Published:Updated:

’’6 மாசம்... 38 கிலோ... 1 கதை!" ஸ்லிம் சீக்ரெட் சொல்லும் இமான்

சுஜிதா சென்
’’6 மாசம்... 38 கிலோ... 1 கதை!" ஸ்லிம் சீக்ரெட் சொல்லும் இமான்
’’6 மாசம்... 38 கிலோ... 1 கதை!" ஸ்லிம் சீக்ரெட் சொல்லும் இமான்

மண்ணின் இசையை  அதிகம் வழங்குவதில் இளையராஜாவுக்கு அடுத்த இடம் இமானுக்கே. பட்டிதொட்டியெல்லாம் இவரது பாடல்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த நிலை மாறி, சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்கள் அனைவரும் இவரது ஃபிட்னஸ்  ரகசியத்தைப் பற்றி பேசத் தொடங்கினர். தனது அடுத்தடுத்த படைப்புகளில் பிஸியாக இருந்த இசையமைப்பாளர் இமானை அவரது குடும்பத்தினருடன் சந்தித்தோம். 

"கண்டிப்பா வெளிய பார்க்குற இமான் வீட்ல கிடையவே கிடையாது. வீட்ல பயங்கரமா என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவார். எங்களோட இருக்கும்போது மட்டும்தான் இந்தக் குறும்புத்தனம் எல்லாம். வெளிய போகும்போது அந்த முகமூடியை வீட்ல கழட்டி வெச்சுட்டுத்தான் போவார்.

இமான் எப்போதுமே பிஸியா இருக்கறதுனால ஒண்ணா சேர்ந்து நேரம் செலவழிக்க முடியலை. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எங்களுக்காக நேரம் ஒதுக்குறார். காலையில சர்ச், அதுக்கப்பறம் தியேட்டர், ரெஸ்டாரன்ட் மாதிரி இடங்களுக்குக் கூட்டிட்டுப் போவார். சமீபத்துல நாங்க மெரீனாவுக்குப் போனோம். எனக்கு பீச் ரொம்பப் பிடிக்கும். ஆனா, இமானை எங்களோட பொது இடங்களுக்குக் கூட்டிட்டு போறது ரொம்ப கஷ்டம். ரொம்ப நாளுக்கு அப்புறம் மெரினா பீச்தான் எங்களோட ஃபேவரைட்" என்று இமானை பற்றி சொல்லுகையில் அவரது மனைவி மோனிகாவின் முகத்தில் அப்படியொரு வெட்கம். 

"எப்படி திருமண பயணத்தை தொடர்ந்தீங்க?" என்று முதல் கேள்வியை மோனிகாவிடம் வைத்தோம். "என்னோட அப்பாவும், இமானோட அப்பாவும் நல்ல நண்பர்கள். சின்ன வயசுல இருந்தே நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். ஸோ, குடும்பத்துல பார்த்து முடிவு பண்ணதுதான். பின்னாடி காதலா மாறிருச்சு. இப்போ எங்களோட ரெண்டு குழந்தைகளும் இசையில் ரொம்ப ஆர்வமா இருக்காங்க" என்றார். 

"ஆமாங்க. குழந்தைகளை ஈர்க்கும் படியான பாடல்களை டியூன் பண்றதும் அவசியமா இருக்கு. வீட்ல உள்ள குழந்தைகளை ஈர்த்தாலே போதும் தானா... அந்தக் குடும்பம் மொத்தமும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்ப்பாங்க. உதாரணத்துக்கு ஜிங்குனமணி, ஃபை-ஃபை-ஃபை மாதிரியான பாடல்களோட வெற்றிக்குக் காரணம் குழந்தைகள்தான். மோனிகாவும் பசங்களோட சேர்ந்து பாட்டு க்ளாஸ்க்குப் போறாங்க. இசை கண்டிப்பா கத்துக்கணும்னு நான் அவங்க கிட்ட திணிச்சது இல்லை.  கல்வியோடு சேர்த்து மத்த கலையையும் கத்துக்கொடுக்க வேண்டியது நம்மளோட கடமை. அதுல இருந்து அவங்களோட விருப்பப்படி எந்தத் துறையை வேணும்னாலும் அவங்க தேர்ந்தெடுத்துக்கட்டும்" என்றார் இமான்.

"நிறைய அறிமுக பாடகர்களுக்கு வாய்ப்புக் கொடுக்குறீங்களே... இவங்கதான் இந்தப் பாடலுக்கு செட் ஆவாங்கனு எப்படி கணிக்குறீங்க?"

