Published:Updated:

இளையராஜா முதல் ஹிப்ஹாப் ஆதி வரை 2017-ல் யார் யார் என்னென்ன படங்கள்! #2017Rewind

இளையராஜா முதல் ஹிப்ஹாப் ஆதி வரை 2017-ல் யார் யார் என்னென்ன படங்கள்! #2017Rewind
இளையராஜா முதல் ஹிப்ஹாப் ஆதி வரை 2017-ல் யார் யார் என்னென்ன படங்கள்! #2017Rewind

2017... பல புதுமுகங்களை அரவணைத்து கொண்டாடியது. இது சினிமாத்துறைக்கும் பொருந்தும். இந்த வருடம் குறிப்பாக கோலிவுட் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி அடுத்தடுத்து படங்களை வெளியிட்டுக்கொண்டே இருந்தது. பெரிய பட்ஜெட் படங்கள், சின்ன பட்ஜெட் படங்கள், பல திரைப்பட விழாக்களுக்கு சென்று விருதுகளை குவித்த படங்கள் என பல்வேறு விதமான கேட்டகரியில் எக்கச்சக்கமான படங்கள் திரைக்கு வந்து நமக்கு விருந்தளித்தது. அந்த வகையில், ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் இந்த வருடம்  எப்படிபட்ட வருடமாக அமைந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
 

இமான் :

இந்த வருடத்தின் மியூசிக் கிங் இவர் தான். 'போகன்', 'சரவணன் இருக்க பயமேன்', 'அதாகப்பட்டது மகாஜனங்களே', 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்', 'ரூபாய்', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'கருப்பன்', 'இப்படை வெல்லும்', 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஆகிய ஒன்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'செந்தூரா...', 'எம்புட்டு இருக்குது ஆசை...', 'அம்முக்குட்டியே...' ஆகிய பாடல்கள் இன்னும் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 
 

ஜிப்ரான் : 

இந்த வருடத்தில் ஒரு கலக்கு கலக்கிட வேண்டியது தான் என்ற குறிக்கோளோடு வருடத்தை ஆரம்பித்த ஜிப்ரான், இந்த வருடம் மட்டும் 'அதே கண்கள்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அறம்', 'மகளிர் மட்டும்', 'சென்னை 2 சிங்கப்பூர்', 'மாயவன்' ஆகிய ஆறு படங்களுக்கு ட்யூன் போட்டு அசத்திருக்கிறார். 'அறம்' படத்தில் இவரது பின்னணி இசை பார்ப்பவரை கதைக்குள் ஈர்க்கிறது. 

யுவன் சங்கர் ராஜா :

யுவன் இசையமைத்த படங்கள் வந்தாலே அவரது ரசிகர்கள் குஷி ஆகிடுவார்கள். பேக் க்ரவுண்ட் ஸ்கோர் தான் இவரது பெரிய ப்ளஸ். 'யாக்கை', 'கடம்பன்', 'சத்ரியன்', 'அன்பானவன் அடங்காதவன் அசராதாவன்', 'தரமணி', 'பலூன்' ஆகிய ஆறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். யுவன் - நா. முத்துக்குமார் கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றைய ஜென் z தலைமுறையினரின் ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும். அந்த வகையில் 'தரமணி' பாடல்கள் சூப்பர். 

விஷால் சந்திரசேகர் :

2013ல் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய இவர், இந்த வருடம்  'குற்றம் 23', 'சங்கிலி புங்கிலி கதவ தொற', 'பிருந்தாவனம்', '7 நாட்கள்', 'ரங்கூன்' ஆகிய ஐந்து படங்களுக்கு இசையமைத்து கெத்து காட்டியிருக்கிறார். 'குற்றம் 23' படத்தில் பின்னணி இசையில் அப்ளாஸ் வாங்கி அசத்தியிருக்கிறார். நிறைய படங்களில் கமிட்டாகி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் விஷால் சந்திரசேகர்.

இளையராஜா :
 

இசைஞானி இளையராஜாவின் இசையை பிடிக்காதவர்கள், ரசிக்காதவர்கள் யாரேனும் இருக்கமுடியுமா? இந்த வருடம் இசைஞானி, 'முத்துராமலிங்கம்', 'ஒரு இயக்குநரின் காதல் டைரி', 'எங்க அம்மா ராணி', 'களத்தூர் கிராமம்' அகிய நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். எல்லாமே சிறிய பட்ஜெட் படங்கள் என்றாலும் அதற்கு தேவையான இசையை தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்து படத்தின் மீதுள்ள ஈர்ப்பை ஒரு படி அதிகரித்திருக்கிறார்.  இவரது இசையில் 'மேற்கு தொடர்ச்சி மலை', 'நாச்சியார்', 'சபாஷ் நாயுடு' உள்ளிட்ட படங்கள் தயார் நிலையில் இருக்கிறது. 

ஷான் ரோல்டன் :

2014ல் தன் இசைப் பயணத்தை தொடங்கிய ஷான் ரோல்டன் இந்த வருடம்  'வேலையில்லா பட்டதாரி 2', 'ப.பாண்டி', 'கதாநாயகன்', 'நெருப்புடா' ஆகிய நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'விஐபி 2' படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்கு பின்னால் வரும் இசை இவரது பெயர் சொல்லும். 'ப.பாண்டி' படத்தில் வரும் காதல் பாடல்களுக்கு மெல்லிய இசையின் மூலம் நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். 

