Published:Updated:

வேலை நெக்ஸ்ட்.. திறமைதான் ஃபர்ஸ்ட் - பிட்ச் பெர்ஃபெக்ட் 3 படம் எப்படி?

வேலை நெக்ஸ்ட்.. திறமைதான் ஃபர்ஸ்ட் - பிட்ச் பெர்ஃபெக்ட் 3 படம் எப்படி?
வேலை நெக்ஸ்ட்.. திறமைதான் ஃபர்ஸ்ட் - பிட்ச் பெர்ஃபெக்ட் 3 படம் எப்படி?

இயக்குநரிடம் `5 வருஷத்துக்கு முன்னாடி ஒரு இட்லி சுட்டீங்களே, அதேமாதிரி சுட்டுத்தாங்க' எனக் கேட்கப்போய், `அதேமாதிரி என்ன, அதே இட்லியே இருக்கு' என எடுத்துக் கொடுத்திருக்கிறார். முந்தைய `பிட்ச் பெர்ஃபெக்ட் ( PITCH PERFECT )' படங்களின் அதே ஃபார்முலாவில் இம்மியளவு கூட மாறாமல் வந்திருக்கிறது `பிட்ச் பெர்ஃபெக்ட் 3'. பின்னே,17 மில்லியன் டாலர்களில் உருவாகி, 115 மில்லியன் டாலர்கள் வசூல் செய்த ஃபார்முலாவாயிற்றே.

தி பெல்லா, பிரபலமான அகபெல்லா குழு. கல்லூரியில் படிக்கும்போது கெத்தாகப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்த தி பெல்லா குழு, கல்லூரியை முடித்துவிட்டு படாதபாடுபடுகிறார்கள். அவர்களது பணிச்சூழல், அவர்களை நொந்து நூடுல்ஸாக்குகிறது. அப்போது, குழுவிலுள்ள ஒரு பெண்ணின் தந்தை வாயிலாக, ராணுவத்தினர் மத்தியில் பெர்ஃபார்ம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. தி பெல்லா குழுவினர்களும், `தப்பிச்சோம்டா சாமி...' என மைக், ஸ்பீக்கரை அள்ளிப்போட்டு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள். தங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெல்லாஸ் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அதற்குள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை கொஞ்சம் காமெடி, நிறைய மியூசிக்கோடு சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் பெல்லாஸ் பாடியிருக்கும் எல்லாப் பாடல்களுமே கேட்க சுக்ஹானுபவம். மற்ற குழுவினரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் காட்சியைவிட பாடும் காட்சிகள்தாம் அதிகம். ஆனாலும், எந்த அயர்ச்சியையும் ஏற்படுத்தாமல் இசை எனும் இன்பவெள்ளத்தில் மூழ்கடித்துவிடுகிறார்கள். `கதையா முக்கியம், பாட்டைக் கேளுங்க' என மூளையும் செட்டாகிவிடுகிறது. மியூசிக்கல் திரைப்பட ரசிகர்களுக்கு, பிட்ச் பெர்ஃபெக்ட் பேரனுபவத்தைத் தரும்.

டைனோசர்  காலத்து ஒன்லைனை எடுத்துக்கொண்டு, கற்காலத்து திரைக்கதை ஃபார்முலாவில் பொருத்தி, அதை இக்காலத்திலும் போரடிக்காதவாறு சொல்லியிருக்கிறார் இயக்குநர் த்ர்ஷ் ஸை. பெக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அண்ணா கென்ட்ரிக், பெல்லாஸ் குழுவின் உறுப்பினர்களாக நடித்திருக்கும் ப்ரிட்னி ஸ்னோ, அண்ணா கேம்ப், ஹனா மெ லீ எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹனா மெ லீக்கும் ராப் பாடகருக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை, இதற்குமுன் எந்தப் படத்திலுமே பார்த்திருக்கமுடியாது! அதேபோல், ஃபேட் எமியாக நடித்திருக்கும் ரிபெல் வில்சன், காமெடி ஏரியாவை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து புகுந்து விளையாடியிருக்கிறார். கொஞ்சமேனும் சிரிப்பு வருவது போன்று காமெடி செய்து, இது மியூசிக்கல் காமெடி படம்தான் என்பதை நம்பவைக்கிறார். படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டிஜே காலித்தும் நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள் என்பதைவிட வந்து ஆடிப்பாடிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

கிறிஸ்டோபர் லெனர்ட்ஸின் இசை வேற லெவல். அகபெல்லா, ராப், ஜாஸ், ராக், கன்ட்ரி மியூசிக், ராக் அண்ட் ரோல், ஹிப்ஹாப் ஃப்யூசன் என கலந்துக்கட்டியிருக்கிறார். காதுகளில் தேன்வந்து பாய்வது நிச்சயம். மாத்யூ க்ளார்க்கின் ஒளிப்பதிவு யூத்ஃபுல், செமத்தியான கலர்ஃபுல். நகைச்சுவைக் காட்சிகளில், காட்சி வழியாக காமெடியைக் கடத்துவதில் கேமரா அசைவுகளும் கோணங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. மேடையில் அவர்கள் பெர்ஃபார்ம் செய்யும் காட்சிகள் எல்லாமே விஷுவலாக அதி அற்புதம்...