Published:Updated:

ரிதங்களின் `காதலன்’, மொழிகளை இணைக்கும் ‘இசைஞன்’ - லவ் யூ ரஹ்மான் ! #HBDRahman

ரிதங்களின் `காதலன்’, மொழிகளை இணைக்கும் ‘இசைஞன்’ - லவ் யூ ரஹ்மான் ! #HBDRahman
News
ரிதங்களின் `காதலன்’, மொழிகளை இணைக்கும் ‘இசைஞன்’ - லவ் யூ ரஹ்மான் ! #HBDRahman

ரிதங்களின் `காதலன்’, மொழிகளை இணைக்கும் ‘இசைஞன்’ - லவ் யூ ரஹ்மான் ! #HBDRahman

இசை என்பது காற்று ஊடகத்தில் பயணிக்கும் உணர்வுள்ள ஓர் ஓசை. அதன் சுபாவம் குரலாக இருக்கலாம் கருவிகளாக இருக்கலாம், சாதாரண சப்தங்களாகவும் கூட இருக்கலாம். ரஹ்மானின் பிரம்மாண்ட ஒலிக்கோர்ப்பில் வந்த "வீரபாண்டி கோட்டையிலே" பாடலும் அதே இசையின் துளி தான், அதே படத்தின் கருவிகளே இல்லாமல் இசைத்த "ராசாத்தி"யும் அதே இசையின் மற்றொரு துளிதான்.

இசைக்கு மொழியுமில்லை, தேசமுமில்லை என்பது பரவலாக்கப்பட்ட ஒரு கூற்று. ஆனால், இது எந்த அளவில் நிதர்சனம் என்பது பல திசைகளின் கேள்விகளுக்கு உட்பட்ட ஒன்று. ஏனென்றால், இசை என்பது வெறும் இசைக்கருவிகள் எழுப்பும் ஓசை என்றல்லாமல், அது மொழியைத் தூக்கி சுமக்கும் ஊடகமாகத்தான் நம் வாழ்வியலில் அமைந்திருக்கிறது. இசை மொழியோடும் கலாசாரத்தோடும், பாடப்படும் நிலத்தோடும், அனைத்து நிலையிலும் தொடர்புகொண்டிருக்கிறது. தொன்றுதொட்டு நமக்கு பழக்கப்படுத்தப்பட்ட இசை யாவுமே மொழி சார்ந்ததுதான். இன்னும் சொல்லப்போனால் நமக்கு இசையென்றால் அது சினிமா இசை. அதே சினிமாவைப் பொறுத்தவரையில் இசையென்றால் அது பாடல்கள். பின்னணி இசை எல்லாம் ராஜாவின் காலத்துக்குப் பிறகுதான் தனித்து பேசப்பட்டது. அதுவரை இசையமைப்பாளர் என்றால் பாடலின் வரிகளின் பயணத்துக்கு ட்யூன் எனப்படும் ஒரு பாதையை செயல்படுத்தி உருவம் கொடுக்கும் ஒரு படைப்பாளி. 

ரஹ்மானை பொறுத்தவரை மொழிகள் கடந்த இசையை அவர் வழங்கி வந்தாலும் ரஹ்மானின் இசையென்றால் அவை பாடல்களாகத்தான் அறியப்படுகின்றன. பின்னணி இசைகூட ஏதோ ஒரு வரியின் சாயலில் இருந்தால்தான் தேவையான காட்சியமைப்புகளில் சரியாக எடுபடுகிறது. ஆரம்ப காலங்களில் ரஹ்மான் கொடுத்த ஒலியை தமிழ்நாட்டின் இசையாக யாரும் பார்க்கவில்லை. ஏன் இந்திய இசையாகக் கூட இல்லாமல் மேற்கத்திய இசையாகவும், கம்ப்யூட்டர் தயாரிக்கும் இசையாகவும் வேறொரு தளத்தில் தள்ளிவைத்து பார்க்கப்பட்டது. அது அந்த காலகட்டத்து இசையின் பரிணாம வளர்ச்சி. ரஹ்மானும் கூட இந்தக் கூற்றை மெய்யாக்கும் விதத்தில் மேற்கத்திய பாணியில் பல பாடல்களை மேற்கத்திய இசையுக்தியில் இசையமைத்து வந்தார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய மொழிகளில் தமிழும் இந்தியும் தான் ரஹ்மானுக்கு அதிக பாடல்கள் தந்தவை. ரஹ்மான் நேரடியாக தமிழ் படங்களுக்கு இசையமைத்து அவை வேறுமொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும்போது, அதே ட்யூனுக்கு எந்த மொழியில் மொழி மற்றம் செய்யப்படுகிறதோ, அதே மொழியில் வரிகள் கோக்கப்படும். வேறுமொழியிலிருந்து தமிழ் மொழிக்கு ரஹ்மான் இசை வந்தாலும் இதே கதைதான்.  இசை ரசிகனுக்கு இரண்டு வெவ்வேறு மொழியில் இருக்கும் மொழியழகை விட அந்த இசை உள்ளூர ஏற்படுத்தும் கிளர்ச்சியைப்பொறுத்தே ரசனையும் விருப்பமும் அமைகிறது. ஆனால், பாடல்களை விரும்பி கேட்பவனுக்கு அவன் முன்னே இரண்டு கோடுகள் இருக்கின்றன. ஒன்று மொழி, இரண்டாவது இசை. பல இடங்களில் மொழி நமக்கு சாதகமாக அமைந்தாலும் சில இடங்களில் இசையின் உணர்வும் குரலும் மேலோங்கி விடுகிறது. 

