Published:Updated:

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

அனுராக் காஷ்யப்பேட்டிஆர்.சரண்

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

அனுராக் காஷ்யப்பேட்டிஆர்.சரண்

Published:Updated:

னுராக் காஷ்யப்...

பாலிவுட்டின் புதிய அலை சினிமாவின் பிதாமகர்!

43 வயது. 13 படங்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். மொழிகள் கடந்தும் இந்திய சினிமாவின் மீது தீராக் காதலோடு, ஒரு நாடோடியாக அலைந்து சினிமா நேயம் வளர்ப்பவர். கண்டங்கள் தாண்டி, இந்திய சினிமாவை திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்க்கவைத்தவர். ஒரு சின்ன சேஸிங்குக்குப் பிறகு, லைனில் வந்தார்...

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

''சென்னை எனக்கு எப்போதுமே ஆச்சர்யமான நகரம். சுரங்கப்பாதைகளில் பான்பராக் கறைகளைப் பார்க்கும்போது, 'இது மும்பையோ!’ என நினைக்கும் நான், மெரினாவில் தமிழ் ரேகைகள் முகத்தில் படர்ந்த கூச்சத்தோடு காதல் செய்யும் காதலர்களைப் பார்த்து சென்னைதான் என உறுதி செய்துகொள்வேன். மணிரத்னத்தின் 'யுவா’, 'குரு’ என நான் வேலை பார்த்தபோது, தி.நகரில் ஷாப்பிங் செய்வேன்; பர்மா பஜாரில் உலக சினிமா டி.வி.டி.கள் வாங்குவேன்; நிறைய நடப்பேன்; சத்யம் தியேட்டரில் படங்கள் பார்ப்பேன். மும்பைபோல ஜனநெருக்கடி இல்லாத சென்னை நகரம் எனக்கு ஆச்சர்ய நகரம்!''    

''தமிழ் சினிமா பார்க்கிறீர்களா?'

''நிச்சயமாக... முடிந்த அளவுக்குப் பார்த்துவிடுவேன். வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் மூவரும் இப்போதும் என்னுடன் பேசுகிறார்கள். பாலாவின் அடுத்த படத்தைப் பார்க்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன். 'விசாரணை’ படம் தமிழ் சினிமாவை இன்னொரு தளத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது. செல்வராகவன் என்னை தமிழில் படம் இயக்க அழைக்கிறார். ஸ்கிரிப்ட்கூட தந்து உதவுவதாகச் சொல்லி இருக்கிறார். அது சாத்தியம் இல்லை என்றாலும், இணைந்து படங்கள் தயாரிக்கும் யோசனை உண்டு. பார்க்கலாம்!''

''உங்களது 'பிளாக் ஃப்ரைடே’, 'குலால்’, 'தேவ் டி’ மற்றும் 'நோ ஸ்மோக்கிங்’ போன்ற படங்கள் ஏதோ ஒருவகையில் சமூக விழிப்புஉணர்வுப் படங்கள். இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா?'  

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

''என்னைப் பாதித்த விஷயங்களில் இருந்து சினிமாக்களை எடுக்கிறேன். நானே மதுவுக்கு அடிமையாகி மீண்டவன்; பொறுப்பற்றவன். நான் பயணிக்கும்போது பார்த்து, கேட்டு, உணர்ந்த விஷயங்களைப் படமாக எடுக்கிறேன். 'பாம்பே வெல்வெட்’ கொஞ்சம் விலகி, வேறொரு தளத்தில் என்னைப் பரிசோதித்துப் பார்த்துக்கொண்ட முயற்சி. என் சினிமா விரும்பிகள் என்னிடம் மிக எதார்த்தமான படங்களை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதை, அந்தப் படத்தின் வெற்றி உணரவைத்தது. ஆனாலும் அதுவும்கூட மிக விருப்பத்துடன் என்னைப் பிணைத்துக் கொண்டு செய்ததுதான். என் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தால் மட்டுமே ஒரு படத்தை இயக்குவேன். இல்லையேல், படம் எடுக்காமலேயே வருடக்கணக்கில் சும்மா இருப்பேன். இனி... நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்காத சினிமாவை மட்டுமே எடுப்பேன். என் சினிமாக்களிலேயே மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'அக்லி’யை மனதுக்கு நெருக்கமான சினிமாவாக உணர்கிறேன்!'

