Published:Updated:

ரியல் எஸ்டேட், கோபிநாத், தனுஷ், பொறுமை... தி மேக்கிங் ஆஃப் பழனி பட்டாளம்..! - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-4

மா.பாண்டியராஜன்
ரியல் எஸ்டேட், கோபிநாத், தனுஷ், பொறுமை... தி மேக்கிங் ஆஃப் பழனி பட்டாளம்..! - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-4
ரியல் எஸ்டேட், கோபிநாத், தனுஷ், பொறுமை... தி மேக்கிங் ஆஃப் பழனி பட்டாளம்..! - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-4

கலக்கப்போவது யாரு சீசன் 2ல நான் உதவி இயக்குநரா இருந்தபோதுதான் பழனி பட்டாளம் அறிமுகமானார். அந்த சீசன் முடிஞ்சதும் கிங்ஸ் ஆஃப் காமெடினு ஒரு ஷோ பண்ணுனோம். அதுலயும் பழனி கலந்துகிட்டார். அந்த ஷோவுக்கு பழனியை அழைச்சிட்டு வந்தது தனசேகர்தான். மத்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் மாதிரி,’ நான் 100 வாய்ஸ், 150 வாய்ஸ் பேசுவேன்’னு சொல்ற ஆள் கிடையாது பழனி. கொஞ்ச வாய்ஸ் பேசினாலும் பக்காவா, பாடி லாங்வேஜோட பேசுவார். மன்சூர் அலிகான், டி.ஆர், கோட்டா ஸ்ரீனிவாசராவ், விடிவி கணேஷ் எல்லாம்  அவரோட பெஸ்ட் சாம்பிள்ஸ். கிங்ஸ் ஆஃப் காமெடி முடிச்சுட்டு மறுபடியும் அது இது எது ஷோவுக்கு வந்தார்.

பழனி ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருந்ததால, அவரால தொடர்ந்து ஷோவுக்கு வர முடியல. மிமிக்ரி துறையில ஒரு நம்பிக்கை கிடைக்கிற வரை வேற ஒரு தொழில் கையில வச்சுக்கணும்னு அவர் அதை பண்ணிட்டு இருந்தார். அது இது எதுல 100 ஷோவுக்கு மேலதான் பழனி என்ட்ரி கொடுத்தார். பழனி சீனியரா இருந்தாலும், அப்போ இருந்த சிரிச்சா போச்சு டீமோட அவரால ஈசியா மூவ்வாக முடியலை. ஒரு வருஷம் ஆகியும் அவர் வெளியவே தெரியாம இருந்தார். ஒரு நாள் என்கிட்ட வந்து, ’சார் நான் ஒரு வருஷமா இங்க இருக்கேன். ஆனா இன்னும் வெளிய தெரியாம இருக்கேனே சார்’னு கேட்கும்போது, ‘ஒரு வருஷம் ஆகிருச்சுனு பெருசா பாக்காதீங்க. ஒரு வருஷம்தான் ஆச்சு. இன்னும் நிறைய பண்ணுங்க பழனி’னு சொன்னேன்.

அவருக்கு செம ப்ரேக்கா ஒரு விஷயம் அமைஞ்சது. விஜய் டி.வி ஸ்டார்ஸை வச்சு தீபாவளி ஸ்பெஷல் ப்ரோகிராம் ஒண்ணு பண்ணுனாங்க. அதுல சிரிச்சா போச்சு டீம் பெர்ஃபார்ம் பண்ணுனாங்க. எப்போதும் நடிகர், நடிகர்களை வச்சே மிமிக்ரி பண்ணிட்டு இருக்கோம். ஒரு சேஞ்சுக்கு விஜய் டி.வி ஸ்டார்ஸ் மாதிரியே மிமிக்ரி பண்ணலாம்னு ப்ளான் பண்ணினோம். அதுல நீயா நானா கோபிநாத் மாதிரி பழனி பண்ணினார். அதுதான் பழனிக்கு பெரிய ப்ரேக்கா இருந்துச்சு. எல்லாருக்கும் அது பிடிச்சிருந்ததால, பழனி வெளிய தெரிய ஆரம்பிச்சார். ஆனால், அந்த ஷோ பண்றதுக்கு முன்னாடி எங்க எல்லாருக்கும் செம பயம். நடிகர், நடிகைகளை மிமிக்ரி பண்ணும்போது அவங்க நம்ம முன்னாடி இருக்க மாட்டாங்க. அதனால தைரியமா பண்ணிடலாம். ஆனால், விஜய் டி.வி ஸ்டார்ஸ் எல்லாரும் முன்னாடி இருக்கும்போது அவங்களை மாதிரி மிமிக்ரி பண்றது அவங்களுக்கு பிடிக்காம போச்சுன்னா எதாவது சொல்லிடுவாங்களோனு பயம் இருந்துச்சு. ஆனால், அதை எல்லாரும் ஜாலியா எடுத்துக்கிட்டாங்க. குறிப்பா, கோபி சார் அவரோட போர்ஷனை நல்லா என்ஜாய் பண்ணிப்பார்த்தார்.

