Published:Updated:

‘டிவிங்கிள்’ ராமநாதன் முதல் ‘வின்னிங்ஸ்’ வரை... 2017-ல் கவர்ந்த காமெடிக் கதாபாத்திரங்கள்! #2017Rewind

தார்மிக் லீ
‘டிவிங்கிள்’ ராமநாதன் முதல் ‘வின்னிங்ஸ்’ வரை... 2017-ல் கவர்ந்த காமெடிக் கதாபாத்திரங்கள்! #2017Rewind
‘டிவிங்கிள்’ ராமநாதன் முதல் ‘வின்னிங்ஸ்’ வரை... 2017-ல் கவர்ந்த காமெடிக் கதாபாத்திரங்கள்! #2017Rewind

படத்தின் கதைக்களம் எதுவாக இருப்பினும், அதை இறுக்கமாகத் தாங்கிப்பிடிப்பது படத்தில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகளே. அப்படி இந்த வருடம் வெளியான படங்களில் மக்கள் மனதில் பதிந்த சில காமெடி கேரக்டர்கள் இதோ! 

சுருளிராஜன் (ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்) :

தான் காதலித்து ஏமாற்றிய பெண்களுக்கு, திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஜெமினி கணேசனுக்கு உதவுபவர்தான் சுருளிராஜன். கமர்ஷியல் எலிமென்ட்ஸ் ஒட்டுமொத்தத்தையும் தாங்கிப்பிடித்து, தன் அதகள காமெடிகள் மூலம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கிச்சுக்கிச்சு மூட்டாமலேயே சிரிக்கவைத்ததில் சூரிக்குப் பெரும்பங்கு உண்டு. படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருந்தும், சூரியோடுதான் அதர்வாவுக்கு கெமிஸ்ட்ரி பக்காவாகப் பொருந்தியிருந்தது. சூரி மதுரைக்காரர் என்பதால், அந்த ஊருக்கே உரிய ஸ்லாங்கில் பேசி அசால்ட் செய்திருப்பார். இந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படியான ரோல்களில் அவருக்கு இந்தப் படமும் உண்டு.  

வருண் (ப.பாண்டி) :

நடிகர் தனுஷ், பாடகர் தனுஷ், பொயட் தனுஷ்... இந்த வரிசையில் இயக்குநர் தனுஷாக அவதரித்தது இந்தப் படத்தின் மூலம்தான். படத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர்கள் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகிய நால்வரும்தான். இதுதவிர பல கதாபாத்திரங்கள் இருப்பினும், கவனிக்கவைத்த கதாபாத்திரம் `ரியாலிட்டி ஷோ' புகழ் ரின்ஸன். இவர் டான்ஸில்தான் கலக்குவார் என நினைத்தால், இயல்பான நடிப்பிலும் இந்தப் படத்தில் கலக்கியிருப்பார். வயதான ஒரு பெரியவருக்கும் ட்ரெண்டியான ஒரு பையனுக்கும் இருக்கும் ஜாலியான ரிலேஷன்ஷிப்பை அழகாகக் காட்டியிருக்கும் இவர்களது காம்போ.  

இளங்கோ (மரகத நாணயம்) :

`ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ள... ஹாஃப் சாப்பிட்டா கூல் ஆகிருவாப்ள' என்ற வைரல் வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் டேனியல் ஆனி போப். `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துக்குப் பிறகு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த டேனியலுக்கு முக்கியமான படமாக அமைந்தது `மரகத நாணயம்'. சுருட்டை முடி, கொச கொச தாடி, இவருக்கே உண்டான பாடி லாங்வேஜ் என அனைத்தையும் ஒன்றுசேர்த்து `காமெடி' என்ற பக்காவான அவுட்புட்டை இந்தப் படத்தில் கொடுத்திருப்பார் டேனியல். இந்த வருடம் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் இதுதான்.    

