Published:Updated:

சென்னைத் திரைப்பட விழாவில் இந்த காமெடி படத்தை மிஸ் பண்ணாதீங்க..! #CIFF2017

ர.பரத் ராஜ்
சென்னைத் திரைப்பட விழாவில் இந்த காமெடி படத்தை மிஸ் பண்ணாதீங்க..! #CIFF2017
சென்னைத் திரைப்பட விழாவில் இந்த காமெடி படத்தை மிஸ் பண்ணாதீங்க..! #CIFF2017

நாளை(21/12/17)யுடன் 15-வது சென்னைத் திரைப்பட விழா நிறைவுறுகிறது. பல தியேட்டர்களில் நாளை படங்களின் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இன்றுதான், சர்வதேச திரைப்படங்கள் ஸ்கிரீனிங் செய்யப்படுவதற்காக தியேட்டர்கள் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. என்னென்ன படங்களை இன்று தவறவிடக் கூடாது என்பதை பார்ப்போம்...

The Confession:

மர்லின் மன்றோ. அழகிக்கெல்லாம் பேரழகியான அவளைப் பற்றி இன்னும் ஏதோ ஒரு வகையில் சினிமாக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. The Confession நேரடியாக மன்றோவுடன் சம்பந்தப்பட்டதில்லை. ஜியோர்ஜி, ஒரு முன்னாள் திரைப்பட இயக்குநர். இன்னாள் பாதிரியார். கிறிஸ்த்துவ மதத்தைப் பரவலாக்க, ஒரு கிராமத்துக்கு அனுப்பப்படுகிறார். கிராமவாசிகளை சர்ச்சுக்குள் கொண்டு வர அவர் மர்லின் மன்றோ நடித்த ஒரு படத்தை திரையிடுகிறார். இதைப் பார்த்த கிராமவாசிகள், தங்கள் பகுதியிலேயே இசைக் கலைஞராக இருக்கும் லில்லி, அச்சு அசல் மன்றோ போலவே இருக்கிறார் என்கின்றனர். லில்லியின் அழகைப் பார்த்து மயங்குகிறார் ஜியோர்ஜி. இதையடுத்து, தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரிவர ஜியோர்ஜி செய்கிறாரா என்பதுதான் மீதிக் கதை. இந்தப் படம் இன்று மாலை 4:30 மணிக்கு தேவி திரையரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.

A Beautiful Star:

உலகம் ஒரு மிகப்பெரும் ஆபத்தில் இருக்கும். அந்த ஆபத்தை சரிகட்டுவதற்காகவே, ஒரு சூப்பர் ஹீரோவோ சூப்பர் ஹீரோக்களோ உருவாவார்கள் அல்லது ஒன்றிணைவார்கள். அவர்கள் வில்லன்களையும் தீய சக்திகளையும் துவம்சம் செய்து சரியான நேரத்தில் உலகைக் காப்பாற்றுவார்கள். பெரும்பாலான சூப்பர் ஹீரோ படங்கள் இந்தக் கதைக் கருவை வைத்துத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதை மொத்தமும் ஹாலிவுட்டே குத்தகைக்கு எடுத்துவிட்டதுப்போலத்தான் உலக சூழல் இருக்கிறது. இந்தக் கதைக் கருவில் ஒரு சின்ன மாறுதல்… ஜப்பானில் உள்ள ஒரு குடும்பம், அழியும் தருவாயில் இருக்கும் இந்த உலகத்தை காக்க வந்தவர்கள் என்று திடீரென்று நம்புகிறார்கள். அதற்காக அவர்கள் செய்யும் பணிகள்தாம், A Beautiful Star படத்தின் ஓட்டம். தேவி பாலா திரையரங்கில், 4:45 மணிக்கு A Beautiful Star-ஐக் காணலாம்.

Two Lottery Tickets:

2016-ம் ஆண்டு ஐரோப்பிய நாடான ரோமேனியாவில் வெளியாகி இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் படம், Two Lottery Tickets. ஒரே டவுனில் வசித்துவரும் மூன்று ஆண்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. அவர்களின் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்ப்பதற்கு ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்குகிறார்கள். மிகப் பெரிய அமௌன்ட்டை வென்றும் விடுகிறார்கள். இங்குதான் கதையில் ஒரு ட்விஸ்ட்டு… அந்த லாட்டரி டிக்கெட் திருடப்படுகிறது. அதைத் தேடி மூன்று பேரும் போகும்போது வழிநெடுகே ஏற்படும் ரகளைதான் Two Lottery Tickets. பலர் எடுக்க மறுக்கும் காமெடி ஜானரில் படமெடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கிக் குவித்த சமீபத்திய உதாரணம் இத்திரைப்படம். திரைப்பட விழாக்கள் என்றாலே, மிக அடர்த்தியான அழுத்தமான படங்கள்தான் வருகிறது என்ற க்ளீஷேவை மாற்றுவது போல் இருக்கும் திரைப்படம் Two Lottery Tickets. இந்தப் படம் அண்ணா திரையரங்கில் இரவு 7:15-க்கு ஸ்கிரீன் செய்யப்படுகிறது.

Euthanizer:

50 வயதான மெக்கானிக் ஹவ்க்காவின் பார்ட்-டைம் வேலை, நோயுற்ற வளர்ப்புப் பிராணிகளைக் கொல்வது. ஒருநாள் அவரிடம் ஒரு நாயைக் கொல்லச் சொல்லி பணிக்கப்படுகிறார். ஆனால், ஹவ்க்கா, நாயைக் கொல்லாமல் காப்பாற்றி விடுகிறார். ஆனால், இதனால் ஒரு மிகப் பெரும் சிக்கல் எழுகிறது. Euthanizer படம், மிருகங்களின் உரிமை, இறப்பு குறித்தான பார்வை என்ற பலவற்றை வட்டமிடுகிறது. ஆனால், நிஜத்தில் படத்தின் மையம் இதைப் பற்றியது அல்ல. மனிதர்களின் மூடத்தனம் குறித்து இதில் எடுத்துரைக்கப்படுகிறது. இன்றிரவு கேசினோவில் 7:00 மணிக்கு Euthanizer திரையிடப்படும்.