Published:Updated:

‘மெர்சல்’ கேமரா, ‘அருவி’ எடிட்டிங், ‘மாநகரம்’ மியூசிக் - இந்த வருடத்தின் 20 அசத்தல் என்ட்ரிகள்! #Kollywood2017

‘மெர்சல்’ கேமரா, ‘அருவி’ எடிட்டிங், ‘மாநகரம்’ மியூசிக் - இந்த வருடத்தின் 20 அசத்தல் என்ட்ரிகள்! #Kollywood2017
‘மெர்சல்’ கேமரா, ‘அருவி’ எடிட்டிங், ‘மாநகரம்’ மியூசிக் - இந்த வருடத்தின் 20 அசத்தல் என்ட்ரிகள்! #Kollywood2017

இந்த வருடம் அறிமுகமான இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் கண்டிப்பாக நம் கவனத்துக்கு வந்துவிடுவார்கள். சினிமா என்பதே ஒரு கூட்டு முயற்சி எனும்போது, இவர்கள் போலவே ஒவ்வொரு படத்திலும் தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த மற்ற கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, இயக்குநர், நாயகன், நாயகி தவிர, முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்திருக்கும் மற்ற கலைஞர்களைப் பற்றி அடையாளப்படுத்தும் தொகுப்புதான் இது. 

இசையமைப்பாளர்:

பிந்துமாலினி, வேதாந்த் - அருவி | ஜாவித் ரியாஸ் - மாநகரம் | அஜனீஷ் லோக்நாத் - குரங்கு பொம்மை, ரிச்சி

ஹீரோவுக்கென மாஸ் பாடல் கிடையாது, வழக்கமான காதல் பாடலோ, காதல் தோல்வி பாடல்களோகூட படத்தில் இடம்பெறவில்லை. ஆனால், படத்தின் கதையை நகர்த்திச் செல்வதே பாடல்களும் பின்னணி இசையும் என்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது ‘அருவி’ படத்தின் இசையருவிகள் பிந்துமாலினி - வேதாந்துக்கு. கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி முழு ஆல்பத்தையும் ரிப்பீட் மோடில் ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான விறுவிறு படம் ‘மாநகரம்’. அதன் டெம்போ குறையாமல் இசையமைத்திருந்தார், ஜாவித் ரியாஸ். கன்னடத்தில் பல படங்களில் மிரட்டல் இசை கொடுத்த அஜனீஷ் லோகநாத், தமிழில் அலட்டல் இல்லாமல் 'குரங்கு பொம்மை' மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வந்த 'ரிச்சி' படம் மூலமும் கவனிக்க வைத்தார். 

ஒளிப்பதிவாளர்:

ஜி.கே.விஷ்ணு - மெர்சல் | பாண்டிகுமார் - ரிச்சி | அரவிந்த் - பண்டிகை

யூ-டியூப் சீரியல் ‘கன்ட்ரோல் ஆல்ட் டெலிட்’க்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜி.கே.விஷ்ணு. அட்லி ‘மெர்சல்’ பட வாய்ப்பை அளிக்க, அதைக் கச்சிதமாகப் பயன்படுத்தி அழகான ஒளிப்பதிவைக் கொடுத்தார் விஷ்ணு. கன்னட ‘உலிடவாரு கன்டந்தே'விலிருந்து விலகி, புதிய கலரை `ரிச்சி'யில் கொடுத்து ஃப்ரெஷ்ஷான உணர்வைக் கொடுத்தார் பாண்டிகுமார். `பண்டிகை' படத்தின் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்த விதம், சின்னச் சின்ன ஐடியாக்கள் மூலம் படத்திற்கு வலு சேர்த்தார் அரவிந்த்.

படத்தொகுப்பு:

ரேமண்ட் - அருவி | பிளோமின் ராஜ் - மாநகரம் | சிவாநந்தீஸ்வரன் - தீரன்

நான் லீனியர் கதை சொல்லலில் ஒரு மைய கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது ஆடியன்ஸைக் குழப்பாமலும் இருக்க வேண்டும் என `அருவி'யின் படத்தொகுப்பாளர் ரேமண்ட் செய்திருக்கும் வேலை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. ப்ளோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருந்த `மாநகரம்' ஹைப்பர் லிங்க் சினிமா. பல கதாபாத்திரங்களை இணைத்து திரைக்கதை பின்னியிருக்க, அதை எந்த விதத்திலும் குழைக்காமல் தெளிவுறச் செய்திருந்தார். ஒரு போலீஸ்காரர் எடுத்துக்கொண்ட வழக்கு, கூடவே அவரின் பெர்ஷனல்... என இரண்டையும் இணைத்து 'தீரனி'ன் திரைக்கதை உருவாகியிருக்கும். திரைக்கதையின் பரபரப்பைக் கொஞ்சமும் குறைக்காமல் படத்தைத் தொகுத்திருப்பார் சிவா நந்தீஸ்வரன்.

