Published:Updated:

குரு இளையராஜா சார், ஃப்ரெண்ட் பவதாரணி, திறமைக்கு மேடைக் கச்சேரி!" - வீணைக் கலைஞர் புண்யா ஶ்ரீநிவாஸ்

குரு இளையராஜா சார், ஃப்ரெண்ட் பவதாரணி, திறமைக்கு மேடைக் கச்சேரி!" - வீணைக் கலைஞர் புண்யா ஶ்ரீநிவாஸ்
குரு இளையராஜா சார், ஃப்ரெண்ட் பவதாரணி, திறமைக்கு மேடைக் கச்சேரி!" - வீணைக் கலைஞர் புண்யா ஶ்ரீநிவாஸ்

"சமீபத்தில் வைரலாகி இருக்கிற 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'சொடக்குமேல' வீடியோ மேக்கிங் சாங்ல வீணை வாசிக்கிற மாதிரி சில விநாடிகள் வந்துபோவேன். அதைப் பார்த்துட்டு, 'நீங்க சினிமாவிலும் வொர்க் பண்றீங்களா?'னு பலரும் கேட்கிறாங்க. 27 வருஷமா நான் சினிமாவில் வொர்க் பண்ணிட்டுதான் இருக்கேன். அந்தப் பிம்பத்தை வெளிக்காட்டிக்க விரும்பலை. எல்லாத் தளங்களிலும் பங்களிக்கக்கூடிய வீணைக் கலைஞராக இருக்கவே விருப்பப்படுறேன்" - தொடக்கத்திலேயே தன் எண்ணத்தை வெளிப்படையாக உடைக்கிறார், புண்யா ஶ்ரீநிவாஸ். பிரபல வீணைக் கலைஞர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்காகப் பல நூறு திரைப்படங்களில் பணியாற்றியவர். 

"இசைப் பயணத்தை எப்போது தொடங்கினீர்கள்?" 

"இசை ஆர்வம்கொண்ட என் அம்மா, ஆறு வயசிலேயே என்னை மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. கமலா அஸ்வத்தமா, சுகுணா வரதாச்சாரி இருவரிடமும் அட்வான்ஸ்டு டிரெய்னிங் எடுத்தேன். படிப்பைவிட இசைப் போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கினேன். அதனால், எட்டாவது முடிச்சதுமே இசைத்துறையில் முழுமையா கவனம்செலுத்தட்டும்னு அடையாறு மியூசிக் காலேஜ்ல அம்மா சேர்த்துவிட்டாங்க. அங்கே ரெண்டு வருஷ கோர்ஸ் படிச்சு, வீணைக் கலைஞரா உருவானேன்.'' 

"இளையராஜா ட்ரூப்பில் பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது எப்படி?" 

"மியூசிக் கோர்ஸ் முடிச்சதும், பிரபல இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் சாரிடம் ஃபியூஷன் வாசிக்கச் சேர்ந்தேன். அப்போ, இளையராஜா சார் பொண்ணு பவதாரணிக்கு வீணைச் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து 1990-ம் ஆண்டிலிருந்து ராஜா சார் ட்ரூப்பில் வீணைக் கலைஞரா சேர்ந்து, பல படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். தேவா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத் வரை எல்லா இசையமைப்பாளர்களிடமும் வொர்க் பண்ணியாச்சு. பவதாரணியும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இசைப் பயணம் தவிர்த்து, நாங்க நிறைய வெளியூர் ட்ரிப் போயிருக்கோம்.'' 

"இதுவரை எத்தனை ரெக்கார்டிங்ஸில் வாசித்திருப்பீங்க?" 

"ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரெக்கார்டிங்ஸ்ல வாசிச்சிருக்கேன். அமெரிக்காவில் நடந்த யுனைடட் நேஷன்ஸ் ஆர்கனைசேஷன் அமைப்பின் பொன் விழா நிகழ்ச்சிக்கு இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டு சோலோ கச்சேரி பண்ணினேன். வேறு பல வெளிநாடுகளில் சோலோ கச்சேரிகள், ஜாஹீர் உசைன், ஜாஸ் இசைக் கலைஞர்கள் ஜான் மெக்லாக்லின், மேத்யூ காரிசன் உள்ளிட்ட பல பெரிய இசைக் கலைஞர்களின் ஆல்பங்களிலும் வாசிச்சிருக்கேன். 'யுவ புரஷ்கார்' உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியிருக்கேன். ஆல் இண்டியா ரேடியோவுக்கான 'ஏ’ ‘டாப்’ கிரேட் கலைஞராகவும் இருக்கேன்." 

"காலமாற்றத்துக்கு ஏற்ப மக்களிடம் இசை ஆர்வம் எப்படி மாறுபடுவதாக உணர்றீங்க?" 

"எந்தக் காலத்திலும் மனிதர்களுக்கு இசை ஆர்வம் குறையாது. நம் கவலைகளை மறக்கச்செய்து, மகிழ்ச்சியளிக்கும் திறன் இசைக்கு உண்டு. 90-களில் ரிலீஸான படங்களில் மெலோடி சாங்ஸ் நிறைய இருக்கும். இப்போ, குத்துப் பாடல்கள் பெருகிடுச்சு. அத்தகைய பாடல்களுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தாலும், ஆயுள்காலம் குறைவு. ஆனால், மெலோடி சாங்ஸை எப்பயுமே ஆடியன்ஸ் மறக்கமாட்டாங்க. அந்த மொலோடிகள்தான் இன்றுவரை ரசிக்கப்படுது.'' 

"ரெக்கார்டிங் தியேட்டருக்கும் மேடை நிகழ்ச்சிகளுக்கும் வொர்க் பண்றதுக்கான வித்தியாசத்தை எப்படி உணர்றீங்க?" 

"ஒவ்வொரு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடலுக்கு வொர்க் பண்றது தனி அலாதியான அனுபவம். கூட்டுக் குடும்ப பாண்டிங்ல பல இசைக் கலைஞர்கள் ஒண்ணா சேர்ந்து வொர்க் பண்ணுவோம். மறக்கமுடியாத சுவாரஸ்ய நிகழ்வுகள் நடக்கும். ஒரு படத்துக்கு என் வீணை வாசிப்பின் பங்களிப்பு சில நிமிடங்கள்தான் இருக்கும். பல நூறு படங்களில் வொர்க் பண்ணியிருந்தாலும், திரைமறைவில் இருக்கும் கலைஞர்கள் பற்றி வெளியுலகுக்கு தெரியறது ரொம்ப அபூர்வம். ஆனால், மேடை நிகழ்ச்சிகளில் பல மணி நேரம் கச்சேரி செய்யும்போது, ஆடியன்ஸின் பாராட்டுகளை கண்கூடப் பார்த்து சந்தோஷப்பட முடியும்." 

"உங்க கணவரும் இசைக்கலைஞரா?"

"ஆமாம். கணவர் டி.ஏ.ஶ்ரீநிவாஸ் மிருதங்க கலைஞர். ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் வொர்க் பண்ணிட்டிருக்கிறார்." 

அடுத்த கட்டுரைக்கு