Published:Updated:

இவன் வேற மாதிரி!

பாலிவுட்கார்க்கிபவா

இவன் வேற மாதிரி!

பாலிவுட்கார்க்கிபவா

Published:Updated:

'என் பழைய வீட்டில் வாழ்ந்தபோது, அம்மாவோ அல்லது வேறு யாராவது வீட்டில் இருந்தால், என் மனைவியை என்னால் முத்தமிடக்கூட முடியாது. அவ்வளவு சின்ன வீடு'  பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், மும்பைக் கடற்கரையோரம், சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கியதும் சொன்னது இது. இந்தி டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த இர்ஃபான், இப்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார். இர்ஃபான் கானின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் ஒருவர் மட்டுமே... அது இர்ஃபான் கான்தான்!

இவன் வேற மாதிரி!

ராஜஸ்தான் மாநிலம் ஷெய்ப்பூரில் மத்தியதர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் இர்ஃபான். அப்பா யாசின் கான், டயர் வியாபாரம் செய்துவந்தார். அம்மா இல்லத்தரசி. ஷெய்ப்பூரில் எம்.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, இர்ஃபானின் ஆர்வம் எல்லாம் கிரிக்கெட் மீதுதான். அதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு. என்ன செய்யலாம் என யோசித்தவர் சொன்ன பொய்தான் அவர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

தனக்கு மேடை நாடக அனுபவம் இருப்பதாகப் பொய் சொல்லி, டில்லியில் இருக்கும், 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் விண்ணப்பித்தார். அவருக்கு உதவித் தொகையுடன் சீட் கிடைக்க, ஜெய்ப்பூரில் இருந்து டில்லிக்கு ஓடினார். அப்போது அவருக்கு நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. அங்கு இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, புகழ்பெற்ற இயக்குநர் மீரா நாயரின், 'சலாம் பாம்பே’யில் ஒரு சின்ன ரோலில் நடிக்கத் தேர்வானார். படம் வெளியானபோது, அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் எடிட்டிங்கில் வெட்டப்பட்டிருந்தன. 'அது நல்லதுதான்... சொதப்பலாக நடித்திருந்தேன்' என பின்னாளில் சொன்னார் இர்ஃபான். ஆனால், அந்த அனுபவம் அவருக்கு நடிப்பு மீதான ஆர்வத்தை அதிகரித்தது.

இவன் வேற மாதிரி!

1994-ல் இருந்து தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார் இர்ஃபான். அவர் ஷூட்டிங் செல்லாத நாட்களும், அவர் முகம் தொலைக்காட்சியில் வராத நாட்களுமே இல்லை எனும் அளவுக்கு பிஸியான நடிகரானார். ஆனால், ஒருநாள்கூட இர்ஃபானுக்கு நிம்மதியாக இல்லை. நடிப்பைத் தலை முழுகிவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடலாம் என்றுகூட யோசித்தார். அப்போதுதான் டிவி ஸ்டார் முகேஷ் கன்னாவைச் சந்தித்தார். 'நீ செய்ற வேலையைச் சரியா செஞ்சு கிட்டே இருந்தா... டிவிய விட பெருசா ஆகலாம். அப்போ சினிமா உன்னைத் தேடி வரும்!' என்ற முகேஷின் வார்த்தைகள், இர்ஃபானுக்கு நம்பிக்கை தந்தன. 2001-ல் அது நிஜமானது.

ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் பற்றிய கதையை ஆஸிஃப் கபாடியா, 'வாரியர்’ என்ற பெயரில் படமாக்கினார். அதன் ஹீரோவாக நடித்தார் இர்ஃபான் கான். சர்வதேச திரைப்பட விழாக்களில் 'வாரியர்’, பாராட்டைப் பெற்றது. அதன் பின் பாலிவுட் வாய்ப்புகள் இர்ஃபான் கானுக்கு 4ஜி வேகத்தில் தேடி வந்தன. 2003-ம் ஆண்டு 'மக்பூல்’ என்ற படம் இர்ஃபான் கானை இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது. அதன் பின் 'மெட்ரோ’, 'நேம்சேக்’, 'டிஃபன் பாக்ஸ்’ போன்ற ஹிட் ஹாட் இந்திப் படங்களிலும், 'லைஃப் ஆஃப் பை’, 'ஸ்பைடர்மேன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகள் அவரைத் தேடி வந்தன. 2011-ல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான, 'பதம்ஸ்ரீ’ விருதும் அவருக்குத் தரப்பட்டது.