கலை இயக்குநர்:

குமார் ஞானப்பன் - தரமணி, மேயாத மான்

‘தரமணி'யின் நமக்கு அறிமுகமில்லாத பல பகுதிகளை நிஜமும் கலை இயக்கமும் சேர்த்துக் கொடுத்ததிலும், `மேயாத மான்'ல கலர்ஃபுல்லான உணர்வைக் கொடுத்ததிலும் கலை இயக்குநர் குமார் ஞானப்பனின் பங்கு பெரியது. `தரமணி'யில் தொடங்கிய பயணம் இப்போது `பேரன்பு' வரை நீண்டிருக்கிறது. இன்னும் பல படங்களில் திறமையைக் காட்ட வாழ்த்துகள் குமார்.

உறுதுணை நடிகை:

இந்துஜா - மேயாத மான் | அனிஷா விக்டர் - அவள் | அஞ்சலி வரதன் - அருவி

குறும்பும் துறுதுறுப்புமான சுடர்விழியாக நம்மை ஈர்த்தார் இந்துஜா. அண்ணனின் நண்பர் மேல் காதல் வந்ததை உணர்வது, காதலன் தங்கச்சி என்றழைக்கும்போது எரிந்து விழுவது, பின்பு காதலை வெளிப்படுத்தும்போது வெட்கப்படுவதுமாய் அசத்தியிருந்தார். `அவள்'  படத்தின் கதையை நகர்த்துவதில் பிரதானமானது, அனிஷா விக்டர் நடித்த ஜெனிஃபர் கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அனிஷா. 'அருவி'யை நேசக் கரம் நீட்டி தன் கூட்டுக்குள் இணைத்துக் கொள்வதும், அவளுடனான பயணமோ, பிரச்னையோ பலமாக நிற்பதுமாக வசீகரிக்கிறார் அஞ்சலி வரதன்.

உறுதுணை நடிகர்:

ஆர்.ஜே. விக்னேஷ் - மீசையமுறுக்கு | கல்கி ராஜா - குரங்கு பொம்மை | மதன் குமார் - அருவி

படம் முழுக்க ஹீரோவுடன் வரும் காமெடி ஜோடியாக கிச்சு கிச்சு மூட்டினார் ஆர்.ஜே.விக்னேஷ். அது சம்பிரதாயமாக அல்லாமல், முழுக்கவே ரசிக்கும்படியான கதாபாத்திரமாக இருந்ததில் நல்ல வரவாக கவனிக்கப்படுகிறார். சீரியஸாக நகர்ந்துகொண்டிருந்த படத்தில் சின்ன ரிலாக்ஸ், கல்கி ராஜா நடித்த 'சிந்தனை' கதாபாத்திரம் வரும் போர்ஷன். தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து வெளிப்படுத்தியிருந்த அவரது நடிப்பு கவனிக்கத்தக்கது. முதலில் நெகட்டிவ் ஷேடாக அறிமுகமாகி, பிறகு உணர்வுபூர்வமாக கதை சொல்லும் இடத்தில் பார்ப்பவர்களைக் கண் கலங்கவைத்தார் மதன் குமார். `அருவி'யில் இவரது பங்களிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மதன்.

பாடகி:

லுக்‌ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் - செந்தூரா

புது குரல்களைத் தேடி அறிமுகம் செய்வதில் தீவிரமாக இயங்குபவர், இமான். இவர் இசையமைப்பில் உருவான `போகன்' படத்தில் 'செந்தூரா...' பாடல் மூலம் அறிமுகமானவர் லுக்‌ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து பலரையும் முணுமுணுக்க வைத்ததில் இவரது குரலுக்கும் பெரிய பங்கு உண்டு. 

பாடகர்:

ராஜன் செல்லையா - வாடி வாடி | ராஜகணபதி - சிங்கக் குட்டி

படம் வெளியாகும் முன்பே இந்தப் பாடல் வீடியோவுடன் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. 'நெஞ்சுக்குள்ளாறக் கொஞ்சிப் பேச வர்றியா...' எனத் தொடங்கும் இவரது குரலில் ஒளிந்த துள்ளல் அனைவரையும் கவர்ந்தது. சூப்பர் சிங்கர் மூலமே நமக்குப் பரிட்சயமான ராஜகணபதி `பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் 'சிங்கக்குட்டி...' பாடல் மூலம் சினிமாவில் அசத்தல் அறிமுகம் கொடுத்தார். அடுத்தடுத்த பாடல்களில் இன்னும் வளர வாழ்த்துகள் டூட்!

பாடலாசிரியர்:

மிர்ச்சி விஜய் - நீ மட்டும் போதும்

பண்பலைத் தொகுப்பாளரான தனக்குள், ஒளிந்திருந்த பாடலாசிரியரை அடையாளம் கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் மிர்ச்சி விஜய். `மேயாத மான்' படம் மூலம் பேனா பிடித்தவர், 'காத்துல அசையும் தாமரையே... பார்த்ததும் பனியா உருகுறனே' என எளிமையான வார்த்தைகள் பிடித்து ரசிக்கும் பாடலை அளித்திருக்கிறார்.