Published:Updated:

``சினிமால அப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவே நல்லா இருக்கு..!’’ - அஞ்சலி ஷேரிங்ஸ்

``சினிமால அப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவே நல்லா இருக்கு..!’’ - அஞ்சலி ஷேரிங்ஸ்
``சினிமால அப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவே நல்லா இருக்கு..!’’ - அஞ்சலி ஷேரிங்ஸ்

தெலுங்கு தேசத்தில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்து தற்போது தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஞ்சலி. இவர் சினிமாவுக்குள்  அடியெடுத்து வைத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன.  'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு', 'இறைவி', 'எங்கேயும் எப்போதும்' போன்று திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் நடித்த இவரது ஸ்டைல், தற்போது மேற்கூறிய படங்களில் பார்த்தது போல் இல்லை. கமர்ஷியல் படங்களுக்காக தனது கெட்டப்பை முழுவதுமாக வெஸ்டர்னுக்கு மாற்றியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல சர்ச்சைகளிலிருந்து மீண்டு வந்து தற்போது 'பலூன்' படத்தில் நடித்திருக்கிறார். "எனக்கு கொஞ்சம் ஈஸியான கேள்வி கேளுங்களேன் ப்ளீஸ். ரொம்ப நாளைக்கு அப்பறம் பேட்டி கொடுக்குறேன்" என்று ஆரம்பத்திலேயே எண்ட் கார்ட் போட்ட அஞ்சலியுடனான சந்திப்பிலிருந்து...

"லைஃப் எப்படி போயிட்டு இருக்கு? இப்போ எங்க இருக்கீங்க?"

"ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. இப்போ ஹைதராபாத்ல இருக்கேன். சென்னைக்கு வேலைக்காக மட்டும்தான் வருவேன். எனக்கு குறிப்பிட்டு சொல்லும்படி ரெண்டு மூணு நண்பர்கள் இங்க இருக்காங்க. அவங்களோட ஈ.சி.ஆர்ல லாங்-ட்ரைவ் போவேன். கெட்-டு-கெதர் பார்டிக்கு என்னை கூட்டிட்டு போவாங்க. எப்போ இங்க வந்தாலும் மெரினா பீச் மிஸ் பண்ணவே மாட்டேன். அங்க உட்கார்ந்து கடல் காற்றை அனுபவிக்கிற சுகத்துல எல்லா சோகமும் மறைந்து போயிடும்."

"உங்களுக்கும், இயக்குநர் ராமுக்கும் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் 'கற்றது தமிழ்'. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து ’தரமணி’, 'பேரன்பு' மூலமா ஒன்னு சேர்ந்துருக்கீங்க. இந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?"

"நான் எல்லா இடங்கள்லயும் தைரியமா சொல்லுற வார்த்தை 'ராம் சார் எனக்கு எப்பயுமே ரொம்ப ஸ்பெஷல்' அப்டீன்றதுதான். என்னை அறிமுகப்படுத்துனதுனால இதை சொல்லலை. உண்மையிலேயே சாருக்கு என்கிட்ட இருந்து எப்படி நடிப்பை வாங்கணும்னு தெரியும். எனக்கு எல்லாம்  சொல்லிக்கொடுத்த கடவுளே அவர்தான். என்னுடைய முதல் படத்துல மொழி, பயணம், நடிப்பு, மேக்-அப் இப்படி எல்லாமே அந்நியமாத்தான் தெரிஞ்சுச்சு. அப்போ ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களையும் தீர்த்து வச்சது சார்தான். இப்போ நான் இந்த அளவுக்கு நடிக்கிறதுக்கும், தமிழ் பேசுறதுக்கும்  அவர்தான் காரணம். என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனவர். 

அவருடைய படங்கள்ல கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும்? அவங்க எதை பேசுவாங்கனு எனக்கு ஒரு புரிதல் இருக்கு. அதனால ராம் சாரோட படங்கள்ல வேலை பார்க்கும் போது ரொம்ப வசதியா உணர்றேன். பத்து வருடங்கள் கழிச்சு மீண்டும் சாரை பார்க்கும் போது கூட எதுவுமே மாறலை, அப்போ எப்படி நடந்துகிட்டாரோ, அதேமாதிரிதான் இப்பயும் நடந்துக்கிறார். கூட இருக்குறவங்கள ரொம்ப எளிமையா, அலட்டிக்காம, பணிவா நடத்துவார். சார் எப்படிப்பட்ட பெர்சனாலிட்டினு அவருடைய படங்கள்தான் காட்டும். அவர் என்னை பார்த்து, 'நல்லா நடிச்சுருக்கீங்க'னு ஒரு வார்த்தை சொல்லிட்டாலே போதும் 'ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்கேன்'னு அர்த்தம். ஆனா, அந்தச் சின்ன பாராட்டை கூட சார்கிட்ட இருந்து வாங்க முடியாது. சில சமயம் நானா கேட்குறது உண்டு. "என்ன சார். நான் எப்படி நடிச்சிருக்கேன்? நீங்க எதுவுமே சொல்லயே?'னு. அவர் அப்பயும் 'நல்லாதான் நடிச்சுருக்கீங்க ஆனந்தி, வேறென்ன சொல்லணும்?'னு திருப்பிக் கேட்பார். அவர் அடிக்கடி கொடுக்குற ஒரே அட்வைஸ் இதுதான் 'எப்பயுமே நம்ம நடிக்கக் கூடாது. அந்த கதாபாத்திரமாவே வாழணும்' ‘’.

