Published:Updated:

நீங்கள் வேலைக்காரனா... நுகர்வோரா... இரண்டுமா..? - 'வேலைக்காரன்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
நீங்கள் வேலைக்காரனா... நுகர்வோரா... இரண்டுமா..? - 'வேலைக்காரன்' விமர்சனம்
நீங்கள் வேலைக்காரனா... நுகர்வோரா... இரண்டுமா..? - 'வேலைக்காரன்' விமர்சனம்

முதலாளிகள் செய்யும் விதிமீறல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை, லாபவெறி வேட்டைகளை ஆபீஸர் எதிர்த்து கேட்கமாட்டான், அத்தாரிட்டியும் கேட்காது. ஆனால், ஒர்க்கர் கேட்பான். இந்த `வேலைக்காரனு'ம் கேட்கிறான்.

சென்னையிலுள்ள `கொலைகார' குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். ஆங்கிலேயர் காலத்தில் கூலிக்கார குப்பமாக இருந்து, நாளடைவில் கொலைகார குப்பமாக திரிந்துவிட்ட அந்தக் குப்பத்தில் `கம்யூனிட்டி ரேடியோ' நடத்தி வருகிறார். அந்தக் குப்பத்து மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வன்முறைக்குள் அவர்களை தள்ளிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். அவரின் அசல் முகத்தை தோலுரித்துக் காட்ட, தனது  `குப்பம் எஃப் எம்' மூலம் முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். அதேநேரம், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணியில் சேருபவர், அங்கே மார்க்கெட்டிங் கில்லாடி ஃபஹத் ஃபாசிலை சந்திக்கிறார். எப்படியாவது பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையை அடைந்து தன் குப்பத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வேண்டுமென கடுமையாக உழைக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருகட்டத்தில், எப்படி தன் குப்பத்து மக்களை பிரகாஷ்ராஜ் சுயநலத்திற்காக மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றுகிறாரோ, அதேபோல்தான் கார்ப்பரேட் நிறுவனங்களும் சுயநலத்திற்காக தொழிலாளர்களையும் நுகர்வோர்களையும் மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றிவருகின்றன என்பது புரியவருகிறது சிவாவுக்கு. கார்ப்பரேட் எனும் சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட அவர், எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார், தப்பித்தபின் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.

அறிவு எனும் அறிவாளி இளைஞனாக சிவகார்த்திகேயன். வழக்கமான ரைமிங், டைமிங் காமெடிகள், குறும்பு உடல்மொழிகள் இல்லாத சிவகார்த்திகேயன். படத்தில் அவருக்கு பக்கம் பக்கமாக வசனங்கள், சென்னை வழக்கில் அச்சு பிசகாமல் பேசி பிச்சு உதறியிருக்கிறார். ஆனால், பேசிக் கொண்டே மட்டும் இருக்கிறார். அதனாலேயே இது அவருக்கு கிட்டத்தட்ட அக்னிபரீட்சை. காமெடி, நடனம் என வழக்கமான பாதையிலிருது டைவர்ஷன் எடுத்து, முழுக்க சீரியஸ் ஆகியிருக்கிறார். பொருத்தம்தான் என்றாலும் சிவா ஸ்பெஷல் விஷயங்கள் மிஸ் ஆகவும் செய்கிறது. ஒரு மாஸ் படம் என்றான பின்னும் ஃபஹதின் நிழலிலே முக்கால்வாசி படம் நகர வேண்டியிருப்பதால் ஹீரோயிசமும் சறுக்குகிறது. ஆனால், தன்னால் எல்லா உணர்ச்சிகளையும் கையாள முடியும் என அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் 'செம சிவா'.

நாயகி மிருனாளினியாக நயன்தாரா, சிவாவே எல்லா வசனங்களையும் பேசிவிடுவதால் அவர் எதிரில் நின்று அமைதியாக/வருத்தமாக/கோபமாக/காதலாக/அதிர்ச்சியாக/ஆவேசமாக/இன்னபிறவுமாக கேட்டுக் கொண்டே இருக்கிறார். ’தனி ஒருத்தி’யை இப்படி க்ளிஷே கதாநாயகி ஆக்கியிருக்க வேண்டாம் ராஜா. ஃபஹத் ஃபாசில், அடக்கி வாசித்தே மிரட்டியிருக்கிறார். அந்த ஒரு ஆச்சர்ய ட்விஸ்ட்டுக்குப் பிறகு ஸ்கோர் பண்ண பெரிய விஷயமில்லாமல் பார்வை/ரியாக்‌ஷன்களிலேயே பின்னியெடுக்கிறார். நல்வரவு பாஸ்! பிரகாஷ்ராஜ், சினேகா, சார்லி, ரோகினி, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி, காளி வெங்கட், ராமதாஸ், மன்சூர் அலிகான், தம்பி ராமைய்யா, வினோதினி எனப் படத்தில் அத்தனை நட்சத்திரங்கள். ஆனால், ’பாக்யா’ விஜய் வசந்த் மட்டும் கவனிக்க வைக்கிறார். 

