Published:Updated:

“இருள் விலக்கும் ஒரு திசை ஒளியே இலக்கியம்!”

பாரதிதம்பி, பாலு சத்யா, படம்: எம்.நிவேதன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பாரதி கிருஷ்ணகுமார்... எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டு மேடைகளில் இவர்போல் பேச ஆள் இல்லை; இவர் பேச்சுக்கு மயங்காத ஆளும் இல்லை. ஒரு தலைமுறையையே தன் நாவன்மையால் கட்டிப்போட்டிருக்கும் 'பி.கே’ என்கிற பாரதி கிருஷ்ணகுமாரிடம் ஒரு முன்னிரவு நேரத்தில் நெடுநேரம் பேசியதில் இருந்து...

“இருள் விலக்கும் ஒரு திசை ஒளியே இலக்கியம்!”

''உறவுகள், நண்பர்கள் என சக மனிதர்களுக்கு இடையிலான உரையாடல் குறைந்துகொண்டிருக்கும் காலம் இது. இந்தப் பின்னணியில் உங்களைப் போன்ற பேச்சாளர்களுக்கான இடம் என்ன?''

''நம்பிக்கையோடு பேசுவதற்கு ஒரு வாயும், நம்பிக்கையோடு கேட்பதற்கு ஒரு ஜோடிக் காதுகளும் இருக்கும் வரை, உரையாடலுக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக இந்தியச் சமூகம் என்பது, உதவியை எதிர்பார்க்கிறவர்கள் அதிகமாகவும், பிறருக்கு உதவுகிற, வழிகாட்டுகிற இடத்தில் இருப்போர் குறைவாகவும் இருக்கும் சமூகம். இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள், மற்றவர்களின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த மற்றவர்களின் கருத்து என்பது, எனக்கு எதிரானதாக இருக்கலாம்; ஏற்புடையதாக இல்லாமலும் போகலாம். ஆனால், அதையும் நான் பொறுமையாகக் கேட்க வேண்டும். மாறாக எனக்கு எதிரான கருத்தை நீங்கள் சொன்னால், அதனால் உங்கள் இருப்பையே நான் நிராகரிப்பதுதான் இங்கு பெரிய சிக்கல். நான் வானிலை பற்றியோ, சமையல் குறிப்புகளைப் பற்றியோ பேசினால் ஒரு பிரச்னையும் இல்லை. இவற்றைப் பேசுவதால் யாருடைய அதிகாரத்தையோ, குற்றத்தையோ நான் கண்டிக்கப்போவதும் இல்லை; எதிர்க்கப்போவதும் இல்லை. எதிர்ப்பின் குரலுக்குத்தான் சுதந்திரம் தேவை. ஆமோதிப்பின் குரலுக்கு எதற்கு சுதந்திரம்? சட்டமன்றத்தில் 'அம்மா’வின் குரலுக்கு பெஞ்சு தட்டுவதற்கு எதற்கு சுதந்திரம்? அப்படி ஒரு சுதந்திரத்தை ஜெயலலிதா தன் கட்சிக்காரர்களுக்குக் கொடுத்திருக்கிறார் எனப் பெருமிதமாகச் சொல்ல முடியுமா? அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சுதந்திரமே முதன்மை யானது; முக்கியமானது.

அதேபோல சுதந்திரம் என்பதன் வரையறையைத் தெரிந்துகொள்ள வேண்டும். மனம்போல, தான்தோன்றித்தனமாகப் பேசுவதும் எழுதுவதும் செயல்படுவதும் சுதந்திரம் அல்ல. எதைச் செய்தால் எனக்கு அவமானமோ, எது எனக்கு ஏற்புடையது அல்லவோ, எதைச் செய்தால் என் மாண்பு கெடுமோ அதைச் செய்ய மறுக்கிற குணம்தான் சுதந்திரம். அதைத்தான் ஓர் அரசும் சமூகமும் எனக்குக் கொடுக்க வேண்டும். 'நீ செய்வது தவறு’ என  கணவனிடம் சொல்வதற்கு மனைவிக்கு உரிமை இருக்க வேண்டும். அதுவே சுதந்திரம். அதை மறுத்துவிட்டு சமைத்துப்போட, பிள்ளை பெற்றுக்கொடுக்க, விதவிதமாக ஆடை அணிகலன்கள் அணிய பெண்களை அனுமதிப்பது மட்டும் சுதந்திரம் ஆகாது. அது சலுகை; பிச்சை!''  

