Published:Updated:

"சொர்ணாக்காவுக்கு நான்... கோட்டா சீனிவாசராவுக்கு என் கணவர்!" - ஶ்ரீலேகாவின் டப்பிங் சுவாரஸ்யம்

"சொர்ணாக்காவுக்கு நான்... கோட்டா சீனிவாசராவுக்கு என் கணவர்!" - ஶ்ரீலேகாவின் டப்பிங் சுவாரஸ்யம்
"சொர்ணாக்காவுக்கு நான்... கோட்டா சீனிவாசராவுக்கு என் கணவர்!" - ஶ்ரீலேகாவின் டப்பிங் சுவாரஸ்யம்

"ஆக்டிங், டப்பிங்... ரெண்டும்தாம் எனக்கான அடையாளம். அந்த அடையாளம் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து கிடைக்கணும்" - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஶ்ரீலேகா ராஜேந்திரன். சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாகவும் பின்னணிக் குரல் கலைஞராகவும் பயணித்துக்கொண்டிருப்பவர். 

"உங்க ஆக்டிங் பயணம் எப்போது தொடங்கியது?" 

"நடிகையாக அறிமுகமான 'தாலியா சலங்கையா' படத்தில் ஹீரோ முத்துராமன் சாரின் தங்கச்சியா நடிச்சேன். 'மேடை நாடகங்களில் நடிச்சா இன்னும் முன்னேற்றம் கிடைக்கும்'னு படத்தின் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா சார் சொன்னார். தொடர்ந்து காத்தாடி ராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஶ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன் உள்பட பல சீனியர் ஆர்டிஸ்டுகளின் நாடகங்களில் நடிச்சேன். தவிர, சப்போர்டிங் மற்றும் காமெடி கேரக்டர்களில் பல படங்களிலும் நடிச்சேன்." 

"முதல் டப்பிங் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?" 

"விஜயகாந்த் சார் அறிமுகமான 'அகல் விளக்கு' படத்தில் நானும் நடிச்சேன். அந்தப் படத்துக்காக டப்பிங் கொடுக்கப்போனப்போ, 'உங்க வாய்ஸ் நல்லாயிருக்கே. இங்கே நிறைய மொழி மாற்றுப் படங்களுக்கான டப்பிங் வேலைகள் நடக்கும். ஆர்வமிருந்தால் சொல்லுங்க'னு டப்பிங் தியேட்டர் இன்ஜினீயர் சொன்னார். நானும் சம்மதிக்க, நூற்றுக்கணக்கான மொழி மாற்றுப் படங்களுக்கும், பின்னர் நிறைய நேரடி தமிழ்ப் படங்களுக்கும் டப்பிங் பேசினேன். அப்படி 80, 90-ம் ஆண்டுகளில் திரையில் கலக்கின ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன்.'' 

"டப்பிங் வொர்க்கில் மறக்க முடியாத அனுபவம்..." 

" 'தூள்' படத்தின் சொர்ணாக்கா கேரக்டரில் நடிச்ச சகுந்தலா மேடத்துக்கு டப்பிங் கொடுத்தேன். அவங்களுக்கு முழுசா டப்பிங் பேசி முடிச்சுட்டேன். ஆனா, 'என் கேரக்டருக்கு நானே டப்பிங் பேச ஆசைப்படுறேன்'னு அவங்க திடீர்னு சொல்லியிருக்காங்க. இதை டைரக்டர் என்னிடம் சொன்னார். 'யதார்த்தமான ஆசைதானே சார். அவங்க பேசட்டும். என் போர்ஷனை கட் பண்ணிட்டாலும் பரவாயில்லை'னு சொன்னேன். ஆனாலும், அவங்க ஆசைக்காக சில இடங்களில் மட்டும் பேசினாங்க. அந்தப் படம் ரிலீஸானதும், எனக்கு எக்கச்சக்க பாராட்டுகள் கிடைச்சுது. கடைசியாக, 'குட்டிப் புலி' படத்தில் நடிகை பிரபாவுக்கு டப்பிங் பேசினது நிறைவான அனுபவம் கொடுத்துச்சு. இப்போ சீரியலில் நடிச்சுட்டு இருக்கிறதால், டப்பிங் வொர்க்ல பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கு. அந்த இடைவெளி ஏற்படக் கூடாது என்பது என் ஆசை.'' 

"1990-ம் ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் நடிக்கிறதை குறைச்சுட்டீங்களா?" 

