Published:Updated:

``ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..!” - சூர்யா

``ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..!” - சூர்யா
``ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..!” - சூர்யா

“எல்லாருக்கும் ஹாப்பி நியூ இயர். எல்லோருடைய கனவுகளும் நிறைவேற வாழ்த்துகள். சினிமா துறையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் ரஜினி சார், கமல் சார், விஷால் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்'' என்று பேச ஆரம்பித்தார் சூர்யா. 

“என்னுடைய சினிமா கெரியரில் எனக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் ஞானவேல் ராஜா. அவரோடு சேர்ந்து நான் எடுத்த முடிவுகள் எல்லாம் முக்கியமாக இருந்தது. அப்படி இருந்த போது நடந்த ஒரு சம்பவம்தான் விக்னேஷ் சிவனை சந்தித்தது. விக்னேஷ் சிவனை சந்திக்கப் போறேன்னு சொன்ன போது டைரக்டர் ஹரி சார், “நீங்கள் கண்டிப்பாகப் பண்றீங்க’’னு' சொன்னார். ‘சார், இன்னும் கதையை கேட்கலை சார்னு’’ சொன்னேன். ''அது எல்லாம் பரவாயில்லை... கண்டிப்பாக விக்னேஷ் சிவன் கூட பண்ணிருங்க’’னு' சொன்னார். வீட்டிலும் இது சம்பந்தமாக டிஸ்கஷன் போகும் போது தங்கை, தம்பி எல்லோரும் கண்டிப்பாகப் பண்ணிருங்கனு சொன்னாங்க. 

எல்லோருக்குமே விக்னேஷ் சிவனின் பாடல்கள், க்ரியேட்டிவ் விஷயங்கள் எல்லாம் ஈர்த்து இருக்கிறது. அவருடன் ஃபர்ஸ்ட் மீட்டிங் போது, '' நான், ஏற்கெனவே ஒரு கதை வைத்திருக்கிறேன். விஜய் சேதுபதிக்கு, சிவகார்த்திகேயனுக்கு செட் ஆகும். உங்களுக்கு எப்படினு தெரியல, பண்ணலாம்''னு சொன்னார். இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தது. 1987 இல் நடந்த ஒரு சம்பவத்தை வைத்துதான் 'ஸ்பெஷல் 26' படம் எடுத்திருப்பாங்க. இந்த டிஸ்கஷன் எப்படி இருக்க போகுதுனு நினைத்து கொண்டேதான் பேச ஆரம்பித்தேன். பட், விக்னேஷ் சிவன் அந்தக் கதைக்குள்ளே போகலை. அவர் எடுத்து கொண்ட ரூட்டே வேறு வழியில் போனது. அது என்னை ரொம்ப கவர்ந்தது. அதுதான் என்னை ஒரு வருஷம் விக்னேஷ் சிவனுடன் ட்ராவல் பண்ண வைத்திருக்கிறது.

நாட்டைக் காப்பாற்றப் போறேன், ஊரைக் காப்பாற்றப் போறேன்னு புறப்பட்டவன் ரிவர்ஸ் கியர் போட்டு திரும்பி வந்த மாதிரி இந்தப் படத்துக்காக வந்தேன். எனக்குப் பிடித்த படங்கள் என்றால் ‘சத்யா’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’னு சொல்லுவேன். அந்த மாதிரி படங்களின் சாயல் விக்னேஷ் சிவனின் கதையில், டைரக்‌ஷனில் தெரிந்தது. 'தானா சேர்ந்த கூட்டம்'னு அவர் டைட்டில் சொன்ன போது யாருமே கொஞ்சம் யோசிங்கனு சொல்லவில்லை. 

விக்னேஷ் சிவன் பாஸிட்டிவான ஃபெர்ஷன். என்னுடைய எல்லாப் படங்களிலும் நான் ரொம்ப கோபமாக இருப்பேன். இந்தப் படத்தில் சுத்தமா கோபமே இல்லை. விக்னேஷ் சிவன் சொல்லுவார், “எதுக்கு சார் கோபப் படணும். கோபம் வேண்டாமே”னு. அது எல்லாமே எனக்கு புதுசாக இருந்தது. சில டயலாக்ஸ் பேசும் போதுகூட நான் பேச முடியாமல் நின்னு இருக்கேன். “எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, நீங்கள் பேசுற மாதிரி எனக்கு பேச வரலை”னு சொல்லிருக்கேன். அவருடன் வேலை பார்த்தது எனக்கு நல்ல அனுபவம். 

