைலையே மாத்துற மாதிரி ஐடியா பண்ணினோம். படங்களைப் பார்த்தா, அப்பவே ஜிவிபி-க்கு உள்ளே ஒரு நடிகர் இருந்திருக்கார்னு நல்லா தெரியும்.

“எனக்குப் பிடித்த மொழி!”

தமன்னா: எனக்கு நெருக்கமான நடிகைகளில் தமன்னா முக்கியமானவங்க. அவங்க பட ஷூட்லாம் முடிச்சிட்டு நைட்டுலதான் ஸ்டுடியோவுக்கே வருவாங்க. ஆனா, அந்தக் களைப்பு தெரியாம ரொம்ப எனெர்ஜிட்டிக்கா போஸ் பண்ணுவாங்க. அவங்க முகம் ரொம்ப அழகு. போட்டோஜெனிக். இந்தப் படம் ஒரு பத்திரிகைக்காக க்ளிக் பண்ணினது.

“எனக்குப் பிடித்த மொழி!”

விஜய்: இந்த ஸ்டில் 'வேலாயுதம்’ படத்துக்காகப் பண்ணின போட்டோஷூட். சில பேர் அவங்களா ஆர்வமா பலவிதமான போஸ் கொடுப்பாங்க. சில பேர் நாம என்ன சொல்றோமோ, அதைச் சரியா ஃபாலோ பண்ணுவாங்க. விஜய் இதுல ரெண்டாவது வகை. சின்னச் சின்ன அசைவுகளைக்கூட நம்மக்கிட்ட கேட்பார். நாம என்ன சொல்றோமோ, அதைக் கொஞ்சம்கூட மாறாம எக்ஸ்பிரஷன்ஸ்ல கொடுப்பார். 'நீங்களா என்ன வேணும்னாலும் பண்ணுங்க'ன்னா, எதுவுமே செய்ய மாட்டார். அவர் ஸ்டைலே அதான்.

“எனக்குப் பிடித்த மொழி!”

மேண்டலின் ஸ்ரீனிவாஸ்: இவர் ரொம்பக் கூச்ச சுபாவம். எப்பவும் குர்தா, மெல்லிய புன்னகைனு ஃபார்மலான ஆளு. அவர்கிட்ட, 'நாம வேற மாதிரி முயற்சி பண்ணி சில போட்டோஸ் எடுக்கலாம்'னு சொன்னேன். வேணாம்னு பயந்தார். சம்மதிக்கவைக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். குர்தாவைக் கழட்டிட்டு, டெனிம் காஸ்ட்யூம் போட வெச்சோம். மேண்டலினையே கிடார் மாதிரி கையில் புடிச்சு, ஒரு ராக் ஸ்டார் மாதிரி கத்திக்கிட்டு போஸ் பண்ணினார். கான்ட்ராஸ்ட்டா, ரொம்ப வித்தியாசமா வந்துச்சு. அதுக்கப்புறம் எப்ப என்னைப் பார்த்தாலும் சிரிக்க ஆரம்பிச்சிடுவார். மறக்கவே முடியாத போட்டோ இது.