''ஒருவர் முழுநேர மேடைப் பேச்சாளராக வாழும் சூழல் இன்றைக்கு இருக்கிறதா?''

''காசு கொடுத்தால், யார் கூப்பிட்டாலும் சென்று பேசுவேன் என்றால், இங்கே தாராளமாக வாழலாம். ஆனால், அது வாழ்க்கை அல்ல; பிழைப்பு. 'நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என இதைத்தான் சொன்னான் பாரதி. மாறாக, 'சமூகத்துக்குப் பயன்தரும் கருத்துடைய அமைப்புகளின் மேடைகளில் மட்டும்தான் ஏறுவேன்’ என நீங்கள் உறுதிகொண்டால், மேடைப் பேச்சாளராக வாழ்க்கையை நடத்துவது ரொம்பக் கடினம்!''

''உங்கள் அம்மா இறந்துபோன சமயம் நீங்கள் நண்பர்களுக்கு கதை சொன்னதாக ஒரு நிகழ்வு கேள்விப்பட்டோம். அது என்ன?''

''அம்மா இறந்துவிட்டார். என் சகோதரிகளில் ஒருவர் சென்னையில் இருந்தார். அவர் வருவதற்காகக் காத்திருந்தோம். இப்போதுபோல தொலைத்தொடர்பு வசதிகளோ, வாகன வசதிகளோ இல்லாத காலம். அவர்கள் வந்துகொண்டிருந்தனர். இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் எனச் சொன்னார்கள். அம்மாவின் சடலத்தை வைத்துக்கொண்டு எல்லாரும் பெரும் துக்கத்தோடும் அமைதியோடும் அமர்ந்திருந்தோம். அந்த நேரத்தைக் கடப்பது பெரும் பாரமாக இருந்தது. அப்போது ஒரு நண்பன் என்னிடம், 'ஒரு கதை சொல்லு’ என்றான். நான் திடுக்கிட்டேன். 'ஏய்... எந்தச் சூழல்ல அவனை கதை சொல்லச் சொல்ற?’ என இன்னொரு நண்பன் கோபப்பட்டான். என்னை கதை சொல்லச் சொன்ன நண்பனே கூட்டத்தின் சத்தத்தை அமைதிப்படுத்திவிட்டு, 'இப்போ நீ கதை சொல்’ என்றான். ஒரு கணம் யோசித்துவிட்டு நான் கதை சொல்லத் தொடங்கினேன். அது ஆண்டன் செகாவ் எழுதிய புகழ்பெற்ற 'ஆறாவது வார்டு’ கதை. சோவியத் நாட்டில் ஒரு மருத்துவமனையில் வாழ்ந்த மனநோயாளிகளைப் பற்றிய கதை அது. புரட்சிக்கு முன்பு எழுதப்பட்ட கதை. ஒட்டுமொத்த நாடுமே மனநோயாளிகளின் கூடாரமாக இருப்பதாக அந்தக் கதை சித்திரித்தது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் அந்தக் கதையைச் சொன்னேன். பிறகு என் சகோதரி வந்தார். அம்மாவின் சடலம் எரியூட்டப்பட்டது. பின்னர் என் நண்பர்கள், 'அன்று நீ ஏன் 'ஆறாவது வார்டு’ கதையைச் சொன்னாய்?’ எனக் கேட்டார்கள். நமது இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆறாவது வார்டாக, மனநோயாளிகளின் கூடாரமாக இருப்பதால்தான், அந்தக் கதையை என் மனம் தேர்வு செய்திருக்கிறது.

“இருள் விலக்கும் ஒரு திசை ஒளியே இலக்கியம்!”

