Published:Updated:

“யூ டியூப் விமர்சகர்களைப் பார்த்து, ஒரு விரக்தியிலதான் ‘மூவிங் இமேஜஸ்’ ஆரம்பிச்சேன்” - கிஷோர்

“யூ டியூப் விமர்சகர்களைப் பார்த்து, ஒரு விரக்தியிலதான் ‘மூவிங் இமேஜஸ்’ ஆரம்பிச்சேன்” - கிஷோர்
“யூ டியூப் விமர்சகர்களைப் பார்த்து, ஒரு விரக்தியிலதான் ‘மூவிங் இமேஜஸ்’ ஆரம்பிச்சேன்” - கிஷோர்

நேற்றைய மழையில் புதிதாய் முளைத்த உலக சினிமா ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு எங்கு செல்வார்கள் தெரியுமா? பதற்றப்பட வேண்டாம். பார்த்த படத்தை அக்குவேறாக ஆணிவேறாகப் பிரித்து விளக்கும் அனாலிசிஸ் விடியோக்களைப் பார்க்க. அந்த வீடியோக்களைப் பார்த்தபிறகு ‘குரோசவா என் தாத்தாடா; டொரன்டினோ என் பெரியப்பாடா’ என அடிக்கும் லூட்டிகள், ஏலியன் லெவல். உலக சினிமாக்களைப் புரியவைக்க காட்சி விளக்க வீடியோக்கள் இணையம் முழுக்க நிரம்பிவழிகின்றன. அதில், தமிழ் சினிமாவின் மானத்தைக் காக்க, தமிழ் இயக்குநர்களும் உலகலெவல்தான் என்று கெத்துக் காட்ட 'மூவிங் இமேஜஸ்' எனும் யூ-டியூப் சேனல் இருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கு உலகம் வியக்கும் வகையில் காட்சி விளக்க வீடியோக்களைப் பதிவேற்றுகிறார், 'மூவிங் இமேஜஸ்' கிஷோர். யார் இந்த கிஷோர்? 

“என்னோட சொந்த ஊர் கடலூர். சென்னையிலதான் ஸ்கூல் படிச்சேன். புதுச்சேரியில காலேஜ் படிச்சேன். இப்போ, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங்ல பி.ஹெச்.டி பண்றேன்.” என அறிமுகம் கொடுக்கிறார், கிஷோர். 

கிஷோரின் சேனலுக்குச் சென்றால், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வீடியோவுமே பொக்கிஷம். அதில் முக்கியமான வீடியோக்கள் என்றால், 'தளபதி', 'அந்த நாள்', 'ஆரண்ய காண்டம்', 'ஆய்த எழுத்து', 'பாட்ஷா', 'மொழி', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'சத்யா', 'பொல்லாதவன்', '8 தோட்டாக்கள்', 'மகேஷிண்டே பிரதிகாரம்' ஆகியவை. இவை அனைத்துமே நல்ல படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே... ஆனால், இவை ஏன் நல்ல படங்களாகக் கொண்டாடப்படுகின்றன என்பதை லோ கிளாஸ் ரசிகர்களிலிருந்து ஹை கிளாஸ் ரசிகர்கள் வரை... அனைவருக்கும் புரியும்விதமான வகையில் எளிதாக, தரமாக இருப்பதே கிஷோர் வீடியோக்களின் ஸ்பெஷல். 

''எப்படி வந்தது இந்த ஐடியா?" 

“தமிழ்நாட்டுல பொறந்துட்டு சினிமா கனவு இல்லைனா எப்படி... ஸ்கூல் படிக்கும்போதே விசிடி கட்டர்னு ஒரு சாஃப்ட்வேரை இறக்கி, நண்பர்களுக்கு 'கட் சாங்ஸ்' பண்ணிக்கொடுப்பேன். இன்ஜினீயரிங் படிக்கும்போது எனக்கும் சினிமாமேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குறும்படம் பண்றோம்னு அதகளம் பண்ணுவோம். அப்போதான், திரைக்கதை அமைப்புகளையெல்லாம் கத்துக்கிட்டேன். பி.ஹெச்.டி படிக்க அமெரிக்கா போனதும் எதுவுமே பண்ணமுடியலையேனு வருத்தம் இருந்துச்சு. நம்ம மக்கள்கிட்ட பரவலா இருக்கிற கருத்து என்ன தெரியுமா, ‘இங்கிலீஷ் படம்தான் கெத்து, தமிழ்ப் படமெல்லாம் வெத்து’ங்கிற எண்ணம்தான். நோலன், டொரன்டினோ மாதிரியோ, இல்ல அவங்களையும் மிஞ்சுற அளவுக்கோ... நம்ம தமிழ்சினிமாவுல இயக்குநர்கள் இருக்காங்களானு கேட்டா, நான் 'ஆமாம்'னு சொல்வேன். அவங்களையெல்லாம் வெளியுலகத்துக்குக் காட்டத்தான், இந்த யூ-டியூப் சேனலைத் தொடங்குனேன்."

''பணம் சம்பாதிக்கிறதுக்காகவே விமர்சனம் பண்ணிக்கிட்டு இருக்கிற யூ-டியூப் விமர்சகர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?"

