Published:Updated:

லைகா வேலையை விட்டுவிட்டு ரஜினியின் ‘வருங்கால கட்சி’யில் இணைந்தது ஏன்? ராஜூ மகாலிங்கம் பதில்

லைகா வேலையை விட்டுவிட்டு ரஜினியின் ‘வருங்கால கட்சி’யில் இணைந்தது ஏன்? ராஜூ மகாலிங்கம் பதில்
லைகா வேலையை விட்டுவிட்டு ரஜினியின் ‘வருங்கால கட்சி’யில் இணைந்தது ஏன்? ராஜூ மகாலிங்கம் பதில்

'இப்போ வருவார், அப்போ வருவார்' எனப் பலகாலம் அரசியல் ஆட்டத்தில் ஓரமாக நின்று விளையாடிக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்கள், ரஜினிகாந்த்தின் அரசியல் அறிவிப்பிற்குப் பிறகு, குஷியாகிவிட்டார்கள். 'யாருடனும் கூட்டணி கிடையாது. தனிக்கட்சியாகத்தான் என் கட்சி இருக்கும். ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போகிறேன்' என ஏராளமான அரசியல் வார்த்தைகளை பேசி, கடந்த சில நாட்களாக தமிழக அரசியலின் முக்கியப் புள்ளியில் நின்று கொண்டிருக்கிறார், நடிகர் ரஜினிகாந்த். 

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்துக்கு சினிமா மற்றும் சில அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக கவிஞர் வைரமுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அரசியலில் ரஜினி எதிர்கொள்ளவேண்டிய மூன்று முக்கியமான சவால்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். 

ரஜினியின் அரசியல் கட்சி சின்னமாக பாபா முத்திரை தேர்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.  மேலும், பாபா முத்திரையுடன் தாமரை சின்னமும் அதில் இருப்பதால் பாஜக கட்சிக்கு ரஜினி மறைமுகமாக ஆதரவு தரலாம் என்று ஒரு தரப்பினர் பேசி வந்தனர்.  இதையடுத்து, பாபா முத்திரையில் இருந்த தாமரையை நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார். தற்போது, கை மட்டுமே அதில் காணப்படுகிறது. அதன் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற வாசகங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், ரஜினியின் தனிக்கட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் உறுப்பினராக சேருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'லைகா'வில் உயர் பொறுப்பில் பணிபுரியும் ராஜூ மகாலிங்கம், ரஜினியின் அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டதாக செய்திகள் வந்த நிலையில், அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். 

“பி.காம் பட்டதாரியான எனக்கு ரஜினி என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய படங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிடுவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். அவரை தூரத்திலிருந்தே பார்த்து வந்த எனக்கு, அவருடன் சேர்ந்து பணியாற்றுகின்ற வாய்ப்பு  '2.0' படத்தின் மூலமாக கிடைத்தது. கடந்த மூன்றரை வருடமாக ரஜினியை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். தினம் தினம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைப் பார்த்திருக்கிறேன். ரொம்ப நேர்மையான மனிதர். எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் மனது புண்படாதபடி முகத்துக்கு நேராகப் பேசிவிடுவார். 'சூப்பர் ஸ்டார்' என்று உலகமே அவரைக் கொண்டாடினாலும் கொஞ்சம்கூட பந்தா இல்லாமல் சாதராணமான மனிதராகவே இருக்கிறார்.  

அவருடன் இந்த மூன்றரை வருடங்கள் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த நிறைய ரசிகர்களில், நானும் ஒருவர். இப்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் ரஜினி போன்ற ஒருவர் வந்தாக வேண்டும். ரஜினியே வந்துவிட்டார். அதனால், என்னால் முடிந்த அளவுக்கு ரஜினிக்கு சப்போர்ட் செய்யலாம் என்று என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவருடன் சேர்ந்துவிட்டேன். 'லைகா' நிறுவனத்தில் இன்டிபென்டட் கன்சல்டன்ட்-ஆகவே பணிபுரிந்தேன். தற்போது அந்த வேலையை விட்டுவிட்டேன். ஏதோ கண்மூடித்தனமாக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. அருகிலிருந்து ரஜினியைப் பார்த்துப் பழகியிருக்கிறேன். அப்போது அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு வருவதற்கு முன்னால் நான் ரஜினியிடம் சொல்வேன், 'நீங்கள், எப்போது கட்சி ஆரம்பிக்கிறீர்களோ, அப்போது உங்கள் கட்சியில் வந்து இணைந்துகொள்வேன்' என்று. அதற்கு, ரஜினியும் 'கண்டிப்பாக' எனப் பதில் சொல்வார்.

கட்சியில் நான் இணைந்திருப்பதால், பதவி ஆசையில் வந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அவர் என்னிடம் என்ன வேலை கொடுத்து செய்யச் சொன்னாலும், செய்வேன். ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு நிறைய இளைஞர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். அரசியலுக்கு நான் வரபோகிறேன் என்று ரஜினி சொன்னதற்கே தமிழ்நாட்டில் பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது. 

சமீபத்தில் எந்தத் தலைவருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்து, நான் பார்த்தது இல்லை. அவருடைய நேர்மைக்கும், உண்மைக்கும்தான் இவ்வளவு ரசிகர்கள் பெரும் எழுச்சியோடு கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக, இனி வரும் காலங்களில்  மாபெரும் எழுச்சி இளைஞர்கள் பக்கம் இருந்து ஏற்படும். நிறைய இளைஞர்களும் கண்டிப்பாக வந்து ரஜினியின் கட்சியில் சேருவார்கள்'' என்றார், ராஜூ மகாலிங்கம்.

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ளப்போவதாக நகைச்சுவை நடிகர் ஷாம்ஸ் தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் ரஜினியின் தனிக்கட்சியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.