Published:Updated:

``கேப்டன் அமெரிக்கா”, ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், ஸ்பைடர்மேன்... இவர்களின் தந்தைக்கு இன்று பிறந்த நாள்! #HBDStanLee

ர.முகமது இல்யாஸ்
``கேப்டன் அமெரிக்கா”, ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், ஸ்பைடர்மேன்... இவர்களின் தந்தைக்கு இன்று பிறந்த நாள்!  #HBDStanLee
``கேப்டன் அமெரிக்கா”, ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், ஸ்பைடர்மேன்... இவர்களின் தந்தைக்கு இன்று பிறந்த நாள்! #HBDStanLee

மார்வெல் கம்பெனியின் திரைப்படங்களை அதன் ரசிகர்களோடு அமர்ந்து தியேட்டரில் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு சூப்பர்ஹீரோவின் என்ட்ரிக்கும் பறக்கும் விசில் சத்தம், மிகச்சில வினாடிகளே திரையில் வந்து மறையும் ஒரு கிழவருக்கும் பறக்கும். அந்தக் கிழவர்தான், ஸ்டான் லீ. மார்வெல் காமிக்ஸின் அனைத்துப் பிரதான கதாபாத்திரங்களையும் உருவாக்கியவர். முதுமையிலும் ரகளை காட்டி, இப்போது மார்வெல் திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் முகம் காட்டிவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்டான்லி மார்ட்டின் லீபர் 1922-ஆம் ஆண்டில் டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தார். அவர் பிறந்த காலகட்டத்தில், அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி பரவிக்கொண்டிருந்தது. சிறுவயதில் இருந்தே ஸ்டான்லி பல்வேறு பணிகளைச் செய்துவந்தார். சிறுவன் ஸ்டான்லிக்கு ஒரே ஆறுதல், அன்றைய அமெரிக்காவின் சூப்பர்ஸ்டாராக இருந்த எர்ரால் ஃப்லின்னின் திரைப்படங்கள்தான். ஆக்‌ஷன் திரைப்படங்கள் மீதான காதல், சிறுவனாக இருந்த ஸ்டான்லிக்குப் பிறக்க காரணம் எர்ரால் ஃப்லின்தான். அந்தக் காதலே நாளடைவில் வளர்ந்து அவரது கற்பனைத் திறனுக்கு எரிபொருளாய் அமைந்தது.

தேசிய காசநோய் மையத்திற்கு இரங்கல் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த ஸ்டான்லி, தன் பதினொரு வயதில் டைம்லி காமிக்ஸ் என்ற நிறுவனத்தில் ஆபிஸ்பாய் வேலைக்குச் சேர்ந்தார். இடையில் 1940-களின் இறுதியில் இராணுவத்தில் இணைந்து எழுத்தர் பணியும் செய்தார். டைம்லி காமிக்ஸ் நிறுவனத்தில் அவருக்கு காமிக்ஸ் ஓவியர்களின் இங்க் பாட்டில்களை நிரப்புவதும், அவர்களுக்கு உணவு வாங்கிவருவதும் வேலையாக இருந்தது. சில சமயங்களில், காமிக்ஸ் புத்தகங்கள் எழுதி முடித்தபிறகு, ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் காலியாக இருக்கும். அப்போது அதன் ஓவியர்கள் அந்தப் பக்கங்களை நிரப்புவதற்காக ஏதாவது சிறுகதையைத் சேர்த்து விடுவார்கள். இது ‘ஃபில்லர்’ (Filler) எனப்படும். இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரத்தில், அமெரிக்கர்களின் தேசபக்தியைப் பறைசாற்றும் வகையில் ஒரு காமிக்ஸ் சூப்பர்ஹீரோவின் தேவை உருவாகியிருந்தது. அதற்காக 'கேப்டன் அமெரிக்கா' கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தது டைம்லி காமிக்ஸ். 1941, மே மாதத்தில் 'கேப்டன் அமெரிக்கா' கதாபாத்திரத்தின் மூன்றாவது புத்தகம் வெளியாகிறது. சுறுசுறுப்பாக டைம்லி காமிக்ஸில் பணியாற்றி வந்த இளைஞன் ஸ்டான்லிக்கு, ஃபில்லர் பகுதி தரப்பட்டது. அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் ஸ்டான்லி.