''சினிமாவுக்கு வரும் முன் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகச் சொல்கிறார்களே?'

''திரைத்துறைக்கு வரும்போது என்னை வழிநடத்த ஆட்கள் இல்லை என்பது மட்டுமே உண்மை. நீங்கள் நினைப்பதுபோல மிகக் கடுமையான போராட்டங்களை எல்லாம் நான் சந்திக்கவில்லை. எனக்குச் சிறு வயதிலேயே பயணங்கள் என்றால் பிரியம். சினிமா மீது காதல் என்பதையும் தாண்டி வெறி இருந்ததால், வாரணாசியில் இருந்து மும்பைக்கு சொற்பப் பணத்தோடு வீட்டில் சொல்லிவிட்டு வந்தேன். ஏற்கெனவே டெல்லி ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளாகம் எனக்குள் நாடகக் காதலை விதைத் திருந்தது. அதன் தாக்கத்தில்தான் சினிமா இயக்குநராக மும்பைக்குக் கிளம்பினேன். அங்கு அலைந்து திரிந்து கடற்கரையில், பூங்காக்களில், தண்ணீர்த் தொட்டியின் கீழே தூங்கி என வாழ்க்கையைக் கொண்டாடினேன். உள்மனம் சினிமாவை நோக்கிக் குவிந்திருந்ததால், அந்தக் காலகட்டத்தை மனதுக்குள் ரசிக்கவே செய்தேன். நிறைய மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. அந்தச் சமயம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. உண்மையில் முதல் படமான 'பாஞ்ச்’ ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கியபோது பயங்கரமாக வருத்தப்பட்டேன். நிறையக் குடித்தேன். அப்படித்தான் குடிக்கு அடிமை ஆனேன். அதன் பிறகு மெள்ள மீண்டு 'தேவ் டி’ வரை வந்தபோது, மிகவும் தன்னம்பிக்கையோடு சினிமாவை எதிர்கொள்ள முடிந்தது. 'பாஞ்ச்,’ 'பிளாக் ஃப்ரைடே’ இரண்டு படங்கள் இன்று வரை ரிலீஸ் ஆகாதபோதும் என்னை மீட்டெடுத்தது, சினிமா மீது நான் கொண்டிருப்பது காதலையும் தாண்டிய ஒரு வெறி!'

''உங்களுடைய ரோல்மாடல் யார்?'

''நான் குவன்டின் டரன்டினோ வையோ, மார்டின் ஸ்கார்சிஸியையோ சொல்வேன் என்று நினைத்தால் ஸாரி... அதிகம் பாப்புலராகாத ராபர்ட் ரோட்ரிக்ஸ். அவர் தனது முதல் படத்தில் இருந்தே தன்னை எலியாக்கி பரிசோதித்துப் பார்த்து பல சினிமாக்களை உருவாக்கியவர். ஒரு படத்தை தனி ஆளாக நின்று உருவாக்க வேண்டும் என்ற விஷயத்தை அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.'

'' 'தேவ் டி’ படம் அட்டகாசமான புது அலை சினிமா. பாலிவுட் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்தது எனலாம். அந்தப் படத்தை இயக்கியபோது அதற்கு முந்தைய உங்கள் படங்களுக்கு நேர்ந்ததுபோல நடக்கும் எனப் பயந்தீர்களா?''

