Published:Updated:

முன்னாள் காதலின் அழகியல் இந்த அழகி #16YearsOfAzhagi

ப.தினேஷ்குமார்
முன்னாள் காதலின் அழகியல் இந்த அழகி  #16YearsOfAzhagi
முன்னாள் காதலின் அழகியல் இந்த அழகி #16YearsOfAzhagi
முன்னாள் காதலின் அழகியல் இந்த அழகி  #16YearsOfAzhagi

பேரறிஞர் அண்ணா  அன்றைய அரசியல் ஆட்சிமுறையை பற்றிக் கூறும்பொழுது, "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்று கூறுவார். அதையே நமது தமிழ் திரையுலகுக்கு எடுத்து கொண்டோமானால்   "தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது" என்றுதான் கூற வேண்டும். அன்றும் சரி இன்றும் சரி தென்தமிழகத்தை செல்லுலாய்டில் பதிவு செய்தளவுக்கு யாரும் வடதமிழகத்தை பதிவு செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். இத்தனை  கால தமிழ் சினிமாவில் தன்னால் இயன்றளவு வடதமிழகத்தின் வாழ்வியலை சரிவர வெளிச்சம் போட்டு காட்டியது இயக்குநர் தங்கர்பச்சான் மட்டும்தான். அதன்படி அவரது இயக்கத்தில்  முதல் காதலின் அழகையும் கண்ணியம்  சற்றும் குறையாமல் சித்தரித்த  அழகி திரைப்படம் வெளிவந்து இன்றோடு பதினாறு வருடங்கள் ஆகின்றது. அந்த திரைப்படத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இனி காண்போம். 

அழகி! இங்கு நிறைய பேரை பாதித்த திரைப்படம். மயிலிறகை  கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தைகளும்தான் இந்த 'அழகி'யின் ஒன்லைன். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே தாமும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிடுவார்கள். காரணம் எதுவாகவும் இருக்கலாம். கதையோடு ஒன்றிப் போவதிலிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட மனத்தழும்புகள் வரை அதற்கு காரணம் சொல்லலாம். ஆனால், இந்த அழகி காதலின் வலியை உணராத மற்றும் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது. காதலித்தவர்களையும், காதலிக்கப்பட்டவர்களையும், நட்பை உயிராய் நினைத்தவர்களையும்  இந்தத் திரைப்படம் வெகுவாக  பாதித்தது. 

பார்த்திபன் அதுவரை தான் பணியாற்றிய அத்தனை படங்களின் தாக்கங்களில் இருந்தும் மறைந்(த்)து விட்டு ஒரு புதிய பார்த்திபனாக அழகியில் பிறந்தார். "கையை காலா நினைச்சா, காலை என்னவா நினைப்ப" டைப் ரவுசுகள் இல்லாமல், நக்கல் வசனங்கள் இல்லாமல் படம் முழுவதும் ஒரு பக்கவப்பட்ட மனிதனாக வலம் வந்தார்.மேலும், இந்த படத்தைப் பற்றி பார்த்திபன் பேசும்போதெல்லாம் , "இது எனக்கு கிடைத்த  மிகப்பெரிய  வாய்ப்பு. இந்த கதாபாத்திரம் தந்ததற்காக வாழ்நாள் முழுவதும் தங்கர்பச்சானுக்குக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்." என்பார். 

எல்லோருடைய மனதிற்குள்ளும் ஒரு தனலட்சுமி  ஒரு ஓரமாக புதைந்து கிடப்பாள். அந்த அத்தனை தனலட்சுமிகளுக்கும் உயிர் கொடுத்திருப்பார்  நந்திதாதாஸ். வாழ்வில் அடுத்தடுத்து நிகழும் அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு  மகனுக்காக வாழ்வைக் கடத்தும் இளம் கைம்பெண்ணாக, கூலித் தொழிலாளியாக, வீட்டு வேலைக்காரியாக  தனது இருநூறு சதவீத உழைப்பை கொட்டியிருப்பார்  நந்திதாதாஸ். தனலட்சுமி கதாபாத்திரம் படம் முடிந்த பிறகும் பல இரவுகள் பார்த்தவர்களின் மனதை விட்டு இறங்க மறுத்ததே  நந்திதாதாஸின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. 

