Published:Updated:

அஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind

உ. சுதர்சன் காந்தி.
அஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind
அஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind

2017... நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு நல்ல வருடமாக இருந்திருக்கும். அதேபோல், கலைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் கோலிவுட்டில் கால் பதித்திருக்கும் புதுமுக நடிகர்களுக்கும் சிறந்த வருடமாக இருந்திருக்கும். அதேசமயம், சூப்பர் ஸ்டாருக்கும் உலக நாயகனுக்கும் இந்த வருடம் படம் இல்லை என்றாலும் அரசியல் பிரவேசத்தால் மக்களிடம் தொடர்பிலேயே இருந்தனர். ஆனால், இந்த வருடம் பெரும்பாலான ஹீரோக்களுக்கு ஒரே ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. அந்த ஹீரோக்களின் பட்டியல் இதோ...
 

அஜித் குமார் :

'தல' அஜித் - சிவா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'விவேகம்' படம் மட்டும்தான், இந்த வருடம் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம். படத்தின் டீசரையும் டிரெய்லரையும் கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். ஆனால், படம் வெளியான பிறகு, அஜித் கொண்டாடப்பட்டாலும், சில பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது 'விவேகம்'. இதே கூட்டணியில் உருவாகிவரும் 'விசுவாசம்' படத்தில் தலை கருப்பு, எடை குறைப்பு என சேஞ்ச் ஓவர் காட்டியிருக்கிறார் அல்டிமேட் ஸ்டார். 

சூர்யா :

சூர்யா நடிப்பில் இந்த வருடம் 'சி3' மட்டும்தான் வெளியானது. ஹரி - சூர்யா - அனுஷ்கா கூட்டணியில் மூன்றாவது படம் என்றாலும், திரைக்கதையில் மிரட்டல் காட்டியிருந்தார், இயக்குநர் ஹரி. டிசிபி துரைசிங்கமாக ஆஸ்திரேலியா சென்று தன் கொலைப்பசியைத் தீர்த்துக்கொண்ட சூர்யா, அதே கம்பீரம் குறையாமல் துரைசிங்கமாகவே வாழ்ந்திருந்தார். அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்திருக்கிறார், சூர்யா. இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதோடு சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் ஷூட்டிங் ஜனவரியிலிருந்து தொடங்கவிருக்கிறது. 

தனுஷ் :

கடந்த வருடம் 'தொடரி', 'கொடி' என இரண்டு படங்களில் நடித்த தனுஷ், இந்த வருடம் 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தவிர, 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகம் ஆகியிருக்கிறார். தற்போது, 'வடசென்னை', 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' ஆகிய தமிழ்ப் படங்களிலும், 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் ஃபகிர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார் தனுஷ். மூன்று படங்களும் 2018 ரிலீஸுக்கு ரெடியாகிக்கொண்டிருக்கின்றன.

சிம்பு : 

இந்த வருடம் அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' மட்டும்தான் சிம்புவின் நடிப்பில் வெளியான படம். ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடித்த சிம்பு இந்தப் படத்திற்காக நிறைய எதிர் விமர்சனங்களைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, சந்தானம் நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்ததாக, மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறார், எஸ்.டி.ஆர். 

சிவகார்த்திகேயன் : 

கடந்த வருடம் 'ரஜினி முருகன்', 'ரெமோ' என இரண்டு படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இந்த வருடம் 'வேலைக்காரன்' படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்ததிலேயே இதுதான் பெரிய பட்ஜெட் படம். சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா - நயன்தாரா - அனிருத் எனப் பெரிய காஸ்டிங் காம்போவுடன் ஆரவாரமாகத் திரைக்கு வந்தான், இந்த 'வேலைக்காரன்'. இப்படத்திற்குப் பிறகு, பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி எனத் தங்களின் லக்கி டீமுடன் அதகளம் செய்யக் காத்திருக்கிறார், சிவகார்த்திகேயன். இதில் சமந்தாவும் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஆர்யா :

ஆர்யா நடிப்பில் 'கடம்பன்' படம் மட்டும்தான் வெளியானது. மலைவாழ் மக்களாக ஆர்யாவும் கேத்ரீன் தெரஸாவும் நடித்த இப்படத்தை, 'மஞ்சப்பை' ராகவன் இயக்கியிருந்தார். தொடர்ந்து, சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. மேலும், அமீரின் 'சந்தனத்தேவன்', சுந்தர்.சி இயக்கத்தில் 'சங்கமித்ரா' ஆகிய சில படங்களும் ஆர்யா வசம் உள்ளது. 

