Published:Updated:

"ஆத்தாடி... எத்தனை படம்? 2018-ல் வெளியாகவிருக்கும் பார்ட்-டூ படங்களின் பட்டியல்" #Part2TamilMovies

"ஆத்தாடி... எத்தனை படம்? 2018-ல் வெளியாகவிருக்கும் பார்ட்-டூ படங்களின் பட்டியல்" #Part2TamilMovies
"ஆத்தாடி... எத்தனை படம்? 2018-ல் வெளியாகவிருக்கும் பார்ட்-டூ படங்களின் பட்டியல்" #Part2TamilMovies

'ஸ்பைடர் மேன்', 'ஹாரி பாட்டர்' போன்ற படங்களைத்தான் முதல் பாகம், இரண்டாம் பாகம் எனக் கதைகளைப் பிரித்து ஒரு தொடர்ச்சியாக எடுத்து வந்தனர். தற்போது, கோலிவுட்டிலும் இரண்டாம் பாகப் படங்கள் அதிகரித்துள்ளன என்றே சொல்லலாம். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுப்பது இன்றைய டிரெண்ட். 2017-ம் ஆண்டில் 'பாகுபலி-2', 'வேலையில்லா பட்டதாரி-2', 'சென்னையில் ஒருநாள்-2', 'திருட்டுப்பயலே-2' என நான்கு படங்கள் வெளியான நிலையில், அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் இரண்டாம் பாகப் படங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. 2018-ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் பாகப் படங்களின் லிஸ்ட் இதோ...
 

2.0 : 

'எந்திரன்' படத்தின் சீக்வென்ஸில் இந்தப் படம் உருவானாலும், இந்தப் படம் வேற கதை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட 'எந்திரன்' உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், அக்‌ஷய் குமார், ரசூல் பூக்குட்டி எனப் பெரிய காஸ்டிங்குடன் களமிறங்கயிருக்கிறது '2.0' . எடுக்கும்போதே 3D வடிவில் எடுக்கப்படுவதால் மக்களுக்கு இந்தப் படம் மறக்க முடியாத அனுபவமாக நிச்சயம் இருக்கும். இந்த வருடமே வெளியாகுமென எதிர்ப்பார்த்த நிலையில், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பிருக்கிறது எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சார்லி சாப்ளின் 2 :   

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிரபு, பிரபுதேவா, காயத்ரி ரகுராம் நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதிலும் பிரபு - பிரபுதேவா கூட்டணியே நடிக்கிறது. கதாநாயகிகளாக நிக்கி கல்ராணியும் அதா ஷர்மாவும் நடித்து வருகிறார்கள். 2018-ல் இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. 

கோலி சோடா 2 :  

லிங்குசாமி தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ல் வெளியான 'கோலி சோடா' நல்ல ஹிட். இந்தப் படத்தைத் தொடர்ந்து, சில படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் மில்டன், தற்போது 'கோலி சோடா-2' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த சிறுவர்கள் அல்லாமல் வேறு சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இதில் சமுத்திரக்கனியும் கெளதம் வாசுதேவ் மேனனும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு இயக்குநராக விஜய் மில்டனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

கலகலப்பு 2 : 

சுந்தர்.சி இயக்கத்தில் சிவா - ஓவியா, விமல் - அஞ்சலி காம்பினேஷனில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'கலகலப்பு' படம் ஒரு ஜாலி என்டர்டெயினராக இருந்து வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்த சுந்தர்.சி, தற்போது படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுவென முடித்துவிட்டார். இந்தப் பாகத்தில் சிவா, ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா, ரோபோ சங்கர், சதீஷ்... எனக் கலகலப்பான கூட்டணியுடன் உருவாகியிருக்கிறது 'கலகலப்பு 2'. 

மாரி 2 :

லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ், அவருக்கு ரைட் ஹாண்டாக ரோபோ சங்கர், ஹோம்லி காஜல் அகர்வால், வில்லனாக விஜய் யேசுதாஸ் எனக் கலர்ஃபுல் காஸ்டிங், அனிருத்தின் இசையுடன் 'செஞ்சிருவேன்' எனக் களமிறங்கிய இயக்குநர் பாலாஜி மோகன் தற்போது 'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். 

