Published:Updated:

“ ‘டூலெட்’, தமிழ் சினிமா பாணியில் ஓர் உலக சினிமா..!” - சந்தோஷ் நம்பிராஜன்

“ ‘டூலெட்’, தமிழ் சினிமா பாணியில் ஓர் உலக சினிமா..!” - சந்தோஷ் நம்பிராஜன்
“ ‘டூலெட்’, தமிழ் சினிமா பாணியில் ஓர் உலக சினிமா..!” - சந்தோஷ் நம்பிராஜன்

“ ‘டூலெட்’, தமிழ் சினிமா பாணியில் ஓர் உலக சினிமா..!” - சந்தோஷ் நம்பிராஜன்

‘டூலெட்', கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃப்லிம் பெஸ்டிவலில் 2017-ன் சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்ற திரைப்படம். ஒளிப்பதிவாளர் செழியன் இதில் இயக்குநராக உருவமெடுத்திருக்கிறார். "பொதுவாக பெங்கால் திரைப்பட விழாவுல தென்னிந்திய திரைப்படங்களுக்கு விருது கிடைக்காது. நம்ம கமர்ஷியல் யுக்திகளுக்கு இடம் கொடுப்போம். மலையாள படங்கள்ல கமர்ஷியல் நோக்கம் குறைவு. டூலெட் அந்த மாதிரியான ஒரு திரைப்படம்தான்" என்று நம்மிடம் அப்படத்தை பற்றி பகிர்ந்து கொள்கிறார் டூலெட்டின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன். 

“ ‘டூலெட்’ எந்த மாதிரியான படம்?”

“கேமராமேன் செழியன் சாரோட முதல் படம். அவர் சினிமா துறைக்கு இயக்குநரா ஆகணும்னு நெனைச்சுதான் வந்தார். சாருக்கு நிறைய கமர்ஷியல் படங்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனா, இவர் உலக சினிமா மாதிரியான படங்களை தமிழ் சினிமாவுக்குள்ள கொண்டு வரணும்னு மெனக்கெட்டு அவரோட சொந்தத் தயாரிப்புல இந்தப் படத்தை எடுத்திருக்கார்.

2007-ல் ஒரு மென்பொருள் நம்ம நாட்டுக்குள்ள வந்ததுனால நடுத்தர மக்களுக்கு என்னென்ன மாதிரியான பிரச்னைகள் வந்துச்சு என்பதுதான் படத்தோட கதை. படத்தோட முக்கிய நோக்கமே நிறைய திரைப்பட விழாவுல திரையிடப்படணும் என்பதுதான். தமிழ் சினிமாவுல படம் எடுக்கணும்ன்னா கதை ரொம்ப முக்கியம். ஆனா, உலக சினிமாக்கள்ல படத்தை கதை வழியா பார்க்காம, தன்னோட அனுபவத்தை சொல்ற ஒரு பொதுவெளியாகத்தான் பார்க்குறாங்க. அதுக்காக இது மத்த உலக சினிமாக்களின் தாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதுனு நெனைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க தமிழ் பாணியில உருவாக்கப்பட்ட திரைப்படம். வியாபாரத்துக்கான எந்த எலிமென்ட்டும் இதுல சேர்க்கப்படலை. லண்டன்ல நடக்குற இன்டர்நேஷனல் ஃப்லிம் பெஸ்டிவல்ல இந்தப் படத்தை திரையிடணும்னு முடிவே செய்யப்பட்டிருக்கு. பெரிய திரையில ரிலீஸ் செய்யுறதுக்கான திட்டங்களும் இருக்கு. அந்தத் தேதியை முடிவு செய்துட்டு சீக்கிரம் தகவல் சொல்றோம்."

“எப்படி சினிமாவுக்குள்ள வந்தீங்க?” 

“2003-ஆம் ஆண்டு ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்ல ஒளிப்பதிவுக்கான பட்டப்படிப்பை முடித்தேன். சில இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா வேலை பார்த்திருக்கிறேன். ஆனா, அவங்களோட கமர்ஷியல் படங்கள் மேல எனக்கு ஈடுபாடு இல்லை. அப்பறம்தான் செழியன் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ‘கல்லூரி’ படத்துல இருந்து ‘பரதேசி’ வரை அவரோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். அது தவிர, ‘கருப்பம்பட்டி', ‘கத்துக்குட்டி' ஆகிய ரெண்டு படங்களுக்கும் கேமராமேனா இருந்திருக்கேன். ஒருநாள் செழியன் சார் கூட பேசிட்டு இருக்கும் போது திடீர்னு, 'நடிக்கிறியா'னு கேட்டார். எனக்கு ஒருபக்கம் குழப்பமா இருந்தாலும், குரு கேட்டா அதுக்கு எதிர் பேச்சு பேசக்கூடாதுனு ஒத்துக்கிட்டேன். இந்தச் சமயத்துல சார் ஒரு பெரிய ஹீரோவை வச்சு படம் பண்றமாதிரியான பேச்சுவார்த்தையும் நடந்துட்டு இருந்துச்சு. அந்தப் படத்துல சின்ன ரோலுக்கு என்னைக் கூப்பிடுறார்னு நெனச்சேன். ஆனா, நான்தான் லீட் ரோல்ல நடிக்கப் போறதா சொன்னார். 