தமன் :

தொடர்ந்து தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வந்த தமன், 'சிவலிங்கா' படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். 'ரங்குரக்கர...' பாடலும் பேய் படத்துக்கான பின்னணி இசையும் நம்மை ரசிக்க வைத்தது. மேலும், 'இவன் தந்திரன்', 'யார் இவன்', 'வைகை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

ஹாரிஸ் ஜெயராஜ் :

இந்த வருடம் இவர் 'சி 3', 'ஸ்பைடர்', 'வனமகன்' ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'ஸ்பைடர்' படத்தில் வரும் 'பூம் பூம்', 'சிசிலியா', 'ஆலி ஆலி' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 'வனமகன்' படத்தில் இடம்பெற்ற 'அழகம்மா...' பாடல் ரேடியோ முதல் யூட்யூப் வரை ஒலித்துக்கொண்டே இருந்தது. 'சி 3' படத்தில் பேக் க்ரவுன்ட் ஸ்கோரில் ஸ்கோர் செய்திருப்பார் ஹாரிஸ். ஹாரிஸின் 50வது திரைப்படம்  வனமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் : 

தற்பொது நடிப்பில் பிஸியாகிவிட்ட ஜி.வி. பிரகாஷ், இசையமைப்பாளராக தன் பணியை குறைத்து வருகிறார். இந்த வருடம், 'முப்பரிமாணம்', 'லென்ஸ்', 'புரூஸ் லீ' ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'செம', 'அடங்காதே', குப்பத்து ராஜா', '4G' ,’ஐங்கரன்’ உள்ளிட்ட இவரது படங்கள் அடுத்தடுத்து வரிசைக்கட்டி இருப்பதால் அத்தனை படங்களுக்கும் இவர் இசையமைத்து அடுத்த வருடம் மெர்சல் காட்ட இருக்கிறார். 

அனிருத் :

அனிருத் என்றாலே அதிரடியான பாடல்களும், காதல் ததும்பும் இசையும் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், 'விவேகம்' படத்தில் 'சர்வைவா...' பாடலிலும் பின்னணி இசையிலும் அதிரடி காட்டிய அனிருத், 'வேலைக்காரன்' படத்தில் 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடலில் அதிர வைக்கிறார். மேலும், 'எழு வேலைக்காரா', 'இறைவா' என்ற பாடல்களும் இணையத்தில் வைரல். ஆக, இந்த வருடம் 'விவேகம்', 'ரம்', 'வேலைக்காரன்' என மூன்று படங்களில் தன் பங்கை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். 

ஏ.ஆர்.ரஹ்மான் : 

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை 90's கிட்ஸிற்கு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இவரது இசையில் உருவான படங்கள் வெளிவர எவ்வளவு தாமதமானாலும், இவர் இசையமைத்த பாடல்கள் என்றும் மோஸ்ட் ஃபேவரைட் ப்ளே லிஸ்ட்டில் இருக்கும். இந்த வருடம் 'காற்று வெளியிடை', 'மெர்சல்'என இரண்டு படங்களுக்கு இசையமைத்து அதில் மிரட்டி இருக்கிறார் இந்த மெர்சல் அரசன்.

சந்தோஷ் நாராயணன் :

2016ல் தன் இசையால் கோலிவுட்டை தன் வசப்படுத்தியிருந்த சந்தோஷ் நாராயணன், இந்த வருடம் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். 'வர்லாம் வரலாம் வா...' என்று 'பைரவா' படத்தில் மாஸ் காட்டியவர், பிரதீப் குமாருடன் இணைந்து 'மேயாத மான்' படத்தில் நொறுக்கியிருக்கிறார். அதிலும், 'என் வீட்டு குத்துவிளக்கே', 'எஸ்.மது' பாடலும் அல்டிமேட் ரகம். 

விஜய் ஆண்டனி :

இவரும் இசையமைப்பதை குறைத்துக்கொண்டு தன்னை முழு நேர கதாநாயகனாகவே மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான 'எமன்', 'அண்ணாதுரை' ஆகிய இரு படங்களுக்கும் இவரே இசையமைத்திருந்தார். இவருடைய ரசிகர்கள் இவரது பழைய இசைக்காக வெயிட்டிங்கில் உள்ளனர் என்பதை விஜய் ஆண்டனி புரிந்துக்கொள்ள வேண்டும். அடுத்த வருடம் இசையுடன் சேர்த்து நடிப்பிலும் விஜய் ஆண்டனி மிரட்டுவார் என நம்புவோம். 

ஹிப் ஹாப் ஆதி : 

'ஹிப்ஹாப் தமிழா' ஆதி பலருக்கும் பிடித்தமான இசையமைப்பாளர் மற்றும் பாடகரும் கூட. இந்த வருடம் 'கவண்' படத்தில் 'ஆக்ஸிஜன்' பாடலில் மெல்லிசை கொடுத்த ஆதி, 'ஹாப்பி ஹாப்பி நியூ இயர்' பாடலில் டி.ஆர் உடன் சேர்ந்து பட்டையக் கிளப்பினார். அடுத்ததாக, தானே இயக்கி, நடித்த 'மீசைய முறுக்கு' படத்தில் அனைத்து பாடல்களின் மூலம் பல இளைஞர்களை குஷிப்படுத்தினார்.

தவிர, சாம் சிஎஸ் 'விக்ரம் வேதா', 'புரியாத புதிர்' ஆகிய படங்களின் மூலம் வெகுஜனங்களால் பாராட்டப்பட்டவர். 'அருவி' படத்தின் இசையமைப்பாளர்கள் பிந்து மாலினி - வேதாந்த் பரத்வாஜ் ஆகியோர் பின்னணி இசையிலும் பாடல்களிலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். இசைப் பிரியர்களுக்கு இந்த வருடம் வெரைட்டியான அனுபவங்களை நிச்சயம் கொடுத்திருக்கிறார்கள் நம் இசையமைப்பாளர்கள்.