கணவனை நேசிக்கும் மனைவிக்குரிய இயல்பான ‘பொஸ்ஸ்ஸிவ்னஸ், அதனால் வரும் சந்தேகம்' என  அவற்றையெல்லாம் மிக இயல்பாக வெளிப்பட்டுத்தியிருப்பார்  தேவயானி. 

அழகி படம் முழுக்க முழுக்க இளையராஜாவின் ராஜ்ஜியம்தான்.படம் வந்த சமயத்தில் "ஒளியலே தெரிவது தேவதையா மற்றும் பாட்டு சொல்லி " பாடல்களை  பார்த்து பரவசமடைந்தனர் காதலர்கள். "உன் குத்தமா என் குத்தமா" பாடலை கண்டு கண்ணீர் மல்க வருந்திய உள்ளங்கள் ஏராளம். இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிண்ணனி இசையும் ஒரு மிகப்பெரிய காரணமாகும். இன்றும் கூட "டமக்கு டமக்கு டம்" பாடலை காண்பவர்கள், "ச்சே. இதெல்லாம் என்ன வாழ்க்கை.. நாமெல்லாம் சின்ன குழந்தையாவே கூட இருந்திருக்கலாம்" என்று ஏங்கி பெருமூச்சு விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். 

தங்கர்பச்சான் இளையராஜாவை பற்றி கூறும்பொழுது , "ஒரு நடிகரும் , ஒரு இயக்குநரும் , ஒரு ஒளி ஓவியனும் முயற்சி செய்து வரவழைக்க முடியாத பிரம்மை , கனவு, கோபம் , காதல், மன இறுக்கம் , தலை குனிவு , அதிர்ச்சி , ஆக்ரோஷம் , அயர்வு , வெற்றி, வீராப்பு , வேகம் , சுமை , தோல்வி போன்ற இப்படியான உணர்வுகளை எல்லாம் இசையின் மூலம் உயிர்ப்பித்தவர் இளையராஜா " எனக் கூறுவார். எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள். 

அழகி படத்தின் மூலம் அந்தளவு நம்மை  நமது சொந்த ஊரின் நினைவுகளோடு ஒட்டி உறவாட வைத்தார் தங்கர்பச்சான்.  இன்றும் கூட எத்தனை தனம்....சண்முகம்..நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.அப்படி பார்த்த அத்தனை பேருக்கும் நூற்றில் தொண்ணூறு பேருக்கு தன் முதல் காதலை நினைவுபடுத்தியது இந்த அழகி." காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்? "என இந்த ஒற்றை படத்தை கண்டுவிட்டு வியந்தனர் ரசிகர்கள். இந்த அழகி காதல் கதையில் கூட ஒரு அரசியல் வசனம் வைத்திருப்பார். 

"கண்ணுக்குட்டி அம்மா சொல்ல மாட்டேங்குது.. "

இன்றும் கூட சிலர் அழகி திரைப்படத்துடன் நிறைய முரண்படுகின்றனர். பள்ளி குழந்தைகள் மத்தியில் காதல் வருவதாக காட்டி அவர்களின் மனதில் தங்கர்பச்சான் நஞ்சை விதைக்கிறார் என நிறைய பேர் கூறுவதுண்டு. அவர்களுக்கு நான் தரும் பதில், இந்த சமூகத்தில் இருப்பதைத்தான் இயக்குநர் படம் எடுக்க முடியும். பள்ளி குழந்தைகளிடம் காதல் இல்லாமலெல்லாம் இல்லை. அதையெல்லாம் கடந்துதானே நாம் வந்துள்ளோம். அப்படி அந்த சின்னஞ்சிறு உள்ளங்களின் அன்பை காண்பித்தாலே தவறு என்றால், இந்த சமூகத்தில்  எதார்த்த சினிமாவும் இருக்காது, இலக்கியங்களும் இருக்காது.

  தன்னுடைய நிலப்பகுதியில் நடக்கும் சமூக அவலங்கள் நிச்சயம் ஒரு படைப்பாளியைத் தொந்தரவு செய்யும். அதனால்தான் திரையில் இதுவரை காணாத வடமாவட்டங்களின் கலாசாரம், மொழி உச்சரிப்பு போன்றவற்றை பிடிவாதமாக தம் திரைப்படங்களில் தொடர்ந்து பிரதிபலிக்கச் செய்கிறார் தங்கர்பச்சான்.