அப்பாக்கள் கட்டிலில் படுத்திருப்பதும், அம்மாக்கள் தரையில் படுத்திருப்பதும் இந்தியக் குடும்பங்களில் 'சமத்துவத்துக்கான’ குறியீடு. வாழ்நாள் எல்லாம் அப்பாவுக்கு சேவை செய்தே இறந்துபோன அம்மா, 'என்ன படுத்துக்கிடக்க... எழுந்து காபி போடு’ என அப்பா சொன்னால், மரணப்படுக்கையில் இருந்து எழுந்து வந்துவிடுவாளோ என்றுதான் எனக்குத் தோன்றியது. நீண்ட காலம் கழித்து இதையே ஒரு கதையாக எழுதியபோது, 'இறந்துகிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்துகிடந்த அப்பாவின் அதிகாரம்’ என எழுதினேன். நிறையப் பேர் இந்தச் சம்பவத்தை நம்ப மறுக்கின்றனர். ஓர் இழவு வீட்டில் கதை சொல்வது சாத்தியமா என நினைக்கின்றனர். ஆனால், என்னை வாசிப்புக்குப் பழக்கியவள் அம்மா. மதுரைக்கு எந்தப் பெரிய மனிதர்கள் பேச வந்தாலும், அழைத்துச் சென்று கேட்கவைத்து நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவைத்து அழைத்து வருவாள் அம்மா. 'கதை சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை’ என ஒருமுறை தொலைபேசியில் தழுதழுத்தார் நண்பர் சௌபா. அது உண்மை!

மாபெரும் பள்ளத்தாக்குகளை, துயரங்களைக் கடந்துபோக இலக்கியம்தான் உதவும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னாரே, 'துன்பக் கடலைத் தாண்டிப் போக தோணியாவது கீதம்’ என... அது சாதாரண வரி அல்ல. மாபெரும் உண்மை. இருள் எல்லா திசைகளில் இருந்தும் வருகிறது. ஆனால், ஒளியோ ஒரு திசையில் இருந்து மட்டும்தான் வருகிறது. எல்லா திசைகளில் இருந்தும் வந்து நம்மை அழுத்தும் இருள் போக்க, ஒற்றைத் திசையில் இருந்துவரும் ஒளிதான் இலக்கியம்!''

'' 'ராமையாவின் குடிசை’, 'உண்மையின் போர்க்குரல்’, 'எனக்கு இல்லையா கல்வி?’ என ஆவணப்படங்கள் எடுத்தீர்கள். ஆவணப்படங்களின் மீது உங்கள் ஆர்வம் திரும்பியது எப்படி?''

''ஆவணப்படுத்துவதில் மிகவும் பின்தங்கியது நம் சமூகம். சாக்ரடீஸின் இறுதிக் கணங்களை பிளேட்டோ ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆனால், 'உலகப் பொதுமறை’ எனச் சொல்கிற திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் யார் என நமக்குத் தெரியவில்லை. அவர் பிறந்த நாள், இறந்த நாள் தெரியாது. அவர் ஒருவரா, பத்துப் பேரா என்றே குழப்பம் இருக்கிறது. சிலர் அவருக்கு பூணூல் போடுகின்றனர்; சிலர் கழட்டிவிடுகின்றனர். இவை எல்லாம் ஏன் நடக்கின்றன என்றால், அவரைப் பற்றின எந்த முறையான ஆவணங்களும் நம்மிடம் இல்லை.

இளங்கோவடிகள், யாரோ ஒரு ராஜாவின் தம்பி எனத் தெரிகிறது. ஆனால் எந்த ராஜா, அவர் எப்போது பிறந்தார், எப்படி வாழ்ந்தார், எப்போது இறந்தார் எதுவும் தெரியாது.