ஜீவா :

சென்ற வருடம் ஜீவாவின் மூன்று படங்கள் வெளியானது. ஆனால், இந்த வருடம், 'சங்கிலி புங்கிலி கதவ தொற' எனும் ஹாரர் காமெடி படம் மட்டும்தான் ஜீவா நடிப்பில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, காளீஷ் இயக்கத்தில் நிக்கி கல்ராணி ஜோடியாக 'கீ' படமும், சுந்தர்.சி இயக்கத்தில் 'கலகலப்பு-2' படமும் இவரது கைவசம் இருக்கின்றன. 

அதர்வா : 

இந்த வருடம் அதர்வா நடிப்பில் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படம் வெளியானது. ரொமான்டிக் காமெடி படமான இதில், அதர்வாவுடன் ரெஜினா, ப்ரணிதா, ஐஷ்வர்யா ராஜேஷ், அதிதி என நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். இவர் நடிப்பில், 'செம போத ஆகாத', 'இமைக்கா நொடிகள்', 'ருக்குமணி வண்டி வருது', 'ஒத்தைக்கு ஒத்தை', '8 தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கவிருக்கும் புதிய படம்... எனப் பல படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.  
 

விஷால் : 

மிஷ்கின் இயக்கத்தில் நடித்த 'துப்பறிவாளன்' படம் மட்டும்தான், இந்த ஆண்டு விஷாலின் நடிப்பில் வெளியான ஒரே தமிழ்ப்படம். இதுதவிர, மோகன்லாலுடன் இணைந்து 'வில்லன்' என்ற மலையாளப் படத்தில் நடித்தார் விஷால். மேலும், நடிகர்கள் சங்க வேலைகள், தயாரிப்பாளர்கள் சங்க வேலைகள், ஆர்.கே.நகர் தேர்தல் எனப் பரபரப்பாகவே இருந்தார். 2018-ஆம் ஆண்டு இவரது நடிப்பில் 'இரும்புத்திரை', 'சண்டக்கோழி-2' ஆகிய இரு படங்கள் வெளியாகவிருக்கின்றன.  

விஷ்ணு விஷால் : 

விஷ்ணு விஷால் நடிப்பில் 'கதாநாயகன்' மட்டுமே இந்த ஆண்டு வெளியானது. 2018-ஆம் ஆண்டில் விஷ்ணு விஷால் நடிக்கும் 'பெண் ஒன்று கண்டேன்', 'இடம் பொருள் ஏவல்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' எனப் பல படங்கள் தயார் நிலையில் உள்ளன. 

சித்தார்த் : 

கடந்த வருடம் 'ஜில் ஜங் ஜக்', 'அரண்மனை' ஆகிய இரண்டு படங்களில் நடித்த சித்தார்த், இந்த வருடம் 'அவள்' படத்தில் மட்டும் நடித்துள்ளார். ஆண்ட்ரியாவுடன் ஜோடி சேர்ந்து ஹாரர் ஜானரில் நடித்த சித்தார்த், இயக்குநர் மிலிந்த் ராவுடன் சேர்ந்து 'அவள்' படத்திற்குக் கதையும் எழுதினார். இப்போது, 'சைத்தான் கா பச்சா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

சசிகுமார் :

கடந்த வருடம், 'தாரை தப்பட்டை', 'கிடாரி', 'வெற்றிவேல்', 'பலே வெள்ளையத்தேவா' என நான்கு படங்களில் வெரைட்டி காட்டிய சசிகுமார், இந்த வருடம் 'கொடிவீரன்' படத்தில் மட்டுமே நடித்துள்ளார். வழக்கமான கதைக்களத்தில் முத்தையா இயக்கிய இந்தப் படத்தில் மஹிமா, பூர்ணா, சனுஷா ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து, 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன் இயக்கும் 'அசுரவதம்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், சசிகுமார். 

அசோக் செல்வன் :

2015-க்குப் பிறகு, அசோக் செல்வன் நடித்த படம் 'கூட்டத்தில் ஒருத்தன்'. தா.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படத்திற்கு ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் 'சில சமயங்களில்', 'பிறை தேடிய நாள்கள்', 'நெஞ்சமெல்லாம் காதல்' ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இவர்களை தவிர, அருண் விஜய், அருள்நிதி, ஆதி, நகுல், ஜி.வி.பிரகாஷ், சந்தானம் ஆகியோரும் இந்த வருடம் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.