நிறைய பேர் என் லுக்கைப் பார்த்து, “சூர்யாவை இப்படித்தான் பார்க்கணும்னு நினைச்சோம்”னு சொல்லுறாங்க. அது எல்லாத்துக்கும் காரணம் விக்னேஷ் சிவன்தான். பாடல், போஸ்டர்ஸ் எல்லாம் ஆடியன்ஸூக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கு. ஏன்னா, என்னுடைய படம் பண்டிக்கைக்கு ரிலீஸ் ஆகி ஒரு ஏழு வருஷம் ஆச்சு. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுறது  ஹாப்பியாக இருக்கு. 

எப்போதும் படம் போடுவதற்கு முன்னாடி, “புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு”னு ஒரு வாய்ஸ் வரும். அந்த கார்டு இந்தப் படத்துக்கு தேவைப்படவில்லை. அப்படி இந்தப் படம் வந்துருக்கு. சென்சார் போர்ட்டிலிருந்தே சொல்லிருக்காங்க, இப்படி கார்டே போடாமல் ஒரு படம் வந்து ரொம்ப நாள் ஆச்சுனு. நிறைய நல்ல விஷயங்கள் படத்தில் விக்னேஷ் சிவன் பண்ணியிருக்கிறார். ஃபர்ஸ்ட் டே என் படத்தை தியேட்டரில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தியேட்டரில் பார்க்கணும்னு ஆசைப்படுறேன். 

ஒளிப்பதிவாளர் தினேஷ் பத்தி சொல்லணும், ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் ஷூட்டிங் நேரம், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. தேர்வான மாணவர்களுக்கு கோல்டு மெடல் போட சொல்லி. நானும் விழாவுக்கு சென்றேன். அப்போது எல்லா மாணவர்களுக்கும் என் கையால் கோல்டு மெடல் போட்ட போது, ஒரு விஷயம் தோணுச்சு. அதாவது, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்திருந்தாலும் ஒரு டைரக்டர், ஒளிப்பதிவாளரிடம் வந்து உதவியாளராக சேருவதற்கு நான்கு வருடங்களாவது அவங்க போராட வேண்டியுள்ளது. அதனால், இன்டன்ஷிப் மாதிரி ஒரு வாய்ப்பை நம்ம ஏன் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாதுனு ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ரத்னவேல், கெளதம் சாரிடம் உதவியாளராக இரண்டு பசங்களைச் சேர்த்து விட்டேன். அப்படி ஒளிப்பதிவாளர் ரத்னவேல் சாரிடம் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ். அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும் போது ரொம்ப ஹாப்பியாக இருக்கு. என்னையும் ரொம்ப அழகாக காட்டியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்டர் கிரண் என்னுடைய முதல் படம் ‘நேருக்கு நேர்’ல் வேலை பார்த்திருக்கிறார். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் கிரணுடன் வேலை பார்க்க சான்ஸ் கிடைத்திருக்கு. ஸ்டன்ட்  திலீப் சுப்புராயன் செய்திருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எப்படி ஸ்டன்ட் பேசப்பட்டதோ அப்படியே இந்தப் படத்திலும் பேசப்படும். 

மியூசிக் டைரக்டர் அனிருத். அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. அனிருத், விக்னேஷ் சிவன் இவங்க இரண்டு பேரும் மியூசிக் ரூமில் செய்யக்கூடிய மேஜிக் எல்லாரும் பார்க்கணும். அவ்வளவு நல்லா இருக்கும். 

பாகுபலி செட்டிலிருந்து வெளியே வரும் போது என்ன ஒரு பிரமாண்டம் இருக்குமோ அதுதான் ரம்யா கிருஷ்ணன் மேம்மை பார்க்கும் போது இருக்கும். கண்ணாலே மிரட்டுவாங்க. நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். 'என்ன இவங்க இப்படிப் பண்ணுறாங்கனு' ரொம்ப படப்படப்பாக இருக்கும் மனசுக்குள்ளே. அவங்க ஃபேமிலி, டிவி சீரியல் என்ன எல்லாத்தையும் மேனேஜ் பண்ணுறாங்க. அவங்களுக்குப் பெரிய சல்யூட்.

படத்தின் ஹீரோயின் கீர்த்தியை ஐந்தாவது கிளாஸில் பார்த்தது. கீர்த்தியைப் பார்க்கும் போதுதான் தோன்றுகிறது நம்ம நடிக்க வந்து இருபது வருஷம் ஆச்சுனு. தம்பி ராமையா, செந்தில், கார்த்தி சார் இவங்க மூன்று பேரிடமும் செம எனர்ஜி இருக்கும். பொங்கலுக்கு ரிலீஸாகுற 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை மக்கள் பெரிய ஹிட் அடித்து கொடுக்கணும்'' என்று சொல்லி முடித்து கொண்டார் நடிகர் சூர்யா.