''இல்லை. நினைக்கவே இல்லை. ரசிகர்களைப் பற்றி நான் யோசிக்கவில்லை. எனக்குப் பிடித்த சினிமாவை உருவாக்க வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்தேன். நான் என்ன நினைக்கி றேனோ, அதை எடுக்க வேண்டும் என நினைத்தேன். என் படங்களைப் பார்க்கும் ரசனையை பார்வையாளர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை ரசிக்கும் வரை பொறுமையாக முயற்சித்துக் கொண்டே இருப்பேன். 'தேவ் டி’ என்ற தேவதாஸ் கதையின் நவீன வெர்ஷனைப் படமாகப் பண்ணலாம் என்ற யோசனை, நானும் அபய் தியோலும் மது அருந்திக் கொண்டிருந்தபோது எழுந்ததுதான். அபய், அப்போதே அந்த கேரக்டர்களைப் பிரதிபலிக்கும் உடல்மொழியோடு என்னிடம் பேசிக்காட்டி அசத்தினார். அவரைத் தவிர, அந்தப் பாத்திரமாக யாரும் மாறி இருக்க முடியாது என கதைக்கரு உருவானபோதே எனக்குத் தோன்றியது!'

''உங்கள் படங்களுக்கான கதையை எப்படி எழுதுகிறீர்கள்?'

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

''இதுதான் என ஃபார்முலாக்கள் இல்லை. ஒரு புத்தகத்தின் கடைசி வரி என்னைப் புரட்டிப்போடும். ஒரு சாய்வாலா டீயை வைக்கும்போது சொல்லும் சின்ன சம்பவம் என்னை அசைத்துப் பார்க்கும். தினசரிகளை வாசிக்கும்போது 'சடார்’ என ஒரு கதை ஃப்ளாஷ் அடிக்கும். டி.வி-யில் போராட்டம் செய்யும் மாணவர்கள் மீது தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கும்போது, அந்த பிரச்னையின் மூலத்தைத் தெரிந்துகொள்ள மெனக் கெடுவேன். அப்போது சிறு பொறி வரும். மக்களின் பிரச்னைகளுக்கு முன்னால் நான் சுகவாசியாக வாழ்வதாக உணர்வேன். இவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை நான் உணர ஆரம்பித்த போது, ஆழமான புரிதல் வரும். அந்த விஷயங்கள் அழுத்தி என்னை எதிர்வினையாற்ற வைக்கும். எதையாவது எழுத ஆரம்பித்துவிடுவேன். அப்படி நான் எடுக்க நினைத்திருக்கும் கதைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால், சினிமா என்பது 'பெர்முடேஷன் அண்டு காம்பினேஷன்’படி சாத்தியம் அல்ல என்பதால், அவை எல்லாம் என் மனதுக்குள் அப்படியே பொதிந்துகிடக் கின்றன. எல்லாமே ஒரே ஸ்கிரிப்ட்டில் அமையவும்கூட வாய்ப்புகள் அதிகம். விவாகரத்துப் பெற்று ஒற்றை மகளைப் பிரிந்து வாழும் என்னையே ஒரு வில்லனாக மாற்றிவைத்து யோசித்த கதைதான் 'அக்லி’. என் இயலாமையின் வெளிப்பாடுதான் அந்தக் கதை. அவளுடன் நேரம் செலவிட முடியாத குற்ற உணர்வே 'அக்லி’யாக வெளியே வந்தது!'

''சென்ஸார் போர்டு பற்றி உங்கள் கருத்து..?'

''ஒரு சினிமா இயக்குநராக, இது போன்ற கலாசாரக் கண்காணிப்பு அமைப்பு நமக்குத் தேவை. நம் சமூகத்தின் பார்வைதான் சரி இல்லை. சென்ஸார் போர்டுக்கு இங்கு தன்னாட்சி அதிகாரம் இல்லை. அவர்கள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். எல்லா இடங்களில் இருந்தும் அழுத்தங்கள் உள்ளன. சென்ஸார் போர்டு சுதந்திரமாகச் செயல்பட்டால், பல நல்ல படங்கள் நமக்குக் கிடைக்கும். ஒருவருக்குப் படம் பிடிக்கவில்லை என்றால், நீதிமன்றம் போகலாம். ஆனால் இங்கே, எதற்கெடுத்தாலும் போராடத் தொடங்கிவிடுகின்றனர். சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக அது உருமாறி விடுகிறது. கடைசியில் பழி, சென்ஸார் மீது விழுகிறது. சென்ஸார் போர்டுக்குள் அரசியல் நுழையவே கூடாது!'

