Published:Updated:

``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா?!" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை

``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா?!" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை
``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா?!" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை

``என்னுடைய கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்கலாம் என்று சொன்னதும், `அதிக பட்ஜெட்டிலேயே இந்தப் படத்தை எடுக்கலாமே... கதை நல்லாயிருக்கே' என்று சொன்னார்கள். ஆனால், யாரும் தயாரிக்க முன்வரவில்லை’’ என்று தன் முதல் பட வாய்ப்பில் இருந்தே பேச ஆரம்பிக்கிறார்  'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் மித்ரன். 

''விடாது கருப்பு, சிதம்பரம் ரகசியம் நாடகங்கள் எடுத்த நாகா சாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போதெல்லாம் சினிமாவுக்குள் வரவேண்டுமென்ற ஆசை எனக்கிருந்தது இல்லை. சீரியல் ஜோன் குள்ளேதான் இருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், எடிட்டர் ரூபனின் நட்பு கிடைத்தது. அப்போது ஜார்ஜ், ரூபன் இருவரும் உதவி ஒளிப்பதிவாளர், எடிட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அப்போது சின்னதாக குறும்படம் எடுக்கலாம்னு நாங்க மூன்று பேரும் முடிவு செய்தோம். நான் ஒரு கதை எழுதினேன். அதைப் படித்த ஜார்ஜ், ரூபன் இதைப் பெரிய படமாகவே எடுக்கலாம்னு சொன்னாங்க. அவங்கதான் என்னை எப்போதும் ஊக்குவிப்பார்கள். என்னை நிறைய தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்று கதையெல்லாம் சொல்ல வைப்பார்கள்.

2013-ம் வருஷம் என் நண்பனின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்தை வைத்துதான் `இரும்புத்திரை' படத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். அதாவது, என் நண்பனின் போனுக்கு பேங்கில் இருந்து மெசேஜ் வந்தது. அதில் அவருடைய அக்கவுண்ட்டில் இருந்து 40,000 ரூபாய் எடுத்திருப்பதாக வந்தது. உடனே, பேங்கில் விசாரித்துப் பார்த்தால், பதில் சரியாக கிடைக்கவில்லை. 

இந்தச் சம்பவம்தான், ஸ்க்ரிப்ட்டுக்கு காரணம். இந்தத் தப்புக்கு யார் காரணம், தப்பு எங்கே நடக்குதுனு ஆராய்ந்தேன். அதற்கான ரிசல்ட்தான் 'இரும்புத்திரை'. நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக என்னுள்ளே ஸ்பார்க்கான விஷயம் இது. ஆனால், இந்த விஷயத்துக்குள்ளே போகப் போக ஏகப்பட்ட புதிய விஷயங்கள் அதுகுள்ளே இருந்தது. சாதாரணமாக நாம நினைக்கிற விஷயம் பின்னாடி, பூதாகரமாக வெடிக்கும். உதாரணத்துக்கு, நாம மாலுக்குப் போகும்போது நம்மகிட்ட, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ''சார், உங்கள் போன் நம்பர், அட்ரெஸ், இமெயில் எழுதுங்க, உங்களுக்கு ஒரு லக்கி ட்ரா இருக்கு''னு சொல்லுவாங்க. நீங்க எழுதிக் கொடுக்கிற உங்க நம்பர்னால என்ன பிரச்னை வருதுனு உங்களுக்கு தெரியாது. அதுதான் 'இரும்புத்திரை'. 

பூட்டப்பட்ட ஒரு ரகசியத்தைதான் 'இரும்புத்திரை'னு சொல்லுவாங்க. நம்மகிட்ட இருக்கிற செல்போன், கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னாடி என்ன நடக்குது அப்படிங்குற விஷயம் நமக்கே தெரியாது. இது எல்லாத்துக்கும் என் படத்தில் பதில் இருக்கு'' என்றவரிடம் விஷால் இந்தப் படத்துக்குள்ளே எப்படி வந்தார் என்று கேட்டோம்.

``விஷாலிடம் ஒரு சந்தர்ப்பத்தில் வேறொரு படத்தின் கதையைச் சொன்னேன். ஆனால், அப்போது விஷாலுக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. அதன்பிறகு ஒருநாள் என் நண்பன் ரூபன் விஷாலிடம் 'இரும்புத்திரை' கதையைச் சொல்லுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போது ரூபனிடம், '' டேய், இல்லைடா விஷாலிடம் ஏற்கெனவே வேறொரு படத்தின் கதையைச் சொல்லி ரிஜெக்ட் ஆகிருச்சு. அதனால், என்னிடம் அவர் கதை கேட்க மாட்டார்''னு சொன்னேன். அதற்கு ரூபன், ''இல்லை, இந்தப் படத்தின் கதை விஷாலுக்குப் பிடிக்கும். சொல்லு’’னு சொன்னார். 