"சில பேரோட வாய்ஸை கேட்கும்போதே இவங்க எந்தமாதிரியான பாடல்களுக்கு செட் ஆவாங்கன்னு நம்மளால கணிக்க முடியும். நிறைய பேர் மெயில்ல அவங்களோட வாய்ஸ் ரெக்கார்டை அனுப்புவாங்க. சில டிவி ரியாலிட்டி ஷோ பார்க்கும்போது கடைசி பத்து சுற்றுகளுக்கு முன்னாடி எலிமினேட் ஆகுறவங்களோட திறன் என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும். ஊதா கலரு ரிப்பன் பாட்டு பாடுன ஹரிஹர சுதன், உம்மேல ஒரு கண்ணு பட்டு பாடுன ஜித்தின் ராஜ் எல்லாரும் ஆரம்பத்துலயே எலிமினேட் ஆன பசங்க. எந்த ஒரு டியூன் போட்டாலும் அதை ஒரு அறிமுக பாடகரை பாட வெச்சு ரெக்கார்டு பண்ணணும்னுதான் நெனப்பேன். நிறைய அனுபவம் இல்லாத பாடகர் கிட்ட போகணும்னு ஒருபோதும் நெனைச்சதே இல்ல. அப்படி அனுபவம் மிக்க வாய்ஸ் வேணும்னு நெனச்சா அது ஸ்ரேயா கோஷல் மட்டும்தான். சில சமயங்கள்ல பாடல்களோட பாவத்தையும், உணர்ச்சிகளையும் சரியா வெளிக்கொண்டு வர்றதுக்கு அனுபவம் மிக்க ஆட்களும் தேவைப்படுறாங்க." 

"இண்டஸ்ட்ரில இருக்குற மத்த மியூசிக் டைரக்டர்கள் கூட ஃப்ரெண்ட்லியா இருக்குறீங்களே..."

"அவங்களோட வாழ்க்கையில நம்ம ஒரு மறக்க முடியாத நபரா இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு ஒரு பாட்டு பிடிச்சிருந்ததுனா உடனே அந்த மியூசிக் டைரக்டரை போன்ல கூப்பிட்டு வாழ்த்து சொல்லிருவேன். ஒருத்தவங்களுக்கு கிடைச்ச முதல் வாய்ப்பு எப்போதுமே மறக்காது. அதுதான் அவங்களோட வெற்றியின் முதல் படி. அந்த நேரத்துல அவங்களோட திறமையை இனங்கண்டு பாராட்டினா அவங்க நம்மள மறக்கவே மாட்டாங்க. இதை ஒருவித சுயநலம்னு கூட சொல்லலாம். இன்னும் சொல்லப்போனா ஒரு பாடல் வெற்றியடையும் போது கூடவே அந்தப் படத்துல வேலை செஞ்ச அனைவரும் அந்த வெற்றியைக் கொண்டாடுவாங்க. அவங்களோட சந்தோஷத்துல என்னோட குடும்பமும் நல்லா இருக்கும். என்னோட குடும்பத்தினர் நல்லா இருக்கணும், நானும் வெற்றி பெறணும்னு சம்பந்தப்பட்டவங்க வாழ்த்துவாங்க. இனம்-மதம்-மொழி எல்லாத்தையும் தாண்டி நம்மள வாழ வைக்குறது இந்த நட்புதான். அதனால நட்பு பாராட்டுறதை சாதாரண விஷயமா நெனைச்சுராதீங்க. அதுல நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கு." 

"இசை சார்ந்த வளர்ச்சி'ன்றது சமீப காலமா அதிகமாயிருச்சு. மியூசிக் விஷயங்களை எப்படி பார்க்குறீங்க?" 

"இதை நான் நல்ல விதமாகத்தான் பார்க்குறேன். முதன் முதல்ல கரோக்கி கான்செப்ட்டை விசில் படத்துல நான்தான் ஆரம்பிச்சேன். அப்போ இந்த ரிவ்யூ எழுதறவங்க இந்த கரோகிக்கும் சேர்த்து எழுதுனாங்க. "என்னவென்றே தெரியவில்லை. வரிகளே இல்லாமல் வெறும்இசை மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது இறுதிவரை'னு எழுதியதைப் பார்த்து நாலு நாள் விடாம சிரிச்சுக்கிட்டே இருந்தேன். கரோக்கி பத்தி கூட தெரியாத இசை விமர்சகர்கள்லாம் கூட அப்போ இருந்துருக்காங்க பாருங்க. ஆனா இப்போ நிறைய பேர் அப்ளிகேஷன்ஸ் மூலமா பாடல்கள் பாடி வெளியிடுறாங்க. நம்ம வெளியிடுற கரோக்கியை நிறைய நிகழ்ச்சிகள்லயும் உபயோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அது அவங்களுக்கு ஒருவிதமான சந்தோஷத்தை கொடுக்குது. ஒரிஜினல் இசையோடு அவங்க பாடுறதுக்கான வாய்ப்பு கிடைக்குது. சில நேரங்கள்ல அதை தவறாகவும் பயன்படுத்தியிருக்காங்க. நம்மளோட கரோக்கியை எடுத்து பிற மொழிகள்ல பாடல்களா மாத்தியிருக்காங்க. அதுக்கான விசாரணையெல்லாம் கூட நடந்துச்சு. எவ்வளவுதான் இருந்தாலும் இசை சார்ந்த வளர்ச்சியை நான் பாஸிட்டிவாதான் பார்க்குறேன்.

