இந்த ஆண்டு வெளியான சிறந்த உலகத் திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை.
45 இயர்ஸ்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஏற்கெனவே பல விருதுகளை சர்வதேச சினிமா விழாக்களில் வென்றுவிட்டது. 70 வயதை நெருங்கும் டாம் கர்ட்னி, 60 வயதை நெருங்கும் சார்லட் ராம்ப்லிங் தான் படத்தின் நாயகர்கள். அவர்களது 40-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் வேளையில், டாமுக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல, விழா நிறுத்தி வைக்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை முடிந்தபின் 45-வது திருமண விழாவை சிறப்பாகக் கொண்டாட விரும்புகிறார்கள் தம்பதிகள். நிகழ்ச்சிக்கு முன்னான ஒரு வாரத்தை ஷாப்பிங் என ஜாலியாய் கடக்க முற்பட, இடியாய் வருகிறது ஒரு செய்தி. 50 ஆண்டுகளுக்கு முன் டாமின் காதலியாய் இருந்து பனிப்பாறைகளுக்குள் விழுந்து இறந்த காதலியின் உடல் கிடைக்கிறது. பனிப்பாறை என்பதால் உடல் அப்படியே இருக்கிறது. காதலியைப் பற்றி முதல்முறையாய் அறியும் சார்லட் ராம்ப்லிங் அதிர்ச்சி ஆகிறார். நம் கணவர் ஏன் இதை மறைத்தார் எனப் புலம்புகிறார். அவர்களது மனக்கசப்புகள் தீர்ந்ததா என்பதே படம். வயதான கணவன் - மனைவியாக கலக்கி இருக்கிறார்கள் டாமும், சார்லொட்டும். பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், நடிகை என இரு விருதுகளும் இந்தப் படத்துக்குதான்!
கரோல்

‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’ என்ற த்ரில்லர் நாவலை எழுதிய பாட்ரிசீயா ஹைஸ்மித் தான் இந்த நாவலையும் எழுதியது. லெஸ்பியன் கதை என்பதால் பாட்ரீசியா இந்த நாவலை 1952-ல் க்ளாரி மோகன் என்ற புனைப்பெயரில் வெளியிட்டார். நாவல் ஆசிரியரின் நண்பரான பிலிஸ் நகி, இதன் திரைக்கதையை 14 ஆண்டுகளாக எழுதி இருக்கிறார். 1950-களில் நடக்கிறது கதை. புகைப்படக் கலைஞர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் தெரசா, தற்காலிகமாக பொம்மைக்கடையில் வேலை பார்க்கிறார். அங்கு தன் மகளுக்காக பொம்மை ஒன்றை வாங்க வருகிறார் கரோல். தெரசா சொல்லும் பொம்மையை தன் மகளுக்காக வாங்கிச் செல்லும் கரோல், அவரது க்ளவுஸை தவறுதலாக விட்டுச் செல்கிறார். அதை கரோலின் வீட்டு முகவரிக்கு அனுப்புகிறாள் தெரசா. தெரசாவைத் தன் வீட்டுக்கு அழைக்கும் கரோல், தெரசா மீது காதல் வயப்படுகிறாள். கரோலின் கணவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தான் ஏற்கெனவே விண்ணப்பித்து இருந்த விவாகரத்து வழக்கில் வெற்றி பெறுகிறார். குழந்தையும் கணவரின் பக்கம் தீர்ப்பாக, தனித்து விடப்படுகிறாள் கரோல். தெரசாவின் பாய் ஃப்ரெண்ட் அவளை விட்டுப் பிரிய தெரசாவும், கரோலும் காதலைத் தொடர்கிறார்கள். தெரசாவாக நடித்த ரூனி மாரா கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

தீபன்

‘எ ப்ராபெட்’, ‘ரஸ்ட் அண்டு போன்’ மாதிரியான விருதுப்படங்களை எடுத்த ஜாக்ஸ் அடியார்டின் லேட்டஸ்ட் படம்தான் தீபன். விடுதலைப்புலி வீரரான சிவதாசன், அவரது படை தோற்றுவிட, அகதிகள் முகாமில் தங்குகிறார். அங்கு இருந்து ஃபிரான்ஸிற்கு தீபன் என்ற இறந்தவரின் பாஸ்போர்ட்டில் செல்லும் அவர் ஒரு பெண்ணையும், ஒன்பது வயதுக் குழந்தையையும் அழைத்துச் செல்கிறார். அங்கு பாரீஸில் தங்கும் தீபன் புதுப் பிரச்னைகளை சந்திக்கிறார். தீபனாக எழுத்தாளர் ஷோபாசக்தி நடித்த இந்த ஃபிரெஞ்சுத் திரைப்படம், கேன்ஸ் விழாவில் தங்கப்பனை விருது பெற்றது!

சன் ஆஃப் சௌல்


அறிமுக இயக்குநர் லஸ்லோ நெமீஸின் ஹங்கேரிய படம்தான் ‘சன் ஆஃப் சௌல்’. 1940-களில் கதை பயணிக்கிறது. ஜெர்மன் சித்ரவதை முகாம்களில் இறந்த உடல்களை எரிக்கும் சிறைக்கைதியாக இருக்கும் யூதரான சௌல்தான் கதையின் நாயகன். ஒருநாள், பிணங்களை எரிக்கும்போது, அவரது மகனின் உடலைக் காண்கிறான். அங்கு அந்த உடலை எரிக்காமல், யூத முறைப்படி புதைக்க முற்படுகிறான்.அங்கு இருக்கும் யூதர்கள் தனியாக ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதை விடுத்து, இவன் மகனின் உடலைப் பாதுகாக்க ஆரம்பிக்கிறான் சௌல். அவன் உயிரோடு இருந்தபோது, அவனைப் பார்த்துக்கொள்ள முடியாத சௌல், இப்போது அவனைப் பத்திரமாக பாதுகாக்கிறான். இறுதியாக அவனைப் புதைக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. படத்தின் கோரங்கள் படம் முடிந்த பிறகும் பார்வையாளனின் கண்களை விட்டு மறைய சில நேரம் எடுக்கும்.
-கார்த்தி