சரினு கிளம்பிப் போனேன். அப்போது விஷால் சார் என்னைப் பார்த்தவுடன், ''ஏற்கெனவே, ஒரு கதை சொன்னீங்களே அதுவா’’னு கேட்டார். இல்லை சார், இது வேற கதைனு சொன்னேன். விஷால், ''ஓகே சொல்லுங்க பார்ப்போம்''னு சொன்னார். முதல் பாதி சொன்னவுடன் விஷாலுக்குப் பிடித்துப் போய்விட்டது. இன்டர்வெல் சீன் சொல்லி முடிக்கும்போது அவர் கதைக்குள்ளே முழுவதுமாக வந்துவிட்டார். முழுக் கதையையும் சொல்லி முடித்தவுடன் விஷால், 'சூப்பர் நம்ம பண்ணுறோம்'னு சொல்லிட்டார். உடனே எனக்கு படம் ஓகே ஆகிவிட்டது. 

இந்தக் கதையை ஒரு நாலு வருஷமாய் எல்லோரிடமும் சொல்லி சுத்திக்கிட்டே இருந்தேன். விஷாலிடம் வந்தவுடனே என் படம் ரெடியாகி விட்டது. விஷால்தான் இந்தப் படத்தைப் பெரிய படமாக ஆக்கியது. ’மியூசிக் யுவன்ஷங்கர் ராஜாவிடம் போவோம், ஹீரோயின் ரோல் சமந்தா பண்ணட்டும், அர்ஜூன் சார் நடித்தால் நன்றாக இருக்கும்னு ஒவ்வொரு விஷயத்தையும் விஷால்தான் கொண்டுவந்தார். ஜார்ஜ், ரூபன் ரெண்டு பேருமே என்னுடைய ஃப்ரெண்ட்ஸ். அதனால், கட்டாயமாக அவங்க ரெண்டு பேருமே என் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்தாங்க. என் கதை மேல் விஷாலிடம் பெரிய நம்பிக்கை இருந்தது. 

இந்தக் கதையில் விஷால் ராணுவ வீரராக வருகிறார். அவர் ராணுவ வீரர்ங்கிறதால இது மிலிட்டரி படம் என்கிற எண்ணம் எல்லாம் வர வேண்டிய அவசியம் இல்லை. மிலிட்டரியில் இருக்கும் ஒரு பொதுவான மனிதனின் கதை. அந்தக் கண்ணோட்டத்தில்தான் இந்தப் படத்தைச் சொல்லியிருக்கிறேன். சமந்தா, விஷாலிடம், ’’எனக்கு காதல் காட்சி எப்படி எடுக்கிறதுனு தெரியாது. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணனும், பண்ணுங்கனு'' சொல்லிட்டேன்.

அவங்க ரெண்டு பேரும் எப்படி லவ் பண்ணலாம்னு டிஸ்கஷன் பண்ணி என்கிட்ட சொல்லுவாங்க. 'ஹே, இது சூப்பர், அது சூப்பர்''னு சொல்லிட்டு விட்டுருவேன். அவங்க எனக்கு கொடுக்கிறதுல இருந்து ஒரு காதல் காட்சியை நான் படம் பிடிப்பேன். எனக்கு ரொமான்டிக் சீன்ஸ் எழுதத் தெரியும். பட், அதை அவர்களிடம் இருந்து வாங்கத் தெரியாது. 

என்னுடன் எப்போதும் ரைட்டிங் டீம் இருக்கும். நான், பொன் பார்த்திபன், ஆண்டனி பாக்யராஜ், சவரிமுத்து நாங்க எல்லோரும் உட்கார்ந்து பேசுவோம். அதாவது, நான் ஏற்கெனவே பண்ணி இருக்கிற திரைக்கதையை விஷால், சமந்தாவுக்கு ஏற்ற மாதிரி எப்படி செய்யலாம்னு யோசித்து, பேசி எழுதுவோம். ஹீரோ இமேஜ், லுக், இடம் எல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்வோம். நான் ரெடி பண்ணி இருந்த பேஸிக் திரைக்கதையை மெருக்கேற்றுவோம். 'இரும்புத்திரை' ஜனவரி 26-ம் தேதி ரிலீஸாக இருக்கு. கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும்''னு சொல்லி முடித்தார் அறிமுக இயக்குநர் மித்ரன். 

அடுத்த கட்டுரைக்கு