10 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் கம்பர். திருவழுந்தூரில் பிறந்த அவர், ஏன் கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங் கேற்றினார், ஏன் நாட்டரசன் கோட்டையில் இறந்தார்... யாருக்கும் தெரியாது. ஏன் அவரால் சொந்த ஊரில் வாழ முடியவில்லை? அன்றைக்கு சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டுக்குச் சென்று வாழ்வது என்பது ஏறக்குறைய புலம்பெயர்தல்தான். கம்பர் ஏன் புலம் பெயர்ந்தார்? கம்பருக்கு மகன் இருந்தார் எனச் சொல்கிறார்கள். நிச்சயமாக மனைவி இல்லாமல் மகன் இருக்க வாய்ப்பு இல்லை. மனைவி யார்? மனைவியுடன் கம்பர் வாழ்ந்த வாழ்வு எப்படிப்பட்டது?

உ.வே.சா இல்லை என்றால், இன்று தமிழின் பெருமைகளாக நாம் சொல்லும் பல நூல்கள் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும். பனை ஓலைகளில் எழுதப்பட்டு மட்கி, மடிந்துபோகவேண்டிய நூல்களை தன் வாழ்நாளை எல்லாம் செலவிட்டு, தேடித் தேடி எடுத்து, அச்சுப் பிரதிகளாக மாற்றியவர் அவர். அது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. பனை ஓலையில் 'கள்ளுண்ணாமை’யை எழுதிய வள்ளுவனை, உ.வே.சா-தான் உலகம் எங்கும் கொண்டுசென்றார். தமிழ் செம்மொழி ஆனதற்கு அந்தத் தாத்தா மட்டும்தான் காரணம்; வேறு எந்தத் தாத்தாவும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது.

இறந்துபோகும்போது டால்ஸ்டாய் பயன்படுத்திய கைக்குட்டையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர். இங்கு இருந்த காலத்தில் ஆஷ், தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களை ஆஷ் குடும்பம் இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறது. ஆனால், வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் எங்கே வாழ்ந்தார், என்ன ஆனார், எப்போது இறந்தார்... ஒரு தகவலும் நம்மிடம் இல்லை. அவ்வளவு ஏன், வாஞ்சிநாதனைப் பற்றியே நம்மிடம் அதிகத் தகவல்கள் இல்லை. அவருடைய இறந்த தேதி இருக்கிறது. ஏன் இருக்கிறது என்றால், அவர் ஆஷ் இறந்த நாளில் இறந்தார். இப்படி வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தாமல்விடுவதன் விளைவுதான், பலரும் கடந்தகால வரலாற்றை தங்களுக்குச் சாதகமாக மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதற்கு என்ன ஆதாரம்? நம்பிக்கையின் அடிப்படையில் கனவு காணலாம்; வரலாற்றை உருவாக்க முடியாது. இறந்தகாலத்தைப் பற்றிய திட்டவட்டமான, தெளிவான, ஞானம் இல்லாத ஒரு சமூகத்துக்கு நிகழ்காலத்தைப் பற்றிய புரிதலும் அறிதலும் இருக்காது. நிகழ்காலத்தைப் பற்றி தெரியாதவர்களால் எதிர்காலத்தை உருவாக்கவும் முடியாது. ஆவணப்படுத்துதல் என்பது உண்மையை அறிவது; மெய்ப்பொருள் காண்பது. அதனால்தான் முக்கியப் பிரச்னைகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறேன்!''

''உங்கள் சினிமா முயற்சியில் இவ்வளவு தாமதம் ஏன்?''

''திரு.பாரதிராஜாவிடம் வேலை பார்த்துவிட்டு வந்து திரைப்படம் இயக்கும் முயற்சியில் இறங்கினேன். ஆனால், நான் விரும்பிய கதையை சினிமாவாக எடுக்க ஒரு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போதுதான் ஒருவர் கிடைத்தார். படம் முடிந்துவிட்டது. 'என்று தணியும்...’ என்பது படத்துக்குப் பெயர். ஒரு சினிமா எடுக்க இவ்வளவு கால தாமதமானதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தரமற்ற ஒரு திரைப்படத்தை செய்து மகிழ்வதைவிடவும் தரமற்ற ஒன்றை இத்தனை காலம் செய்யாமல் இருந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இனியும் வாய்ப்புக் கிடைத்தால் சமூகத்துக்குப் பயன்தரும் மேன்மையான படங்களை மட்டுமே எடுப்பது என்று உறுதிபூண்டிருக்கிறேன். அதனால் தாமதமானாலும் தவறு இல்லை!''