"அடுத்தடுத்து ரெண்டு மலையாளப் படங்கள்லயும் கமிட் ஆகியிருக்கீங்களே?" 

"நான் சினிமாவுக்கு அறிமுகமானது தெலுங்கு, நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது தமிழ். மலையாளத்துல பெருசா சொல்லிக்கிற அளவுக்கு படங்கள் பண்ணல. இப்போ 'ரோசாப்பூ', 'ஆத்ம சக்தி' ஆகிய ரெண்டு படங்களோட ஷூட்டிங் முடிஞ்சு, சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகுது. இதுல எம்மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம் 'ரோசாப்பூ'. இதுல மாடர்ன் பொண்ணா நடிச்சிருக்கேன். இதுவரை மாடர்ன் கதாபாத்திரமும், நல்ல கதையும் ஒரு சேர எனக்கு அமைந்ததே இல்லை. தமிழ் மற்றும் தெலுங்குல நான் நடித்த படங்கள் முக்கால்வாசி ஒரே மாதிரிதான் இருக்கும். இந்தப் படம்தான் என்னை திரையில ரொம்ப வித்தியாசமா காட்டப்போகுதுனு நெனக்கிறேன். இந்த மாதிரியான ஒருசில நல்ல கதைகள் மலையாள சினிமாவைப் பற்றிய புரிதலை எனக்குக் கொடுக்கும்னு நம்புறேன்."

"கதையை நோக்கி நீங்க போறீங்களா? இல்ல கதை உங்கள நோக்கி வருதா?"

"எப்பயுமே கதைக்கு முக்கியத்துவம் இருக்குற மாதிரியான படங்கள் பண்ணனும்னுதான் ஆசை. இப்போ சினிமா ட்ரெண்ட் கொஞ்சம் மாறிருச்சு. அந்த மாதிரி ஸ்க்ரிப்ட்ஸ் எழுதுறது இல்லையா, இல்ல நான் கேட்கலையானு தெரியலை. கமர்ஷியல் படங்கள் மட்டும்தான் வரிசையா வருது. அதுல தரம் வாய்ந்த படங்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துக்கிட்டு இருக்கேன்."

"ஹோம்லி டு மாடர்ன் ஏன்?"

"என்னுடைய அடையாளம் ஹோம்லிதான்னு எந்த இடத்துலயுமே சொன்னதில்லை. 'க்ளாமர்' பண்ணமாட்டேன்னும் சொன்னதில்லை. ஆரம்பத்துல நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே என்னை குடும்பப்பாங்கான பொண்ணா காட்டியிருச்சு. எந்தக் கதாபாத்திரங்கள்ல நடிச்சு பெயர் வாங்குறோமோ, அடுத்தடுத்து நமக்கு அதேமாதிரியான கதாபாத்திரங்கள்தான் கிடைக்குது. எப்பயுமே ஹோம்லியா நடிகைகளை காட்டுற படங்களோட கதைகளும் நல்லா இருக்கு. 'வுமன்-சென்ட்ரிக்' படங்கள்ல நடிக்கிறதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவு. 'பொண்ணுங்களை மையமா வச்சு எடுக்குற படம்'ன்ற  வார்த்தையை கேட்குறதுக்கே எவ்வளவு நல்லா இருக்கு. இதுவரை பாலிவுட்ல மட்டும்தான் இந்தமாதிரியான படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ தென்னிந்திய சினிமாவுலயும் 'வுமன் சென்ட்ரிக்' வர ஆரம்பிச்சுருச்சு. 2014-ஆம் ஆண்டு நான் நடிச்சு வெளிவந்த 'கீதாஞ்சலி'ன்ற தெலுங்குப் படம் பெண்களை மையமா வச்சு எடுத்த ஒண்ணு. மறுபடியும் அப்படி ஒரு புரட்சிகரமான படத்துல நடிக்கணும்னு ஆசை." 

"சித்தி குடும்பத்தோட இப்போ பேசுறீங்களா? குடும்பச் சிக்கல்களிலெல்லாம் இருந்து மீண்டு வந்துட்டீங்களா?" 

"என்னுடைய சித்தி குடும்பம் பத்தி நான் எதுவுமே பேச விரும்பல. எனக்குக் குடும்பம்னா அது என் அம்மா, ரெண்டு அண்ணன்கள், அக்கா அவ்வளவுதான். அதுல அக்காவுக்கும், ஒரேயொரு அண்ணனுக்கும் கல்யாணம் ஆச்சு. எங்க குடும்பம் எப்பயுமே சந்தோஷமா இருக்கு. என்னுடைய ரசிகர்களையும் என்னோட குடும்பமாதான்  நினைக்குறேன். என்னதான் என்னைப் பத்தி பரவலா பேசப்பட்டாலும், எனக்காக இருக்குற ரசிகர்களுக்கு ரொம்பவே கடன்பட்டிருக்கேன். நேர்ல என்னை பார்க்கும் போது கூட, "மறுபடியும் எப்போ படத்துல நடிக்கப் போறீங்க?"னு தொடர்ந்து கேட்டுட்டே இருந்தாங்க. இப்போ அவங்களுக்காக திரும்பி வந்துருக்குறதுல ரொம்ப சந்தோசப்படுறேன்."

பின் செல்ல