ஒரே இசை, வெவ்வேறு மொழி:

ரஹ்மான் ஆரம்பகால பாடல்கள் பெரும்பாலும் தமிழ்ப்பாடல்களாக அறியப்பட்டு பின்னர் இந்திமொழிக்குச் சென்றவை. அதனால் அவையனைத்தும் தமிழ்ப்பாடல்கள்தான். இன்னொருபுறமிருந்து பார்க்கும்பொழுது இந்தியிலிருந்து தமிழுக்கு வந்தாலும் அதன் மூலம் இந்திப்பாடல்தான்.

'ரோஜா' தொடங்கி 'ஓகே கண்மணி' வரை உதாரணமாக அனைத்து மணிரத்னம் படங்களையுமே தமிழிலிருந்து இந்தி சென்ற தமிழ்பாடல்களாக எடுத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரையில் இசையை மொழியா என்று கேட்டால், மொழியை சிதைக்காத இசையின் பக்கம் நான் நிற்பேன். ரோஜாவாக இருக்கட்டும் பம்பாயாக இருக்கட்டும், எல்லாமே, முதல் விருப்பமாக தமிழ்பாடல்கள்தான் இருக்கின்றன. ரோஜா, பம்பாய் போன்றவை தமிழிலிருந்து இந்தி சென்றதால் அந்த எண்ணம் வந்திருக்கலாம் என்று நினைத்தாலும் இந்தியிலிருந்து தமிழ் வந்த தில்சே (உயிரே), குரு போன்ற திரைப்படங்களும் தமிழ்ப்பாடல்களையே உயர்த்தி நிற்கவைக்கிறது. அது நிச்சயம் மொழி செய்யும் செயல்தான். "தில்சே" படத்தின் "சத்ரங்கி ரே" பாடலின் பாடல் பதிவு சயமத்தில் இந்தி பாடலாசிரியர் குலசார் மணிரத்னத்திடம் முதலில் வைரமுத்து எழுதி முடிக்கட்டும் அதை வைத்து பின்னர் நான் எழுதிக்கொள்கிறேன் என்று கேட்டிருக்கிறார்.

"என்னுயிரே" பாடலை வைரமுத்து எழுதி பதிவுசெய்த பின்னர் தான் குல்சாரின் "சத்ரங்கி ரே" பதிவுசெய்யப்பட்டது.  ஆனால், இப்படி மொழி ஓங்கி நிற்பது அனைத்து இடத்திலும் நிகழ்ந்துவிடுவதில்லை. முன்பே சொன்னது போல மொழியழகா, இசைகொடுக்கும் உணர்வா என்ற கேள்வியில் சில நேரங்களில் பாடல் கொடுக்கும் உணர்வில் மொழி சற்று பின்னுக்குத்தள்ளப்படுகிறது. அப்படியும் சில பாடல்கள் இருக்கின்றன. 

அதில் ஒன்றாக "தாள்" படத்தில் "தாள் சே தாள் மிளா" பாடலைச் சொல்லலாம். இதில் தமிழ் கொடுக்கும் உணர்வைவிட இந்தியில் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும். அதே போல "ஸ்வதேஷ்" படத்தில் "யூன்ஹி சலா’’ (https://www.youtube.com/watch?v=LuTy9KGKNbA)" பாடல் தமிழின் "உன்னைக்கேளாய்" விட சற்று அதிகம் ஈர்த்திருந்தது. அதற்கு முக்கியகாரணம் ஒரே அலைவரிசை கொண்ட உதித் நாராயண், கைலாஷ் கேர் குரல்கள். அதனூடே இருவருக்கும் சளைக்காத வேறொரு நிறத்தில் ஹரிஹரனின் குரல். தமிழில் TL மஹாராஜனும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அடுத்து, 'ராவணன்' படத்தின் "காட்டுச்சிறுக்கி" பாடல். இதில் கேட்கும் இனிமையை இந்தியின் "ராஞ்சா ராஞ்சா (https://www.youtube.com/watch?v=Z3NK1mGS7ck)" ஒரு புள்ளியளவு அதிகம் தரும். ரேகா பரத்வாஜின் குரல் அதன் இசை.