அந்த ஸ்பெஷல் ஷோ டெலிகாஸ்ட் ஆனதுக்கு அப்புறம் நாங்க டீமா தியேட்டருக்கு போயிருந்தோம். அங்க ஒரு 50, 60 பேர் பழனி பட்டாளத்தை நோட் பண்ணிட்டாங்க. எல்லாரும் வந்து அவரோட போட்டோ எடுத்துட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவருக்கு மிமிக்ரி துறை மேல நம்பிக்கை வந்திருச்சு. நானும் பழனியும் எப்போ க்ளோஸ் ஆனோம்னா, அவர் 30 மிமிக்ரி கலைஞர்களை வச்சு 12 மணி நேரம் மிமிக்ரி ஷோ ஒண்ணு பண்ணினார். அதோட செலவு எல்லாமே அவர்தான் பண்ணுனார். நான் அந்த ஷோவை டைரக்ட் பண்னேன். அந்த நிகழ்ச்சிக்கு அப்பறம்தான் நானும் பழனியும் நல்லா பழக ஆரம்பிச்சோம்.  

பழனியோட ட்ராவலே செமையா இருக்கும். முதல் நாள் ஸ்கார்பியோல போய் இறங்கி செம கறாரா பேசி ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணுவார். அடுத்த நாள் சிரிச்சா போச்சு ஷூட்டுக்கு வந்து, அஞ்சலி பாப்பா கெட்-அப் போட்டு குழந்தை மாதிரி நடிப்பார். இப்படி அவரோட ட்ராவலே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். நான் யாருக்கெல்லாம் லேடி கெட்-அப் கொடுக்குறேனோ அவங்க எல்லாரும் என்கிட்ட வந்து புலம்புவாங்க. ‘என்ன சார், இப்படி மீசையை எடுக்க வச்சுட்டீங்க. உங்களுக்கு மீசை இல்லாததால எங்களோட மீசையையும் எடுக்க வைக்கிறீங்களா சார்’னு கேட்பாங்க. நான் அவங்ககிட்ட, ‘மீசை எடுக்குறது பெரிய விஷயம் இல்ல, பேரு எடுக்கணும் அதான் பெரிய விஷயம்’னு சமாளிச்சு அனுப்பிவிடுவேன்.

கோபிநாத் எபிசோடு எந்தளவுக்கு ரீச்சோ அதே அளவுக்கு அஞ்சலி பாப்பா எபிசோடும் பழனிக்கு நல்ல ரீச் கொடுத்துச்சு. அந்த ஷோவை தனுஷ் சாரே ட்விட்டர்ல ஷேர் பண்ணியிருந்தார். மாரியோட ஷூட்டிங் ப்ரேக் அப்போ அந்த எபிசோடைத்தான் தனுஷ் சார் அடிக்கடி பார்ப்பார்னு ரோபோ சங்கர் சொல்லியிருக்கார். இந்த டைம்ல தான் பழனிக்கு பட வாய்ப்புகள் வந்துச்சு. இது சாதாரணமா எல்லாருக்கும் நடக்குறதுதான். சில எபிசோடு ஹிட்டான அதில் நடிச்சவங்களுக்கு பட வாய்ப்புகள் வரும். ஆனால், அதுல எது பெஸ்ட்டுனு தேர்ந்தெடுத்து நடிக்கப் போனால்தான், ரீச்சாக முடியும். அதை பழனி சரியா பண்ணினார். சின்னச் சின்ன ரோல்களா வந்தபோது அதில் நடிக்காமல், அறம் மாதிரி ஒரு நல்ல படத்துல நல்ல ரோல் கிடைச்சதும் அதில் நடிச்சார்.

