Published:Updated:

மந்திர இளவரசியைக் காப்பாற்றும் த்ரில் பயணம்! #MyLittlePonyTheMovie

சுரேஷ் கண்ணன்
மந்திர இளவரசியைக் காப்பாற்றும் த்ரில் பயணம்!  #MyLittlePonyTheMovie
மந்திர இளவரசியைக் காப்பாற்றும் த்ரில் பயணம்! #MyLittlePonyTheMovie

My Little Pony: Friendship Is Magic  என்பது குழந்தைகளுக்கான தொலைக்காட்சி அனிமேஷன் தொடர். Hasbro என்கிற அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்தப் பிரபலமான தொடர் 2010-ம் ஆண்டு தொடங்கி ஏழு சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. Pony எனும் சிறிய குதிரையின் உருவத்தை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட இந்தத் தொடர், My Little Pony: The Movie என்கிற பெயரில் தற்போது திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. 

‘நட்புதான் உன்னதமானது’ என்பதை தங்களின் கொள்கையாக வைத்திருக்கும் ஒரு குழு தங்களின் அன்பால் எவ்வாறு பகைவர்களையும் கவர்ந்து நண்பர்களாக்கிக் கொள்கிறது என்பதை இந்தத் திரைப்படம் மிக சுவாரஸ்யமாக விளக்குகிறது. 

Equestria என்பது பேரரசு அமைந்திருக்கும் இடம். ‘நட்புத் திருவிழா’வை கொண்டாடுவதற்காக அங்குள்ளவர்கள் கோலாகலமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதன் இளவரசியான ட்விலைட் ஸ்பார்க்கிள் பதற்றமாக இருக்கிறது. இந்த நிகழ்வை நடத்துவது அதற்கு புது அனுபவம் என்பதால் ‘தன்னால் சரியாகச் செய்ய முடியுமா’ என்கிற பதட்டத்துடனும் தாழ்வுணர்வுடனும் இருக்கிறது. அதன் தோழிகள் உத்வேகமான வார்த்தைகளைச் சொல்லி துணிச்சலை அளிக்கின்றன. 

சில நகைச்சுவையான தடுமாற்றங்களுடன் அந்த விழா தொடங்கும் சமயத்தில் பெரிய இடையூறு ஒன்று குறுக்கிடுகிறது. டெம்பஸ்ட் என்கிற யூனிகார்ன், தனது அடியாட்களான அரக்க உருவங்களுடன் அங்கு வருகிறது. அவர்களின் முன்னால் குழந்தைகள் போல் உள்ள போனிக்கள் பயந்து நடுங்குகின்றன.

டெம்பஸ்ட் புயல் அரசனின் வலதுகரம். அதன் ஒற்றைக்கொம்பு புயல் அரசனால் பறிக்கப்பட்டிருக்கிறது. ‘நான் ஏவும் பணிகளை முடித்தால் உன் கொம்பை மீட்டுத் தருவேன்’ என்று புயல் அரசன் தந்திருக்கும் வாக்கை நம்பி அதற்கு அடியாளாக பல அநீதியான செயல்களைச் செய்கிறது.  

தன்னிடமுள்ள மந்திரசக்தியால், சில இளவரசிகள் உட்பட அங்குள்ள போனிக்களை, கல்லாக உறையச் செய்கிறது டெம்பஸ்ட். ஆனால், ட்விலைட் ஸ்பார்க்கிளும் அதன் தோழிகளும் மட்டும் எப்படியோ அங்கிருந்து தப்புகிறார்கள். இன்னொரு பிரதேசத்தின் ராணியை எப்படியாவது தேடிச் சந்தித்து அவர்களின் உதவியைக் கோரி தங்களின் இடத்தைப் போராடி மீட்பது அவர்களின் நோக்கம்.

“இளவரசியைத் தப்பிக்க விட்டு விட்டாயா, எப்படியாவது அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தூக்கி வா” என்று உறுமுகிறது புயல் அரசன். அனைத்து இளவரசிகளின் மந்திர சக்திகளையும் தன்னுடன் இணைத்து வலிமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

மீட்பிற்கான உதவி தேடி ட்விலைட் ஸ்பார்க்கிளும் தோழிகளும் செல்லும் பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. அளவில் சின்னஞ்சிறு உருவங்களான அவர்கள், துரத்தி வரும் டெம்பஸ்டைச் சமாளிப்பது ஒருபுறம் என்றால் வழியில் வரும் ஆபத்துகளை எதிர்கொள்வது பெரிய சவாலாக இருக்கிறது. 

அவர்களுக்கு என்னவாயிற்று, தங்களின் நாட்டை மீட்டார்களா, கல்லாக உறைந்த இதர போனிக்கள் என்னவானார்கள் என்பதையெல்லாம் பரபரப்பும் சுவாரஸ்யமுமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

இது மியூசிக்கல் படம் என்பதால் காட்சிகளில் வரும் பாடல்கள் அனைத்தும் இனிமையானதாக இருப்பதோடு மட்டுமல்லாது வண்ணமயமான வசீகரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இசை: Daniel Ingram. 

ட்விலைட் ஸ்பார்க்கிளின் தோழிகளாக வரும் பிங்க்கி பை, ரெயின்போ டேஷ், ரேரிட்டி, ஆப்பிள்ஜாக், ப்ளட்டர்ஷை மற்றும் உதவியாளர்களான டிராகன், ஸ்பைக் ஆகியவை ஒவ்வொன்றும் விதம் விதமான குணாதிசயங்களுடன் இருக்கின்றன. இவையெல்லாம் தொலைக்காட்சி தொடரில் வரும் அதே பாத்திரங்கள்.

எல்லாவற்றிற்கும் அதீதமாக உற்சாகப்படும் பிங்க்கி பையின் குறும்புகள் ஒருபுறம் என்றால் வானவில்லை உருவாக்குவதின் மூலம் ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் டேஷ்ஷின் அழிச்சாட்டியம் இன்னொருபுறம். 

வானூர்தியில் வந்து விழும் போனிக்களை அங்கு பணிபுரியும் ராட்சத கிளிகள் மிரட்டுவதும், உணவு இடைவேளை வந்தவுடன் எல்லாவற்றையும் விட்டு விட்டு சாப்பிட அமர்வதும் நகைச்சுவை. இரண்டு குழுக்களும் உடனே நண்பர்களாகி பாடி நடனமாடும் காட்சி அழகானது. போனிக்களை விற்பதற்காக தந்திரம் செய்யும் பூனையொன்று மனம் திருந்தி அவர்களுக்கு உதவ முனைவது குறிப்பிடத்தக்கது. போனிக்களின் அப்பாவித்தனங்களையும் நட்பு உணர்ச்சியையும் கண்டு தன் உயிரைக் கொடுத்து டெம்பஸ்ட் அவர்களுக்கு உதவுவது நெகிழ்ச்சி. 

தொலைக்காட்சி தொடரில் குரல் தந்த நட்சத்திரங்களே திரைப்படத்திற்கும் பங்களித்திருக்கிறார்கள். சில புதிய குரல்களும் இணைந்துள்ளன. விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதொடு வணிகரீதியாகவும் வெற்றியடைந்த இந்த அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Jayson Thiessen.