கம்யூனிஸம், கன்ஸ்யூமரிஸம் எல்லாத்தையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் மோகன்ராஜா. தேவைக்கு அதிகமாக நுகரும் பொருள்மய வாழ்க்கை, தொழிலாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு, கொள்ளை லாபத்திற்காக கலக்கப்படும் விஷம் எனப் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். ‘நாம பார்க்குற வேலைக்குதான் விஸ்வாசமா இருக்கணும், முதலாளிக்கு இல்ல’, `நாம பொருளை விக்கலை, பொய்யை விக்குறோம்', `தீவுன்னு நினைச்சு திமிங்கலம் முதுகுல நின்னுட்டுருக்கோம்' என இடையிடையே ஷார்ப் வசனங்கள் கலவர நிலவரத்தை பொளேரென சொல்கிறது. ’8 மணி நேரம்தான் வேலைக்காரன்.... மீதி நேரமெல்லாம் நுகர்வோர்’, ‘மாசக் கடைசில அத்தியாவசிய பொருளைக் கூட வாங்க மாட்டான்... ஆனா, மாச ஆரம்பத்துல தேவையில்லாத பொருளைக் கூட வாங்கிடுவாங்க மிடில் கிளாஸ்’, ‘அத்தியாவசிய பொருளை எவனும் விக்க மாட்டான்.... ஆனா, ஆடம்பர பொருளைத் தேடித் தேடி வந்து விப்பாங்க!’ எனப் பல வசனங்கள் சுளீர். அதேபோல, கூலிப்படை/ கார்ப்பரேட் படை சம்பவங்களையும் ஒப்பிட்டது.... வாரே வாவ்!   

படத்தின் மூலம் நல்ல மெசேஜ்களை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஹீரோ வில்லன் இருவருக்குமான மோதலை மார்கெட்டிங் தந்திரம் கொண்டே வடிவமைத்திருந்த ஐடியா நச். ஆனால், அதற்காக அதில் அத்தனை லாஜிக் ஓட்டையா!? ஒற்றை ஆளாய் இருந்துகொண்டு மொத்த கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தையுமே ஆட்டிப்படைப்பதெல்லாம்... நடுராத்திரி லைட் அடிச்சாக் கூட சாத்தியமா என்று தெரியவில்லை. ஜங்க் ஃபுட் என்பது எப்படிச் சாப்பிட்டாலும் கெடுதிதானே. ஆனால், 6 மூட்டைக்குப் பதில் 3 மூட்டை மூலப் பொருள் போட்டால் அவையெல்லாம் நல்லதாகிவிடுமா?! அருகிலேயே விளையும் உணவுப் பொருள்களை பதப்படுத்தாமல் சாப்பிட வேண்டும் என்பதுதானே தீர்வாக இருக்கும். படத்தின் அபார வியூகங்கள் காட்சிகளாக நகர்வதைவிட வசனங்களாக நகர்வது பெரும் மைனஸ். பெரியார், அம்பேத்கர், கம்யூனிஸம் பற்றியெல்லாம் போகிறபோக்கில் ‘தொட்டுக்கோ’வாக பேசியிருக்கிறார்கள். 

ரிச் விஷுவல்களை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அனிருத் இசையில் பாடல்கள் ஆல்பமாக ஹிட் அடித்தாலும், படத்தில் சம்பந்தமில்லாத இடங்களில் வருவதால் அலுப்பு தட்டுகிறது. ஃபகத் ஃபாசிலின் தீம், அனிருத் டச்.  படத்திலேயே செமத்தியான வேலைக்காரன் கலை இயக்குநர் முத்துராஜ்தான். அவரும் ராம்ஜியும் கொலைகார குப்பம் ஒரு செட் என்பதையே மறக்க வைக்குமளவிற்கு புகுந்து விளையாடியிருக்கிறார்கள். 3 மணி நேரம் தாண்ட வேண்டிய அளவு கதை. சரியாக எடிட் செய்ததில் தெரிகிறது எடிட்டர் ரூபன் மற்றும் விவேக் ஹர்ஷனின் அனுபவம். இத்தனை இருந்தாலும், இரண்டாம் பாதியில் பொதுக்கூட்டத்துக்குப் போன எஃபெக்ட். பேசிக்கொண்டேடேடேடேடே இருக்கிறார்கள்.

நம் ஒவ்வொருவர் பையிலுமிருந்து 100 ரூபாய் எடுக்கிறார்கள் என்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்கள், அதற்கான தீர்வு என்று பின்பாதியில் செயல்படுத்தும் சம்பவங்களில் அத்தனை அழுத்தத்தைக் காட்டவில்லை. பக்கம் பக்கமான வசனங்களை குறைத்து காட்சிகளால் கதையை நகர்த்தியிருந்தால் எடுத்துக் கொண்டே வேலையை கச்சிதமாக முடித்திருப்பான். ஆனாலும், ‘குப்பம் எஃப்.எம்’ தொடங்குமுன் வேலைக்காரன் அடிக்கும் மணி, நுகர்வோர்/உழைப்பாளிகள் அனைவருக்குமான மணிதான்!

பின் செல்ல