Published:Updated:

பழைய கதைதான்... இருந்தாலும் அசத்துகிறது இந்த 'ஹலோ' - படம் எப்படி?

கார்த்தி
பழைய கதைதான்... இருந்தாலும் அசத்துகிறது இந்த 'ஹலோ' - படம் எப்படி?
பழைய கதைதான்... இருந்தாலும் அசத்துகிறது இந்த 'ஹலோ' - படம் எப்படி?

இருவருக்கும் இடையே நிகழும் காதல் என்பது விதி என்பதைக் கடந்து, அதுவொரு மேஜிக் என்பதைக் காதலாகச் சொல்லியிருக்கிறது தெலுங்கு திரைப்படமான 'ஹலோ' .

பணக்காரச் சிறுமி ஜூனு என்கிற பிரியா. தெருவில் இசையமைத்து யாசகம் செய்யும் சிறுவனாக சீனு என்கிற அவினாஷ். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும்போதும் ஜூனு அவளது காரிலிருந்து 100 ரூபாய் தாள் ஒன்றைத் தர, அதை வைத்து அந்த நாளை கடத்துகிறான் சீனு. வேறு ஊருக்கு ஜூனு செல்ல, கடைசி நோட்டில் தன் மொபைல் நம்பரை எழுதி தூக்கிப்போட அதை மற்றொரு சிறுவன் தூக்கிக்கொண்டு ஓட. இவர்கள் இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. அவ்வளவு பரபரக்க வேண்டிய விஷயமெல்லாம் இல்லை. இறுதிக்காட்சியில் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அடேய்! இது ஸ்பாய்லர் என நீங்கள் கதறினால், முதல் முறையாக நீங்கள் சினிமா பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். இந்திய சினிமாவில் இதுவரை 50 படங்களாவது இதே டெம்ப்ளேட்டில் வந்திருக்கும், உலக அளவில் குறைந்தது 100 படங்கள் இதே டெம்ப்ளேட்டில் வந்திருக்கும். ஆனாலும், படம் அவ்வளவு ஃபிரெஷ்ஷாக இருக்கிறது. 

" ஐ ஹேட் யூ " சொல்லிக்கொண்டே அன்பைப்பொழியும் ரம்யா கிருஷ்ணன் - ஜகபதிபாபு ஜோடி படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். மகனைப் பற்றி பிரியாவிடம் பேசி புளகாங்கிதம் அடைவது; அவன் 'அம்மா' என்றழைக்க பல ஆண்டு காத்திருப்பது; எனப் படம் நெடுக வரும் கதாபாத்திரம். அதுவும் `மெரிசே மெரிசே' பாடலுக்கு ஆடும் நடனம் எல்லாம்.  'ஐ ஹேட் யூ ஆன்ட்டி' எனச் சொல்ல வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சில ஆண்டுகளுக்குப் பின்,  ஜகபதி பாபுவுக்கு பாசிட்டிவான கதாபாத்திரம். "ஆமா, அந்த மோதிரம் என்ன ஆச்சு?" எனக் கேட்கும் போது அவர் தரும் எக்ஸ்பிரஸன்ஸ் ஒவ்வொன்றும் சிரிப்பலைகள். 

படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு இணையான ஜோடி, அவர்களின் குழந்தைப்பருவம். இரண்டு குழந்தைகளும் ஒவ்வொரு ஃபிரேமிலும் அவ்வளவு அழகு. அகில் என்னும் படத்திலேயே, ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும் நாகர்ஜுனா - அமலா தம்பதியினரின் மகன் 'அகிலு'க்குப் பெரிய அளவில் நடிப்பு எதுவும் கைகூடவில்லை. என்ன நினைத்தாரோ, இந்தப் படத்தில் அப்படியொரு டிரான்ஸ்ஃபர்மேசன். நடனம், சண்டைக்காட்சிகள் என அதகளப்படுத்துகிறார். பைக்கில் சீறிப்பாய்ந்து டிரக் மேல் தாவுவது, ஷாப்பிங் மாலில் தளத்துக்குத் தளம் தாவுவது என அதிரடியில் மிரட்டுகிறார். பார்ப்பதற்கு வடிவேலு சொல்வதுபோல், 'நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ' எனத் தோன்றினாலும், இது அகிலுக்கு அசத்தல் ரீலாஞ்ச். நடிகை லிஸி - இயக்குநர் பிரியதர்ஷன் தம்பதியினரின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இந்தப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம். ஒவ்வொரு உடையாகக் கட்டிவந்து அவினாஷிடம் கண் அசைவில் ஓகே கேட்கும் காட்சியாகட்டும்; தன் காதலுக்காகக் காத்திருப்பதும், இறுதியில் சீனுவைத்  தேடும் காட்சிகளாகட்டும் அசத்தல் அறிமுகம். 

அனகனகா ஒக்க ஊரு ஸ்ரீ த்ருதி பாடிய சிறு வயது பாடல் அல்ட்டி எனில், அதே பாடலின் டீனேஜ் வெர்ஷனைப் பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷலின் குரல் எல்லாம் மல்ட்டிபிள் அல்ட்டி. அதேபோல் அர்மான் மாலிக் பாடியிருக்கும் ஹலோ ரிங்டோன் ரகம் என்றால், மெரிசே மெரிசே துள்ளல் ரகம். படம் முழுவதையும் ரொமான்ஸ் டியூன்களால் நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ். தெலுங்கில் 'மனம்' படத்துக்குப் பின், எடுக்கும் படம் என்பதால் (நடுவே தமிழில் 24 எடுத்தது குறிப்பிடத்தக்கது) இயக்குநர் விக்ரம் குமார் மீது எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு. அதை ரொமான்ட்டிக்கலாக நிவர்த்தி செய்கிறார் விக்ரம் குமார். 

நிஜமாகவே ஒரு மொபைலுக்கு ஏன் இப்படி யூ டர்ன் போட்டு டேபிளை உடைக்கும் ஸ்டன்ட் காட்சிகள் எனத் தோன்றவைக்கும் காட்சிகளைத் தவிர, படம் செம்ம ரொமான்டிக் திரைப்படம். இந்த வீக்கெண்டுக்கு தெலுங்கு கப்பிள்களுக்கு செம்ம சாய்ஸ் இந்த ஹலோ .

பின் செல்ல