''உண்மையைச் சொல்லணும்னா, தமிழ்சினிமாக்களை விமர்சனம் பண்றவங்களைப் பார்த்து, ஒரு விரக்தியிலதான் இந்த சேனலை ஆரம்பிச்சேன். முன்னாடியெல்லாம் மதன்ஸ் திரைப்பார்வை, பரத்வாஜ் ரங்கன் ரிவ்யூனு சில நாகரிகமான விமர்சகர்கள் இருந்தாங்க. இப்போ அப்படியில்லை. குறை கண்டுபிடிக்கலாம், படத்தைக் கலாய்க்கலாம்னுதான் விமர்சனமே பண்றாங்க. அவங்களால தமிழ்சினிமா வர்த்தகம் பாதிக்கிறதோட, நல்ல சினிமாக்களையும் ரசிகர்கள் மிஸ் பண்றாங்க. நம்ம படைப்புகளைக் கொண்டாடணும், பாதுகாக்கணும். நாம இங்கே கவனிக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, குறை சொல்றதுக்காகவும், வியூஸ், ரெவன்யூ வாங்குறதுக்காகவும் நான் வீடியோ பண்ணலை." 

“உங்க வியூகம்தான் என்ன?"

“வியூஸ் முக்கியம்தான். ஆனா, அது ஒரு படைப்பை மட்டம் தட்டி வாங்கக் கூடாது. எல்லோருக்கும் பிடிச்சமாதிரி ஒரு படத்தை விளக்கிச் சொல்லணும். 'தளபதி'யை முதல் வீடியோவா வெளியிட்டது, இந்த சேனல் எல்லோருக்கும் போய்ச்சேரணும்ங்கிறதுதான். இப்போவரைக்கும் அந்த வீடியோவுக்கு வரவேற்பு அதிகமா இருக்கு. தவிர, இந்த சேனல் எனக்கு நிறைய சினிமா ரசிகர்களை அடையாளம் காட்டியிருக்கு. எல்லோரும் சேர்ந்து ஒரு சினிமா கிளப் ஆரம்பிச்சிருக்கோம். மிஷ்கின் சாரோட படங்கள் எல்லாமே நாம, அவரோட உலகத்துக்குள்ள போய்ப் பார்க்கிறதுக்கான ஒரு டிக்கெட். அதனாலதான், மிஷ்கின் சாரோட படங்களுக்குப் பதிலா, மிஷ்கின் சாருக்கே ஒரு வீடியோ பதிவு பண்ணேன்."

“உங்களோட ஒரு வீடியோ உருவாக்கும் முறையைச் சொல்லுங்களேன்?”

“ஐடியா டூ வீடியோவுக்கு 90-ல இருந்து 120 மணிநேரம் தேவைப்படும். ஸ்கிப்டை எழுதி, கிளிப்பிங்ஸ் தேடிப்பிடிச்சு, வாய்ஸ் ஓவர் ரெக்கார்டு பண்ணி, சரியான மியூசிக்கைத் தேர்ந்தெடுத்து, எல்லாத்தையும் சேர்த்து எடிட் பண்ணி, எல்லாம் சரியா இருக்கானு பார்த்து... எல்லாத்தையும் முடிக்கிறதுக்குள்ள மண்டையில பிரளயமே வெடிக்கும். 'ஆரண்ய காண்டம்' படத்தோட ஸ்ட்ரெக்சர் அனலைஸ் பண்ணலாம்னா, அட்சய பாத்திரம் மாதிரி அள்ள அள்ளக் குறையவே இல்லை. 'ஆய்த எழுத்து'க்குப் பண்ணும்போது ரொம்ப எக்ஸ்ட்ரீமா போயிட்டேன். '8 தோட்டாக்கள்' பண்ணும்போது, நிறைய தத்துவம் படிக்கிற மாணவர்களோட பேசவேண்டியிருந்தது. எனக்கு முன்னோடி, கனட தமிழரான வினோத் வரதராஜன். அவர்தான், சில தமிழ்ப்படங்களுக்குக் காட்சி விளக்க வீடியோக்கள் போட்டிருக்கார். இப்போ அவர் ஆக்டிவா இல்லை. தமிழ் சினிமா ஆர்வலர்கள்னா, படம்தான் எடுக்கணும்னு இல்லை. வீடியோ கட்டுரைகளைப் பதிவு பண்ணலாம். ஏன்னா, இதுக்காக ஒரு மார்க்கெட் எதிர்காலத்துல உருவாகும்.” 

“பாராட்டிய பிரபலங்கள்?”

“ ‘ஆய்த எழுத்து’ வீடியோவைப் பார்த்துட்டு நடிகர் மாதவன் பாராட்டினார். ‘காக்கா முட்டை’ பார்த்துட்டு இயக்குநர் மணிகண்டன் பாராட்டினார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ வீடியோவைப் பார்த்துட்டு பார்த்திபன் ரொம்பநேரம் பேசினார். ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷை எனக்கு ‘நாளைய இயக்குநர்’ சமயத்துலேயே தெரியும். அவரோட படத்துக்கு வீடியோ பண்ணும்போது, அவர்கிட்டயே நிறைய சந்தேகங்கள் கேட்பேன். இப்படிப் பலபேர் பாராட்டியிருக்காங்க."

"எதிர்கால திட்டம்?" 

“தமிழ் சினிமாவுக்கு மட்டும் வீடியோ பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா, மலையாளத்துலேயும் நிறைய நல்ல படங்கள் வருது. கம்மியான பட்ஜெட்ல நிறையா கலெக்ஷன் எடுக்கிற யுக்தியை அவங்ககிட்ட இருந்துதான் நாம கத்துக்கணும். அடுத்து, பெங்காலி சினிமாவைப் பத்தியும் வீடியோ பண்ணனும். இப்படிப் பல திட்டம் இருக்கு. ஏன்னா, இங்கே ரசிகர்கள் ஆரோக்கியமா இருக்காங்க... சினிமா ரொம்ப மோசமா இருக்கு!." 

வாழ்த்துகள் கிஷோர்!

அடுத்த கட்டுரைக்கு