Published:Updated:

ஹாரிஸ் ஜெயராஜ்... மெலடியில் சிக்ஸர் வெளுக்கும் இசையுலகின் சேவாக்! #HBDHarris

ஹாரிஸ் ஜெயராஜ்... மெலடியில் சிக்ஸர் வெளுக்கும் இசையுலகின் சேவாக்! #HBDHarris
ஹாரிஸ் ஜெயராஜ்... மெலடியில் சிக்ஸர் வெளுக்கும் இசையுலகின் சேவாக்! #HBDHarris

"T.ராஜேந்தரின் பாடல் பதிவுக்கூடம். சுவர்கள் இசையை மறந்து நிசப்தத்தை ரசித்துக்கொண்டிருந்த ஒரு மதிய உணவு இடைவேளை அது. ஒரு 19 வயது இளைஞன் மட்டும் எங்கும் செல்லாமல் தனது கீபோர்டில் எதையோ வாசித்துக்கொண்டிருக்கிறான். அங்கு கிட்டார் கலைஞராக பணியிலிருக்கும் தந்தைக்கு உணவு கொடுக்க அப்பொழுது அங்கு வந்த 11 வயது சிறுவனொருவன் அந்த இளைஞனின் பின்னால் நின்று அந்த கீபோர்ட் குறிப்புகளை ரசித்துக்கொண்டிருக்கிறான். சட்டென திரும்பிய அந்த கீபோர்ட் இளைஞன் "என்ன பாக்குற. வாசிக்கத் தெரியுமா" என்று கேட்டதும் பதில் சொல்லாமல் அந்தச் சிறுவன் கீர்போர்டையும் அந்த இளைஞனையுமே சொல்வதறியாது ரசிக்கிறான்." 
இன்று அந்த 19 வயது இளைஞனின் பெயர் AR ரஹ்மான். அவனை ரசித்த அந்தச் சிறுவனின் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ். 

சச்சின் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் சேவாக் என்ற ஓர் அதிரடி இளைஞன் வந்ததும் சச்சினை ரசிப்பது போலவே சேவாக்கையும் ரசிக்கத்தொடங்கினார்கள் ரசிகர்கள். சேவாக்கின் உடல்மொழி, தோற்றம் என அனைத்தும் சச்சினையே ஞாபகம் செய்தது. இசையைப் பொறுத்தவரை அந்தச் சச்சின் ரஹ்மான் என்றால் அந்த சேவாக் தான் ஹாரிஸ் ஜெயராஜ். ஹாரிஸ் ஜெயராஜின் ஆரம்பம், இசை தெளிவு, ஏன் தலைமுடி என அனைத்தும் ரஹ்மானைப் பிரதி செய்திருந்தது. 

ரஹ்மான் சினிமாவில் அறிமுகமான 1992ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை filmfare விருது ரஹ்மானுக்குத்தான் என எழுதி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 9 ஆண்டுகள் சிறந்த இசையமைப்பாளர் விருதை வாங்கி வந்த ரஹ்மானுக்கு 2001ம் ஆண்டுக்கான விருது கிடைக்கவில்லை. அந்த வருடம் சிறந்த இசையமைப்பாளர் விருது ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு 'மின்னலே' திரைப்படத்துக்காக கிடைத்தது. "சின்ன சின்ன ஆசை" யில் தெரிந்த ரஹ்மானைப்போல ''வசீகரா" வில் தெரியத்தொடங்கினார் ஹாரிஸ் ஜெயராஜ் எனும் இளைஞன். 