கும்கி 2 : 

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் இருவரும் அறிமுகங்களாக நடித்து, நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'கும்கி'. கதைக்களமும் இமானின் இசையுடன் சேர்ந்த யுகபாரதியின் பாடல் வரிகளும் படத்துக்குப் பலம் சேர்த்தன. இதைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் இயக்குநர் பிரபு சாலமன், புதுமுக நடிகர்களான மதிவாணன், அதிதி மேனன் ஆகியோரை ஜோடியாக நடிக்கவைக்கிறார். 'கும்கி' படத்துக்குப் பிறகு, வெளியான 'கயல்', 'தொடரி' ஆகிய படங்கள் சரியான வரவேற்பைப் பெறாத நிலையில், பிரபு சாலமனின் பேக் டூ ஃபார்ம் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சாமி ஸ்கொயர் : 

2003-ல் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சாமி' படம் மாஸ் ஹிட் அடித்தது. ஆறுச்சாமியாகப் போலீஸ் கேரக்டரில் நடித்த விக்ரம் வசனங்களில் அசத்தியிருந்தார். தமிழில் த்ரிஷா கதாநாயகியாக அறிமுகமான படம் இது. இந்தப் படத்தின் சீக்வெலாக 'சாமி ஸ்கொயர்' படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், வில்லனாகப் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நிறைய படங்களில் நடித்துவந்தாலும், விக்ரமை, 'சாமி' படத்தில் இடம்பெற்றது மாதிரியான போலீஸ் கேரக்டரில் பார்க்க ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் விக்ரம் ரசிகர்கள். 

சண்டக்கோழி 2 : 

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'சண்டக்கோழி' படம் ஆல் சென்டர் ஹிட். ஆக்‌ஷன் சீக்வென்ஸில் விஷால் நடித்த முதல் படம் இது. இந்தப் படம் விஷால் கேரியரில் மிக முக்கியமான படம் என்பதை மறுக்க முடியாது. 12 வருடம் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார், இயக்குநர் லிங்குசாமி. இந்தப் படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் எனப் பெரிய காம்போவோடு உருவாகிக்கொண்டிருக்கிறது `சண்டக்கோழி-2'. 

சதுரங்க வேட்டை 2 : 

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான 'சதுரங்க வேட்டை' ஆரவாரமே இல்லாமல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வொயிட் காலர் க்ரைம் பற்றியும், மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதையும் மிக அழகாககச் சொல்லியிருந்தார் இயக்குநர் வினோத். 'தீரன்' படத்தில் பிஸியாக இருந்ததால், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மட்டும் எழுதியிருக்கிறார் வினோத். 'சலீம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிர்மல் குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

தமிழ் படம் 2.0 : 

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியானது 'தமிழ்ப்படம்'. இந்தப் படத்தில் இதுவரை வெளியான தமிழ் படங்களைக் கலாய்த்துத் தள்ளியிருப்பார்கள். இந்தப் படம் ஜாலி கமர்ஷியல் படமாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். ஓ.பி.எஸ் தியானம் பண்ணுவதுபோல், சிவா உட்கார்ந்திருக்கும் ஸ்டில்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக். இதைப் பார்த்தவுடன், இந்தப் படத்தில் ஏதோ ஒரு சுவாரஸ்யமான விசயம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் இந்தப் படத்தில் யாரையெல்லாம் கலாய்க்கப்போகிறார் சிவா... என ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

வெண்ணிலா கபடிக்குழு 2 :  

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு கதாநாயகனாக அறிமுகமான 'வெண்ணிலா கபடிக்குழு' எல்லாருக்கும் பிடித்தமான ஒரு படமாக இருந்தது. குறிப்பாக, பி, சி சென்டர்களில் ரசித்துப் பார்த்தனர் மக்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி சூரியின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சுசீந்திரன் எழுதி, செல்வசேகரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, சூரி, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். 

விஸ்வரூபம் 2 : 

கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' படம் கடந்த 2013-ல் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது, சில சிக்கல்களையும் சந்தித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை 2015-ல் வெளியிடத் திட்டமிட்ட படக்குழு, சில காரணங்களால் வெளியிடவில்லை. தற்போது மீண்டும் விறுவிறுப்புடன் ஆரம்பித்து படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்கு வந்துள்ளனர். இந்தப் படம் அடுத்த வருடம் முதல் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. இரண்டு வருடங்கள் கழித்து கமலின் படம் வெளியாவதால், அவரது ரசிகர்கள் இந்தப் படத்தை ஆர்வத்தோடு எதிர்ப்பார்க்கின்றனர். 

இந்தப் படங்களைத் தவிர, ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன்-2' படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' என்ற பெயரில் வெளியானது. 

பின் செல்ல