இவன் வேற மாதிரி!

'இளைஞர்கள் பாலிவுட்டை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் நல்ல கதைகளைச் சொல்ல அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்கிறார் இர்ஃபான். இந்த ஆண்டு தீபிகா படுகோனும், இர்ஃபான் கானும் சேர்ந்து நடித்த, 'பிக்கு’ உலக அளவில் அபாரமான வெற்றியைப் பெற்றது. சென்ற மாதம் வெளியான 'தல்வார்’ இர்ஃபான் கானின் நடிப்புக்காகப் பாராட்டப்பட்டது. 'ரசிகர்கள் மாறி இருக்கிறார்கள். அவர்களால்தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது' என்கிறார் இர்ஃபான் கான். ''ரசிகர்களைத் திருப்திப்படுத்தாத எந்தப் படமும் நல்ல படம் அல்ல!'' என்பதுதான் இவரின் அளவுகோல்.

'ஜுராசிக் பார்க்’ முதல் பாகம் வெளியானபோது டிக்கெட் எடுக்கப் பணம் இல்லாமல் தவித்தாராம் இர்ஃபான். இந்த ஆண்டு வெளியான ஐந்தாம் பாகமான 'ஜுராஸிக் வேர்ல்டு’ படத்தில் அவர் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவே செய்திருக்கிறார். நம்ப முடியாத 'வெற்றிக் கதை’களும் இருக்கத்தான் இருக்கின்றன!

• இர்ஃபான் கானின் நிஜப்பெயர், 'சாஹாப்ஜேட் இர்ஃபான் அலி கான்.’

• இர்ஃபான் கானின் உயரம் ஆறடிக்கும் மேல். பாலிவுட்டின் உயரமான நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவன் வேற மாதிரி!

அமிதாப்பும் இர்ஃபானும் ஒரே உயரம். 'நடிப்பிலும் இருவரும் சமமானவர்கள்’ என்கிறார்கள் ரசிகர்கள்

• இவர் நடித்த 'லன்ச் பாக்ஸ்’ படம் மட்டும்தான் டொரான்ட்டோ திரைப்பட விமர்சனக் குழுவின் விருதினை வென்ற ஒரே இந்திய திரைப்படம்.

• எந்த வயது கேரக்டர் என்றாலும், எந்த மாதிரியான பின்னணி என்றாலும் நடிக்கக்கூடிய நடிகர்கள், இந்திய அளவில் மிகச் சிலரே. அதில், இர்ஃபான் கான் முக்கியமானவர்.

• புகழ்பெற்ற ஹாலிவுட் படமான, 'இன்டர்ஸ்டெல்லார்’ல் நடிக்க இர்ஃபான் கானை அழைத்தார்கள். ஆனால், தொடர்ந்து நான்கு மாதம் தன்னால் அமெரிக்காவில் தங்க முடியாது எனச் சொல்லி, அந்த வாய்ப்பை நிராகரித்தார்.

• 2016-ம் ஆண்டு வெளியாகவிருக்கும் 'ஸ்பைடர் மேன்’ படத்தில் மெயின் வில்லனாக மிரட்ட வருகிறார் இர்ஃபான் கான். முந்தைய பாகத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.

• 'ஸ்லம் டாக் மில்லியனர்’ படம் இர்ஃபான் கானை சர்வதேச லெவலில் ஸ்டார் ஆக்கியது. ஒருமுறை காரில் சென்றுகொண்டிருந்த ஜூலியா ராபர்ட்ஸ், இர்ஃபான் கானைப் பார்த்ததும் இறங்கிவந்து, ஸ்லம் டாக் மில்லியனருக்காகப் பாராட்டிவிட்டு சென்றார்.

• இர்ஃபானுக்கு நிறைய படிக்கும் பழக்கும் உண்டு. வாரம் ஒரு ஹாலிவுட் ஸ்க்ரிப்டையாவது படித்து, நடித்துப் பார்ப்பாராம்.

• இர்ஃபான் கான் என்ற பெயர் அவருக்குச் சிலமுறை சங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் நகர விமான நிலையத்தில் இரண்டு முறை இவரை தீவிரவாதி என நினைத்து பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தி நிறுத்திவைத்தார்கள்.

• 48 வயதாகும் இர்ஃபான் கானுக்கு, 1995-ம் ஆண்டு திருமணம் ஆனது. மனைவியின் பெயர் சுடாபா சிக்தர் கான்.