ஹாரிஸ் ஜெயராஜின் ஆரம்பகால இசையென்பது ஓர் இசையின் தெளிந்த நீரோடை. வெளிச்சத்தை சுமக்கும் கூழாங்கற்களைத் தோற்றுவிக்கும் நதியலையைப் போன்றது அவரது மெலடி பாடல்கள். 'மின்னலே' வெற்றிக்குப்பின் அவரது இசையில் வெளியான சிறந்ததோர் ஆல்பம் "மஜ்னு"'. "குல்மொஹர் மலரே", "முதற்கனவே", "பிஞ்சு தென்றலே" என அனைத்துப் பாடல்களும் அதில் அழகு. ஒரு இரவுநேர நித்திரை கலக்கத்தில் "ஹரி கோரி" பாடலை கேட்டுவிட்டு தூங்கச்சென்றால் கொஞ்சம் கலக்கமில்லாமல் தூங்கலாம். 'பீட்'களும், பின்னணியில் ஒலிக்கும் "ஹ்ம்"களும் நம்மை கனவுகளுக்குள் தூக்கிச்செல்லும். இடையில் வரும் "உனக்காக ஒருத்தி வந்தாள்" என்ற வரிகள் யாரோ நிஜத்தில் வந்த மனநிலையைத் துளிர்க்கச் செய்யும். 

தொடர்ந்து வந்த '12பி', 'சாமுராய்', 'லேசா லேசா', 'உள்ளம் கேட்குமே' என அனைத்திலும் ஹாரிஸின் ட்ரேட்மார்க் மெலடிகள் கொட்டிக்கிடந்தன. குரல்களை இசையோடு எந்த அளவீட்டில், எவ்வளவு இடைவெளியில் கொண்டு செல்ல வேண்டுமென்னும் கணிப்பில் ரஹ்மானுக்குப் பிறகு ஹாரிஸ் கிரேட். '12பி' படத்தில் "பூவே வாய் பேசும்போது" பாடலில் இசையோடு பயணிக்கும் குரல்களின் இனிமை பூக்கள் வாய் பேசுவது போலத்தான். அதே படத்தில் வரும் "ஒரு பார்வை பார்" பாடல் ஒரு வேண்டுதலுக்கான கீதம். 

கண்களை மூடிக்கொண்டு ஒரு பாடலை ரசித்தால் அந்தப் பாடலின் சூழல் தூரங்கள் திசைகள் எல்லைகள் கடந்து நம்மை ஆட்கொள்ள வேண்டும். அது இசைக்கான வெற்றி. அப்படியோர் இசையை, ஜீவனை நிச்சயம் "மூங்கில் காடுகளே" பாடலில் உணர முடியும். "லேசா லேசா" படத்தில் "லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா" பாடல் மனதை லேசாக்கும். "ஏதோ ஒன்று" பாடலின் "உன் தாய் நான் என் சேய் நீ இந்த உறவுக்குப் பெயரேது" வரிகளைக் கேட்பது ஹாரிஸின் அமிர்தநிலை.

மணிரத்னம்-ரஹ்மான் என்ற ஒரு காம்போ எப்படியோர் இசை சாம்ராஜ்யத்தைக் தங்கள் கைகளில் வைரமுத்து என்னும் அரசவைக் கவிஞரோடு ஆண்டுக்கொண்டிருக்கிறார்களோ அப்படியொரு பேரரசை இசை பிரம்மிப்புடன் கௌதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ் இணை தாமரையோடு ஆண்டது. கெளதம்-ஹாரிஸ் இருவரின் பயணமும் தொடங்கியது மின்னலே-வில்தான். இடையில் பாதை "y" என்று பிரிந்து சென்றாலும் இருவரது கூட்டணியில் வந்த பாடல்களில் இன்னும் இசையும் காட்சியும் பிரியாது இருக்கின்றன. 
(என்னை அறிந்தால் நிச்சயம் அவர்களின் கம்பேக் ஆல்பம் அல்ல)