'கேப்டன் அமெரிக்கா' தனது கேடயத்தை வீசி எதிரிகளைத் தாக்குவதாக காட்சியமைத்து இருந்தார் ஸ்டான்லி. ரசிகர்களுக்கு இந்த மூவ் மிகவும் பிடித்துப்போக, ஸ்டான்லிக்கு நிரந்தர பணி கிடைத்தது. ஸ்டான்லி மார்ட்டின் லீபர் அன்று முதல் தன்னை ‘ஸ்டான் லீ’ என்று அழைத்துக் கொண்டார். அதே வருடத்தில் ஸ்டான் லீ உருவாக்கிய ‘டெஸ்ட்ராயர்’ கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸ்டான் லீயின் புகழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே பரவத்தொடங்கிய காலம் அது. அப்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. டைம்லி காமிக்ஸ் நிறுவனத்தின் எடிட்டர் பதவியில் இருந்தவருக்கும், நிறுவனர் மார்ட்டின் குட்மேனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மார்ட்டின் குட்மேன், ஸ்டான் லீயை தற்காலிக எடிட்டராக நியமனம் செய்தார். அப்போது ஸ்டான் லீக்கு வயது பதினெட்டு!

டைம்லி காமிக்ஸ், இந்தக் காலகட்டத்தில் ‘அட்லஸ் காமிக்ஸ்' என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது. ஸ்டான் லீ பல்வேறு கதைகளை இந்தக் காலகட்டத்திற்குள் எழுதினார். 1947-ல் திருமணம் செய்து கொள்கிறார். ஒரே மாதிரியான கதைகளைத் மீண்டும் மீண்டும் எழுதிய ஸ்டான் லீக்கு போரடிக்கத் தொடங்குகிறது. வேலையை விட்டுவிடலாம் என தனக்கு நெருங்கியவர்களிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தார், ஸ்டான் லீ.

1956-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மற்றொரு புகழ்பெற்ற காமிக்ஸ் நிறுவனமான DC காமிக்ஸ் ‘ஜஸ்டிஸ் லீக்’ என்ற பெயரில் சூப்பர்ஹீரோக்கள் படையையே வைத்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக் கொண்டிருந்தது. அப்போதைய அட்லஸ் காமிக்ஸ் நிறுவனர் ஸ்டான் லீயைச் சந்தித்து, இதேபோல ஒரு சூப்பர்ஹீரோ பட்டாளத்தை உருவாக்குமாறு வேண்டினார். வேலையை விட்டுவிடலாம் என்ற நினைப்பில் இருந்த ஸ்டான் லீயை அவரது மனைவி ஜோன், ஸ்டான் லீக்கு பிடித்தாற்போல கதையை உருவாக்குமாறும், யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் இயங்கவேண்டாம் எனவும் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். ‘ஜஸ்டிஸ் லீக்’ கதாபாத்திரங்களுக்கு இணையாக ஸ்டான் லீ உருவாக்கியது ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ (Fantastic Four).

இந்த சூப்பர்ஹீரோக்களை உருவாக்கியபோது, ஸ்டான் லீ தனக்கு பிடித்தாற்போல புதிய பாணியைப் பின்பற்றினார். அதுவரை, சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவும், அப்பழுக்கற்றவர்களாகவும் இருந்துவந்தனர். ஸ்டான் லீயின் சூப்பர்ஹீரோக்கள் அந்தத் தன்மைகளில் இருந்து விலகி, சாதாரண மனிதனுக்குரிய தன்மைகளோடு இருந்தனர். ‘சூப்பர்ஹீரோவுக்கு அவனது சக்தி மட்டுமே கற்பனையாக இருக்கவேண்டும். மற்றபடி அவனும் நம்மைப்போல சாதாரண மனிதன்தான். நான் சூப்பர்ஹீரோ சக்தி பெற்றிருந்தால், என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், என்றே சிந்தித்து அப்படியான கதாபாத்திரங்களை உருவாக்கினேன்’ என்கிறார் ஸ்டான் லீ. 1961-ஆம் ஆண்டு அட்லஸ் காமிக்ஸ் நிறுவனம் ‘மார்வெல்’ காமிக்ஸ் என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. அதேசமயம், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கு பனிப்போர் தொடங்கி இருந்தது. இரண்டு நாடுகளும் அணுஆயுதம் செய்வதில் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. அந்தக் காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் ஸ்டான் லீ.