‘’நீங்க யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டதே இல்லைனு சொன்னாங்களே..?"

"ஒருத்தவங்க கூட வேலை பார்க்கணும்ன்னா அபிமானம் பெயரில் மட்டும்தான் இருக்கணும். நம்மளோட தன்மானத்தை இழந்து எந்த ஒரு வேலையையும் செய்யக் கூடாதுனு நெனப்பேன். சினிமான்றது மாயாஜால உலகம். இதுல என்கூட நண்பர்களா இருந்தவங்க கூட நான் வேலை பார்த்ததே இல்லை. நம்ம பத்து தடவை ஒருத்தவங்களுக்கு போன் பண்ணி பேசுறதுனால எதுவும் மாறப்போறது இல்ல. அவங்களுக்கா தோணுச்சுனாதான் நம்மள இசையமைக்கக் கூப்பிடுவாங்க." 

"படத்துல நடிக்குறதுக்காகத்தான் எடையைக் குறைத்திருக்கீங்கனு பரவலா பேசிக்கிறாங்களே..." 

"கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்ல 117-கிலோல இருந்து 79 கிலோவா குறைஞ்சுருக்கேன். இப்போ 75-க்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். சினிமாகாரவங்கனாலே 'லைப்போசக்ஷன்'(liposuction) மூலமா உடல் எடையைக் குறைப்பாங்கனு மக்கள் மத்தியில் பொதுவான கருத்து இருக்கு. அப்படி அறுவை சிகிச்சை மூலமா செயற்கை முறையில உடல் எடையைக் குறைத்தவர்களும் இருக்காங்க. "இந்த டாக்டர்கிட்ட போங்க சீக்கிரமா ஒருமாசத்துல எடையைக் குறைச்சுரலாம்"னு என்கிட்ட நிறைய பேர் சொல்லிருக்காங்க. ஆனா, எனக்கு அதுல துளிகூட விருப்பம் இல்லை. எவ்வளவு மாசம் ஆனாலும் பரவாயில்ல, உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் மூலமா ஆரோக்கியமான முறையில மெலியணும்னு உறுதியா இருந்தேன். அப்படி படிப்படியா ஆறுமாசம் தொடர்ந்து முயற்சி பண்ணிதான் எடையைக் குறைச்சேன். ஒல்லியான உடனே நீங்க கேட்குறமாதிரி எல்லாரும் சினிமாவுல நடிக்க போறீங்களானு கேட்டாங்க. சுசீந்திரன் சார்தான், "ஓகேன்னா சொல்லுங்க...கதை ரெடியா இருக்கு"னு சொல்லிட்டு இருந்தார். ஆனா, என்னோட விருப்பம் அது கிடையாது. எனக்குக் கல்யாணம் பண்ணும் போது என் மனைவி கிட்ட என்னை ஒரு மியூசிக் டைரக்டர்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. திடீர்னு அதையெல்லாம் விட்டுட்டு நடிக்கப் போனா என்னுடைய வீட்லயும் என்ன நெனப்பாங்க?" என்றதும் இமானின் மனைவி மோனிகாவிடம், ’அவர்தான் நடிக்க மாட்டார் நீங்க பாடுவீங்களா?" என்று கேட்டதற்கு, "அவருக்கு வேலை நல்லா போயிட்டு இருக்கு. எனக்கும் பாட்டுக்கும் ரொம்ப தூரம். அவர் எப்படி எனக்காக நடிக்காம இருக்கிறாரோ, அதேமாதிரி அவருக்காக நானும் பாடாம இருக்கேன். அவருடைய பாடல்கள் நல்லா இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி முகத்துக்கு நேரா சொல்லிடுவேன். இப்போதைக்கு அதுமட்டும்தான் என்னுடைய வேலை" என்றார்.