Published:Updated:

எவ்வளவு உயரம்ங்கிறது முக்கியமில்லை; எவ்வளவு உயர்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்!’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
எவ்வளவு உயரம்ங்கிறது முக்கியமில்லை; எவ்வளவு உயர்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்!’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ விமர்சனம்
எவ்வளவு உயரம்ங்கிறது முக்கியமில்லை; எவ்வளவு உயர்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்!’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ விமர்சனம்

எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டத்தாலும், லஞ்சத்தாலும் தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காத சூழலில் துவங்குகிறது கதை. நச்சினார்க்கினியன் (சூர்யா) சி.பி.ஐ அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர். அவரது நண்பர் கலையரசன், காவல் துறையில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருப்பவர். ஆனால், குறைந்த பணியிடம். அதற்கும் லஞ்சம் என இருப்பதால், யாருக்கும் வேலை கிடைக்காமல்போகிறது. எதிர்பாராத இழப்பை சந்திக்க நேரிடும் சூர்யா, அதிகார திமிருக்கும் பணக்காரப் பவருக்கும் எதிராக செயல்பட முடிவெடுக்கிறார். வருமான வரிஏய்ப்பு செய்யும் நபர்களிடமிருந்து, போலி வருமான வரிச் சோதனைமூலம் பணத்தைப் பறிமுதல்செய்கிறார். கருப்புப்பணம் என்பதால், அன் அஃபீஷியலாக பல புகார்கள் வருகின்றன. இந்த வழக்கை விசாரிக்கும் குறிஞ்சி வேந்தன் (கார்த்திக்), இந்தக் குழுவை பிடித்தாரா... பறிமுதல்செய்த பணத்தைவைத்து சூர்யா என்ன செய்தார் என்பதைப் பற்றிச் சொல்கிறது, `தானா சேர்ந்த கூட்டம்.'

`ஸ்பெஷல் 26' இந்திப் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று, இந்த ‘தானா சேர்ந்த கூட்ட’த்தை உருவாக்கியிருக்கும் விக்னேஷ் சிவன்,  அதிலிருந்து நிறைய வித்தியாசங்கள் செய்து, சூர்யாவுக்கு ஏற்றதுபோல மாஸ் கூட்டியிருக்கிறார். வழவழவென இழுக்காமல் வேகமாகவும் சின்னச்சின்ன காமெடியுடனும் கதையை நகர்த்தியிருப்பது, இயக்குநரின் சாமர்த்தியம். 

சூர்யா இன்னும் இளமையாகி இருக்கிறார். டைமிங் காமெடி, அந்த இன்டர்வியூ காட்சி, கீர்த்தியுடனான காதல் காட்சிகள்... இப்படி சூர்யா சூப்பர். ஆனால், இதெல்லாம் அவரால் மிகச் சாதாரணமாக செய்துவிடக்கூடியவை. இயல்பாக இருக்கவேண்டிய சில காட்சிகளில்கூட விரைப்பாக வசனம் பேசுவது உறுத்தல். படத்தின் சென்டர் அட்ராக்‌ஷன் ரம்யா கிருஷ்ணன். ஜான்ஸி ராணி என அடையாள அட்டையை எடுத்து கம்பீரமாக குரலெடுப்பது, அதட்டல் பார்வை... நீலாம்பரி 2.0-வாக அசத்துகிறார்.

கீர்த்தியின் நடிப்பு நன்றாக இருந்தாலும் வலிந்து திணிக்கப்பட்டிருந்த காதல் காட்சிகளால் ரசிக்க முடியாமல்போகிறது. வேலை கிடைக்காத விரக்தியில் சுற்றும் கலையரசன், கௌதம் மேனன் குரலில் கெத்தாக வரும் சுரேஷ் மேனன், ஆர்வக்கோளாரு போலீஸாக வரும் நந்தா, மகனுக்கு வேலை கிடைக்கப் போராடி, பின்பு "உனக்கு வேலை கெடைக்கலனா நான் ஏண்டா சாகணும்" என பொறுப்பான அப்பாவாக தம்பிராமையா, கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில், ஆனந்தராஜ், சிவசங்கர், சத்யன், வினோதினி... இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட தெரிந்த முகங்கள். அனைவரும் தங்கள் வேலையை கச்சிதமாக முடிக்கிறார்கள். ஆனால், செந்திலைவைத்து மேண்டில் உடைப்பது, ஆர்.ஜே.பாலாஜியைவைத்து ‘டிக்கெட்ல ஜி.எஸ்.டி சேர்ப்பாங்களாம்’ என்று காமெடி அடிப்பதுபோல மிகச் சாதாரண மாகப் பயன்படுத்தியிருப்பது மைனஸ். 

படமாக்க எடுத்துக்கொண்ட நிஜ சம்பவத்தை, இந்த நிலத்துக்குத் தகுந்ததுபோல ஒரு பிரச்னையுடன் இணைத்துக் கதையாக்கியிருந்த விதம் நன்று. ஆனால், அதை எந்தவித அழுத்தமும் இல்லாமல் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், தாக்கத்தை ஏற்படுத்தவேண்டிய காட்சிகூட சாதாரணமாக நகர்ந்துபோகிறது. ‘பீரியட் ஃபிலிம் என்றால் கலர்ஃபுல்லாக இருக்கக் கூடாதா’ என ஃப்ரெஷ் டோன் கொடுத்திருப்பது நன்று. ஆனால், வின்டேஜ் டயல் போன், ‘ஒரு தாயின் சபதம்’ சினிமா... என சின்னச்சின்ன டீட்டெய்லிங்கை வைத்து மட்டுமே கதை நிகழும் 80-களைக் கொண்டுவரமுடியும் என நினைத்தது அதன் நம்பகத்தன்மையைப் பலவீனப்படுத்துகிறது. சில ஐடியாக்கள்மூலம் சுவாரஸ்யம் சேர்த்தாலும், முழுமையடையாத காட்சிகள், நிறையக் கேள்விகள் தொக்கி நிற்கின்றன. கூடவே, தொடர்ந்து சினிமாவில் என்கவுன்டர் காட்சிகளை ஆதரித்துப் பதிவுசெய்யும் போக்கு அச்சத்தைக்கொடுக்கிறது. அதிலும், சுட்டுக்கொன்றதைப் பாராட்டி பதவி உயர்வு தருவதாகக் காட்டுவதெல்லாம் டூ மச்.

அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரும் பலம். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, கிரணின் கலை இயக்கம் கலர்ஃபுல்லாக 80-களைப் பிரதிபலிக்க முயற்சிசெய்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு, எந்த இடமும் சலிப்பை ஏற்படுத்தாமல் விறுவிறுவென படத்தை நகர்த்துகிறது. வசனத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், பழமொழி சொல்வது, 'எவ்வளவு உயரம்ங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு உயர்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்' என சாதாரணமான வசனங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. 

கதைக்குத் தேவையான அழுத்தத்தையும், காமெடியையும் ஒழுங்கமைத்துக் கொடுத்திருந்தால், தானா சேர்ந்த இந்தக் கூட்டம், இன்னும் கலக்கியிருக்கும்.