Published:Updated:

``வேண்டி விரும்பி புழல் ஜெயில்ல மூணு நாள் இருந்தேன்..!’’ - ஜிப்ரான் #VikatanExclusive

பா.ஜான்ஸன்
``வேண்டி விரும்பி புழல் ஜெயில்ல மூணு நாள் இருந்தேன்..!’’ - ஜிப்ரான் #VikatanExclusive
``வேண்டி விரும்பி புழல் ஜெயில்ல மூணு நாள் இருந்தேன்..!’’ - ஜிப்ரான் #VikatanExclusive

``நான் இசையமைத்த படங்கள் வெளியாகும்போது எனக்குத் தெரிஞ்ச சர்கிள் மட்டும்தான் கால் பண்ணுவாங்க. ஆனா அறம், தீரன், சென்னை 2 சிங்கப்பூர் எல்லாம் பார்த்த பின்னால யார்னே தெரியாத நபர்கள்ட்ட இருந்தெல்லாம் கால் வந்தது. `இசையமைப்பாளருங்களா?'னு கேட்பாங்க, அவங்க பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருக்கு இது" எனப் பரவசத்துடன் பேச ஆரம்பித்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

``இசையமைப்பாளர் ஜிப்ரான் மாதிரியே பாடலாசிரியர் ஜிப்ரானும் இப்போ வெளிய தெரிய ஆரம்பிக்கிறாரே?"

"அதுக்கு என்னோட பேண்ட் அனுபவம் காரணமா இருக்கலாம். எல்லா இசைக் கலைஞர்களுக்கும் பேண்ட் அனுபவம் கண்டிப்பா வேணும்னு நினைப்பேன். சினிமா பாடல்களைப் பாடி கச்சேரி பண்றதா இல்லாம, சொந்தமா இசை உருவாக்கணும். டீன் ஏஜ் சமயத்தில் மியூசிக் கத்துகிட்டோம், அதை உடனடியா மக்கள்கிட்ட காட்டறதுக்கு உதவினது பேண்ட்தான். அப்போ பண்ணின பாட்டுதான் `போறானே போறானே'. இதன் மூலமா மக்களுக்கு என்ன பிடிக்குது பிடிக்கலைனு நேரடியாவே பார்த்து தெரிஞ்சுக்கலாம். வழக்கமா ஒரு பாட்டு தயாராகும்போதே டம்மியா வரிகள் எழுதிடுவேன். முழுசா இல்லைனாலும் முதல் ரெண்டு வரியையாவது எழுதிடுவேன். `செவத்த புள்ள’ ட்யூன் பேண்ட் சமயத்தில் தயார் பண்ணி வெச்சிருந்ததுதான். படத்துக்குன்னு வந்தப்போ டம்மியா வரிகள் எழுதினேன், எல்லாருக்கும் பிடிச்சது, உதட்டோர மச்சத்துக்குப் பதிலா, மிச்சத்திலனு சின்ன மாற்றம் பண்ணி படத்தில் பயன்படுத்தினோம்." 

"நடிகர்களைப் பாட வைக்கும் ட்ரெண்டை நீங்களும் தொடர்வது எதனால்?"

"அதை ட்ரெண்டா எல்லாம் நான் நினைக்கல. ஒரு பாட்டுக்கு என்ன மாதிரியான குரல் தேவைனு அந்தப் பாட்டே முடிவு பண்ணிடும். நடிகர்களைப் பாட வைக்கறதில் ஒரு ப்ளஸ் இருக்கு. ஒரு பாடகரைப் பாட வெச்சோம்னா, கச்சிதமா பாடிடுவாங்க. ஆனா, எக்ஸ்பிரஷன்ஸ் வரும்போது கொஞ்சம் சிக்கல் இருக்கும். ஆனா, நடிகர்களால அது சுலபமா பண்ண முடியும். குபு குபு பாட்டு ட்யூன் ரொம்ப சிம்பிளான ஒண்ணு. எக்ஸ்பிரஷன்ஸ் மூலமா அழகாக்க வேண்டிய பாட்டு. அதைக் கேட்டீங்கன்னா கார்த்தி சாருடைய குறும்புத் தனமான ஏற்ற இறக்கங்கள் பாடலை அழகா மாத்தினது. தனுஷ் சாரை பாட வெச்சப்போவும் எக்ஸ்பிரஷன்ஸ் மூலமா ஒரு அழகு சேர்ந்தது. அதுவே கமல் சார் பாடினார்னா, அது வேற மாதிரி. ஏன்னா அவர் புரொஃபஷனல் சிங்கரும்கூட.’’

"இயக்கம்போல இசையமைப்புக்கும் ரிசர்ச் தேவைப்படுதா?"

"ரிசர்ச் கண்டிப்பா தேவை. உத்தம வில்லன் பட சமயத்தில் வில்லுப்பாட்டு எனக்கு முன்னாடியே தெரியும். ஆனா, தெய்யம் பற்றி அதிகமா தெரியாது. அதைத் தேடிப்போய் என்னென்னனு தெரிஞ்சிகிட்டு வந்தேன். இப்போ இன்னொரு படம் ஒண்ணுக்காகப் புழல் ஜெயில்ல மூணு நாள் தங்கியிருந்தேன். இந்த மாதிரி பண்றதில் என்ன பண்ணணும்ங்கறதைவிட என்ன பண்ண வேணாம்ங்கறதைத் தெரிஞ்சுப்பீங்க."

"அடுத்த கட்டமா என்ன வேலைகள் போகுது?"

"இசையைப் பொறுத்தவரை கமர்ஷியல் படங்கள்ல வேலை செய்யணும். இசை மூலமா சினிமா தாண்டியும் சில வேலைகள் செய்யணும். ஏன்னா இசை எப்பவும் சினிமா சார்ந்த ஒண்ணாவே இருந்திருக்கு. ஆனா, இப்போ கொஞ்சம் கொஞ்சமா தனிப் பாதைக்கு நகர்ந்திட்டிருக்கு. இது ஒரு நல்ல வாய்ப்பு, அதைப் பயன்படுத்திக்க நினைக்கறேன்."

இசையமைப்பாளர் ஜிப்ரானின் விரிவான பேட்டியை நாளை (21/12/17) கடைகளுக்கு வரும் ஆனந்த விகடனில் படியுங்கள்...