''உங்கள் சினிமா ஸ்டைல் என்ன என நினைக்கிறீர்கள்?'

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

''அதிர்ச்சியை உண்டு பண்ணவோ, பார்வையாளர்களைப் பயமுறுத்தவோ நான் படம் எடுக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் ரசிகனை அது பாதிக்க வேண்டும். இப்போதும் என் சினிமாக் களை வைத்து என்னை ஒரு கட்டத் துக்குள் அடக்க முடியாது. சுதந்திரமாக என் இஷ்டப்படி படம் எடுப்பதுதான் என் ஸ்டைல். 'அக்லி’யின் ஸ்கிரிப்ட்டை நான் படமெடுத்து முடிக்கும் வரை நடிகர்கள் யாரிடமும் படிக்கவே கொடுக்கவில்லை. என்ன கதை இது என யாருக்கும் புரியாமல் நடித்தார்கள். எந்த முன் முடிவையும் எடுக்காமல் அவர்கள் நடித்த விதம்... அந்தந்த நேரத்து மனித மனத்தின் போக்கை திரையில் அழகாகக் கொண்டுவந்திருந்தது. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நில அமைப்பு களில் பணிபுரிவேன். லொக்கேஷன்கள், மறந்தும் ரிப்பீட் ஆகாது. கதாசிரியராக இருந்த காலகட்டத்திலும்கூட ஒரு சினிமா இயக்குநராக என்னை மனதுக்குள் நினைத்துக் கொண்டுதான் மொத்தக் கதையையும் எழுதுவேன். நான் கதை எழுதும்போதே இந்த இடத்தில் ஸ்டெடிகேம், இந்த இடத்தில் டாப் ஆங்கிள் ஷாட் என டீட்டெய்லிங் பண்ணியபடி எழுதுவேன். பெரும்பாலும் கிரேன்களையும் ட்ராலிகளையும் நான் பயன்படுத்துவது இல்லை. கேண்டிட் கேமராக்களில் 'கொரில்லா ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங்’ மீது பெரும் காதல் உண்டு!'

''விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?'

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

''ஸ்டார் வேல்யூ இல்லாமல் படம் எடுப்பதால், கதைதான் என் ஸ்டார் வேல்யூ. 'பாம்பே வெல்வெட்’டைத் தவிர எல்லாப் படங்களுமே, பாலிவுட்டின் சராசரி படங்களைவிட மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. அதனால், நான் திறமையான ஆட்களை மட்டுமே கூட்டுச் சேர்த்துக்கொள்கிறேன். கூடுமானவரை என் படத்தை குறுக்குவெட்டில் விமர்சிப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். பாராட்டினால் சந்தோஷம்; பாராட்டவில்லை என்றால், இன்னும் சந்தோஷம். அப்போதுதான் என் திசையை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அதற்காக ரசனையையும் என் கனவு சினிமாவையும் கமர்ஷியல் நோக்கில் குறுக்கிக்கொள்ள மாட்டேன். எதற்காகவும் உண்மைத்தன்மையைக் குறைத்துக்கொண்டு படம் எடுக்க மாட்டேன். அச்சுஅசலான இடங்களில், நினைத்த கோணங்களில், நினைத்த காட்சிகளைப் படம் எடுக்க ஸ்டார்கள் எனக்குத் தேவை இல்லை. நடிகர்கள் போதும். ஏற்கெனவே சொன்னதுதான்... ரசிகர்களை என் சினிமாவை ரசிக்கும்படி மாற்றிவிடுவேன். அதனால், விமர்சகர்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்.'

''அதென்ன பொசுக்கென்றால், ராம்கோபால் உங்களை ட்விட்டரில் காலி செய்கிறார். நீங்களும்கூட அவரைக் கலாய்த்திருந்தீர்களே?'