'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'வாரணம் ஆயிரம்' என ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணர்வைத்தரும் இசைப்பேழைகள். "ஒரு ஊரில் அழகே உருவாய்" என்று 'காக்க காக்க' படத்தில் வந்த அழகின் சிலிர்ப்பை "ஹாய் மாலினி" என்று 'வாரணம் ஆயிரம்' படத்தின் "முன்தினம் பார்த்தேனே" வில் உறுதி செய்வார் ஹாரிஸ். இரண்டுக்குமான அழகின் ஒற்றைப்புள்ளி அந்த இசையும் இசை சார்ந்த களமும்தான். "பார்த்த முதல் நாளே", "அனல் மேலே பனித்துளி", "ஒன்றா இரண்டா ஆசைகள்" அனைத்தும் அன்னியோன்னியத்தின் ஆத்மார்த்த வருடல்கள். கௌதம் மேனனைப் போல இயக்குநர் ஜீவாவும் ஒரு நல்ல அலைவரிசையில் ஹாரிஸோடு இணைந்திருந்தார். காலம் ஜீவாவைப் பிரித்துசென்றது கோரம். "என்னைப் பந்தாட பிறந்தவளே", "ஜூன் போனால்", "யாரோ மனதிலே" எல்லாம் ஹாரிஸ்-ஜீவா பயணத்தின் இளைப்பாறும் தருணங்கள். 

இளையராஜாவுக்கு SPB, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன் போல ஹாரிஸுக்கு ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, கார்த்திக் விருப்பமான குரல்கள். அதிலும் ஹரிஷ் ராகவேந்திராவின் குரலின் அழகில் கொஞ்சம் கூடுதல் அழகு. 'இது கதிர்வேலன் காதல்' படத்தின் "அன்பே அன்பே" பாடல் அழகின் சாட்சி. பல நாள்கள் ஒதுங்கியிருந்த திப்புவை திரும்ப இருமுகனில் "கண்ணை விட்டு கன்னம்பட்டு" பாடலைப் பாட வைத்திருந்தார் ஹாரிஸ். அதில் வரும் "எங்கோ போனாய்" ஒருவேளை திப்புக்காகக் கூட ஹாரிஸ் சேர்க்க சொல்லியிருக்கலாம். 

ஷங்கர் இன்று வரை ரஹ்மானுக்கு substitute-டாக (கவனிக்கவும். replacement அல்ல) கருதியது ஹாரிஸை மட்டும்தான். அந்நியனின் மூன்று கதாபாத்திரங்களுக்கும் மூன்று விதமான இசையைக் கொடுத்திருப்பார் ஹாரிஸ். "அந்நியன்", "நண்பன்" இரண்டிலுமே ஷங்கர் இவரை நம்பி மோசம் போகவில்லை. இவரது பின்னணி இசைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள் "காக்க காக்க", "தொட்டி ஜெயா" & "கஜினி" 

இசையமைப்பாளரைத் தாண்டி ஹாரிஸ் ஜெயராஜின் கவிமுகம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. "எங்கேயும் காதல்" படத்தில் வரும் "குளு குளு வெண்பனிபோல" பாடலை எழுதியது ஹாரிஸ்தான். பாடலின் வரிகளைப்போலவே இசையும் "குளுகுளு" நிலை. 

"குளு குளு வெண்பனிபோல

சல சல சல்லடையாக 

பல பல கற்பனை மோத 

பறக்கவா உன் நினைப்பாக" 
என்று நான்கே வரிகளில் இசை கொண்டு காதலை காட்டும் பாடல் இது. ஐ லவ் யூக்கள் நிறைந்த பாடலில் காதலும் இசையும் சம பங்கில் நம்மை கட்டிப்போடும். 

"யாரிடமும்" & "உயிரே என்னுயிரே" (தொட்டி ஜெயா), "பத்து விரல் உனக்கு" (அருள்), "எங்கேயும் காதல்" (எங்கேயும் காதல்), "என்னை சாய்த்தாளே" & "வான் எங்கும்" (என்றென்றும் புன்னகை), "மன்னவனே என் மன்னவனே" & "என் காதல் தீ" (இரண்டாம் உலகம்)போன்ற பாடல்களெல்லாம் ஹாரிஸின் பேர் சொல்லும் பிள்ளைகள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஹாரிஸ் ஜெயராஜ்.