'' 'ரௌத்திரம் பழகு’, 'அச்சம் தவிர்’, 'கூடித் தொழில் செய்’... இப்படி உங்கள் உரைக்கான தலைப்புகளை, அதன் உள்ளடக்கத்தை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?''

''பரந்த வாசிப்பும், அதன் தொடர்ச்சியாக வாசித்தவற்றை பேச்சில் இணைப்பதும்தான் காரணம். 'ரௌத்திரம் பழகு’ என பாரதி சொல்கிறான். ஓவியம் பழகலாம்; இசை பழகலாம்; நடனம் பழகலாம். கோபத்தை எப்படிப் பழகுவது? ஆழ்ந்து சிந்திக்கும்போதுதான் அதன் பொருள் புரியும். வரலாற்றில் 'ரௌத்திரம் பழகு’ என்ற வார்த்தைக்கான உண்மையான பொருளை வெளிப்படுத்தியவன் உத்தம் சிங். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரைத் தேடிக் கொல்ல வேண்டும் என முடிவெடுக்கிறான். துப்பாக்கியால் சுட்ட டயர் வேறு; அதற்கு ஆணை பிறப்பித்த டயர் வேறு. உத்தம் சிங், ஆணை பிறப்பித்த டயரைத்தான் குறிவைக்கிறான். இதற்காக இங்கு இருந்து கிளம்பி லண்டனுக்குப் போகிறான். போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் ஒரு தனி மனிதனின் அந்தப் பயணம் அசாதாரணமானது. பழக்கம் இல்லாத மொழி; பழக்கம் இல்லாத மனிதர்கள்; புத்தம் புதிய தேசம். அங்கே சாராயக்கடையிலும் பன்றித் தொழுவங்களிலும் வேலைபார்த்து வாழ்க்கையை ஓட்டி, சம்பாதித்து ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் வாங்குகிறான். இதற்காக 16 வருடங்கள் காத்திருக்கிறான். பொருத்தமான சந்தர்ப்பம் கிடைத்த நாளில் டயரைச் சுட்டுக் கொல்கிறான். இதுதான் ரௌத்திரம் பழகுவது!''

''பேசிப் பேசி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவர்களின் வரலாறு உண்டு. இனி அது சாத்தியமா?''

''நீங்கள் பேச்சின் ஆற்றலை எதிர்மறை உதாரணங்களில் இருந்து பார்க்கிறீர்கள். நேர்மறையில் பாருங்கள். காந்தி பேசாத ஊர் இல்லை. பாரதி, திருவல்லிக்கேணி கடற்கரையில் நின்று தினமும் பேசினான். வ.உ.சி-யும் சுப்ரமணியசிவாவும் பேசிப் பேசித்தான் தூத்துக்குடியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத் தினார்கள். வரலாற்றின் மாபெரும் மாற்றங்கள், சிறந்த உரைகள் மூலமாகத்தான் நிகழ்ந்தி ருக்கின்றன. அம்பேத்கர் வாழ்நாள் முழுக்க மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எழுத்தறிவு குறைவாக உள்ள, எழுத்தறிவு இருந்தாலுமே நல்ல இலக்கியங்களை, புத்தகங்களைத் தேடிப்போய் வாசிக்க வாய்ப்பு இல்லாத மக்கள் அதிகம் பேர் வாழும் நாடு இது. இங்கு மக்களுடன் உரையாடியே தீர வேண்டும். மதமும் சாதியுமாக இருள் சூழ்ந்த இந்தக் காலத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் செய்யவேண்டிய வேலை இது. எந்த ஆயுதமும் தவறானவர்கள் கையிலும் கிடைக்கத்தான் செய்யும். அதற்காக அதைப் புறக்கணித்துவிட முடியாது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே கள்ளை விற்றுவிடலாம். மோர் விற்கத்தான் தெருத்தெருவாக அலைய வேண்டும். அதற்காக நீங்கள் மோரை விற்கத் தவறினால், கள் விற்கும்; கள் மட்டும்தான் விற்கும். நிரந்தரமான மாற்றங்களை நோக்கி நகர்வது சவாலானதுதான். அந்தச் சவாலை மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத் துடனும் எதிர்கொள்ள வேண்டும். இதில் அவநம்பிக்கைக்கு இடமே இல்லை!''

''தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஒரு முதியவரை அடித்துக் கொன்றார்கள். மேலும், பல முற்போக்கு எழுத்தாளர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பித் தந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து இப்படி யாரும் விருதைத் திருப்பித் தரவில்லை. ஒட்டுமொத்தமாக இந்தச் சம்பவங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஒரு விருதை ஏற்பதும் மறுப்பதும் படைப்பாளியின் உரிமை. அதைப்போலவே பெற்ற விருதை வைத்திருப்பதா, திரும்பத் தருவதா என்பதும் படைப்பாளியின் உரிமையே. ஆல்பெர் காம்யூ, நோபல் பரிசையே வேண்டாம் என நிராகரித்தவர். ஒரு படைப்பாளி, ஒரு விருதைத் திருப்பித் தருவது என்பது நிச்சயமாக ஒரு போராட்ட வடிவம்தான். ஆனால் 'அவர் திருப்பிக் குடுத்துட்டார். நீங்களும் குடுங்க’ என மற்றவர்களை நிர்பந்திப்பது தவறானது. அதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், என் கேள்வி எல்லாம் வேறு.

எழுத, படிக்கத் தெரியாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் நாட்டில் அரசு தரும் விருதுகளே அவமானம் இல்லையா? இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாமை இருக்கிறது. அந்தத் தீண்டாமையை இந்திய அரசுதான் காவல் காக்கிறது. அந்த அரசிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொள்வதே கேவலம் இல்லையா? சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மக்களுக்கு கல்வி கொடுக்காத அரசு, ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்களை அச்சத்தின் விளிம்பில் வாழ நிர்பந்திக்கிற அரசு, இன்னமும் பெண்களின் பாதுகாப்பான சமூக வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வக்கற்ற இந்த அரசிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொள்வதே அசிங்கம் இல்லையா? 1,000 புத்தகங்கள் போட்டால் அதை இங்கே வாங்குவதற்கும் படிப்பதற்கும் நாதி இல்லை. இதில் எழுத்தாளர் எனச் சொல்லிக்கொள்வதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது?

உலகத்திலேயே, பிள்ளைகளுக்கு தாய்மொழியில் கல்வி கற்றுத்தராத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல நாடுகளில் மாணவர்களுக்கு டியூஷன் கிடையாது. வீட்டுப்பாடம் கிடையாது. நம் கண் பார்த்து உருவான இஸ்ரேல் என்ற நாட்டில் இருந்து 10 பேர் நோபல் பரிசு வாங்கிவிட்டார்கள். காரணம், அங்கே தாய்மொழியில் கல்வி தருகின்றனர். ஆனால் இந்தியாவில் மிக சொற்பமானவர்களே நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.  'நாட்டின் மொத்த வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும்’ என 1955-ம் ஆண்டில் கோத்தாரி கல்விக் குழு சொன்னது. இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் இதுவரை வந்த அனைத்து ஆட்சியாளர்களும் மக்களுக்குச் செய்த மாபெரும் நம்பிக்கைத் துரோகம், எல்லோருக்கும் கல்வி தரத் தவறியதுதான். காரணம், படித்துவிட்டால் கேள்வி கேட்பான்; சாதி சங்கங்களுக்கு வர மாட்டான்; கூலிக்கு கொலைசெய்ய உதவ மாட்டான். இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசிடம் கை நீட்டி விருது வாங்குவதற்குத்தான் இங்கு எல்லா கரங்களும் கூச்சப்பட வேண்டும்.!''