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

''ராம்கோபால் வர்மா என் வழிகாட்டி. 'சத்யா’ படத்தின் திரைக்கதையை நான் உருவாக்கியபோது, அவர் என்னை வழிநடத்தினார். உண்மையில் ராம்கோபால் வர்மாதான் புது அலை சினிமாவை உருவாக்கியவர். ஆனால், ஏனோ அந்தச் சுதந்திரப்போக்கை விட்டுவிட்டார். அவர் விட்ட இடத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு 'இண்டிபென்டென்ட் சினிமா மேக்கர்’ என்ற தனித்த அடையாளம் வேண்டாம். நான் ராம்கோபால் வர்மாவின் படங்களைப் பார்ப்பது இல்லை. ஆனால், அவரை எனக்குப் பிடிக்கும். மனதில் உள்ளதை டக்கென ட்வீட்டாகத் தட்டிவிடுவார். அவர் குழந்தையைப் போல... அதை மனதுக்குள் எடுத்துக்கொண்டால்தான் வலிக்கும். 'பாம்பே வெல்வெட்’ படத்தை மோசமாக விமர்சித்ததை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், பூனைக்கு மணிகட்ட நினைத்து பதிலுக்கு, 'மது அருந்தியது போதும் அண்ணே... தூங்குங்கள்!’ என ட்வீட் பண்ணி இருந்தேன். ஒரு காலத்தில் அவரைப்போல நான் அதிகம் உணர்ச்சிவசப்படுபவனாகத்தான் இருந்தேன். காலம் என்னை அப்படியே வேறு ஓர் ஆளாக மாற்றிவிட்டது. இரண்டு ஜென்மத்துக்கும் சேர்த்து என் 30-களுக்குள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டாகிவிட்டது.'  

''குடும்பம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை இல்லையா? அடுத்தடுத்த திருமணமுறிவுகள்... என்ன காரணம்?'

'’அப்படி எல்லாம் இல்லை. காதல் திருமணங்கள் செய்தவன்தான் நான். ஆனால், காதல் வேறு; குடும்ப அமைப்பு என்பது வேறு. என்னால் ஒரு கட்டுக்குள் இயங்க முடியவில்லை. மிகப் பொறுப்பற்ற ஆள். திடீரென இரண்டு சட்டைகள். இரண்டு பேன்ட்களோடு கிளம்பிவிடுவேன். அது சிக்கலானது. ஆனால், நாங்கள் பிரிந்தாலும் இன்று வரை நல்ல நண்பர்களாகவே எல்லோரும் இருக்கிறோம். என் தம்பி அபினவ் காஷ்யப், தங்கை அனுபூதி காஷ்யப் என்னோடுதான் இருக்கிறார்கள். தம்பி கமர்ஷியலாக 'தபாங்’ போன்ற படங்களை இயக்கி அண்ணனை மிஞ்சி விட்டார். தங்கை என் படங்களில் வேலை செய்கிறாள். விரைவில் வித்தியாசமான கதையோடு பாலிவுட்டை உலுக்குவாள். என் மகள் ஆலியா, டீன்ஏஜில் இருக்கிறாள். இன்னும் அவள் என்ன செய்யப் போகிறாள் என இப்போது வரை தெரியவில்லை. என் படங்களைத் துவைத்துக் காயப்போடும் முதல் ஆள் அவள்தான்!'

''எதிர்காலத் திட்டங்கள்?'

"எனக்கு ஸ்டார்களை வைத்து படம் இயக்கத் தெரியாது!"

''தயாரிப்பாளராகவும் ஜெயிக்க விரும்புகிறேன். வீட்டில் ஏற்கெனவே ஒரு பெரும் தயாரிப்பாளராக 'தபாங்’ எடுத்த என் சகோதரர் அபினவ் இருக்கிறார். அதனால், மிகச் சின்ன பட்ஜெட்டில் வித்தியாசமான கதையுடன் வரும் இயக்குநர்களை உருவாக்கத் திட்டம். முருகதாஸின் 'அகிரா’ படத்தில் வில்லனாக நடிக்கிறேன். நவாஜுதீனை வைத்து சைக்கோ த்ரில்லர் படம் போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எனக்குத் தெரிந்த சினிமாவைக் கொடுத்த வண்ணம் இருப்பேன்!'