அணுஆயுத சோதனை செய்யும் நிறுவனம் ஒன்றில் நிகழும் விபத்து ஒன்றில், ப்ரூஸ் பேனர் என்ற விஞ்ஞானி அணுக்கதிர் பாதிப்பிற்கு ஆளாகுவதாகவும், அதனால் அவர் கோபப்படும் போதெல்லாம் மிகப்பெரிய உருவமெடுப்பது போலவும் ‘ஹல்க்’ என்ற கதாபாத்திரத்தை ஸ்டான் லீ எழுதினார். மக்கள் மிகவும் வெறுக்கும் இராணுவத்தை மையமாக வைத்து, ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடும் உலகின் மிகப்பெரிய பணக்காரனாக டோனி ஸ்டார்க் என்ற கதாபாத்திரத்தையும், அவன் ‘அயர்ன் மேன்’ என்ற சூப்பர்ஹீரோவாக மாறி சாகசங்கள் செய்வதையும் கதையாக உருவாக்கினார். இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தும் சாதாரண மனிதர்களைப் போலவே இருப்பார்கள். ப்ரூஸ் பேனர் கோபத்தைக் கட்டுப்படுத்த முயலும் சாதாரண மனிதன்; டோனி ஸ்டார்க் மிகப்பெரிய பணக்காரன்; தனது சூப்பர் பவரை வைத்து பெண்களைக் கவர முயல்பவன்.

ஸ்டான் லீக்கு அவர் உருவாக்கிய சூப்பர்ஹீரோக்களில் மிகவும் பிடித்த ஹீரோ, 'ஸ்பைடர்மேன்'. பீட்டர் பார்க்கர் என்ற டீன் ஏஜ் பையன்தான் ’ஸ்பைடர் மேன்’ என்ற ஹீரோவாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஒரு சராசரி அமெரிக்க டீன் ஏஜ் பையனுக்கு இருக்கும் பணத்தேவைகள், கேர்ள் ஃபிரெண்ட் வைத்துக்கொள்ளும் ஆசைகள் ஆகியவற்றை முன்வைத்து அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்தார். அதுவரை அவரது கதாபாத்திரங்களை ஓவியமாக்கிக் கொண்டிருந்த ஜேக் கிர்பி, ‘ஸ்பைடர் மேன்’ கதாபத்திரத்தையும் மற்ற சூப்பர்ஹீரோக்களைப் போலவே உடலமைப்பு கொண்டவனாய் வடிவமைக்க, ஸ்டான் லீக்கு அது பிடிக்கவில்லை. ஸ்டீவ் டிட்கோ என்ற காமிக்ஸ் ஓவியருடன் இணைந்து ’ஸ்பைடர் மேனை’ உருவாக்கினார் ஸ்டான் லீ. 1981-ஆம் ஆண்டு மார்வெல் நிறுவனம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கியது. ஸ்டான் லீ அந்தப் பணிகளில் இணைந்து, ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிப்பு வரை மார்வெல் நிறுவனத்துடன் பயணித்து வருகிறார்.

காமிக்ஸ் உலகத்தில் பல்வேறு சூப்பர்ஹீரோக்களைப் படைத்த ஸ்டான் லீ, உலகம் முழுவதும் ‘காமிக்ஸ் உலகின் பிதாமகன்’ எனக் கருதப்படுகிறார். காமிக்ஸ் படைப்பில் அவரது பங்களிப்பைப் பாராட்டி உலகம் முழுவதும் பல அனிமேஷன் நிறுவனங்கள் ஸ்டான் லீயை ஒரு கதாபாத்திரமாகவே தங்கள் படங்களில் உருவாக்கி, கெளரவப்படுத்தியுள்ளனர். ‘மார்வெல் சினிமா உலகம்’ என்றழைக்கப்படும் ’அவெஞ்சர்ஸ்’ கதாபாத்திரங்களின் திரைப்படங்களிலும், 'எக்ஸ்மேன்' திரைப்படங்களிலும் தொடர்ந்து அவருக்கென்று கெளரவவேடத்தில் ஒவ்வொரு காட்சி தரப்பட்டு வருகிறது. 95 வயதான ஸ்டான் லீ, கடந்த ஜூன் மாதம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசினார். ’ஓய்வு என்பது கெட்டவார்த்தை!’ என்றவர், ‘நீங்கள் விரும்பும் பணியை மட்டும் செய்யுங்கள்; ஏனெனில், உங்கள் வாழ்க்கை முழுவதும் பணி மட்டுமே செய்துகொண்டிருக்கப்போகிறீர்கள்.’ என்றார்.

பல தலைமுறைகளைக் கடந்தும் மக்களை ரசிக்க வைத்த கலைஞன் ஸ்டான் லீக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!