"எடிட்டர் மோகனின் தமிழ் மொழி மாற்றுப் படங்களுக்கு, ஆரூர் தாஸ் சார்தான் கதையாசிரியர். 'நல்லா டப்பிங் பேசறீங்க. நீங்களே டைரக்டராவும் வொர்க் பண்ணலாமே'னு மோகன் சார் ஒருநாள் சொன்னார். அதன்படி 25 படங்களுக்கு உதவி கதையாசிரியரா வொர்க் பண்ணினேன். கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலருடன் ஜோடியாகவும் நடிச்சுட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் எனக்குக் கல்யாணமாச்சு. கல்யாணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு குறையறது வழக்கம்தானே. அப்படி எனக்கு வாய்ப்புகள் குறைஞ்ச பிறகுதான், கோவை சரளா காமெடி ரோல்ல ஃபேமஸானாங்க. நல்ல கதைகளில் இப்போதும் நடிச்சுட்டுதான் இருக்கேன்." 

"உங்க கணவர் ராஜேந்திரனும் ஃபேமஸ் டப்பிங் ஆர்டிஸ்ட். அவர் பற்றி...'' 

"அவரும் சினிமா மற்றும் டிராமா நடிகர்தான். நாடகங்களில் சேர்ந்து நடிக்கும்போது பழக்கமாகி, இரு குடும்பத்தார் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். மூவிஸ், சீரியல்களில் டப்பிங் கொடுத்ததோடு, கதையாசிரியராவும் அவர் வொர்க் பண்ணியிருக்கார். கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே இருவருக்கும் இவர்தான் ரெகுலராக டப்பிங் கொடுக்கிறார். கோட்டா சீனிவாசராவ் சார் எப்போ சென்னைக்கு வந்தாலும், என் கணவரை அழைச்சுப் பேசுவார். 'திருப்பாச்சி' படத்தில் கோட்டா சார் வில்லனா நடிச்சார். 'அவருக்கு நீங்க டப்பிங் கொடுத்தது சிறப்பா இருக்கு'னு கணவரை நேரில் அழைச்சு விஜய் சார் பாராட்டினார். கோட்டா சாரின் ரியல் வாய்ஸை நிறையப் பேர் கேட்டிருக்க மாட்டாங்க. அவர் வாய்ஸை மிமிக்ரி பண்றதா சொல்லிக்கிட்டு பலரும் என் கணவர் வாய்ஸைதான் பேசிட்டிருக்காங்க.'' 

"இடைவிடாத சீரியல் ஆக்டிங் பயணம் எப்படி இருக்கு?" 

"மேடை நாடகங்களில் நடிக்கிறது குறைந்ததும், தூர்தர்ஷன் நாடகங்களில் நடிச்சேன். 1990-ம் வருஷம் ராதிகா மேடமின் 'ராடான்' நிறுவனத்தின் முதல் சீரியலான 'சித்தி'யில் ஆரம்பிச்சு 'வாணி ராணி' சீரியல் வரை நடிச்சுட்டிருக்கேன். சுஹாசினி மேடமின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' சீரியல்கள் உள்பட நிறைய ஹிட் சீரியல்களில் நடிச்சிருக்கேன். தொடர்ந்து மக்களை மகிழ்விக்கிற பயணம் சந்தோஷத்தைக் கொடுக்குது. பாலா சார் டைரக்‌ஷனில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடிச்சதும் மறக்க முடியாத அனுபவம்." 

''ரியல் கப்பிள், ரீல் கப்பிளாக நடிக்கும் அனுபவம்.." 

"தூர்தர்ஷன் சேனலில் பல சீரியல்களில் நாங்க சேர்ந்து நடிச்சிருக்கிறோம். இப்போ 'வாணி ராணி' சீரியலிலும் தம்பதியரா நடிக்கிறோம். ரெண்டு பேருமே தங்கள் கேரக்டர் பெஸ்டா இருக்கணும்னு விட்டுக்கொடுக்காம நடிப்போம். நாங்க எப்பவும் ஒருத்தரையொருத்தர், 'வாங்கப் போங்க'னு மரியாதையோடுதான் பேசிப்போம்." 

"டப்பிங், ஆக்டிங்... எது ரொம்பவே பிடிச்சது?" 

"ரெண்டுமே மனநிறைவைக் கொடுக்குது. சினிமாவில் வொர்க் பண்ணிட்டிருக்கும்போதே உயிர் போகணும். அதுதான் என் ஆசை." 

அடுத்த கட்டுரைக்கு