‘எனக்கு அவ்வளவா நடிக்க வராதே சார். அதுமட்டுமில்ல, உங்களுக்குக் கூத்துப்பட்டறை ஆர்டிஸ்ட்களை தெரியும். என்னை எதுக்காக தேர்ந்தெடுத்தீங்க?’னு கேட்டேன். “உன்கிட்ட அசல் தமிழ் முகம் இருக்கு. கண்கள் தீர்க்கமா இருக்கு"னு பதில் சொன்னார். என்னை வச்சு ஒரு போட்டோ ஷூட்டும் பண்ணார். அதுக்கப்புறம் தொடர்ந்து மூணு மாசம் கூத்துப்பட்டறையில இருந்து நடிக்கிறதுக்கான சில பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்தப் படத்துல ஷீலா ராஜ்குமார் லீட் ரோல்ல நடிக்கிறாங்க. இன்னொரு சின்னப் பையனும் எங்களுக்கு மகனா நடிக்கிறான். இதுல எங்களுக்கு வசனங்கள் மிகக் குறைவு. உணர்வுகளை பிரதிபலிக்கின்ற காட்சிகள்தான் அதிகம். இந்தப் படத்துல எனக்கு மகனா வர்ற தருண்'ன்ற பையனைக் கூட்டிகிட்டு நிறைய ஊர் சுத்தியிருக்கேன். படத்துல அப்பா-மகனா நடிக்கணும்ன்னா, நிஜத்துலயும் அவனோட நெருங்கிப் பழகணும்னு செழியன் சார் சொல்வார். இப்படி நடிப்பை நிஜத்துடன் தொடர்பு படுத்துறதுக்கு பெயர் 'மெத்தட் ஆக்டிங்'. இந்த நடிப்பு முறையைத்தான் இந்த படத்துல நாங்க பின்பற்றியிருக்கோம்."

"ஷீலா ராஜ்குமார் நடிப்பைப் பற்றிச் சொல்லுங்க..."

"ஷீலா நல்ல நடிகை. அவங்களை தமிழ் சினிமா இன்னும் நல்லா உபயோகப்படுத்தணும்னு நெனைக்கிறேன். இந்தப் படத்துல ஐந்து வயசு பையனுக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்ன உடனே படத்தோட கதையைக் கூட கேட்காம ஓகே சொல்லிட்டாங்க. அவங்க தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நல்ல டான்ஸர். எனக்கு பயிற்சி அளிக்குறதுக்காக ஷீலாவையும் வர சொல்லிருந்தாங்க. உண்மையிலேயே அவங்க வரணும்னு எந்தவித கட்டாயமும் இல்லை. ஆனா, திரையில நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும் என்பதற்காக அவங்களும் எனக்கான பயிற்சி முழுக்க கூடவே இருந்தாங்க. ரொம்ப யதார்த்தமான ஒரு நடிகை."

“உங்களோட குடும்பம் மற்றும் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றிச் சொல்லுங்க..”

“என்னுடையது காதல் திருமணம். மனைவி குழந்தைகள் எல்லாருமே சிங்கப்பூர்ல இருக்காங்க. சில காலங்கள் அவங்களோட நேரத்தை செலவழிப்பேன். வேலை இருக்கும் போது சென்னைக்கு வந்துட்டுப் போவேன். என்னோட நண்பர்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து சின்ன பட்ஜெட்ல படம் பண்ணலாம்ன்ற திட்டத்தை பத்திதான் அடுத்து யோசிச்சுட்டு இருக்கேன். அதைத்தாண்டி கேமரா வாய்ப்புகள் வந்தாலும் பண்றதுக்கு தயாரா இருக்கேன். 2016 வரை நான் நடிகனாவேனானு தெரியலை. இந்த வருஷம் அந்தக் கனவு நிறைவேறிருச்சு. அடுத்து கண்டிப்பபா சிறந்த படத்துக்கு ஒளிப்பதிவும் பண்ணுவேன்.”

அடுத்த கட்டுரைக்கு