Published:Updated:

`அணிலும் அணிலும் கொள்ளையடித்தால் நன்மை என்றே அர்த்தம்!’ - #TheNutJob

`அணிலும் அணிலும் கொள்ளையடித்தால் நன்மை என்றே அர்த்தம்!’ - #TheNutJob
`அணிலும் அணிலும் கொள்ளையடித்தால் நன்மை என்றே அர்த்தம்!’ - #TheNutJob

சிறு விலங்குகள் தங்களின் உணவுகளுக்காக ஒருவகையில் மனிதர்களைச் சார்ந்திருக்கின்றன. மனிதர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் உணவை, அவை தாமாக எடுத்துக்கொள்கின்றன. இதைத் திருட்டு என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இயற்கை, மனிதர்களின் வழியாக விலங்குகளுக்கு உணவை அளிக்கும் வழிமுறை என்று சொல்லலாமா? பொதுவாக அது திருட்டு என்றே எங்கும் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு, எடுக்கப்பட்டது உணவாக இருந்தாலும் அதை, மற்ற விலங்குகளுடன் பங்கிட்டு உண்பதே சிறந்தது என்கிற நல்லெண்ணம் கொண்ட ஒரு பெண் முயலுக்கும், எல்லாவற்றையும் தானே திருடிச் செல்ல வேண்டும் என்கிற பேராசை கொண்ட ஓர் ஆண் முயலுக்கும் இடையே நிகழ்கிற காமெடி கலாட்டாக்களே ‘The Nut Job’ திரைப்படம். 

ஓக்டன் நகரம் என்கிற கற்பனைப் பிரதேசம். அங்குள்ள சர்லி என்கிற ஆண் முயல், உணவுகளைத் திருடுவதில் புகழ் பெற்றது. கூட்டத்துடன் இணையாமல் ‘என்வழி தனிவழி’ என்று தனியாக உலவுகிறது. தான் கஷ்டப்பட்டு உழைத்து திருடுவதை (?!) எதற்கு மற்றவர்களிடம் பகிர வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டது. அதிகம் பேசாத, விசுவாசமான எலி ஒன்று இதற்குத் தோழன்.

ஆன்டி என்கிற சிவப்பு நிற பெண் அணில் அங்குள்ள பூங்கா ஒன்றில் இதர விலங்குகளுடன் இணைந்து வாழ்கிறது. புத்திசாலியான இந்த அணில், உணவுகளை அனைத்து விலங்குகளுடன் பகிர்ந்து உண்ணவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தைக் கொண்டது. ரக்கூன்தான் பூங்கா விலங்குகளின் தலைவன். மற்ற விலங்குகள் கொண்டு வரும் உணவு வகைளை வாங்கி குளிர்காலத்திற்காகப் பத்திரப்படுத்தி வைப்பதும் அதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதும் இதன் வேலை. 

ஆன்டியின் கூடவே உலவுகிற இம்சை அரசன், கிரேசன் என்கிற சாம்பல் நிற ஆண் அணில். அடிப்படையில் இது முட்டாளாக இருந்தாலும் அந்தப் பூங்காவே தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற ஜம்பத்துடன் உலா வருவதில் மட்டும் குறைச்சல் ஒன்றும் இல்லை. 

குளிர்காலம் நெருங்குகிறது. உணவுப்பற்றாக்குறையாகும் நிலை ஏற்படுவதால் ரக்கூன், ஆன்டியை அழைத்து உணவைச் சேகரித்து வரச் சொல்கிறது. கிரேசன் இம்சையும் கூடவே கிளம்புகிறது. வேர்க்கடலை விற்கும் கடை ஒன்று புதிதாக வந்திருப்பதால் அதைக் கைப்பற்றலாம் என்பது இவர்களின் திட்டம்.

இதே சமயத்தில் சர்லியும் அந்தக் கடையைக் கொள்ளையடிக்க தன்னுடைய கூட்டாளியான எலியுடன் கிளம்புகிறது. இரு குழுவினரும் மோதிக் கொள்கிறார்கள். “இந்த உணவுப் பூங்காவிலுள்ள அனைத்து விலங்குகளுக்கும் உதவும். நீ மட்டும் கொள்ளையடிப்பது அநியாயம்.” என்கிறது ஆன்டி. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தேவை அந்த ‘நட்’கள். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது” என்கிறது சர்லி.