பொதுவா, மிமிக்ரி ஆர்டிஸ்ட் படத்துல நடிக்கப்போனால், அவங்களுக்கு காமெடி ரோல் தருவாங்க. இல்ல, அவங்க டி.வியில என்ன பண்றாங்களோ அதையே படத்துலயும் பண்ண வைப்பாங்க. ஆனால், அறம் படத்தில் எந்த இடத்துலயும் காமெடி பண்ற பழனியைப் பார்க்க முடியாது. நடிகர் பழனியாகத்தான் படம் முழுக்க தெரிவார். அந்த வகையில் எனக்கு அறம் படத்தில் பழனியின் ரோல் ரொம்பப் பிடிக்கும். நான் அறம் ரிலீஸாகி 15 நாள் கழிச்சு படம் பார்த்துட்டு பழனிக்கு போன் பண்ணினதும், ‘என்ன சார் இவ்வளவு நாளா போன் பண்ணலை’னு கேட்டார். ஷூட் பிஸியில இருந்தனால பார்க்க முடியல பழனினு சொன்னேன்.

கலக்கப்போவது யாரு தொடங்குன சமயம் போட்டியாளர்கள் எல்லாரும் மிமிக்ரி மட்டும்தான் பண்ணிட்டு இருந்தாங்க. மிமிக்ரி பண்றவங்களைத்தான் ஷோல எடுத்தாங்க. அதை அது இது எது ஷோல உடைச்சோம். எல்லாரும் புது புது கான்செப்ட்டா எடுத்து நடிக்க ஆரம்பிச்சாங்க. ரொம்ப நல்லா நடிக்கக்கூடிய ஆள் பழனி. குடிகாரன், ஆட்டோகாரன்னு எந்த ரோல் கொடுத்தாலும் லைவ்வா நடிப்பார். ஆள் பார்க்க அப்பு கமல் மாதிரி இருப்பாப்ள, ஆனா நான் கடவுள் ஆர்யா மாதிரி நடிப்பார்.

பழனி பட்டாளம் பெயர் காரணம்..?

30 மிமிக்ரி கலைஞர்களை வச்சு அவர் ஒரு ஷோ பண்ணுனார்ல, அந்த நிகழ்ச்சியில் பழனி பட்டாளத்தின் மிமிக்ரி ஷோனுதான் விளம்பரம் பண்ணினோம். பழனியோட மிமிக்ரி பட்டாளம்னு மீனிங். அந்த ஷோல இருந்து பழனி பட்டாளம்னு பெயர் வந்துச்சு. ஆனா பழனி பட்டாளத்துக்கு நான் ஒரு அர்த்தம் சொல்லுவேன். அவர் ரொம்ப பொறுமைசாலி. என்ன நடந்தாலும் பொறுமையா இருப்பார். அதுனால எவ்வளவு பட்டாலும் பொறுமையா இருக்கிறனாலதான் பழனி பட்டாளம்னு சொல்லுவேன். எல்லாருக்கும் பழனிகிட்ட ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். எனக்கு பழனிகிட்ட பிடிச்சது, நீளமான வசனம் கொடுத்தா அதை பேசிட்டு இருக்கும்போது இடையில மறந்து, அவரே சிரிச்சிடுவார். மத்தவங்க சிரிக்கிறதுக்கு முன்னாடி சிரிச்சிடுவார். அதுதான் பழனிகிட்ட எனக்குப் பிடிச்சது.

ஒரு பெர்ஃபார்மருக்கு நாலு, ஐஞ்சு வருஷம் வாய்ப்பு கொடுத்தா நான் நல்லவன். ஆறாவது வருஷம் நான் வாய்ப்பு கொடுக்கலைன்னா கெட்டவன். நான் ஏன் வாய்ப்பு கொடுக்கலைன்னா அவங்க மேல எதாவது தப்பு இருக்கும். அவங்க ரிகர்சலுக்கு வராம இருக்கலாம், போனை எடுக்காம, வேற வேலையில பிஸியா இருக்கலாம். இப்படி பல காரணங்கள் இருக்கிறனால நான் அவங்களுக்கு வாய்ப்பு தராம இருப்பேன். அதுனால அவங்க என்னை கெட்டவனா நினைக்கலாம். ஆனால், நான் வாய்ப்பு தந்தாலும் தரலைனாலும் பழனிக்கு நான் எப்போதும் நல்லவன்தான். கிறிஸ்துமஸுக்கு எங்க வீட்டுல எங்களுக்கு முன்னாடி பிரியாணி சாப்டுற ஆள் பழனிதான். அந்தளவுக்கு எங்க ஃபேமிலில நெருக்கமா இருப்பார்.

எப்போதுமே எங்க ஷோவுல இருந்து ஒருத்தர் சினிமாவுக்கு போயிட்டா அவங்க போன அந்த இடத்துக்கு வேற ஆள் இல்லாம சிரமப்படுவோம். இன்னைக்கு வரைக்கும் பழனியோட இடத்துக்கு வேற சரியான ஆள் கிடைக்கலை. அதுதான் பழனியோட வெற்றி.