`டிவிங்கிள்' ராமநாதன் (மரகத நாணயம்) :

பழைய படங்களில் டெரர் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். இந்தப் படத்திலும் அப்படித்தான் நடித்திருப்பார். ஆனால், கொஞ்சம் டார்க் ஹ்யூமர் கலந்து நடித்து அதகளம் பண்ணியிருப்பார் மனுஷன். படத்தில் இவரது ஒவ்வொரு டயலாக்கும் சரவெடி ரகம். பின்னணியில் இவருக்கு ஒலிக்கும் தீம் மியூசிக், நேரில் சென்று பார்க்காமல் பழைய ரேடியோவில் இவர் எதிரிகளை டீல் பண்ணும்விதம், இவரது காஸ்டியூம், பாடிலாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷன் என அனைத்திலும் கலந்துகட்டி அடித்திருப்பார். இந்த வருடத்தின் பெஸ்ட் கேரக்டர் லிஸ்ட்டில் `டிவிங்கிள்' ராமநாதனுக்கு நிச்சயமாக இடம் உண்டு. 

கிஷோர் கடம் (தீரன் அதிகாரம் ஒன்று) :

இவரது கதாபாத்திரம் படத்தில் கொஞ்ச நேரம்தான் என்றாலும், எந்த டயலாக்குமின்றி `மே பேகுனாவ் சார்' என்ற ஒரே டயலாக்கில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் கிஷோர் கடம். மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் நடித்துவந்த கிஷோர் கடமுக்கு, தமிழில் இதுதான் முதல் படம். போலீஸார் விசாரணையில் அவர்கள் கொடுக்கும் இம்சைகளைச் சமாளித்து, அவர்களுக்கு பதில் இம்சை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்து, பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும்விதத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது மீம் டெம்ப்ளேட் வழியாகவும் பட்டையைக் கிளப்பிவருகிறார் கிஷோர் கடம்.  

`வின்னிங்ஸ்' ராமதாஸ் (மாநகரம்) :

சினிமாவுக்கு என பல்வேறுவிதமான பார்வையாளர்கள் இருப்பார்கள். அதில் `படம் ஜாலியா இருக்கணும் அதுவே போதும்' என்ற விதத்திலான பார்வையாளர்களை தன் பக்கம் கட்டி இழுத்து வின் பண்ணவர் இந்த வின்னிங்ஸ். இவர்தான் படத்தின் `ஷோ ஸ்டீலர்' என்றே சொல்லலாம். யதார்த்தமான நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்லாஸை அள்ளினார். இதுபோன்ற விறுவிறு ஸ்க்ரீபிளே கொண்ட படத்தில் முக்கியமாக இருப்பது படத்தின் காமெடிதான். எந்த இடத்திலாவது பிசிறு தட்டினாலும் ஒட்டுமொத்தப் படமுமே பாழாகிவிடும். ஆனால், அதற்கு இடமே கொடுக்காமல் சீரியஸான சீன்களிலும் சிறப்பான காமெடிகளை வெளிக்காட்டி நம்மை என்டர்டெயின் செய்திருப்பார் ராமதாஸ். வாழ்த்துகள் வின்னிங்ஸ்.  

பாலாஜி/பிஜிலி (மீசைய முறுக்கு) :

தமிழ் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன் `டெம்பிள் மங்கீஸ்' எனும் யூ-ட்யூப்  சேனலில் கலாய் வீடியோக்களில் நடித்து கலக்கிக் கொண்டிருந்தவர் ஷா ரா. இந்த வருடம் இவரது நடிப்பில் `மாநகரம்' படமும், `மீசைய முறுக்கு' படமும் வெளியானது. இவரது ஸ்பெஷலே இவர் பேசும் ஸ்லாங், பாடி லாங்குவேஜ், ஃபேஸ் எக்ஸ்ப்ரெஷன்ஸ்தான். `மாநகரம்' படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் காமெடிக்கு ஸ்கோப் குறைவாக இருந்ததால் இவரின் ஸ்பெஷலான சில விஷயங்கள் மிஸ் ஆனது. ஆனால், `மீசைய முறுக்கு' படத்தில் மிஸ் ஆன அத்தனை விஷயங்களையும் தன் நடிப்பில் கொண்டு வந்து, இடம்பெற்ற அனைத்துக் காட்சிகளிலும் துவம்சம் செய்திருந்தார். வெல்கம் டூ தமிழ் சினிமா பாஸ்! 

அடுத்த கட்டுரைக்கு