இரண்டிற்கும் நடக்கும் இந்த மோதலின் இடையே வேறொரு பிரச்னையும் இருக்கிறது. வேர்க்கடலை விற்கும் சாலையோரக் கடையை அமைத்திருப்பது ஒரு கொள்ளையர் குழு. எதிரேயிருக்கும் வங்கியைக் கண்காணிப்பது அவர்களின் நோக்கம். பணத்தையெல்லாம் கொள்ளையடித்து விட்டு அதற்குப் பதிலாக கடலைகளை வைத்து நிரப்பி விட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். 

கொள்ளையர்கள் பணத்தை திருடும் நோக்கத்தில் இருக்க, இரு தரப்பு அணில்களும் அவர்கள் வைத்திருக்கும் கடலைகளைக் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றன. 

ஆக, இந்த மும்முனைப் போட்டியில் எவர் வென்றது, பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைத்ததா, கொள்ளையர்களால் பணத்தைத் திருட முடிந்ததா, சர்லியும் ஆன்டியும் என்னவானார்கள் என்பதையெல்லாம் மிக மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள். 
 
2005-ல் வெளிவந்த Surly Squirrel என்கிற சிறிய அனிமேஷன் திரைப்படத்தின் கதையையொட்டி உருவான திரைப்படம் இது. இந்தக் கதையை எழுதியவர் Peter Lepeniotis. அனிமேஷன் வரலாற்றில் மிகுந்த பொருள்செலவுடன் உருவாகிய திரைப்படங்களில் ஒன்றான இது, வணிகரீதியாகவும் வசூலை அமோகமாக அள்ளியது. 

சண்டியரான சர்லியின் அட்டகாசம் இந்தத் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. கொள்ளையர்களின் ‘புல்டாக்’ நாய் தன்னைத் தாக்க வரும்போது பயந்து நடுங்குவதும், விசிலை ஊதினால் அது அடங்கி விடும் என்கிற ரகசியத்தை அறிந்து கொண்ட பிறகு ‘அடிமை சிக்கிய’ மிதப்பில் நாயை ஆட்டிப் படைப்பதும் நகைச்சுவை. சர்லியின் விசுவாசமான அடிமையாகவே அந்த நாய் மாறி ‘முகத்தை நக்கட்டுமா, பாஸ்’ என்று அடிக்கடி கேட்பது பயங்கர காமெடி. 

அனைத்து உணவுகளையும் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சுயநலத்தை சர்லி கொண்டிருந்தாலும் அடிப்படையில் அது நல்ல அணிலே. ஆன்டியின் உபதேசத்தைக் கேட்டு பிறகு மனம் மாறுவது நல்ல திருப்பம். 

சமர்த்து அணிலான ஆன்டியின் சாகசங்களும் பொறுப்புஉணர்ச்சியும் புத்திக்கூர்மையும் ரசிக்க வைப்பதாக உள்ளது. ‘பொண்ணுங்கல்லாம் என்னைக் கண்டாலே மயங்குவாங்க’ என்கிற பந்தாவுடன் ஆன்டியை சுற்றிச் சுற்றி வரும் கிரேசன், பூங்காவை விட்டு வெளியில் சென்றவுடன் இதர நாய்களால் துரத்தப்பட்டு கதறியழுவது ‘மரண பங்கமாக’ அமைகிறது. அதிகம் பேசாத சாதுவான சர்லியின் கூட்டாளியான எலி, நண்பனே தன்னை அவமானப்படுத்தும் போது கூனி நிற்பது பரிதாபம். 

பணத்தைக் கொள்ளையடிக்க திருடர்கள் போடும் திட்டத்தையும், ‘நட்’களை திருட அணில்கள் கூடிப் பேசும் ஆலோசனையையும் மாற்றி மாற்றி காட்டும் காட்சிகள் அருமை. இரு தரப்பிலும் நிகழும் குளறுபடிகள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன. ரக்கூனின் மோசடி தந்திரத்தை அனைத்து விலங்குகளும் அறிந்து கொள்வது சுவாரசியமான திருப்பம். 

Paul Intson-ன் அருமையான பின்னணி இசையோடு நகைச்சுவை நிரம்பி வழியும் இத்திரைப்படத்தை அருமையாக இயக்கியிருப்பவர் Peter Lepeniotis.

குழந்தைகளோடு காண வேண்டிய மிகச்சிறந்த நகைச்சுவை அனிமேஷன் திரைப்படம் இது. இதன் அடுத்த பாகமான The Nut Job 2: Nutty by Nature, ஆகஸ்டு 2017-ல் வெளியானது.