தமிழில் அஜித் நடித்த "வரலாறு", "காட்பாதர்" என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகியிருந்தது. தமிழின் "இன்னிசை அளபெடையே" பாடல் கன்னடத்தில் "சரிகம சங்கமவே https://www.youtube.com/watch?v=yj2SbBa-xI4 என்று ஸ்வேதா மோகனின் குரலில் வந்திருந்தது. தமிழ் பதிப்பு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருந்தாலும் இந்த பாடலின் இனிமை குறையாதிருக்கும்.

 மிகச்சமீபத்தில் மொழியை விட இசையுணர்வு அதிகம் கிளர்ந்தெழுந்த பாடல் "காற்று வெளியிடை"யின் "வான் வருவான்". இதே பாடல் தெலுங்கு மொழியில் "செலியா" படத்தில் "மெய்மருப்பா மெருப்பா" (https://www.youtube.com/watch?v=IDgoamTeJOg) பாடலாக வந்திருந்தது. இரண்டிலுமே ஷாஷாவின் குரல் தான். ஆனால், தமிழை விட தெலுங்கில் அந்த பாடல் சொல்லவரும் இனிமையும் அமைதியும் முழுமையாகக்கிடைக்கும். தெலுங்குமொழி எப்பொழுதுமே இசைக்கான மொழி.

இப்படி சில சில எடுத்துக்காட்டை மட்டுமே சொல்லியிருந்தாலும் ரஹ்மானின் பாடல்களை பொறுத்தவரையில் தமிழ்ப்பாடல்களாக - வேற்றுமொழிப்பாடல்களா என்று வந்தால் தமிழ்மொழிக்காக முதல் விருப்பம் தமிழ்ப்பாடல்கள்தான். அப்படி மொழிமாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான பாடல்களை வைரமுத்துவும் வாலியும் தான் எழுதியிருக்கிறார்கள்.

ராவணனின் தமிழ்பாடல்களை வைரமுத்துவும், ஹிந்தி பாடல்களை குல்சாரும் எழுதியிருந்தார்கள். இந்திப்பாடல்கள் சிறப்பாய் வந்திருக்கிறதா இல்லை தமிழில் சிறப்பாக வந்திருக்கிறதா என்ற ஒரு விவாதம் ஏற்பட்டு படக்குழு தமிழ்ப்பதிப்புதான் சிறந்தது என்று முடிவுசெய்திருக்கிறார்கள். இதை அறிந்துகொண்ட வைரமுத்து "இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். காரணம் தமிழ் மொழியின் அழகு. குல்சார் என்னைவிட பெருங்கவிஞர், ஆனால், இந்தியைவிட தமிழ் சிறந்த மொழி. அதனால்தான் தமிழ்ப்பதிப்பு சிறப்பாய் வந்திருக்கிறது" என்று கூறினார். "உசுரே போகுதே" பாடலில் வைரமுத்து கட்டமைத்திருக்கும் உணர்வையும் "பெஹனேதே முஜே"வின் வரிகளையும் ஒப்பீட்டுச்செய்து பார்த்தால் இதை நுட்பமாக விளங்கிக்கொள்ளலாம்.

"ஸ்வதேஷ்" படத்தின் "ஏ ஜோ தேஷ் ஹை தேரா" பாடல் ரஹ்மானின் குரலில் அத்தனை இயல்பாய் இருந்தாலும் அது வாலியின் வரியில் "எந்தன் தேசத்தின் குரல்" என்று வரும்போது அதன் அழகு வேறுவிதமாய் இருக்கிறது. "சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!" என்று ரஹ்மான குரலில் அதைக் கேட்கும்பொழுது அது மொழிமாற்றம் செய்யப்படாத பாடலாகவே எண்ணிக்கொள்ளத் தோன்றும். வாலியின் மொழி அங்கு உயர்ந்து நிற்கிறது.

என்னதான் மொழி வெவ்வேறாக இருந்தாலும் இசை அங்கும் இங்கும் எங்கும் ரஹ்மானின் உருவில் இருக்கிறது. 

அந்த இசையின் உருவத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.